எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அதிகாலை ஐந்து மணி. விடிந்தும் விடியாத அந்த அழகான பொழுதில், பறவைகளில் சில தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடங்கியிருந்தன. அதனதன் இயல்பில் ஓசையெழுப்பி, தாங்கள் விழித்துக்கொண்டதை உலகுக்குப் பறைசாற்றியபடியே சிறகடித்து சுறுசுறுப்பாயின.
பாண்டியாபுரம் இன்னும் விழித்துக்கொள்ளாமல் புரண்டு படுத்து சோம்பல் முறித்தது. ஆனால் மனம் குழம்பித் தவித்துக்கொண்டிருந்த ஒரு இளம் மனதுமட்டும் தூக்கத்தைத் தொலைத்து, வீட்டைவிட்டுக் கிளம்பியிருந்தது.
பாண்டியாபுரம் தெற்குத் தெருவில் வேகநடை போட்டான் செந்தில். அதிகாலை அழகை ரசிக்கவோ, பறவைகள் எழுப்பிய இனிய ஓசைகளைக் கேட்டு மயங்கும் மனநிலையிலோ அவன் இல்லை. அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே ஒருவிதத் தவிப்போடு ஓட்டமும் நடையுமாக நடந்து, அவன் வீடு இருந்த அந்த தெற்குத் தெருவைக் கடந்து, பிரதான சாலையை அடைந்தான்.
வெளிச்சம் வந்து, ஊர் விழித்துக்கொள்வதற்குள் பஸ் ஸ்டாண்டை அடைந்துவிட வேண்டும் என்று அடித்துக்கொண்டது அவன் மனம். இன்னும் இருபது நிமிடங்கள் இதே வேகத்தில் நடந்தால் பாண்டியாபுரத்தை அடுத்திருக்கும் அழகர் குளம் பேருந்து நிலையத்தை அடைந்துவிடலாம். அங்கிருந்து கிளம்பும் முதல் பேருந்தில் ஏறி வேறு ஏதாவது ஒரு ஊருக்குப் போய்விட வேண்டும். அடுத்து செய்யவேண்டியதை அதன்பிறகு யோசிக்கலாம் என்ற தீர்மானத்தோடு நடந்தான் பதினாறு வயது செந்தில்.
பதினோராம் வகுப்பு படிக்கும் செந்தில், வீட்டுக்குத் தெரியாமல் கிளம்பியிருக்கிறான். பதின்பருவத்திற்கே உரிய வேகமும் கோபமும் அவன் நடையிலும் முகத்திலும் தெரிந்தன. ஒல்லியான உடல்வாகு, படுத்து எழுந்து அப்படியே கிளம்பியதால் கலைந்திருந்த கேசம், கசங்கலான உடை, சட்டைப் பையில் கொஞ்சம் பணம்.
எதையும் அலசி ஆராய்ந்து, தான் எடுத்த முடிவு சரிதானா என்று சிந்திக்கும் நிதானம் அவனிடம் இல்லை என்பதை அவன் கண்களே காட்டிக் கொடுத்தன. தன்னை நிரூபித்துக் கொள்ளும் வெறியும், அசட்டுத் துணிச்சலும், குழப்பமும் கண்களில் நிரம்பி வழிந்து, அந்தப் பருவத்திற்கே உரிய வேகத்தைத் தந்தன.
அவன் மனதில் கொதித்துக்கொண்டிருந்த கோபம் இப்போது வெறியாக மாறியிருந்தது. தன்னைக் காணாமல் அப்பாவும் அம்மாவும் தவிக்கவேண்டும், அவர்கள் கதறி அழவேண்டும் என்ற வெறி அவன் நடையைத் துரிதப்படுத்தியது.
அவன் ஆசைக்கு மதிப்பளிக்காமல் வீட்டில் நடந்த நிகழ்வுகள் அவனுள் நிழலாடின.
பத்தாம் வகுப்புவரை நடந்துதான் பள்ளிக்குப் போய் வந்தான். பத்தாம் வகுப்பு முடிந்து விடுமுறையில் இருக்கும்போது பைக் வேண்டும் என்று ஆசை எட்டிப் பார்த்தது. அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா, எனக்கு ஒரு பைக் வாங்கித் தரீங்களா?”
“இந்த வயசுல எதுக்கு செந்தில்? இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டும். லைசன்ஸ் எடுக்க இன்னும் வயசாகலையே.”
“சும்மா பக்கத்துல எங்கேயாவதுதான் போவேன். அதுக்கு லைசன்ஸ் எடுக்கலன்னாலும் பரவாயில்ல பா.”
“முதல்ல படிப்புல கவனமா இரு. பிளஸ் ஒன்ல என்ன படிக்கணும்னு முடிவு பண்ணிட்டியா?”
“அதெல்லாம் எனக்குத் தெரியும் பா. பைக் வாங்கித் தர முடியுமா முடியாதா, அதைச் சொல்லுங்க. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பைக் ஓட்டறாங்க. எனக்கும் ஆசையா இருக்கு, அதான் கேட்கறேன்.”
“உன் ஃப்ரெண்ட்ஸுக்கு அதுக்குள்ள பைக் வாங்கிக் கொடுத்துட்டாங்களா? அவங்களுக்கும் உன் வயசுதானே, எப்படி லைசென்ஸ் எடுத்திருப்பாங்க?”
“அவங்க வீட்ல பைக் இருக்கு பா. அதை அப்பப்போ எடுத்து ஓட்டறாங்க. அதேமாதிரி ஓட்டத்தான் நானும் கேட்கறேன். நம்ம வீட்ல வெறும் பழைய சைக்கிள்தான் இருக்கு. பைக் வாங்கினா நீங்களும் ஓட்டலாம் இல்ல.”
“இப்போ அவ்வளவு செலவு பண்ணமுடியாது செந்தில். பணம் சேர்த்து வச்சு நீ காலேஜ் சேர்ந்தபிறகு வாங்கித் தரேன். லைசன்சும் எடுத்துடலாம். லைசன்ஸ் எடுக்கற வயசுகூட ஆகல, அதுக்குள்ள பைக் ஓட்டி ஏதாவது பிரச்சனைல மாட்டினா அது நமக்குதானே கஷ்டம்.”
“எப்போ என்ன கேட்டாலும் இப்படி ஏதாவது காரணம் சொல்லுங்க. நான் இந்த வீட்டுல பொறந்ததே தப்பு. வேற அப்பா அம்மாவுக்குப் பொறந்திருக்கணும் எதைக் கேட்டாலும் பணம் இல்ல, பணம் இல்லன்னு சொல்லிட்டு…”
கையில் வைத்திருந்த தண்ணீர் டம்ளரை வீசிவிட்டு, கோபமாக எழுந்து போனான். அதன்பிறகு வீட்டில் அதிகம் பேசிக்கொள்ளாமல் நாட்களைக் கழித்தான். தன்னுடைய நியாயமான ஆசைகளைக்கூட நிறைவேற்ற முடியாத இயலாமையைத் தன் பெற்றோருக்குப் புரியவைக்க, கோபம், நிராகரிப்பு, பிடிவாதம் போன்ற ஆயுதங்களே கைக் கொடுக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பும் பதின்பருவம்.
அறிவுரைகள் கசந்தன. எப்போதும் கொதித்துக் கொண்டிருந்த கோபம் யார் மீது பாயலாம் என்று காத்துக் கிடந்தது. நண்பர்கள், அக்கம்பக்கம் உள்ளவர்கள் என்று அவ்வப்போது சிக்குபவர்களிடம் சிடுசிடுத்து தன் ஆற்றாமையைத் தணித்துக்கொண்டான் செந்தில்.
பதினோராம் வகுப்பில் சேர்ந்து பள்ளிக்குப் போக ஆரம்பித்த பிறகும், ஏனோதானோ என்று எதிலும் பிடிப்பில்லாமல் கோபமாகவே இருந்தான். செந்திலின் இந்த நடவடிக்கைகள் குமரேசனுக்குப் பயத்தைத் தந்தன. நீண்ட யோசனைக்குப் பின் ஒரு தீர்மானத்தோடு அவனிடம் பேசினார்.
“செந்தில், இப்போதைக்கு நீ ஸ்கூலுக்கு என்னோட சைக்கிளை எடுத்துட்டுப் போ. ஆறு மாசத்துல பைக் வாங்கித் தரேன்.”
செந்திலுக்கு அதில் இஷ்டமில்லை என்றாலும், அப்போதைக்கு சைக்கிளாவது கிடைத்ததே என்று தேற்றிக்கொண்டான். மேலும் ஆறு மாதத்தில் பைக் வாங்கித் தருவதாக அப்பா சொல்லியிருப்பதால், அதற்குமேல் பிடிவாதம் பிடிக்கவேண்டாமென்று தோன்றியது.
‘இப்போ ஏதாவது தேவையில்லாம பேசினா ஆறு மாசத்துல கிடைக்கற பைக் கிடைக்காம போகலாம். லைசென்ஸ் வாங்காம பைக் ஓட்டக் கூடாதுன்னு ரூல்ஸ் பேசினவரு இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெருசு. ஆனா இந்த ஓட்டை சைக்கிளை என் தலைல கட்டிட்டு அவர் பைக்கை ஓட்டிட்டுப் போக திட்டம் போடறாரோ?
தாத்தா காலத்து சைக்கிள் மாதிரி ஒரு ஓட்டை சைக்கிளை ஓட்டிட்டுப் போனா என் ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. சைக்கிளாவது புதுசா வாங்கித் தந்தா என்ன? பெத்த பையனுக்கு இதைக்கூட செய்ய மனசு வரல.
ஆனா மாடசாமியோட அப்பா அவரோட காஸ்ட்லி பைக்கையே குடுத்து ஓட்டச் சொல்றாரு. பழனிக்கு அவங்க அப்பா புதுசா ஒரு பைக் வாங்கிக் குடுத்திருக்காரு. அவங்க அதை கெத்தா ஓட்டிட்டு வராங்க. ஆனா நான் மட்டும் ஓட்டை சைக்கிளை ஓட்டிட்டுப் போகணும். அவங்க முன்னாடி எனக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்னு அப்பா எப்பவாவது யோசிச்சிருக்காரா?
சரி, இப்போ கோபத்தைக் காட்டினா இருக்கறதும் போயிரும். பொறுமையாதான் டீல் பண்ணணும்.’
தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான் செந்தில். இருந்தாலும் அப்பாவின் பழைய சைக்கிளை ஓட்டிச் செல்வதும் அவனுக்கு அவமானமாக இருந்தது.
“என்னங்க, உங்க சைக்கிளை அவனுக்குக் கொடுத்துட்டு நீங்க என்ன பண்ணுவீங்க? பைக் வாங்கித் தரதா வேற அவன்கிட்ட சொல்லியிருக்கீங்களே, இதெல்லாம் சரியா வருமா?”
“கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் மங்களம். அவன் வயசு அப்படி. கோபத்துல தப்பா யோசிக்கற வயசு. பைக் வாங்கித் தரலைன்னு கோவத்துல படிப்பைக் கோட்டை விட்டுடக் கூடாது. அதான் இப்படிச் சொன்னேன். சைக்கிள்ல ஸ்கூல் போயிட்டு வரட்டும். அப்படி இப்படின்னு காலேஜ் போற வரைக்கும் எதையாவது சொல்லி அவனை சமாளிக்கலாம்.”
அப்பா அம்மாவின் இந்த உரையாடலும் செந்திலின் காதில் விழுந்தது. அவன் கோபம் அதிகமானது. ஆனால் உடனடியாக என்ன செய்வது என்று தெரியவில்லை. வேண்டாவெறுப்புடன் சைக்கிளில் பள்ளிக்கூடம் போய் வந்தான்.
அப்பாவின் பழைய சைக்கிளைப் பார்த்தாலே அவனுக்கு எரிச்சலாக இருக்கும். வேண்டுமென்றே சைக்கிளைக் காலால் உதைப்பது, கீழே தள்ளிவிடுவது என்று அவ்வப்போது தன் கோபத்திற்கு வடிகாலாக சைக்கிளை உபயோகித்துக் கொண்டான்.
ஐந்தாறு மாதங்கள் ஓடின. ஆனால் செந்திலின் கோபமும் ஏமாற்றமும் எங்கும் ஓடாமல் அவன் உள்ளே விருட்சமாக வளர்ந்து நின்றன. அதன் விளைவுதான் இப்போது வீட்டை விட்டு வரவைத்திருக்கிறது.
செந்தில் அழகர் குளம் பஸ் ஸ்டாண்டை வந்தடைந்தான். ஒரே ஒரு பஸ் மட்டும் நின்றிருந்தது. அதையும் அப்போதுதான் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். அந்த பஸ்ஸில் ஏறி யாருக்கும் தெரியாமல் ஒளிந்துகொள்ள வேண்டும் என்ற பரபரப்போடு உள்ளே ஏறினான். கடைசி இருக்கையில் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்து வந்தவன், அதிர்ந்து நின்றான்.
கடைசி இருக்கையில் குறுக்கிக்கொண்டு படுத்திருந்தார் குமரேசன். காற்று அதிகம் இல்லாததால் வியர்த்து வியர்த்து சட்டை ஈரமாகியிருந்தது. நாலைந்து கொசுக்கள் தலைக்கு மேலே வட்டமடித்துக் கொண்டிருந்தன. ஆனால் இதெல்லாம் பெரிதாகத் தெரியாத வகையில் உடலில் இருந்த அசதி குமரேசனை ஆழ்ந்த உறக்கத்தில் தள்ளியிருந்தது.
‘அப்…பா! அப்பா ஏன் பஸ்ல தூங்கிட்டிருக்காரு?’
கோபத்தில் வந்தவன் குழப்பத்தோடு ஏறிய வேகத்தில் கீழே இறங்கினான். பஸ்ஸை சுத்தம் செய்து கொண்டிருந்தவர் செந்திலைப் பார்த்துவிட்டார்.
“என்ன தம்பி, எங்கே போகணும்? ஏறிட்டு உடனே இறங்கிட்டே.”
“இல்ல, இந்த பஸ் எங்கே போகுது?”
“ஓ, போர்டு இன்னும் வைக்கல, அதான் சந்தேகத்துல இறங்கிட்டியா? இது விக்ரமபுரம் போகுது. உனக்கு எங்கே போகணும்?”
“அது… உள்ளே ஒருத்தர் தூங்கிட்டிருக்காரு. ஏன் இங்கே தூங்கறாரு?”
“ஓ, குமரேசன் அண்ணனா. இப்ப பஸ் கழுவற சத்தத்துல எந்திரிச்சுடுவாரு. அவரு ஷிஃப்ட் முடிச்சு இந்த பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் ஆபீஸ் பஸ்ல வந்துடுவாரு. நைட் ரெண்டு மணிக்கு இங்கே இருந்து சைக்கிள்ல பாண்டியாபுரம் போயிட்டிருந்தாரு. இப்போ சைக்கிள் இல்லையாம். அவர் மகன் ஸ்கூலுக்குப் போயிட்டு வர சிரமப்படறான்னு, மகனுக்கு சைக்கிளைக் குடுத்துட்டாராம். கிட்டத்தட்ட ஆறு மாசமா இப்படி பஸ்லதான் தூங்கறாரு.
தன் மகன் நல்லாப் படிக்கணும்னு இப்படிக் கஷ்டப்படற அப்பா கிடைக்க அந்தப் பையன் கொடுத்து வச்சிருக்கணும். மகன் நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணும்னு கொசுக்கடி, மழை, சூடுன்னு எதைப்பத்தியும் கவலைப்படாம தினமும் பஸ்ல தூங்கிட்டிருக்காரு. இப்போ எழுப்பி விட்ருவேன்.”
கண்கள் குளமாக, தடுமாறி நின்றான் செந்தில். அப்பா எழுந்து தன்னைப் பார்ப்பதற்குள் அங்கிருந்து நகர்ந்துவிட வேண்டும் என்ற உந்துதலால் வேகமாக நடந்தான். கால்கள் அவனையும் அறியாமல் வீட்டை நோக்கி நடந்தன.
‘அப்பா பழைய சைக்கிளை எனக்குக் கொடுக்கறாரேன்னு கோபப்பட்டேன். ஆனா, அந்தப் பழைய சைக்கிள்கூட இல்லைனா அப்பா நைட் வீட்டுக்கு வர முடியாதுன்னு யோசிக்கலையே. பாவம் அப்பா, அவரை ரொம்ப காயப்படுத்திட்டேன். இவ்வளவு கஷ்டப்படறவர்கிட்ட பைக் வேணும்னு அடம்புடிச்சது தப்புதான். இனிமே இப்படி அடம்புடிக்கக் கூடாது. நல்லாப் படிச்சு அப்பா அம்மாவுக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கணும்.’
மனதுக்குள் பல புதிய உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டு, வீட்டிற்குத் திரும்பினான். வாசலில் நின்றிருந்த சைக்கிளை வாஞ்சையோடு தடவினான்.
“செந்தில், இங்கே இருக்கியா? வீட்டுக்குள்ள உன்னைக் காணோமேன்னு இப்பதான் தேடிட்டிருந்தேன். சீக்கிரமா எழுந்து சைக்கிளைத் துடைச்சுட்டிருக்கே, அதிசயமா இருக்கு. ஸ்கூலுக்கு சீக்கிரம் போகணுமா?”
“இல்லமா, வழக்கம் போலதான் போகணும். ஆனா நான் இனிமே ஸ்கூலுக்கு நடந்து போயிக்கறேன். அப்பா சைக்கிள் எடுத்துட்டுப் போகட்டும்.”
தெளிவாக, நிதானமாகச் சொன்னான் செந்தில். செந்திலின் மனமாற்றத்திற்கான காரணம் புரியாமல் திகைத்து நின்றார் மங்களம்.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings