எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சோபாவில் அமர்ந்திருந்த சேகர், சட்டென்று எழுந்து எதிரே அமர்ந்திருந்த விக்ரம் அருகே சென்று, “என் அன்புத் தங்கையின்… ஆருயிர் காதலனுக்கு… இந்த மைத்துனனின் அன்புப் பரிசு” என்று செந்தமிழில் சொல்லியவாறே விக்ரமின் கழுத்தில் “ஆட்டின்” சிம்பல் டாலர் தாங்கிய தங்கச் சங்கிலியை அணிவித்தான். சுத்தமாய் ஐந்து பவுனிருக்கும்.
ஆனால், உள்ளுக்குள், “பத்துப் பைசா பெறாத பரதேசி பயலே!… ஏதேதோ மாய்மாலங்கள் பண்ணி… என் பணக்காரத் தங்கச்சியை மயக்கி…. காதல் பண்ணிட்டு…. எங்களோட ஏகபோகச் சொத்துக்கு பங்குக்கு வரப் போறியா?… விடுவேனா நான்?… உன் கழுத்துல நான் போட்டிருக்கற சங்கிலி… வெறும் சங்கிலியல்ல… நான் உனக்கு போட்டு இருக்கிற வாய்க்கரிசி!… இன்னும் கொஞ்ச நேரத்துல …நான் மொபைல்ல கால் வருதுன்னு சொல்லிட்டு இந்த இடத்தை விட்டுப் போயிடுவேன்!… அப்ப அந்த டாலருக்குள் இருக்கிற குட்டி பாம் வெடிச்சு தூள் தூளாகும்…. நீ கூழாகிப் போயிடுவேடா கண்ணா” கொக்கரித்துக் கொண்டான் சேகர்.
அவன் அணிவித்த சங்கிலியைச் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்ட விக்ரம், “மிஸ்டர் மச்சான்!… உங்க வசதிக்கு நீங்க தங்கச் சங்கிலி போட்டுட்டீங்க!… ஏதோ என்னோட வசதிக்கு… இதோ… இந்த புது மாடல் செல்போனைத் தான் என்னால் தர முடியும்!… சங்கடப்படாமல் வாங்கிக்கங்க!… ப்ளீஸ்!” சொல்லியவாறே விக்ரம் அந்த புது மாடல் செல்போனை நீட்ட, சிரித்த முகத்துடன் பெற்றுக் கொண்டான் சேகர்.
அதே நேரம் விக்ரமின் உள் மனம், “அடேய் பணக்கார மண்டு!… எனக்கு எப்பவுமே…. எதையுமே… முழுசா அனுபவிச்சுத்தாண்டா பழக்கம்!… அதனால என் காதலி… அதான் உன் அருமைத் தங்கச்சி மூலமாக வரப் போற சொத்துக்கு… எனக்குப் பங்காளியா இருக்கிற உனக்கு இந்த செல்போனுக்கு உள்ளார வெச்சிருக்கிறேன்டா ஆப்பு இன்னும் கொஞ்ச நேரம்தான்!… நான் நைஸா டாய்லெட் போறதா சொல்லி நழுவிடுவேன்!… அப்ப அது வெடிக்கும்!… உன் உடம்பு துடிக்கும்!… சொத்து முழுக்க எனக்கே கிடைக்கும்!… ஹா…ஹா…ஹா…” குதியாட்டம் போட்டது மனசு.
“அடடா…. மாமனும் மச்சானும் மாத்தி மாத்தி பரிசு கொடுத்துக்கிட்டது போதும் முதல்ல ரெண்டு பேரும் கூல் டிரிங்ஸ் குடிங்க!” பூரிக்கும் புன்னகையோடு பிரவேசித்த ஹரிதாவின் கைகளில் கூல்ட்ரிங்ஸ் டம்ளர்களை தாங்கிய டிரே.
“ஓ… தேங்க்யூ… தேங்க்யூ” விக்ரமும் சேகரும் ஆளுக்கொன்றை எடுத்துப் பருக,
“அட…. அறிவு கெட்ட அண்ணா!… புத்தி கெட்ட காதலா!…. இப்போதைக்கு என்னோட புதுக் காதலன் ரிச்சர்ட்!… அவன் கூட நான் பாரின் போறதுக்கு தடையாய் இருக்கிறது… நீங்கள் ரெண்டு பேரும் தான்!… அதான் கூல் ட்ரிங்க்ஸ்ல ஹெவி பாய்சன் கலந்து இருக்கேன்! நல்ல பிள்ளையா குடிச்சிட்டு “நறுக்”குன்னு போய் சேருங்க!… மொத்த சொத்துக்கும் ஒரே வாரிசாகப் போகிற நான்.. ரொம்ப பிசி!.. நானும் என் புதுக் காதலன் ரிச்சர்ட்டும்.. சுவிட்சர்லாந்து டேட்டிங் போக ஏர் டிக்கெட் புக் பண்ணனும் !” இதழோரம் குரூரப் புன்னகையுடன் அவர்கள் பருகுவதையே பார்த்துக் கொண்டு நின்றாள் ஹரிதா.
அடுத்த பத்தாவது நிமிடம், கூல் டிரிங் பருகிய இருவரும் மெல்ல மெல்ல சோபாவில் சாய, ஆட்டின் டாலர் பாமும், செல்போன் பாமும், ஒரே நேரத்தில் வெடித்துச் சிதற, சதைத் துண்டுகளாய் தெறித்துப் போய் விழுந்தாள் ஹரிதா. பாவம், அவளுக்கு எப்படித் தெரியும் டாலர் செயினுக்குள்ளும், மொபைல் போனுக்குள்ளும் பாம் இருப்பது?
*****
அதே நேரம், வக்கீல் ஆபீஸில் அட்வகேட் கோபாலகிருஷ்ணனிடம் சீரியஸாய்ப் பேசிக் கொண்டிருந்தார் மோகனசுந்தரம். சேகர் மற்றும் ஹரிதாவின் தந்தை.
“வக்கீல் சார் என்னோட மொத்த சொத்தையும் மூன்று பாகங்களாய்ப் பிரிங்க!… ஒரு பாகத்தை என் மகன் சேகருக்கும்… ஒரு பாகத்தை என் மகள் ஹரிதாவிற்கும்…. இன்னொரு பாகத்தை எனக்கு மருமகனா வரப் போற…. என் மகளின் காதலன் விக்ரமுக்கும் எழுதிடுங்க!…” தெளிவாகச் சொன்னார்.
“நோ மிஸ்டர் மோகனசுந்தரம்!… அது அவ்வளவு சரியா எனக்குப் படலை!… என்னதான் சேகரும்… ஹரிதாவும் நீங்க பெற்ற பிள்ளைகளாய் இருந்தாலும்… எல்லா நேரமும் அவர்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போலவே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது!… காலம் எல்லாத்தையும் மாற்றும்… மனிதர்கள் உட்பட… அதனால….” என்று வக்கீல் நிறுத்த,
“அதனால?” கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டார் மோகனசுந்தரம்.
“சொத்தை…. நாலு பாகமாக பிரித்து… உங்க பெயருக்கு ஒண்ணை எழுதறது தான் சரியான முறை!… அப்பத்தான் கடைசி வரைக்கும் நீங்க யார் கையையும் எதிர்பார்க்காமல் சுயமா…. உங்க சொந்தக் கால்ல நிற்கலாம்!” என்றார் வக்கீல் கோபாலகிருஷ்ணன்.
“நோ… நோ… மொத்த சொத்தும் இது நாள் வரைக்கும் என் பெயரில் இருந்தது போதும்!… இனிமேல் என் பெயரில் சின்ன சொத்து கூட வேண்டாம்!… யெஸ்…. இனிமேல் இந்த பிசினஸ்… செமினார்… டர்ன் ஓவர்.. பேலன்ஸ் சீட்… ஆடிட்டர் ரிப்போர்ட்…. எதையும் நான் பார்க்கப் போவதில்லை!…..இனிமேல் நான் சுதந்திரப் பறவையாய் இருக்கப் போறேன்!… முடிஞ்சா உள்நாட்டுல இருக்கற கோயில் குளங்களுக்கும்… வெளிநாட்டில் இருக்கற சுற்றுலாத்தலங்களுக்கும் போ வந்திட்டிருக்கலாம்” என்று சந்தோஷமாய்ச் சொல்லியவாறே நாற்காலியை விட்டு எழுந்தவரின் செல்போன் அலறியது.
“மிஸ்டர்.மோகன சுந்தரம்?”
“யெஸ்”
“நான் இன்ஸ்பெக்டர் முகேஷ் பேசறேன்!… கொஞ்சம் உடனே கிளம்பி உங்க வீட்டுக்கு வர முடியுமா?” கண்டிப்பான குரல் கட்டளையிட்டாது.
“என்ன இன்ஸ்பெக்டர்?… என்ன பிரச்சினை?” பதட்டமானார் மோகனசுந்தரம்.
“அதைப் போன்ல சொல்ல முடியாது… நேர்ல வாங்க”
வேக வேகமாய்த் தன் காரை நோக்கி ஓடினார் மோகனசுந்தரம்.
சொத்தில் ஒரு பாகம் கூட வேண்டாம் என்றவர் கையிலேயே அவர் சம்பாதித்த மொத்த சொத்தும் இருக்கப் போவதை பாவம் அவர் அறியவில்லை.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings