எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அதிகாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தன கடிகார முட்கள். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், பயணியர் வருகைக்கான இடத்தில் காரை நிறுத்திய சங்கர், பின்னிருக்கைக் கதவைத் திறந்துவிட்டான். கீழே இறங்கிய கமலாம்மாவுக்கு அறுபத்தைந்து வயதிருக்கும்.
“தம்பி, நீ பார்க்கிங்ல வெயிட் பண்ணு. அவங்க வந்ததும் நான் கூப்பிடறேன்,” என்று சொல்லிவிட்டு ஆர்வத்தோடு மகளை வரவேற்கத் தயாரானார் கமலாம்மா.
சங்கர் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான். இரவு இரண்டு மணிக்கு எழுந்த சோர்வு கண்களில் தெரிந்தது.
தனியார் டிராவல்ஸில் டிரைவராக வேலை செய்யும் சங்கருக்கு, இன்று அதிகாலை மூன்று மணிக்கு ஓஎம்ஆர் சாலையில் பிக்கப். அங்கிருந்து விமானநிலையம் வந்து, வெளிநாட்டிலிருந்து வரும் உறவினரை பிக்கப் செய்து, மீண்டும் ஓஎம்ஆர் சாலையில் ட்ராப் செய்யவேண்டும் என்ற பேக்கேஜ்.
அதனால், காலை இரண்டரை மணிக்கே தயாராகி, தாம்பரத்தில் இருந்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள கமலாம்மாவின் அபார்ட்மென்ட்க்கு மூன்று மணிக்கு வந்துவிட்டான் சங்கர். பதினைந்து நிமிடங்களில் கமலாம்மா வந்து ஏறிக்கொண்டார்.
வரும் வழியெங்கும் கமலாம்மா தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டே வந்தார். சங்கருக்கு என்னவோ தன் அம்மா ஞாபகம் வந்தது. கமலாம்மா பரபரப்பாக இருப்பதை அவர் பேசிய விதத்திலேயே தெரிந்துகொண்டான்.
“எனக்கு ஒரே பொண்ணு பா. நல்லா படிப்பா. இங்கே ஐடி கம்பெனில வேலை கிடைச்சுது. நல்ல சம்பளம். அவ சம்பாதிச்சு வாங்கின வீடுதான் இது. இதுக்கு முன்னாடி நாங்க கூடுவாஞ்சேரில ஒரு சின்ன வீட்டுலதான் இருந்தோம். அவ இந்த வீட்டை வாங்கி எங்களையும் இங்கே கூட்டிட்டு வந்துட்டா.
அவளுக்கு அமைஞ்ச வரனும் இதே ஊர்தான். அவருக்கும் ஐடி வேலைதான். அதனால அவ கல்யாணம் முடிஞ்சதும் இங்கேயே கொஞ்சம் தள்ளி மருமகனோட வீடு இருக்கு, அங்க இருந்தா. அடிக்கடி வந்து போக இருந்தாங்க. மூணு வருஷத்துக்கு முன்னால, மருமகனுக்கு அமெரிக்கால வேலை கிடைச்சுது. என் மகளும் அங்கேயே வேலையை மாத்திக்கிட்டு அமெரிக்கா போய்ட்டாங்க.
நம்ம குழந்தை நல்ல நிலைமைல இருக்கான்னு மனசு சந்தோஷப்பட்டாலும், இவ்வளவு வருஷம் கூடவே இருந்து, அடிக்கடி பார்த்துட்டிருந்த பொண்ணு, திடீர்னு அவ்வளவு தொலைவு போனது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்பப்போ வீடியோ கால்ல பேசுவா. அது மனசுக்கு ஆறுதலா இருக்கும்.
என் வீட்டுக்காரருக்கு மகளைப் பிரிஞ்ச ஏக்கமா என்னன்னு தெரியல. ஒண்ணரை வருஷம் முன்னால திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து தவறிட்டார். அப்போ உடனடியா கிளம்பி வந்து காரியமெல்லாம் செஞ்சுட்டுப் போனாங்க. அதுக்கப்புறம் இப்போதான் என் பொண்ணு வரா. கூடவே பேத்தியும் வரா. அதான் அவங்களைப் பார்க்கணும்னு டாக்ஸி ஏற்பாடு பண்ணிட்டு ஏர்போர்ட் போறேன்.
தேவையில்லாம நீ ஏன் அலையறேன்னு என் பொண்ணு ஒரே திட்டு. நாங்களே டாக்ஸி புடிச்சு வந்துக்கறோம். நீ தூக்கத்தைக் கெடுத்துக்காதேன்னு திட்டினா. எனக்குதான் மனசு கேட்கல. ஏர்போர்ட்ல இருந்து அவ வீட்டுக்கு வரவரைக்கும் நான் காத்துட்டிருக்கறதுக்கு, ஏர்போர்ட்லயே அவளைப் பார்த்துட்டா, வழியெல்லாம் பேசிட்டே போலாமே. அதான் அவளைப் பார்க்க ஆசையா இருக்கேன். ஒரே பரபரப்பா இருக்கு பா. அதான் உன்கிட்ட பேசிட்டே வரேன். தப்பா எடுத்துக்காதே.”
“இதுல தப்பு ஒண்ணும் இல்லையே மா. மனசுல இருக்கறதை சொல்றீங்க. நீங்க எவ்வளவு ஆர்வமா இருக்கீங்கன்னு உங்க பேச்சுலயே தெரியுது மா. நீங்களும் விசா வாங்கிட்டு அவங்ககூட போயிரலாமே மா. இங்கே ஏன் தனியா இருக்கணும்?”
“ஆமா, என் பொண்ணும் இதேதான் சொல்றா. ஆனா அங்கெல்லாம் இருக்க முடியுமான்னு எனக்குத் தெரியல. ரெண்டு பேரும் வேலைக்குப் போயிருவாங்க. நான் தனியா வெளில எங்கேயும் போக முடியாது. இங்கே இருந்தா கோவிலுக்குப் போறது, கடைக்குப் போறது எல்லாம் நான் தைரியமா போலாம். அங்கே எதுவுமே முடியாதே.”
கமலாம்மா. விமானநிலையம் வரும்வரை பரவசத்தோடு பேசிக்கொண்டு வந்தார். அவரின் பரவசமும், எதிர்பார்ப்பும் தன் தாயின் நினைவைத் தந்தன சங்கருக்கு.
சங்கரின் அம்மா கோவில்பட்டியில் இருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன் சங்கரின் அப்பா இறந்துவிடவே, தனியாகத் தவிக்கும் அம்மா, சங்கரை கோவில்பட்டிகே வந்துவிடும்படி சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
“யப்பா… சங்கரு, அங்க ஓட்டற காரை இங்க வந்து ஓட்டினா என்னப்பா? உங்கப்பாவும் இல்லாம இங்க தனியா இருக்க சங்கடமா இருக்கு. நானும் உன்கூட வந்து இருந்தா, செலவு கட்டுப்படியாகாதுன்னு சொல்றே. அது உண்மைதான். ஆனா நீ இங்க வந்தா நாம ரெண்டு பேரும் சமாளிச்சுக்கலாம். அப்படியே உனக்கு பொண்ணு பார்த்து கல்யாணத்தையும் முடிச்சுட்டா, நானும் உங்கப்பா போன இடத்துக்கே நிம்மதியா போயிடுவேன் பா.”
அம்மா ஒவ்வொரு முறை இப்படிச் சொல்லும்போதும் சங்கருக்குக் கோபம்தான் வரும். சென்னையை விட்டுப் போக அவனுக்கு விருப்பமில்லை. இங்கே வாய்ப்பு அதிகம், வருமானமும் அதிகம். அதுபோக பல சமயங்களில் பிரபலங்களைத் தன் காரில் அழைத்துப் போகும் வாய்ப்பு அமையும்.
அவர்களுடன் புகைப்படம் எடுத்து, ஊரில் இருக்கும் தன் நட்புவட்டத்திடம் பகிர்ந்து பெருமை பேசிக் கொள்வான். இதெல்லாம் கோவில்பட்டியில் கிடைக்காது. இதெல்லாம் புரியாமல் பேசும் அம்மாவை நினைத்து கோபம் வருமே ஒழிய, அம்மாவின் பாசமும் தவிப்பும் அவனுக்குப் புரியவில்லை.
மொபைல் அடித்து அவன் சிந்தனையைக் கலைத்தது. தன் மகளும் பேத்தியும் வந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் சொன்னார் கமலாம்மா. காரை ஸ்டார்ட் செய்து அவர்கள் நின்றிருந்த இடத்தை அடைந்து, சூட்கேசுகளை ஏற்றிவைத்தான். அவர்கள் மூவரும் ஏறியதும் காரைக் கிளப்பினான். கமலாம்மா மிகுந்த பரபரப்பில் இருந்தார்.
“தம்பி, இவதான் என் பொண்ணு, இவ என் செல்லப் பேத்தி. மருமகன் ஒரு பத்து நாள் கழிச்சு வருவாரு. இவங்களைப் பார்க்கத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன். அந்தத் தவிப்பு இருக்கே, அது கொடுமை தம்பி. அதுவும் இந்த வயசுல தனியா இருந்தா, எப்போ நம்ம குழந்தைங்க நம்மளைப் பார்க்க வருவாங்கன்னு தவிப்போட தவமிருக்கறது கொடுமைலயும் கொடுமை.”
பேசிக்கொண்டே தன் மகள் மடியில் சரிந்தார் கமலாம்மா. அவரின் மகளும் பேத்தியும் பதறினர். காரை ஓரம்கட்டி நிறுத்திய சங்கர், கலக்கத்துடன் என்னவென்று பார்த்தான். தண்ணீரை முகத்தில் தெளித்துப் பார்த்தார்கள்.
கமலாம்மா அசையவில்லை. தன் ஆசை மகளைப் பார்த்த மனநிறைவும், விடுமுறை முடிந்ததும் மீண்டும் அவர்களைப் பிரியவேண்டுமே என்ற வலியும் அவர் முகத்தில் பரவியிருந்தது.
அவசரமாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துப்போனான். அழுதபடியே கமலாம்மாவை அவர் மகளும் பேத்தியும் உள்ளே அழைத்துப் போனார்கள். சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் பெருங்குரலெடுத்து அழத சத்தம் வாசலில் நின்றிருந்த சங்கரின் காதுகளில் விழுந்தது. பிரமை பிடித்தது போல் உறைந்துபோனான் சங்கர்.
தன் காரில் ஏறியதிலிருந்து இவ்வளவு நேரம் தன்னிடம் வெகு உரிமையோடு பேசிய கமலாம்மா, இப்போது உயிரோடு இல்லை என்பதை நம்ப முடியவில்லை.
தன் அம்மாவின் தவிப்பு முதல்முறையாக அவனுக்குப் புரிந்தது. கூடிய விரைவில் கோவில்பட்டிக்கே போய்விட வேண்டும் என்ற எண்ணம் முதல்முறையாக அவனுள் எட்டிப் பார்த்தது.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings