2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘ க்விக்… க்விக்… ‘ என்று அவசரப் படுத்தினார் மேனேஜர்.
மதுரைக்கு போய்கொண்டிருக்கும் ஜி.எம். இந்த ஆபீஸையும் ஒரு தடவை பார்த்திடலாமே என்று அபிப்பிராயப் பட்டிருக்கிறார். அதை தனது பி.ஏ.விடம் அவர் சொல்லியிருக்கிறார். பி.ஏ.வும் கொஞ்சம் முன்னால்தான் போனில் கூப்பிட்டு சொன்னார்.
அதனால் உடனே ஹாலுக்கு வந்து, ‘ க்விக்…க்விக்… எல்லாரும் அவங்கவங்க டேபிளை சுத்தமா வச்சுக்கங்க… நம்ம ஜி.எம். எப்போ வேணாலும் இங்கே வரலாம்… டேபிள் மேல குப்பை மாதிரி இருந்தா அவருக்குப் பிடிக்காது…. க்விக்…க்விக்… ‘ என்று துரிதப் படுத்தினார் மேனேஜர் பரமசிவம்.
பரமசிவத்தின் மும்பை மண்டல நண்பர் ஒருவர் ஏற்கனவே சொல்லியிருந்தார், ‘ இந்த ஜி.எம். ரொம்பவும் டென்ஷன் பார்ட்டி. டேபிள் மேல குப்பை மாதிரி ஏதும் இருந்தா திட்டுவார்… ‘ என்று.
அதனால் போன் வந்தவுடனேயே, ‘ டேபிள் மேல கம்ப்யூட்டர், மவுஸ் தவிர வேற எதுவுமே இருக்கக் கூடாது… ‘ என்று உத்திரவு போட்டுவிட்டார் மேனேஜர்.
இதுதான் சமயம் என்று எல்லோரும் எல்லாப் பேப்பர் பைல் எல்லாவற்றையும் கயிறு போட்டு கட்டி டேபிளுக்கு அடியில் மறைவாய் திணித்து விட்டனர். கொஞ்ச நேரம் விட்டு வலம் வந்த மேனேஜர், ஆபிஸே சுத்தமாய் இருப்பதை பார்த்துவிட்டு திருப்தியுடன் திரும்பிப் போனார்.
இந்த ஆபீஸ் முதல் மாடியில் இருக்கிறது. ஜி.எம்.வரும்போது ரோடிற்கே போய் வரவேற்று மாலை அணிவித்து அங்கேயே அசத்திவிடலாம் விடலாம் என்றெண்ணி பரமசிவமும், உதவி மேனேஜரும் கையில் ஒரு பூச்செண்டும் ரோஜா மாலையுமாக படிகளில் இறங்கினர்.
டைபிஸ்ட் டயானாவும் பின்னாடியே ஓடினாள். இருப்பதிலேயே கொஞ்சம் அழகானவள். அதனால் அவளையும் வரவேற்க வெளியே வரச்சொல்லியிருந்தார் மேனேஜர்.
நால்வரும் ஜி.எம்மை வரவேற்று முதல் மாடிக்கு அழைத்து வந்தனர். உள்ளே நுழையும்போதே ஜி.எம். மேலோட்டமாய் ஆபீஸை நோட்டமிட்டார்.
முன்னெச்சரிக்கையாய் டேபிளெல்லாம் சுத்தம் செய்துவிட்டதால் கர்வத்துடன் ஜி.எம்.மை ஏறிட்டார் மேனேஜர். கண்டிப்பாய் பாராட்டுவார் என்ற நம்பிக்கையும் உண்டானது மேனேஜருக்கு.
‘ நான் எல்லோரையும் சந்திக்கணுமே… ‘ என்றார் ஜி.எம். அவசரமாய் எல்லோரும் ஹாலில் கூடினர்.
சுருக்கமாய் பேசிவிட்டு கேபினுக்குத் திரும்பியவர், ‘ விசிட்டர் புக் எங்கே… ‘ என்று கேட்டார். உயரதிகாரிகள் வரும்போது ஆபீஸ் பற்றிய அவர்களது அபிப்பிராயத்தை அதில் குறித்து வைப்பது வழக்கம்.
அவசரம் அவசரமாய் தேடியெடுத்து தூசி தட்டி பதட்டத்துடன் மேலே வைத்தார் மேனேஜர். ஜி.எம். ஏதோ கிறுக்கிவிட்டு மூடி வைத்துவிட்டு தனது பி.ஏ.வைப் பார்த்தார். அதற்கு, ‘ கிளம்பலாமே ‘ என்று அர்த்தம்.
‘ சரி… மிஸ்டர்…பரமசிவம்… இந்த காலாண்டுக்கான டார்கட்டை நீங்க ரீச் பண்ணியே ஆகணும்… நோ காம்ப்ரமைஸ்… ‘ என்றுவிட்டு எழுந்துகொண்டார். விறுவிறுவென படிகளில் இறங்கினார்.
‘ இவ்வளவு வேகமாக இறங்குகிறாரே, அசம்பாவிதம் ஏதும் ஆகிவிடக் கூடாதே ‘ என்று வேண்டிக்கொண்டார் பரமசிவம். ஜி.எம். காரில் ஏறி புறப்பட, கார் ரொம்பதூரம் சென்று மறையும் வரை பாத்துக்கொண்டிருந்துவிட்டு நெற்றி வியர்வையை துடைத்தபடி படிகளில் வேகமாய் ஏறினார் பரமசிவம்.
விசிட்டர் புக் டேபிள் மேலே கர்வமாய் காத்திருந்தது. ஜி.எம். என்ன எழுதியிருப்பார் என்று படிக்கும் ஆவல் மேலோங்க பதட்டத்துடன் ஓடிவந்து விசிட்டர் புக்கைத் திறந்தார்.
‘இந்த ஆபீசில் வேலை எதுவும் நடப்பது போல தெரியவில்லை. டேபிள் எல்லாம் காலியாக கிடக்கிறது… ஒரு ஆபீசரையும் ஒரு கிளார்க்கையும் உடனடியாக குறைக்க வேண்டும்‘ என எழுதியிருந்தது.
மயக்கம் போட்டு விழுந்தார் மேனேஜர் பரமசிவம்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings