in ,

சொந்தம் ஒரு கை விலங்கு (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன்

           2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

‘கொஞ்சம் உடனே புறப்பட்டு வர்ரியா?’ என்ற நண்பர் சபேசனின் பதட்டமான குரலை போனில் கேட்டவுடன் பொன்னுசாமிக்கும் லேசாக அந்தப் பதற்றம் தொற்றிக் கொண்டது.

‘என்ன சபேசன் …யாருக்காவது உடம்பு, கிடம்பு சரியில்லயா?’ என்றார் கவலையுடன். நேற்று மாலை ஆறு மணி வரை சபேசனுடன் வழக்கம்போல் ஊர்க்கதைகளைப் பேசிக் கொண்டிருந்து விட்டுத்தான் வந்திருந்தார் பொன்னுசாமி.

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல… நீ உடனே வா நேரில் பேசலாம்’ என்று போனை பட்டென வைத்துவிட்டார் சபேசன்.

இருவருமே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதால் வங்கிக்குச் செல்வது, நூலகத்திற்குச் செல்வது தவிர வேறு முக்கியப்பணிகள் ஒன்றும் இருவருக்கும் இருப்பதில்லை. இருவரும் நீண்டகால நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், இரு குடும்பங்களுக்கு இடையில் நெருங்கிய பழக்கம் உள்ளதாலும் அவர்களின் பேச்சில் உபசார வார்த்தைகளும், போலி மரியாதைகளும் இருக்காது.

அடுத்த அரைமணி நேரத்தில் சபேசனின் வீட்டில் இருந்தார் பொன்னுசாமி. வீடு அமைதியாக இருந்தது. மகன் சுந்தரம் வேலைக்குச் சென்றிருப்பான். ஹாலில் கடுகடுப்பான முகத்துடன் அமர்ந்திருந்தனர் சபேசனும் அவன் மனைவி சுமதியும். வீட்டின் உள்அறையில் மகள் மல்லிகா நடமாடும் சப்தம் மெலிதாகக் கேட்டது.

‘என்ன ஆச்சு? எதுக்கு போனில் அவ்வளவு பதட்டமா பேசினே?’ என்றார் பொன்னுசாமி.

‘ம்… எல்லாம் என் தலைவிதி, உனக்குத் தெரியுமில்ல… எனக்கு ஒரு தங்கச்சி உண்டு. அவளுக்கு ஒரே பையன். எம்.சி.ஏ. படிச்சிட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனில பெங்களூர்ல நல்ல சம்பளத்தில இருக்கான். ஊரில் அவங்களுக்கு தோட்டம் எல்லாம் போதுமான அளவு இருக்கு.  நானும் சுமதியும் ஒரு வருடத்துக்கு முன்னாலேயே என் தங்கச்சிகிட்ட மல்லிகாவை அவள் மகனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கலாம் என்று பேசியிருந்தோம். என் தங்கச்சியும், உறவை விட வேண்டாம்னு ஒப்புக்கொண்டாள். இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு பண்ணி, இன்றைக்கு கல்யாண‌ மண்டபம் புக் செய்ய பங்காளிகளை அழைக்கக் கிளம்பியபோது இவள் என் தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறாள்’ என்றான் சபேசன்.

 ‘யார் மல்லிகாவா? என்ன சொல்கிறாள்?’ என்றார் பொன்னுசாமி.

‘அவள் சொல்வது எங்களுக்கு ஒண்ணும் புரியல. என்னவென்று கேட்டுச் சொல். ஏதாவது சொல்லி இந்தக் கல்யாணம் நடக்கறமாதிரி பாரு. இல்லன்ன, சொந்தத்தில என் மானம் மரியாதை எல்லாம் போயிடும்’ என்றார் பரிதாபமாக‌.

மல்லிகாவை சிறுவயதிலிருந்தே அவருக்குத் தெரியும். அமைதியான பெண். நன்றாகப் படிப்பாள். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு அடுத்து எம்.ஈ. படிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பொன்னுசாமி மல்லிகாவின் அறைக்குள் கதவைத் தட்டிவிட்டு நுழைந்தபோது அவள் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். கோபத்தில் கண்கள் சிவந்திருந்தன. பொன்னுசாமியைப் பார்த்ததும் ‘வாங்க மாமா’ என்றாள் சுரத்தில்லாமல்.

‘என்னம்மா ஆச்சு? கல்யாணம் வேண்டாம்னு சொல்றயாமே?’ என்றார் பொன்னுசாமி நேரடியாக.

‘கல்யாணம் வேண்டாம்னு சொல்லலீங்க மாமா.. என் அத்தை பையனோட வேண்டாம்னுதான் சொல்றேன்’ என்றாள் கறாராக.

‘ஏம்மா, அவனை உனக்குப் பிடிக்கலயா?’

‘முதலில் இந்த கல்யாண ஏற்பாடு எனக்கு இன்னைக்குக் காலை வரை தெரியாது மாமா. என்னைக் கேட்காமலேயே கல்யாண மண்டபம் புக் செய்வது வரை வந்துட்டாங்க.  இது எனக்குப் பெரிய அவமானமா இருக்கு. நான் என்ன பொம்மையா? ஏன் எங்கிட்ட கேட்கவில்லை?’ என்றாள் மல்லிகா படபடவென்று.

‘நிஜமா உனக்குத் தெரியாதா? உங்கிட்ட எதுவும் சொல்லாமலா மண்டபம் புக் செய்யும் அளவிற்கு வந்துட்டாங்க. யாராக இருந்தாலும் தப்பும்மா இது. நான் உங்கப்பாகிட்ட கேட்கிறேன்’ என்றார் பொன்னுசாமி.

அவருக்கே இது அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் காலத்தில் கூடவா பெற்றோர்கள் இப்படி இருப்பாங்க‌ ?

‘சரிம்மா.. நிச்சயம் இது தப்புத்தான். ஆனா உன் அப்பா, உன்மேல் உள்ள நம்பிக்கையால் கூட இந்த ஏற்பாட்டை செய்திருக்கலாம். அந்தக் கோபத்தில் உன் அத்தை பையனை வேண்டாம் என்று நீ சொல்வது சரியா?’ என்றார் பொன்னுசாமி.

‘இல்லீங்க அங்கிள்.. என் அத்தை பையனை வேண்டாம்னு சொல்லறதுக்கு இரண்டு, மூன்று காரணங்கள் இருக்கு. ஒண்ணு, சொந்த அத்தை பையன் என்றாலும் சின்ன வயதில் இருந்து இதுவரை அவன் என்னிடம் ஒற்றை வார்த்தை கூடப் பேசியதில்லை. எத்தனையோ முறை தனிமையில் சந்தித்திருந்தாலும் மெளனசாமியாகத்தான் இருந்திருக்கிறான். என்னுடைய கலகலப்பான சுபாவத்திற்குக் கொஞ்சம் கூட பொருந்தி வர மாட்டான். ஒரு பொட்டு எடுப்பது, புடவை எடுப்பது, காய்கறி வாங்குவதிலெல்லாம் பொறுமையைக் காண்பிக்கும் பெண்கள், வாழ்நாள் முழுவதும் உடன் வாழும் கணவனைத் தேர்வு செய்வதில் அவசரப்படாமல் கவனமாக இருப்பது என்ன தவறு? இரண்டாவது… விஞ்ஞான பூர்வமான உண்மை என்னவென்றால், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யும்போது பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறதுதானே? எங்கள் சொந்தத்தில் கூட அப்படி ஒரு உதாரணம் இருக்கிறது. அப்பாவுக்கும் கூட அது தெரியும்’ என்றாள்.

ஒரு தலைசிறந்த வக்கீலைப் போல பேசிய அவளுக்கு பதில் சொல்லி சமாளிக்க பொன்னுசாமியால் முடியவில்லை. மறுபடியும் மல்லிகா அவளின் அடுத்த அஸ்திரத்தை வீசினாள்,

‘மாமா… மூண்றாவது ஒரு காரணமும் இருக்கிறது. நான் ஒருவரைக் காதலிக்கிறேன்.  அப்பாவிடமும், அம்மாவிடமும் நீங்கதான் சொல்லணும்’ என்றாள்.

வாயடைத்துப் போய் இருந்த பொன்னுசாமியிடம் மல்லிகா தொடர்ந்து சொன்னாள்… ‘அவன் என் கூட படித்தவன். அவர்கள் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள். நாங்கள் இருவரும் காதலிப்பது இரு வீட்டாருக்கும் தெரியாது. வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். வேலை கிடைத்தவுடன் எங்கள் காதலை வீட்டில் சொல்வதாகச் சொல்லியிருக்கிறான். அவனின் போன் நம்பர் தருகிறேன். வேண்டுமானால் அப்பாவை அவனுடன் பேசச் சொல்லுங்க’ என்று கூறி ஒரு போன் நம்பரையும், ராஜேஷ் என்ற‌ பெயரையும் எழுதிக் கொடுத்தாள்.

யாருக்கு என்ன சமாதானம் சொல்வது என குழம்பிய நிலையில், மல்லிகாவின் அறையை விட்டு ஹாலுக்கு வந்தார் பொன்னுசாமி. ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த சபேசன் மற்றும் சுமதியிடம் பொறுமையாக மல்லிகா கூறியதை எடுத்துரைத்தார்.

‘இப்ப என்ன செய்யறது?’ என்று பரிதாபமாகக் கேட்டார் சபேசன். மிக அதிர்ச்சியில் இருக்கிறார் என்பது அவரின் முக பாவனையிலேயே தெரிந்தது.

இந்த சமயத்தில் தனது ஆலோசனை தேவை என்பதை உணர்ந்த பொன்னுசாமி அமைதியாகச் சொன்னார், ‘முதலில் உன் தங்கையிடம் விசயத்தை நாசூக்காகச் சொல்லி கல்யாண ஏற்பாட்டை தற்காலிகமா நிறுத்து. பிறகு மற்றவற்றை யோசிக்கலாம்’.

‘என்ன சொல்வது? அவள் கோபத்தில் கத்துவாளே… சுமதி நீ பேசுகிறாயா?’ என்று மனைவியின் உதவியை நாடினார்.

‘நீங்களாச்சு உங்க தங்கச்சி ஆச்சு, என்னை வம்பில் மாட்டி விட வேண்டாம்’ என்று நழுவிக் கொண்டாள் சுமதி.

‘இதோ பார் சபேசா… மல்லிகா சொன்ன விஞ்ஞானம் சார்ந்த காரணத்தை உன் தங்கச்சியிடம் சொல்லு. அதனால்தான் மல்லிகா வேண்டாம் என்கிறாள், வேறு காரணம் இல்லை என்பதையும் தெளிவாகச் சொல்லிவிடு. அப்புறம் நடப்பதைப் பார்க்கலாம். நேரில் போக வேண்டாம். போனில் இப்போதே சொல்லிவிடு. ஒரு பாரமாவது குறையட்டும்’ என்றார் பொன்னுசாமி.

போனில் தங்கையிடம் பேசிவிட்டு, ஒரு ஐந்து நிமிடம் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார் சபேசன். கொஞ்சம் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு சொன்னார்,

‘ஒரே கேள்விதான் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டாள். ‘இந்த புத்தி ஒரு வருடத்துக்கு முன்ன உம்புள்ளைக்கு வரலயா? இந்நேரம் எம்பையனுக்கு வேற பொண்ணப் பார்த்து கல்யாணம் முடிச்சிருப்பேனே. எல்லோரும் சேர்ந்து நம்ப வெச்சு கழுத்தறுத்திட்டீங்களா? இத்தோடு நம்ம உறவு முடிஞ்சது. இனி உனக்கு தங்கச்சி இல்லை. வையி போனை’னு வெச்சுட்டா’ என்றார் உடைந்த குரலில்.

‘சரி விடு.. சொந்த பந்தம்னா இதெல்லாம் இருக்கறதுதான். இப்ப அடுத்தது நீ என்ன செய்யற.. ஒரு பத்து நாள் கழித்து, ராஜேஷ்னு ஒரு போன் நம்பர் கொடுத்தாள்தானே மல்லிகா? அந்த நம்பருக்கு போன் பண்ணி பேசு. மல்லிகாவின் அப்பான்னு அறிமுகப் படுத்திக்கோ’ என்றார் பொன்னுசாமி சபேசனிடம்.

ஒரு மாதம் கழித்து சபேசன் பொன்னுசாமியிடம் தான் ராஜேஷிடம் பேசியதாகவும், தனக்கு வேலை கிடைத்தவுடன் வீட்டில் தன் பெற்றோரிடம் மல்லிகா குறித்து பேசுவதாகவும் கூறியதாகக் கூறினார். மல்லிகா எம்.ஈ. சேர்ந்து கல்லூரிக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து வழக்கமான வாழ்க்கை நடந்து கொண்டிருந்ததால் அவர் குரலில் பழைய தெளிவு வந்திருந்தது. ஒரு ஆறு மாதம் இப்படியே கடந்து போக, மறுபடியும் போனில் வீட்டுக்கு வரும்படி அழைத்தார் சபேசன் பொன்னுசாமியை.

‘என் தங்கச்சி என்ன பண்ணியிருக்கறா தெரியுமா? அவசர அவசரமா பொண்ணு பாத்து தன் பையனுக்கு அடுத்த வாரம் கல்யாணம் பண்ணப்போறா. என்னைத் தவிர, ஊரில் எல்லோருக்கும் பத்திரிக்கை வச்சிருக்கா. இருந்த ஒரு உறவும் இன்னையோட‌ அத்துப் போச்சு’ என்றார் வேதனையுடன்.

அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோபத்துடன் பேசினார், ‘இவ மாத்திரம்தான் பையனுக்குக் கல்யாணம் செய்வாளா? நானும் எம் பொண்ணுக்கு கல்யாணம் செய்கிறேனா இல்லையா பார். நீ மல்லிகாவிடம் பேசு. உடனே அவளுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சு, என்னை மதிக்காத அந்த‌ கூடப் பொறந்தவளுக்கு நானும் ரோசக்காரன்தான்னு நிரூபிக்கணும்’ என்றார்.

சுமதியும் அவருடன் சேர்ந்துகொண்டு பிடிவாதம் பிடிக்கவே, மீண்டும் மல்லிகாவிடம் தூது போனார் பொன்னுசாமி.

இயர் போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவள் என்னைக் கண்டதும் எழுந்து,  ‘வாங்க மாமா’ என்றாள். இந்த முறை முகம் மலர்ச்சியாகவே இருந்தது.

‘அப்பா சொன்னாராம்மா? உன் அத்தை பையனுக்கு அடுத்த வாரம் கல்யாணமாமே?’ என்றார் பொன்னுசாமி.

‘ஆமாங்க அங்கிள், அப்பா சொன்னாங்க’ என்றாள் எந்த உணர்ச்சியையும் வெளிக்காண்பிக்காமல்.

‘அப்பாவும், அம்மாவும் உனக்கும் சீக்கிரம் கல்யாணம் செய்யலாம்னு இருக்காங்க. உங்கிட்ட கேட்கச் சொன்னாங்க. என்ன சொல்றேம்மா?’ என்றார்.

‘சரிங்க அங்கிள்.. மாப்பிள்ள பாக்கச் சொல்லுங்க. ஆனா என்னைக் கேட்டுத்தான் இறுதி முடிவு எடுக்கணும்’ என்றாள் சட்டென்று மல்லிகா.

அதிர்ச்சியுடன் கேட்டார் பொன்னுசாமி, ‘ஏம்மா, அப்போ ராஜேஷோட உனக்கு இருக்கிற காதல்..?’

‘காதல் இருந்தாத்தானே அங்கிள். அவன் என் கூட படிச்ச நல்ல நண்பன். என் அத்தை பையனைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்காக நானும் அவனும் சேர்ந்து போட்ட டிராமா அது. நான் சொன்னபடி அவன் நடித்தான். அவ்வளவுதான். அப்பாவை மாப்பிள்ளை பாக்கச் சொல்லுங்க… ஆனா சொந்தத்தில வேண்டாம்’ என்றாள் கூலாக.

இந்தக் கால பெண்களின் மனோதைரியத்தையும், முடிவெடுக்கும் திறனையும் மனதிற்குள் வியந்தபடியே அறையை விட்டு வெளியே வந்தார் பொன்னுசாமி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என் காதல் (சிறுகதை) – ச. சத்தியபானு 

    விறலியர் நடனம் (சிறுகதை) – சஞ்சிதா பாலாஜி