எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் மணிமாறன். அறையில் பரவியிருந்த மங்கலான வெளிச்சத்தில் மணியைப் பார்த்தார். சுவற்றில் பொருந்தியிருந்த மின்சாரக் கடிகாரம் சிவப்பு நிறத்தில் மணி பன்னிரண்டு என்பதைக் காட்டி மின்னியது. தூக்கமின்றி எரிச்சல் தந்த கண்களைத் தேய்த்துக் கொண்டார் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரியான மணிமாறன்.
கடந்த ஒரு வாரமாக சரியான தூக்கம் இல்லை. அதிசயமாக இன்று பத்தரை மணிக்குத் தூங்கியவரின் கனவில், முகமூடியும் தொப்பியும் அணிந்த அந்த மர்ம நபர் வரவே, விருட்டென்று எழுந்துவிட்டார்.
அன்று மாலை, சென்னை மாநகரக் கமிஷனருடன் நடந்த உரையாடல் நடு ஜாமத்திலும் மண்டையைக் குடைந்தது.
“என்ன மணிமாறன், கேஸ் எவ்வளவு தூரத்துல இருக்கு? ஏதாவது லீட் கிடைச்சுதா?”
“விசாரிச்சுட்டே இருக்கேன் சார். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அந்த சீரியல் கில்லரை மடக்கிடலாம்.”
“யாரா இருக்கும்னு நினைக்கறீங்க? இந்தத் தொடர் கொலைகளுக்கான மோட்டிவ் என்ன? ஏதாவது ஒரு தகவலாவது சொல்லுங்க மணிமாறன். ஆளுங்கட்சி தரப்புல இருந்து என்னைக் குடையறாங்க. சி.எம். வரைக்கும் இந்தக் கேஸ் போயிருக்கு. எதிர்க்கட்சிக்காரங்க தெருத் தெருவா கூட்டம் போட்டு வறுத்தெடுக்கறாங்களாம். இந்த ஆட்சில பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லைனு நினைச்சா ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தோடு தலைநகர்ல இளவயசுப் பசங்க மர்மமான முறையில கொல்லப்படறாங்க. அரசாங்கமும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்க்குதுனு மேடையில முழங்கறாங்க. அதுதான் சீக்கிரம் இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி சி.எம். செகரட்டரி ஃபோன் பண்ணாரு.
நீங்க கண்டிப்பா சீக்கிரம் முடிச்சுடுவீங்கனு உங்களைப் பத்தி எடுத்துச் சொல்லியிருக்கேன். சோ புட் எ ஃபுல்ஸ்டாப் ஃபார் திஸ் அஸ் சூன் அஸ் பாசிபிள்.”
“உங்க நிலைமை புரியுது சார். ஐ வில் டூ மை பெஸ்ட். எல்லா கோணத்துலயும் விசாரிச்சுட்டிருக்கேன். மர்டரான அஞ்சு பேரும் எந்த விதத்துலயும் தொடர்பு இல்லாதவங்க.”
“அப்போ சஸ்பெக்ட் வேற வேற ஆளா இருக்கும்னு நினைக்கறீங்களா?”
“இல்ல சார், ஒரே ஆள்தான் பண்ணியிருக்கணும். அஞ்சு கொலையும் ஒரே பேட்டர்ன்ல தான் நடந்திருக்கு. இன்னும் சில சிசிடிவி ஃபுட்டேஜ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டிருக்கோம். அது கண்டிப்பா குற்றவாளியை நெருங்க உதவும்.”
“உங்களுக்கு அடிஷனலா சப்போர்ட் வேணும்னாலும் கேளுங்க மாறன். இதோட அஞ்சு மர்டர் நடந்துருச்சு. ஆறாவதா ஒண்ணு நடக்கவிடக் கூடாது. இதுல அஞ்சாவது மர்டர் நீங்க பொறுப்பேத்துக்கிட்ட பிறகு நடந்தது. உங்க திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும்…”
“கவலைப்படாதீங்க சார், சீக்கிரம் நல்ல முடிவோட உங்களைப் பார்க்க வரேன்.”
கமிஷனருக்கு நம்பிக்கை வரும் வகையில் பதில் சொல்லிவிட்டு வந்தாலும், அதை சாத்தியப்படுத்த என்ன செய்யலாம் என்ற சிந்தனையிலேயே இருந்தார் மணிமாறன். அதன் விளைவுதான் தூக்கத்திலும் துரத்தியது போலும்.
பெருமூச்சுடன் எழுந்து தண்ணீரைக் குடித்து பால்கனியில் காற்றாட நின்றார் மணிமாறன். கமிஷனர் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமே என்ற பெரிய பொறுப்பு அவர் தூக்கத்தைத் திருடியிருந்தது. ஆறாவது மாடியின் பால்கனியில் இருந்து கீழே பார்த்தார். சென்னை இன்னும் உறங்காமல் இயங்கிக் கொண்டுதான் இருந்தது.
‘இவ்வளவு பெரிய சிட்டில, அஞ்சு கொலைகளைப் பண்ண அவன் இந்நேரம் நிம்மதியாத் தூங்கிட்டு இருப்பானா? அவனால நிம்மதியாத் தூங்க முடியுமா? அவனோட அடுத்த டார்கெட் யாரா இருக்கும்? ஒரு சின்ன க்ளூ கிடைச்சாக்கூடப் போதும். அவனை நெருங்கிடலாம்.
இதுவரை அவன் கொலை பண்ண அஞ்சு பேரும் யூத்ஸ். அஞ்சு பேருக்கும் இருபத்தியஞ்சு வயசுல இருந்து முப்பது வயசுக்குள்ளதான் இருக்கும். அஞ்சு பேரும் சென்னைல வேற வேற நிறுவனத்துல வேலை செய்யறாங்க. வேற வேற காலேஜ்ல படிச்சவங்க. அவங்களுக்குள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமே இல்ல. சோ, காலேஜ் தகராறு, ஏரியா தகராறு, லவ் பிரச்சனை இது எதுவுமே மோட்டிவா இருக்க வாய்ப்பில்லை.
எந்த அடிப்படையில கில்லர் தன் இரைகளை டார்கெட் பண்றான்? எப்படி யார் கண்ணுலயும் சிக்காம பப்ளிக் பிளேஸ்ல கொலை பண்றான்? அஞ்சு பேரும் ஒரே மாதிரி பாய்ஸன் இன்ஜெக்ட் பண்ணதாலதான் இறந்திருக்காங்க. பப்ளிக் ப்ளேஸ்ல அவ்வளவு கூட்டம் கூடற இடங்கள்ல, எப்படி யாரும் கவனிக்காத வகைல இந்தக் கொலைகளைப் பண்ண முடியும்? மக்களோட மக்களா சாதாரண ஆளா கலந்து, கொலைகளைப் பண்ணியிருக்கான்.
அப்படின்னா கண்டிப்பா இந்த அஞ்சு பேரையும் ரெகுலரா வாட்ச் பண்ணியிருக்கணும். அவங்களோட தினசரி பயண நேரத்தைக் கவனிச்சு, பக்காவா திட்டம் போட்டு கொன்னிருக்கான். ஆனா ஏன்?
இதுவரைக்கும் கிடைச்ச சிசிடிவி ஃபுட்டேஜ்லயும் சாதகமா எதுவும் கிடைக்கல. எங்கேயோ ஏதோ ஒண்ணை நான் மிஸ் பண்றேன். அது என்ன?’
தலையை சிலுப்பிக் கொண்டார் மணிமாறன். பால்கனியில் சிறிது உலாத்திய பிறகு அறைக்கு வந்து நாற்காலையில் சாய்ந்தார். கேஸின் ஒவ்வொரு நகர்வையும் மீண்டும் மனதுக்குள் அலசினார்.
‘முதல் மர்டர் வடபழனி மால்ல. இரண்டாவதும் மூணாவதும் தரமணி பக்கத்துல. நாலாவது ஓஎம்ஆர் ல. அஞ்சாவது கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன்ல. எல்லா இடத்து சிசிடிவி ஃபுட்டேஜ்லயும் மாஸ்க் போட்டு, கருப்புத் தொப்பி போட்ட அவன் இருக்கான். மால், மெட்ரோ ஸ்டேஷன்ல அவன் உள்ளே போனது மட்டும்தான் சிசிடிவில பதிவாயிருக்கு. அவன் வெளியே எப்படிப் போனான்?
மெட்ரோ ஸ்டேஷன்ல அவன் ட்ரெயின்ல ஏறிப் போயிருக்கலாம். ஆனா அந்த நேரத்துல கோயம்பேடுல இருந்து கிளம்பின ட்ரெயின் எந்த ஸ்டேஷன்ல எல்லாம் நிற்குமோ, அந்த ஸ்டேஷன் சிசிடிவி ஃபுட்டேஜ் செக் பண்ணியாச்சு. அதுல அவன் இல்ல. அப்படின்னா அவன் எங்கே போனான்? எப்படிப் போனான்? வெளில போகும்போது மாஸ்க் தொப்பியைக் கழட்டிட்டு தப்பிச்சுப் போயிருக்கணும்.
கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன் சிசிடிவி ஃபுட்டேஜ்ல மட்டும் ஒரே ஒரு குளோசப் ஃப்ரேம் இருக்கு. கேமராவைப் பார்த்து அவன் முகம் இருக்கு. அதுல கண்கள் மட்டும் நல்லாத் தெரியுது. அந்தக் கண்கள் எங்கேயோ எனக்கு ரொம்பப் பரிச்சயமான கண்கள் மாதிரி ஒரு சந்தேகம். ஆனா அது யாரு, எங்கே இருக்கான்?’
கேள்விகள் மட்டுமே வரிசையாக வந்து நின்றன. எங்கே தவறவிடுகிறோம் என்ற பூதாகரமான கேள்வி மணிமாறனின் அன்றைய இரவை அபகரித்துக்கொண்டது. கொலை நடந்த இடங்களுக்கு அருகே உள்ள பிரதான சாலைகளில் பதிவாகியிருக்கும் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தால் ஏதாவது ஒரு சின்ன தடயம் கிடைக்கலாம்.
சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவரின் அன்றாடப் பணிகளை முடக்கியிருந்தது. அடுத்து ஒரு இளைஞன் பலியாகிவிடக் கூடாது என்ற பதட்டம் அவரின் சுவாசத்தில் இழையோடியது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு இளைஞனின் குடும்பமும் கதறியது அவரின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
“எங்களுக்கு அவன் ஒரே புள்ள சார். அவன்தான் உலகமே. இப்போதான் வேலைக்குச் சேர்ந்தான். ரெண்டு மாசமா அவன் சம்பளத்தை எங்ககிட்ட ஆசையா கொடுத்தான்.”
“குடும்பத்துக்கு மூத்தவன் எங்க ராசா. அவன் தலையெடுத்து எங்க பாரத்தைப் பகிர்ந்துக்க ஆரம்பிச்ச மூணு மாசத்துல இப்படி இடி இறங்கின மாதிரி எல்லாம் போச்சு.”
“படிச்சு முடிச்சதும் வேலை கிடைக்கல. ரெண்டு வருஷமா படாதபாடுபட்டு இப்போதான் வேலைக்குச் சேர்ந்தான். அவன் சந்தோஷமா சிரிக்கறதை மூணு மாசமாத்தான் பார்க்கறோம். அது யாருக்குப் பொறுக்கலேன்னு தெரியலையே.”
“இந்த வேலை அவன் கனவு சார். படிக்கும்போதே இந்த கம்பெனிலதான் வேலை செய்யணும்னு அடிக்கடி சொல்வான். அவனோட அதிர்ஷ்டம் அதே கம்பெனில நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சுது. எல்லாக் கோயில்லயும் வேண்டுதலை நிறைவேத்தினேன். இப்போ அவனே இல்லையே. கடவுளே இல்லையா சார்.”
இப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பின் தாக்கம் அதிகம். யாரும் பெரிய பின்புலம் உள்ளவர்கள் அல்ல. சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களின் அழுகைக்குக் காரணமானவன் யார்?
நாற்காலியில் கண்கள் மூடி சாய்ந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். நேரம் கரைந்து, தனிமையைப் போக்க விடியலைத் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தது. சட்டென்று ஏதோ பொறிதட்ட சுறுசுறுப்பானார் மணிமாறன்.
‘இதை எப்படி கவனிக்காமல் விட்டேன். அஞ்சு பசங்களும் புதுசா வேலைக்குச் சேர்ந்தவங்க. குறிப்பா மூணு மாசத்துக்குள்ள ஜாயின் பண்ணியிருக்காங்க. அப்படின்னா, எந்தெந்த கம்பெனியில் சமீபத்தில் வேலைக்கு இன்டர்வியூ நடத்தினாங்கனு லிஸ்ட் எடுக்கலாம்.
மூணு மாசத்துல வேலைக்குச் சேர்ந்தவங்க, இன்டர்வியூ அட்டென்ட் பண்ணவங்க லிஸ்ட் எல்லாம் எடுத்தா குற்றவாளியை நெருங்கிடலாம்.
கண்டிப்பா வேலைக்காக இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி, அதுல தேர்வாகாத எவனோ ஒருத்தன்தான் தோல்வியால இந்த மாதிரி கொலைகளைப் பண்ண வாய்ப்பு இருக்கு.’
அன்றைய விடியல் நல்ல விடியலாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. விடிந்ததும் அந்தந்த துறையைச் சார்ந்தவர்களிடம் தகவல்களைச் சேகரித்தார். கடந்த மூன்று மாதங்களில் இன்டர்வியூ வைத்த கம்பெனிகள், நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள், வேலையில் சேர்ந்தவர்கள் என பட்டியல் தயாரானது.
அனைத்தையும் பொறுமையாக ஆராய்ந்தபோது ஒரு விஷயம் உறுத்தலாக இருந்தது. எட்டு பெரிய நிறுவனங்களும், ஐந்து சிறிய நிறுவனங்களும் வேலைக்கு இன்டர்வியூ நடத்தியிருக்கிறார்கள். ஒரே ஒரு பெயர் மட்டும் எட்டு பெரிய நிறுவனங்களின் பட்டியலிலும் இருந்தது. அது கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டதால் அந்தப் பெயரின் விவரங்களைச் சேகரிக்கலானார்.
ரக்ஷன், 26 வயது, பிகாம் படிப்பு, மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவன். எட்டு நிறுவனங்களிலும் இன்டர்வியூவில் தேர்வாகவில்லை. அவன் ஃபோன் நம்பரும் ஆக்டிவாக இல்லை. எங்கேயோ இடிக்கிறதே என்று யோசித்த மணிமாறன், ரக்ஷனின் வீட்டைக் கண்காணிக்க ஏற்பாடு செய்தார்.
எட்டு நிறுவனங்களில், ஐந்தில் வேலை கிடைத்தவர்களில் முன்னிலை வகித்தவர்கள் இப்போது உயிருடன் இல்லை. அப்படியானால் அடுத்த டார்கெட், மீதமிருக்கும் மூன்று நிறுவனங்களில், இன்டர்வியூவில் முன்னிலை பெற்று வேலைக்குச் சேர்ந்தவர்கள்தானா? அந்த மூன்று நிறுவனங்களிடம் தகவல் சொல்லி, முன்னிலை பெற்றவர்களின் பெயர்களை அறிந்துகொண்டார். அவர்களைக் கண்காணிக்க மஃப்ட்டியில் தன் உதவியாளர்களை அனுப்பினார்.
ரக்ஷனின் முகவரி மற்றும் குடும்ப விவரங்களை அலசியவருக்கு, குற்றவாளியை நெருங்குவதற்கான பாதை விளங்கியது போல் ஒரு உணர்வு. உடனடியாக கான்ஸ்டபிள் சரவணனைப் பார்க்கக் கிளம்பினார்.
மணிமாறன் மதுரையில் எஸ்ஐ ஆக இருந்தபோது, சரவணன் கான்ஸ்டபிளாக இவருடன் பணியாற்றினார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு நிகழும் இந்த சந்திப்பை, சரவணன் எப்படி எதிர்கொள்வார் என யோசித்தபடியே சரவணன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் மணிமாறன். அழைப்பு மணியை ஒலிக்கச் செய்து காத்திருந்த கணங்களில், சரவணன் வீட்டில் இருக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு எகிறியது அவருக்கு.
கதவைத் திறந்த சரவணன், மணிமாறனைக் கண்டு அதிர்ந்து, பின் சுதாரித்துக் கொண்டதை மணிமாறன் கவனிக்கத் தவறவில்லை.
“வாங்க சார், எப்படி இருக்கீங்க? என்ன இவ்வளவு தூரம்?”
வார்த்தைகள் தடுமாறாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டார் சரவணன்.
மணிமாறன் பதில் சொல்லாமல் சரவணன் கண்களைப் பார்த்தார். சரவணனின் கண்களும் நெற்றியும் அவரின் சந்தேகத்திற்கு வலு சேர்த்தன. மணிமாறனின் கண்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்தார் சரவணன். மணிமாறனின் கண்கள் இப்போது அந்த அறையைத் துழாவின.
சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த போட்டோ ஃபிரேமிற்குள் ரக்ஷன் சிரித்தபடி இருந்தான். அதைப் பார்த்ததுமே மணிமாறனின் சந்தேகம் உறுதியானது.
“ஏன் சரவணன் இப்படிப் பண்ணீங்க? ஒரு அப்பாவா உங்க பையனுக்குத் தைரியம் சொல்லி நல்வழிப்படுத்தியிருக்கலாம். தோல்விகளைக் கடந்து வர நம்பிக்கை குடுத்திருக்கலாம். இதெல்லாம் செய்யாம இப்படித் தப்பான வழில போயிட்டீங்களே சரவணன்.
வளர்ந்த உங்க மகனைத் தொலைச்சுட்டு நீங்க அனுபவிக்கற வலியை மத்தவங்களுக்குக் கொடுக்க எப்படி மனசு வந்தது? உங்க மகன் கோழைத்தனமா தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு, தைரியமா குடும்பத்தைப் பார்த்துக்கற அப்பாவிப் பசங்களைக் கொன்னுட்டீங்களே. இவ்வளவு வருஷம் வளர்த்த அவங்க பசங்களைத் தொலைச்சுட்டு அந்தப் பெத்தவங்க எப்படிக் கதறறாங்க தெரியுமா?
காவல்துறைல பொறுப்பான வேலைல இருக்கற நீங்க, இந்த மாதிரி முடிவு எடுத்தது தப்பில்லையா? நடங்க ஸ்டேஷனுக்கு.”
“தப்பில்ல சார். எனக்குத் தப்பாத் தெரியல. என் பையன் தோற்கறதுக்குக் காரணம் அவங்கெல்லாம் ஜெயிச்சதுதானே. அவங்களைக் கொலை பண்றது எனக்குத் தப்பாத் தெரியல. கொல்லக் கொல்ல அல்வா சாப்பிடற மாதிரி இனிச்சுது சார். என் பையன்கூட சந்தோஷமா சிரிக்கறான் பாருங்க.”
சரவணனின் கண்களில் வேதனையைவிட, மீதம் உள்ள கொலைகளைச் செய்ய முடியவில்லையே என்ற வெறிதான் மேலோங்கி இருந்தது.
மணிமாறன் அவர் கைகளில் விலங்கை மாட்ட, மௌனமாக ஜீப்பில் வந்து ஏறினார் சரவணன்.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings