எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நான் விஸ்வநாதன், என் பார்யாள் செல்வநாயகி, எங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் புத்திர பாக்யம் இல்லை. கிட்டத்தட்ட 12 வருஷம் வேண்டாத தெய்வமில்லை, தங்க விக்ரகமா இருந்த என் செல்வநாயகி தளர்ந்து போயிட்டா இந்தக் கவலைலயே.
ஒரு மார்கழி மாசம் பக்கத்துல இருந்த பஜனை மண்டபத்துல ஒரு சித்தர் எழுந்தருளியுள்ளார், அவரைப் பாத்தாலே பாவங்கள் எல்லாம் பறந்து போகும்னு ஊரெல்லாம் பேச்சு. செல்வத்துக்கு அவரை தரிசிக்க ஆசை. ஒரு சாயங்கால நேரத்துல அவளையும் அழைச்சிட்டு பஜனை மண்டபத்துக்கு போனேன். ஏகக் கூட்டம்தான். இந்தக் காலத்துலயும் சாமியார்,சித்தர்னு மக்களுக்கு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.
ஒரு கடவுள் மறுப்பு பிரபலம் கூட, தலையில் துண்டு போட்டு மறைத்துக் கொண்டு முன்னால் நின்றிருந்தார். சித்தர் நிஷ்டையில் அமர்ந்திருந்தவர் சட்னு கண் முழிச்சு 7,8 பேர்களை நோக்கி விரல் காட்ட அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டனர்,அந்த ஆசீர்வதிக்கப் பட்டவர்களின் குழுவில் நானும் என் மனைவியும் கூட.
நாங்கள் ஒவ்வவொருவராய் அவர் அருகில் செல்ல சீடர்களால் அனுமதிக்கப் பட்டோம்.நாங்கள் அருகில் போனதும், நான் எங்களைப் பற்றி சொல்ல வாயெடுத்தேன்.அவர் “உஸ்” என்று என்னை அடக்கி என் உச்சந்தலையில் கை வைத்து தன் கண்களை சில நொடிகள் மூடிக் கொண்டார்.,பின்னர் அதே போல என் மனைவி தலைலயும் கை வைத்து ஏதோ ஜபித்தார். அருகில் மரக் குடுவையில் இருந்து விபூதி எடுத்து இருவர் நெற்றியிலும் தீட்டினார்.
மிக மிருதுவாகச் சொன்னார்,உன்னித்துக் கேட்டால் மட்டுமே புரியும். “திருக்கண்டியூர் ஶ்ரீ ஹரசப விமோசனப் பெருமாள் கோவிலுக்குப் போ. கமலநாதனுக்கு 21 தாமரைப்பூ வச்சு அர்ச்சனை பண்ணு.” அவ்வளவுதான் அடுத்தவரை சீடர் முன்னே தள்ளினார்.
மனைவிக்கு ஒரே சந்தோஷம், என் உடம்பும் புல்லரித்து சொல்லவொண்ணா பரவசம் அந்த மகானின் தீண்டுதலால்.
செல்லம் கேட்டா,”எப்பப் போகலாம்?”
“திருக்கண்டியூர் பேரே கேள்விப் பட்டதில்லையே கொஞ்சம் பொறு நண்பர்களிடம் விஜாரிக்கிறேன்.”
“இதுல என்ன விஜாரிக்கறது, கும்மோணம் பக்கத்துலதான் இருக்கும்”
நண்பர் வேதாசலம்தான் சொன்னார், “திருக்கண்டியூரா தெரியுமே திருவையாறு பக்கத்துல இருக்கு. தஞ்சாவூர்ல இருந்து ஆட்டோல கூடப் போலாமே.ஆனா ஓய் அங்கே பாலாமணி ஐய்யர் ஓட்டல்ல வாழக்கா,பெரிய வெங்காயம் இதை கட் பண்ணி மாவுல தோச்சு நெய்பஜ்ஜி, தேங்கா சட்ணியோட கொடுப்பான் பாருங்கோ அது சொர்க்கம்.4 மணில இருந்து 5.30 மணிக்குள்ளேதான் கிடைக்கும். நைட் டிபனுக்கு நெய்க் கிச்சடி,கத்திரிக்கா கொத்சு அமர்க்களமா இருக்கும்.”
சனிக்கிழமை நைட் அரசு பஸ்ல புறப்பட்டோம்,தஞ்சாவூர் போய் திருக்கண்டியூரும் போயாச்சு. ஶ்ரீ ஹரசப விமோசனப் பெருமாள் கோவிலுக்கும் கார்த்தாலயே போக முடிஞ்சது.கோவில் வாசல்லயே தாமரைப் புஷ்பங்கள் கிடைச்சது,வாங்கிண்டு உள்ளே போனா ஶ்ரீ ஹரசப விமோசனப் பெருமாள் கிழக்கு நோக்கி கனகவல்லித் தாயாருடன் நின்ற கோலத்தில். எனக்கு திகைப்பு, தாமரைப்பூ அர்ச்சனை எங்கே பண்றது இங்கே வேற பெருமாள்னா நிக்கறார். அர்ச்சகரிடமே மெதுவா விஜாரிச்சேன்.
“இங்கே கமலநாதர் சன்னதினு இருக்கோ”
“இவர்தான் அவர், உற்சவமூர்த்திக்கு கமலநாதன்றது திவ்யநாமம்”
அவரே அழைச்சிட்டுப் போய் அர்ச்சனை செய்வித்தார். “குறைகளை சொல்லி நிவர்த்தி பண்ணணும்னு மனசார வேண்டிக்கோங்கோ” ன்னார்.
அன்னிக்கு பூரா அக்கம் பக்கம் உள்ள எல்லா கோயில்களுக்கும் போனோம் மறு தாள் திரும்பிட்டோம். அதுக்கப்பறம் அதைப் பற்றி அதிகம் யோசனை பண்ணலை,சற்றே அவநம்பிக்கை கூட 12 வருஷமா இல்லாத்தை தாமரைப்பூ அர்ச்சனை நடத்துமானு. சரி, நல்ல ஊர்,நல்ல தரிசனம்,வேதாசலம் சொன்னா மாதிரி அருமையான கிச்சடி,கத்திரிக்கா கொத்சு வேறென்ன வேணும்.
ஆனா அந்த அதிசயம் நடந்தது, டாக்டர் பத்மஜா சிரித்த வண்ணம் கை குலுக்கி விஷயத்தை சொன்னப்ப செல்லத்துக்கு அளவற்ற சந்தோஷம்.
பையன் பொறந்தான் கொளு கொளுனு, அவன்தான் இப்ப உங்க முன்னால சோஃபா மேல ஏறி பின் பக்கமா எப்ப விழுந்துடுவானோன்ற மாதிரி நடக்கற 3 வயசு வாலு கமலநாதன், அம்மா செல்லம், எனக்கும்தான்.
வயசாக வயசாக இந்த அளவற்ற செல்லம் எங்கள் வாரிசை நாங்களே கெடுக்கறோமோனு பயமா இருக்கு.கமலநாதன் எட்டாவது படிக்கறப்ப ஸ்கூல்ல இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அரை நாள் லீவு போட்டுட்டு ஸ்கூல் போனேன். “கமலநாதனோட அப்பாவா? கேம்ஸ் ரூம்ல டிரில் மாஸ்டரைப் போய் பாருங்க”
போய்ப் பாத்தேன், ”பயப்படாதீங்க தெரியாம செஞ்சிருக்கலாம்,வேற பசங்க மாட்டி விட்டிருக்கலாம் எங்களால கண்டுபிடிக்க முடியலை, உங்க பையன் நிக்கர் பாக்கெட்ல 2 சிகரெட், ஒரு தீப்பெட்டி பாத்தோம்,நிதானமா அடிக்காம வீட்ல வச்சு விசாரிங்க.
எனக்கு திக்னு ஆயிப் போச்சு, 12 வயசுலயே சிகரெட்டா? செல்வநாயகி கிட்டயும் மெதுவா விஷயத்தை சொன்னேன். அவ சிரிக்கறா,”நம்ம பையன் முகத்தைப் பாருங்க இதெல்லாம் அவனுக்குத் தெரியாது,வேற பெரிய கிளாஸ் குரங்குங்க வேலையா இருக்கும்“
கமலநாதனைக் கேட்டேன்,”போப்பா டிரில் மாஸ்டரோட பையனுக்கும் எனக்கும் சண்டை அதான்” ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்.
ஆனா ஒரு நாள் சிவன் பார்க் பெஞ்சுல உக்காந்து கமலும் இன்னொரு பையனும் சிகரட் பிடிச்சதைப் பாத்ததா எதிர் வீட்டு பரமேஸ்வரன் தாத்தா சொன்னப்ப எனக்கு என்ன செய்யறதுனு புரியலை. செல்லம் கொடுத்தாச்சு இத்தனை வருஷமா, திடீர்னு கூப்பிட்டு திட்ட முடியலை. திட்டினா என்னையே விரோதமா நினைச்சு இன்னும் விபரீதமான செயல்களுக்கு போயிடுவானோனு பயம் வேற.
நைச்சியமா அவனைக் கூப்பிட்டு புகைப்பதால் வரும் கேடுகளை,வியாதிகளை சொன்னேன். அவன் சிரிச்சிட்டே,”இந்த லெக்சர்லாம் ஒவ்வொரு சினிமாக்கும் முன்னாலதான் ஸ்கிரீன்ல காட்டறாங்களே,நீ வேற தனியாவா” கேட்டுட்டே போயிட்டான்.
செல்வநாயகிக்கும் மெதுவே பயம் தொற்றிக் கொண்டது. அடுத்த வருஷம் காலேஜ் போனா என்னென்ன ஆகுமோ இப்பவே யோசனையா இருக்கு படிப்புல எல்லாம் சோடை இல்லை ஓரளவு நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணிடறான்.
காலேஜ்லயும் சேந்தாச்சு, அம்மா கிட்ட பிடிவாதம்,மோட்டார் பைக் உடனே வேணும்னு, “பொறுத்துக்கோ 18 வயசு பூர்த்தி ஆனவுடனே 19வது பிறந்த நாளுக்கு வாங்கித் தரேன்”னு சொல்லியாச்சு. ஆனா யார் யாரோட பைக்கையோ எடுத்து சுத்தத்தான் செய்யறான்.
தொடர்ந்து ஏதேதோ அக்கம்பக்கம் பேசறது காதுல விழறது. தலை நிறைய முடி ஒரு கட்டுக்குள்ளே அடங்காம, கிழிஞ்ச ஜீன்ஸ்,தொளதொளானு சட்டை
காதுல வெள்ளிக் கடுக்கன் இதெல்லாமா இப்ப நாகரீகம்? ஆனா இந்தக் கோலத்துலதான் இருக்கான் கமலநாதன். இப்பல்லாம் என்னோடயோ அவன் அம்மா கிட்டயோ பேச்சே இல்லை. எங்களுக்கு இவன் என்ன ஆவானோனு நாளுக்கு நாள் பயம் கூடிண்டே போறது.
ஓ.எம்ஆர்.ல எங்களுக்கு இன்னொரு ஃபிளாட் இருக்கு வாடகைக்கு விட்டா வீடு பாழாயிடும்னு சும்மாதான் பூட்டி வச்சிருக்கோம். கமல் சாவியை அடிக்கடி எடுத்துட்டுப் போய் நண்பர்களுடன் படிக்கறேன்னு போவான். ஒரு தடவை எதேச்சையா நான் அந்த ஃபிளாட்டுக்கு போறப்ப நிறைய சிகரட் துண்டுகளைப் பால்கனில பாத்து கோவமா வந்தது.கேட்டா பிரண்டோட பர்த்டே பார்ட்டி மத்தவங்க ஸ்மோக் பண்ணினா நான் என்ன பண்றதுன்றான்.
இப்ப செல்வநாயகி ரெகமண்டேஷன்ல மோட்டார் பைக்கும் வந்தாச்சு. எப்பவும் பைக்தான் எங்கேதான் சுத்துவானோ. பெட்ரோல் போட்டு கட்டுப்படி ஆகலை.
எப்பவும் லேட்டானாலும் வீடு திரும்பறவன் ரெண்டு நாளா ஆளைக் காணோம்எனக்கும் உள்ளூர பயம்தான்,மனைவியோட அழுகை பொறுக்க முடியலை,போலீஸ் கிட்டதான் போகணும் போலனு யோசிக்கறப்ப அந்த ஃபோன் வந்தது. J-2 போலீஸ் ஸ்டேஷன்ல அடையார்ல இருந்து பேசறோம். கொஞ்சம் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க.
பதறி அடிச்சிட்டுப் போனேன். இன்ஸ்பெக்டரைப் பாத்தேன். “இவன் உங்க பையனா?” லாக்அப்ல தலையைக் கவுந்து உக்காந்திருந்தான் கமலநாதன்.
பயம் தலைக்கேற,”ஆமாம்”னேன்.
“என்ன செஞ்சிருக்கான் தெரியுமா?”
ஒண்ணும் பேசாம அவர் முகத்தைப் பாத்தேன்.
“ஒரு பெண்ணைக் கடத்தி ஓ.எம்.ஆர். ல ஒரு ஃபிளாட்ல வச்சிருக்கான் ரெண்டு நாளா”
தலைல இடி விழற மாதிரி இருந்தது.
ஒரு போலீஸ் கமலை லாக்அப்ல இருந்து வெளியே கூட்டிட்டு வந்தார். ஆத்திரத்தோட முதல் முறையா அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தேன்.
இன்ஸ்பெக்டர்,”இதை ஆரம்பத்துல இருந்து செஞ்சிருந்தா இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காது அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து வளத்தா அவமானப்பட்டு இப்படி நிக்க வேண்டியதுதான். உங்க நல்ல நேரம் அந்தப் பொண்ணும் ரிபோர்ட் எழுதிக் கொடுக்கத் தயாரில்லை அவ பேரண்ட்ஸ் கூட பொண்ணோட மானம் போயிடும்னு புகார் கொடுக்க தயாரா இல்லை. ஸ்டேஷனுக்கு பெயின்ட் அடிக்கற செலவை ஏத்துக்கங்க, இவனைக் கூட்டிட்டு போய் இனிமேலாவது ஒழுங்கா வளங்க.”
ஏற்கனவே பளிச்னு இருந்த அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு பெயின்ட் அடிக்கற செலவை கொடுத்துட்டு கமலநாதனை வீட்டுக்கு கூட்டிட்டுப் போனேன். அவனோட அம்மாவும் விஷயம் பூரா கேட்டுட்டு விக்கி விக்கி அழுத வண்ணம் தன் பங்குக்கு ஓங்கி ரெண்டு அறை விட்டா.
இத்தனை வருஷம் கல்லுளிமங்கனா இருந்த கமல் அவனோட அம்மா கை ஓங்கினவுடனே குழந்தை மாதிரி கீழே உக்காந்து ஓன்னு அழ ஆரம்பிச்சான். நாங்க சமாதனப் படுத்த போகலை அழட்டும் நல்லானு விட்டுட்டோம்.
திரும்ப நாளைக்கே திருக்கண்டியூர் போறோம் மூணு பேருமா. அந்தப் பெருமாள்தான் இவன் புத்தியை சரி பண்ணணும்.
இவ்வளவு மனக் கஷ்டத்துலயும் என்னால நினைக்காம இருக்க முடியலை. இந்த தடவையாவது நாலரை மணிக்கே போய் பாலாமணி ஐய்யர் கடை பஜ்ஜியை வாங்கிடணும். (பெருமாளே என் புத்தியையும் சரி பண்ணுப்பா)
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings