செல்வம்தான் கொழிக்கிறது அவளுக் கென்ன
செழிப்போடு வாழ்கின்றாள் அவளுக் கென்ன
நல்லநல்ல துணிமணிகள் விலையு யர்வில்
நறுந்தங்க அணிகலன்கள் கழுத்து காதில் !
எல்லோரின் இருகண்கள் அவளின் மீதே
ஏக்கத்தில் மற்றவர்கள் அவளைப் பார்த்தே
சொல்லாமல் தமக்குள்ளே உரையா டல்கள்
சொக்குகின்றார் வரம்பெற்று வந்தாள் என்றே !
வெந்துவெந்து புலம்புகின்றார் பார்ப்ப வர்கள்
வேகின்ற அவள்நிலையை அறிந்த வர்யார்
வெந்துவெந்து ஒவ்வொருநாள் மனத்திற் குள்ளே
வெறுமையுடன் கழிப்பதினை அறிந்த வர்யார் !
பந்தமாக்கித் தாலியினைக் கட்டி விட்டுப்
பணமீட்ட அயல்நாடு சென்ற வன்தான்
சிந்துகின்றாள் கண்ணீரைத் தனிமை தன்னில்
சிற்பமெனும் அழகிளமை கரைந்த வாறே !
தங்கநகை தகிக்கின்ற மேனி சூட்டைத்
தணித்திடுமோ சொல்லிடுவீர் அயல்வீட் டாரே
அங்கங்கள் துடிப்பதினை உயர்ந்த ஆடை
ஆற்றிடுமோ கூறிடுவீர் எதிர்வீட் டாரே !
மங்கலநாண் பெற்றிட்ட கார ணத்தால்
மணவாளன் நினைப்பினிலே நாளும் நாளும்
பொங்குகின்ற உணர்வுடனே வாழு கின்ற
போலிவாழ்க்கை வரமாமோ பொறாமை யோரே !
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings