in ,

அம்மா வீடு (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்           

என்னவோ தெரியவில்லை, கடந்த சில நாட்களாக அப்பாவின் நினைவு அதிகமாக என்னை வாட்டுகிறது. அப்பா இருந்தால் எனக்கான ஆறுதல் அவரிடம் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை.

“ராகவா, உறவுகள் ஆத்துத் தண்ணி மாதிரி, வர போக இருப்பாங்க. யாருக்காகவும் ரொம்ப கவலைப்படாம நம்ம வாழ்க்கையை ஓட்டணும். அப்பதான் வயசான காலத்துல நிம்மதியா இருக்க முடியும்.”

என் வாலிப வயதில் அப்பா என்னிடம் அடிக்கடி இதைச் சொல்வார். எனக்கு அந்த வயதில் அது புரிந்தும் புரியாமலும் இருந்தது. சொன்ன வாக்கியங்கள் புரிந்தாலும், ஏன் அடிக்கடி அதைச் சொல்கிறார் என்று புரியவில்லை.

அறுபது வயதை எட்டிய பிறகு இப்போது புரிகிறது. இப்போது, எனக்கும் அந்த வாக்கியங்களை யாரிடமாவது சொல்ல வேண்டும்போல் உள்ளது.

அப்பா அப்போது இதே மனநிலையில்தான் இருந்திருப்பார் என நினைக்கிறேன். அவர் கடைசி மூச்சுவரை கணக்கு எழுதும் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார்.

எங்கள் வீட்டில் நான் ஒரே பையன். எனக்கு நாலு அக்கா. நான்தான் அப்பாவிடம் உரிமையோடு நிறைய பேசுவேன். எனக்கு அப்பாவை ரொம்பப் பிடிக்கும்.

நாலு அக்காவும் அப்பாவிடம் மட்டும் அளவாகப் பேசுவார்கள். கல்யாணமாகிப் போனதும் அதுவும் குறைந்து போனது. எல்லாமே அம்மாவிடம் மட்டும்தான். கேட்டால், அப்பா வேலை வேலை என்று வேலைக்கு முக்கியத்துவம் தந்து வெளியே போய்விடுகிறார் என்று நாலு பேரும் காரணம் சொல்வார்கள். அம்மாவின் பங்கும் இதில் கொஞ்சம் உண்டு என்பது என் அபிப்ராயம்.

“உங்க அப்பாவுக்கு நம்மளைவிட வேலைதான் முக்கியம். இல்லன்னா ரிட்டையர் ஆனபிறகும் இப்படி வேற வேற இடங்கள்ல வேலை தேடிட்டு வெளில போவாரா?”

இப்படி அப்பாவைப் பற்றி ஏதாவது எதிர்மறையாகவே சொல்வார்  அம்மா. குழந்தைகளின் மொத்த அன்பும் தன்னிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைக்கும் அநேக அம்மாக்களின் கூட்டணியில் என் அம்மாவும் இருக்கிறார் எனப் புரிந்தாலும், அப்பாவை நினைத்தால் கவலையாக இருக்கும்.

இப்போது நானும் அதே நிலைமையில் இருக்கிறேன். நான்கு மாதங்களுக்கு முன் ரிட்டையர் ஆனதிலிருந்து ஏதோ வெறுமை என்னை ஆட்டுவிக்கிறது. ஒரு வருடமாவது கொஞ்சம் ஓய்வாக நிம்மதியாக இருந்துவிட்டு, பிறகு வேண்டுமானால் ஏதாவது வேலை தேடலாம் என நினைத்தேன். ஆனால் மனஉளைச்சல், வெறுமை உணர்வு, நான் யாருக்கும் தேவையில்லை என்ற சுயபச்சாதாபம் எல்லாம் என்னைப் புரட்டி எடுக்கின்றன.

இதோ, இப்போதுகூட வீட்டின் உள்அறையில் அனைவரும் ஏதோ சத்தமாகப் பேசிச் சிரிக்கிறார்கள். திருமணம் முடிந்து வெளிநாட்டில் இருக்கும் மகன் விடுமுறைக்கு வந்திருப்பதால், வெளியூரில் இருக்கும் இரண்டு மகள்களும் பேரக் குழந்தைகளுடன் அண்ணனைப் பார்க்க வந்துள்ளார்கள்.

எப்போதும் நானும் மனைவி சாந்தாவும் மட்டும் இருக்கும் வீட்டில், இப்போது கலகலப்பாக எல்லோரும் இருப்பது சந்தோஷம்தான் என்றாலும், இந்தக் கலகலப்பிலும் நான்மட்டும் தனியாக உணர்கிறேன். இதுதான் பிரச்சனை.

“அம்மா வீட்டுக்கு வந்தாலே தனி சந்தோஷம்தான். எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா இருக்கலாம். வேளாவேளைக்கு உட்கார்ந்த இடத்திலேயே பிடிச்சதை சாப்பிடலாம். அந்த சுகமே தனிதான். நமக்கு எவ்வளவு வயசானாலும் அம்மா வீட்டுக்கு வரும்போது இருக்கற நிம்மதி வேற எதுலயும் கிடைக்காது.” இது சின்ன மகள் ரம்யா.

“ஆமா ரம்யா, நாம சமையலே செய்யாம அம்மா கையால சமைச்சு சாப்பிடற அனுபவம் தனி சந்தோஷம்தான். அம்மா வீட்டுக்கு வரப் போறோம்னு நினைக்கும்போதே மனசு துள்ளிக் குதிக்க ஆரம்பிச்சுடுது.” இது பெரியவள் சௌமியா.

“உங்க ரெண்டு பேருக்கும் பரவாயில்ல. இந்தியாவிலேயே இருக்கீங்க, நினைச்ச நேரத்துல வரலாம். ஆனா நான் வருஷத்துல ஒரு தடவை வந்தாலே பெருசு. அம்மா செஞ்சு குடுக்கற பொடிகளும் அப்பளமும்தான் எனக்கு அம்மா சமையலை ருசிக்கற அனுபவத்தைத் தருது. பண்டிகை நாட்கள்ல அம்மா செய்யற பலகாரங்களைச் சாப்பிட முடியலைங்கற ஏக்கம் ரொம்ப வலிக்கும்.” மகன் பிரவீனின் கவலை இது.

ஆக, மூன்று பேருக்கும் நான் தேவையில்லை. வாய்க்கு வாய் அம்மா சமையல், அம்மா வீடு என எல்லாமே அவள்தான். ஏன், என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்காதா? நான் அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா? அதைப்பற்றி ஏன் யாரும் எதுவும் சொல்லவேயில்லை‌.

இத்தனை காலங்களாக வேலைக்குப் போய் கொண்டிருந்ததால் அவர்களுடன் அதிகம் பேச முடியவில்லை. வேலை நேரத்தில் வேறு சிந்தனை இருக்காது. வேலை முடித்து வீடு வந்து சேர்ந்தால் குழந்தைகளைப் பற்றி சாந்தாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

ஆனால் இப்போது முழு நேரமும் வீட்டில் இருக்கிறேன். என்னிடம் பேச யாருக்கும் நேரமில்லை. நேரமில்லையா, மனசு இல்லையா என்று புரியவில்லை. இப்போது நான் வெறும் ராகவன் என்பதால் மதிப்பில்லையா?

நான் செய்த வேலைக்கும், வாங்கிய சம்பளத்துக்கும் இருந்த மதிப்பு, இப்போது வெறும் ராகவனாக இருக்கும்போது இல்லையே. நினைக்க நினைக்க மனம் மிகவும் பாரமானது. அப்பா சொன்னதுபோல் இயல்பாகக் கடந்துபோக நினைத்தாலும், பாழும் மனது ஏதோ ஒன்றுக்காக ஏங்குகிறது.

“அம்மா, அப்பா ஏன் இப்படி ஆயிட்டார்? சரியாப் பேசறதேயில்ல. எங்க மேல ஏதாவது கோபமா? இப்பகூட பாருங்க, நாம எல்லாம் ஜாலியா பேசிட்டிருக்கோம். அப்பா மட்டும் தனியா உட்கார்ந்து ஏதோ யோசிச்சிட்டிருக்காரு. பேரக் குழந்தைங்ககூட ஏதோ பேசறார், விளையாடறார், வெளில கூட்டிட்டுப் போறார். ஆனால் எங்ககூட ரொம்பப் பேசறது இல்லையே, என்ன விஷயம் மா?”

“ஆமாம் மா, ரம்யா சொல்றது சரிதான். நானும் இதேதான் கேட்கணும்னு நினைச்சேன். இவ்வளவு வருஷங்கள் வேலைக்குப் போயிட்டிருந்ததால எங்க கூட அதிகம் பேச முடியல. இப்போ ரிட்டையர் ஆயிட்டார். நிறைய டைம் கிடைக்கும், ஃப்ரீயாதானே இருக்கார். எங்ககிட்ட பேசினா என்ன. ஏன் எங்களுக்கு ஃபோன் பண்ணி பேசக்கூட முடியாதா? இந்த ஒரு வருஷத்துல அவர்கிட்ட இருந்து எனக்கு ஃபோன் வந்ததை விரல்விட்டு எண்ணிரலாம்.”

“ஆமா அண்ணா, அப்பாவா ஃபோனே பண்றதில்ல. ரொம்ப அபூர்வம். அவர் இப்படி இருக்கறதுனால நமக்கும் அப்பான்னு ஓட்டுதலே அதிகம் வரமாட்டேங்குது. உங்ககிட்டயாவது ஒழுங்காப் பேசறாரா  மா?”

அவர்கள் உள்ளே பேசுவது துல்லியமாக என் காதில் விழுந்தது. இதற்கு சாந்தா என்ன பதில் சொல்லப்போகிறாள்? இந்த வீட்டில் என் நிலை என்ன என்பது அவள் பதிலில் தெரிந்து விடும். படபடக்கும் இதயத்தோடு காதைத் தீட்டிக் காத்திருந்தேன்.

“மூணு பேரும் உங்க அப்பாவை குறை சொல்றதை நிறுத்தறீங்களா. அவர் பொதுவாவே அதிகம் பேசமாட்டார்னு உங்களுக்குத் தெரியாதா? இவ்வளவு வருஷம் கூடவே இருந்தும் அவர் குணத்தைப் புரிஞ்சுக்கலையே.

அவர் ஃபோன் பண்ணலேன்னு குறை சொல்றீங்களே, ஏன் நீங்க அவர் நம்பருக்கு ஃபோன் பண்ணா என்ன? இப்போ அவர் ஃப்ரீயா இருக்கறதா நீங்களே சொல்றீங்களே, அப்போ அவர் நம்பருக்குக் கூப்பிட்டுப் பேசலாமே. எனக்குதான் கூப்பிடறீங்க. நானாதான் உங்க அப்பாகிட்ட குடுத்து பேச வைக்கறேன். நீங்களா அப்பாகிட்ட பேசணும்னு எப்பவாவது தானே கேக்கறீங்க.

இத்தனை வருஷங்களா நமக்காக உழைச்சிட்டிருந்தவர், ரிட்டையர் ஆனதும் என்ன பண்றது, மீதி காலத்தை எப்படிக் கழிக்கப் போறோம், நமக்குன்னு இனிமேல் எந்த மரியாதையும் இருக்காதுன்னு உள்ளுக்குள்ள புழுங்கறாரு. இது ரிட்டையராகற எல்லா ஆண்களுக்கும் வர மன உளைச்சல்தான். இந்த நேரத்துல நாமதானே அவருக்கு ஆறுதலா, பக்கபலமா இருக்கணும்.

நானும் உங்ககிட்ட ஜாடைமாடையா இதை சொல்லிப் பார்த்தேன். அப்பாகிட்ட பேசுங்கன்னு சொன்னா அப்புறம் பேசறேன், பேச பெருசா ஒண்ணுமில்ல, நீங்களே அப்பாகிட்ட சொல்லிடுங்கன்னு ஃபோனை கட் பண்ணிடறீங்க.  இப்படி நீங்களே அவரை அவாய்ட் பண்ணிட்டு இப்போ அவரைக் குறை சொல்றீங்களே.

அவர் இல்லாம நாம இந்த அளவுக்கு வந்திருப்போமா. என்ன… நான் வேலைக்குப் போகாம வீட்டுலயே இருந்து உங்க மூணு பேருக்கும் தேவையானதைப் பார்த்துக்கிட்டேன். குழந்தையிலிருந்து இப்ப வரைக்கும் உங்களுக்குப் புடிச்சதை செஞ்சு கொடுக்கறேன். அதனால  நான் மட்டும்தான் உங்க மேல அதிக பாசமா இருக்கறதா நினைச்சுக்கறீங்க. அதான் என்கிட்டயே எல்லாம் சொல்றீங்க.

ஆனா ஒரு விஷயம் தெரியுமா? உங்க மூணு பேரைப் பத்தி என்னைவிட அப்பாவுக்கு நல்லாத் தெரியும். அவர் வாய் திறந்து அதிகம் பேசமாட்டார். இவ்வளவு வருஷங்களா அவர் வேலைல கவனமா இருந்ததால இதையெல்லாம் பெருசுபடுத்தல. இப்போ அவர் ரொம்ப ஏங்கறார். அவருக்கு நீங்க யாராவது ஃபோன் பண்ணுவீங்களான்னு எதிர்பார்க்கறார்.

இவ்வளவு ஏன், நீங்க வந்த இந்த நாலு நாளா என்னைப் பத்தி பெருமையா பேசறீங்களே தவிர, அவர் செஞ்ச எதையுமே பெருசா சொல்லலையே. அவரோட ஒத்துழைப்பு இல்லாம நான் உங்களுக்கு எல்லாம் செஞ்சிருக்க முடியுமா?

நான் முன்னாடி நின்னு எல்லாம் பண்ணாலும் என் பின்னால நின்னு என்னைப் பண்ண வச்சவர் அவர்தான். அவரைக் குறை சொல்லாம உங்களை மாத்திக்கப் பாருங்க. சரி, நான் போய் சமையல் வேலையைப் பார்க்கறேன்.’

உள் அறையில் ஆழ்ந்த அமைதி வந்து உட்கார்ந்துகொண்டது. என் மனதிலும்தான். என்னவள் என்னைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறாள் என்ற நிறைவு மனதை லேசாக்கியது. இனிமேல் என்னை யாரும் மதிக்க மாட்டார்களோ என்கிற சுயபச்சாதாபமும், தாழ்வு மனப்பான்மையும் விட்டு விடுதலையாகி வெளியேறின.

இன்னும் எனக்கான வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கை புது தெம்பைத் தந்தது. என் குழந்தைகளிடம் இத்தனை வருடங்களில் பேசாததெல்லாம் பேசித் தீர்க்கவேண்டும் என்ற உந்துதலால் எழுந்து உள்ளே போனேன்.

கண்களில் கண்ணீர் தளும்ப, என்னைச் சூழ்ந்து கொண்டார்கள் மூவரும். அம்மா வீடு என்ற சொல்லுக்குள் நானும் அடங்கியிருக்கிறேன் என்ற புரிதல் என் வயதைக் குறைத்த உணர்வு கிடைத்தது எனக்கு.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழிந்துவரும் உலகம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    உதிர்ந்த மலர்கள் (சிறுகதை) – குமார்.G