2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“என்ன ஆளும்மா உங்கண்ணன்?… காசு பணத்துக்கா குறைச்சல்?… அதான் ஏக்கரா கணக்குல நெலமிருக்கல்ல?… காலுக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கிப் போட்டுக்கக் கூடாதா?… அங்க பாரு… எப்பவோ… எதுவோ குத்தியிருக்கும் போல… நொண்டி நொண்டி நடந்து போறதைப் பாரு!… ச்சை… அப்படித்தான் காசை மிச்சம் பிடிச்சு.. என்னத்தைத்தான் சாதிக்க போறாரோ… தெரியல! எதோ ஒரு பழைய படத்துல வர்ற சுருளிராஜன் மாதிரி. கஞ்ச மகா பிரபும்மா உன்னோட அண்ணன்!”
வீட்டிற்கு விருந்தாளியாய் வந்து விட்டுத் திரும்பிச் செல்லும் தன் தாய்மாமன் தேவராஜைப் பற்றித் தாய் லட்சுமியிடம் கிண்டலாய் மோகன் கூற, எந்தவித பதிலும் சொல்லாமல் வைத்த கண் வாங்காமல், தன் அண்ணனின் நடையையே அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தாள் லட்சுமி.
கண்களின் ஓரத்தில் பூத்துக் கிளம்பிய கண்ணீர் மொட்டினைச் சுண்டு விரலால் சுண்டியெறிந்து விட்டு, நீண்ட பெருமூச்சுடன் பேசத் துவங்கினாள்.
“டேய் மோகன்!… மாமாவை கஞ்சன்னு மட்டும் சொல்லாதடா!…. அவரு செருப்பே போட்டுக்காம இருக்கிறது… இன்னிக்கு நேத்து மட்டுமில்லடா…. கிட்டத்தட்ட இருபத்தியஞ்சு வருஷமாச்சு அவர் காலுக்குச் செருப்பு போட்டு!”
“ஓ… அப்ப இருபத்தியஞ்சு வருஷமா அந்தக் கஞ்ச மகாபிரபு பட்டத்தை அவரே வெச்சுக்கீட்டிருக்காருன்னு சொல்றே?… அப்படித்தானே?” தாய் மாமனைக் கிண்டலடித்து மகிழ்ந்தான் மோகன்.
“ஹும்… அதுக்கு பின்னாடி இருக்கிற அந்தக் கதை எனக்கும் அவருக்கும் மட்டும்தான் தெரியும்!… இத்தனை வருஷமா யார்கிட்டேயும் சொல்லாத அந்தக் கதையை இன்னிக்கு உன் கிட்ட சொல்லியே தீர வேண்டும்டா… ஏன்னா… அப்பத்தான் நீ இனிமேல் அவரைக் கிண்டல் பண்றதை நிறுத்துவே” கரகரத்த குரலில் லட்சுமி சொல்ல, மோகனும் சற்று சீரியஸானான்.
“என்னம்மா அந்தப் புதுக்கதை?… இல்லையில்லை… பழைய கதை”
“இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி….”
“ஓ… பிளாஷ்பேக்கா?… சொல்லு சொல்லு”
*****
அப்போது லட்சுமிக்குப் பதினாலு வயசு. வயதிற்கு வந்த புதுசு. எப்போதும் அக்கம்பக்கத்து வீட்டில் உள்ள சின்னப் பசங்களோடு சேர்ந்து பக்கத்து டெண்ட் கொட்டாய்க்கு சினிமா பார்க்கப் போவது அவளின் நெடுநாளைய பழக்கம். அன்றும் அதே போல் பசங்களோடு கிளம்பியவளை அவள் தாய் தடுத்தாள்.
“ஏய் உங்க அண்ணன் வந்தா என்னைத்தான் திட்டுவான்!… ஏன் பெரிய பொண்ணான பின்னாடியும் அவளைப் பசங்களோட சினிமாவுக்கு அனுப்பினேனு… அதனால அவன் வந்ததும் கேட்டுட்டுப் போ”
லட்சுமியோ எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் போயே போய் விட்டாள்.
படம் விட்டு திரும்பி வந்தவள் வாசலிலேயே அண்ணன் தேவராஜ் கோபமாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து லேசாக அதிர்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் விடுவிடுவென்று வீட்டிற்குள் சென்றவளை தேவராஜ் கத்தலாய் அழைத்து நிறுத்தினான்..
“ஏய்… நில்லுடி… எங்கேடி போயிட்டு வர்ற?” பல்லைக் கடித்தபடி கேட்டான்.
“வந்து…. சினிமாவுக்கு போயிட்டு வர்றேன்!… அம்மாகிட்டச் சொல்லிட்டுத்தான் போனேன்?”
“அம்மா வேண்டாம்ன்னு சொன்னாங்கல்ல?… அதையும் மீறி ஏண்டி போனே?”
சில நிமிடங்கள் அமைதி காத்த லட்சுமி, “அப்படித்தான் போவேன்!… என்னமோ இன்னிக்குத்தான் புதுசா போற மாதிரி கேட்கறே?… இத்தனை நாள் போகலையா?..”
“அடக் கர்மம் பிடிச்சவளே!… அப்ப வேற… இப்ப வேறடி” தேவராஜ் கத்தினான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை!… எப்பவும் ஒரே மாதிரிதான்” சாதாரணமாய்ச் சொன்னாள் லட்சுமி.
“என்ன நீ எதிர்த்துப் பேசறே?… சொன்னாக் கேக்க மாட்டியா?… கழுதை… இனிமே பசங்களோட சேர்ந்துக்கிட்டு சினிமாவுக்குப் போனே… வாசலிலேயே நிக்க வெச்சு பல்லைக் கழட்டிப் புடுவேன்… ஜாக்கிரதை”
“டேய்… நீ யாருடா என்னை அதிகாரம் பண்ண?.. நீ பாட்டுக்கு உன் வேலையை பார்த்திட்டுப் போவியா?… என்னை வந்து மிரட்டறே… என்னமோ பெரியமனுஷன் மாதிரி” கோபம் தலைக்கேற, லட்சுமியும் பதிலுக்குக் கத்தினாள்.
“மறுபடியும் மறுபடியும் எதிர்த்தாடி பேசற… பொட்டைக் கழுதை”
“அப்ப நீ என்ன?.. ஆம்பளை எருமையா?”
உச்சபட்சக் கோபத்திற்குப் போன தேவராஜ், அடிக்கக் கையை ஓங்க, “த பாருடா… நீ அடிச்சே?… நானும் திருப்பி அடிப்பேன்… ஜாக்கிரதை!”
“என்னது… திருப்பி அடிப்பியா?… வாயாடிக் கழுதை… செருப்பு பிஞ்சிடும்”
லட்சுமி சற்றுக் தாமதிக்காமல் அருகில் கிடந்த செருப்பை எடுத்து அவன் கையில் கொடுத்து, “எங்கே நீ ஆம்பளையாய் இருந்தா அடிடா பார்க்கலாம்” என்று கத்த,
அந்த நேரத்தில் அந்த வார்த்தைகள் அவன் சுயமரியாதையைப் பாதித்து, அவன் உடம்பில் அமில மாற்றங்களை ஏற்படுத்தி, என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல், வெடுக்கென்று அதை வாங்கி, பட்.பட்டென்று அவள் தலையில் தாறுமாறாய் அடித்து விட, உறைந்து போனாள் லட்சுமி.
அண்ணன் நிச்சயம் தன்னைச் செருப்பால் அடிக்க மாட்டான் என்கிற நம்பிக்கையோடு செருப்பை அவன் கையில் குடுத்தவள், அவன் அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கியதில் உடைந்து போய் கதறி அழுதாள்.
எங்கிருந்தோ வந்த அவர்களைன் தாயார், “அட… அறிவுகெட்ட பயலே!… இப்படி வெள்ளிக்கிழமையும் அதுவுமா… வயசுக்கு வந்த புள்ளையைத்… தலை மேல செருப்பால அடிச்சுட்டியே… நீ மனுசனா?… பொட்டப்புள்ளை வீட்டோட மகாலட்சுமிடா!” தாய் அர்ச்சனைகளை வீசினாள்.
சற்றும் சுயநினைவில்லாமல், ஏதோ ஒரு மாய இயக்கத்தில் தான் செய்து விட்ட அந்தக் காரியத்தின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாய் உறைக்க ஆரம்பிக்க, வேகமாக வெளியேறினான் தேவராஜ். தோப்பில் சென்று தனியே அமர்ந்தவனுக்கு மனசுக்குள் கடும் வலி.
கோபத்தில் தான் செய்துவிட்ட காரியத்திற்காக தன்னைத்தானே நொந்து கொண்டான். இருட்டிய பின் வீடு திரும்பியவனுக்கு வழக்கம் போல் தங்கை உணவு பரிமாறவில்லை. அவளின் விசும்பல் ஒலி இன்னும் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஒருநாள்… இரண்டு நாள்… மூன்று நாள்… ஓடியும் தங்கை தன்னுடன் பேசாததாலும், அவளும் சரியானபடி சாப்பிடாததாலும், மிகவும் கவலைக்குள்ளான தேவராஜ், தானே வலியச் சென்று லட்சுமியின் அருகில் அமர்ந்தான்.
“லட்சுமி என்னை மன்னிச்சுடுடா!… ஏதோ வேகத்துல… கோபத்துல செஞ்சுட்டேண்டா!… எனக்கு என்ன தண்டனை வேணாலும் குடுடா!… ஆனா என் கூட பேசாம மட்டும் இருந்திடாதடா” தங்கையின் கைகளைப் பிடித்துக் கொண்டு சமாதானப்படுத்தினான்.
அவள் தலையைக் குனிந்து கொண்டு அமைதியே காக்க, “சரிம்மா நீ எனக்கு தண்டனை தர வேண்டாம்… எனக்கு நானே ஒரு தண்டனை குடுத்துக்கிறேன்!”
புருவங்களை நெரித்துக் கொண்டு லட்சுமி அண்ணனைப் பார்த்தாள்.
“எந்தச் செருப்பால உன்னை அடித்தேனோ… அந்த செருப்புங்கிற சமாச்சாரத்தை இனி வாழ்நாள்ல என்னைக்குமே நான் உபயோகப்படுத்த மாட்டேன்!… கால்கள் வெடித்து ரத்தமே வந்தாலும், கல்லுமுள்ளு குத்தினாலும், கடும் வெயில்சூடு தகித்தாலும்… இந்த உடம்புல உசுரு இருக்கற வரைக்கும் செருப்பே போடாம வாழப் போறேன்!… அதான் எனக்கு நானே குடுத்துக்கற தண்டனை!… இது உன் மேலே சத்தியம்!” சொல்லி விட்டு அவள் தலையில் ஓங்கியடித்தான்.
மிரண்டு போன லட்சுமி, அண்ணனை கட்டிக் கொண்டு அழுதாள். “வேண்டாம்ண்ணா… நான் சமாதானமாயிட்டேன்!… நீ உன் சபதத்தை வாபஸ் வாங்கிடுண்ணா” கண்ணீரோடு கெஞ்சினாள்.
தேவராஜ் சிரித்துக் கொண்டே தலையை இடவலமாய் ஆட்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
****
“அப்ப விட்டதுதான் செருப்பு போடறதை எங்க அண்ணன்!… கொதிக்கிற வெயில்ல காலே வெந்து போனாலும்… கல்லும் முள்ளும் குத்தி காலில் ரத்தம் கொட்டி சீழ் பிடித்தாலும், தன் சபதத்தை விடாமல் கடைப் பிடித்தார்!… ஹும்… எனக்காக எத்தனை வேதனை அனுபவிச்சாரு, இன்னும் அனுபவிச்சிட்டிருக்காரு தெரியுமா? அறியாத வயதில் செய்து விட்ட அந்தத் தவறுக்கு தண்டனையா இன்னிக்கு வரைக்கும் அந்த வலிகளை ஏத்துக்கிட்டு வாழ்றார்” அம்மாவின் குரல் தழுதழுத்தது.
தன் மாமனின் நொண்டி நடை மோகனுக்கு அப்போது ராஜநடையாய் தெரிந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings