எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கிட்டத்தட்ட பத்து ஜாதகங்களாவது பார்த்த பிறகுதான் அந்த ஜாதகம் கைக்கு வந்தது. பெண்ணின் பெயர் மதி.
அதுவரை ஜாதகங்கள் வர வர ஒவ்வொன்றாய் கொண்டு போய் ஜோதிடரிடம் காட்டிவிட்டு திரும்பி வரும்போது உதட்டை பிதுக்கிக் கொண்டு அம்மா வர, ஒவ்வொரு தடவையும் பிரசாத் சத்தம் போட்டான்.
‘ஆமாம்மா… இப்படியே ஒவ்வொரு ஜாதகத்தையும் கொண்டு போயி ஜோதிடர்கிட்டே காட்டிட்டு பொருந்தலைன்னுட்டு வா.. கல்யாணம் நடந்த மாதிரிதான். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்திடுச்சு… நாமளும் இருபத்தோறாம் நூற்றாண்டை நோக்கி போயிக்கிட்டிருக்கோம்… ஆனா நீங்கள்லாம் இன்னும் ஜாதகத்தை நம்பிக்கிட்டிருக்கீங்க… ‘ என்று சத்தம் போட்டான் அவன்.
‘நாங்க அப்படியே பழகிட்டோம்டா… நாளைக்கு ஏதாவது இசகுபிசகுனா, அப்போ நமக்கு உறுத்தும், ஜாதகத்தை பார்த்து கட்டியிருக்கலாமோனு தோனும்… அதோட கல்யாணம்ங்கறது ஆயிரம் காலத்துப் பயிர்… நல்லா வாழவேண்டாமாடா… கட்டம் சரியா இருக்கானு பார்க்க வேண்டாமாடா…‘ அம்மா தனது செயலை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
நிற்க, கடைசியாக வந்த அந்த ஜாதகத்தைக் கொடுத்தவர்கள், வேறு ஜாதியினர்.
பிரசாத் தான், ‘இன்னும் ஜாதியெல்லாம் பார்த்துக்கிட்டிருக்காதீங்கம்மா… எனக்கு எந்த ஜாதியா இருந்தாலும் சரி… ஆனா நான் பொண்ணுக்கிட்டே பேசுவேன்… எங்களுக்குள்ளே ஒத்துப் போற விஷயம் அதிகமா வந்தாதான் கல்யாணமே. இல்லேன்னா நோ சொல்லிடுவேன்… ‘ என்றான் அவன்.
அந்த ஜாதகத்தைக் கொடுத்தவர்கள், முதலிலேயே சொல்லிவிட்டார்கள். ‘ பாருங்கம்மா… நாங்க மதி பிறந்தப்போ ஜாதகம் குறிக்கலை… கல்யாணம் பண்ணலாம்னு வரன் தேட ஆரம்பிச்சப்போதான் நிறைய பேரு ஜாதகம் கேட்டாங்க. சரின்னு பிறப்பு சான்றிதழைக் காட்டி ஜோதிடர்கிட்டே ஜாதகம் கணிச்சோம். எங்களுக்கு இந்த ஜாதகத்து மேலே எல்லாம் நம்பிக்கை இல்லை. எங்க குலதெய்வத்துக்கிட்டே உத்தரவு கேட்போம். சரின்னு வந்தா மேற்கொண்டு பேசலாம்… ‘ என்றார்கள்.
அப்பாக் கூட சொன்னார், ‘மரகதம்… பொண்ணு டிகிரி படிச்சிருக்கு. வேலைக்கு போகுது… அப்பா அம்மா ரெண்டு பெரும் படிச்சிருக்காங்க. அவங்களும் வேலைக்குப் போறாங்க. வசதியானவங்க. விசாரிச்சதுல நல்ல குடும்பம்னும் சொல்றாங்க… ஜாதகம் பார்த்துக்கிட்டு அலையாதே… அவங்க சொன்னமாதிரி சாமிக்கிட்டே உத்தரவே கேட்டுக்கட்டும். அவங்க சரி சொன்னா நாமலும் சரி சொல்லிடலாம்… ‘ என்று அம்மாவை சமாதனப்படுத்தினார்.
ரொம்பவும் குழம்பிப் போய், ஒருநாள் முழுதாக விட்டு விட்டு, மறுநாள் அம்மா மெல்ல அப்பாவிடம் வந்து சொன்னார்கள், ‘ ஜாதகம் பார்க்க வேண்டாம், சரி… ஆனா அதுக்காக அவங்க சொல்றதை வச்சிக்கிட்டு அப்படியே நாம தலையை ஆட்டிட முடியுமா… நாமளும் நம்ம சாமிக்கிட்டே போயி பூப்போட்டு பாப்போம்… சாமி சரி சொன்னா நாம சரி சொல்லிடுவோம்… நமக்கும் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்குமில்லையா. ’
யோசித்துப் பார்த்துவிட்டு அப்பா, ‘ உன்னோட திருப்திக்காக நாம கோவிலுக்கு போயிட்டு வரலாம்… பூப்போட்டு கேட்கலாம்… ‘ என்றார்.
பிரசாத்துக்கும் அது சரியாகவே பட்டது. எத்தனை வரன்களைத்தான் தட்டிக் கழிப்பது. அந்தப் பெண்ணும் அழகாகத்தான் தெரிகிறாள். டிகிரி படித்திருக்கிறாள், வேலைக்குப் போகிறாள், வேறென்ன வேண்டும்…
அம்மா மட்டும், பொண்ணு கொஞ்சம் சுமார்தான் என்று முகம் சுழித்தாள். அப்பா முகம் கடுத்தார்… ‘ பாரு மரகதம், பிரசாத்துக்கும் பொண்ணை பிடிச்சிருக்கு. எனக்கும் ரொம்பவே பிடிச்சிருக்கு. நீ மட்டும் ஏன் முகம் சுழிக்கறே… பேசாம சரி சொல்லு. கோவிலுக்கு போயிட்டு வரலாம்’ என்றார்.
ஒரு நல்ல நாளில் பஸ் பிடித்து மூன்று பேரும் திருச்சிக்கு கிளம்பி விட்டார்கள். அப்பா கோவிலுக்கு பின்புறம் இருந்த பூங்காவனத்தில் பூக்களை பறித்து பேபரில் வைத்து மடித்து எடுத்துக் கொண்டு வந்தார். கோவிலில் பூஜை செய்துவிட்டு அங்கே சாமி கும்பிட வந்திருந்த வேறொரு குடும்பத்தில் இருந்த ஒரு பெண் குழந்தையை விட்டு ஒரு பொட்டலத்தை மட்டும் எடுக்கச் சொன்னார் அப்பா
‘சிவப்பு பூ வந்தா சாமி சம்மதம் சொன்னது மாதிரி ‘ என்று அப்பா முனகிக்கொண்டார்.
அந்தக் குழந்தை ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டது. அப்பா கீழே கிடந்த இன்னொரு பொட்டலத்தை எடுத்து ஜிப்பா பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு கையிலிருந்த பொட்டலத்தை பிரித்தார்.
பின்குறிப்பு: வெள்ளை வேஷ்டி, வெள்ளை ஜிப்பா, வலது கையில் தங்கக் காப்பு, நெற்றி நிறைய விபூதி, மெலிதான மீசை. கொஞ்சம் கருப்பு. அப்படி ஒருவரை நீங்கள் பார்த்திருந்தால், அவர்தான் எங்கள் அப்பா.
பொட்டலத்தைப் பிரித்ததும் முகம் மலர்ந்தார் அப்பா. அதில் சிவப்பு பூ இருந்தது. எல்லோருக்குக்கும் முகத்தில் மலர்ச்சி. பிரசாத்துக்கும்தான். மதி கிடைக்கப் போகிறாளே. ஆனாலும் பெண்வீட்டார்களுக்கும் சாமி உத்தரவு கொடுக்கவேண்டுமே… அதனால் அங்கேயே சாமியை வேண்டிக்கொண்டான் அவன்.
ஊருக்குத் திரும்பினார்கள். அந்த நல்ல செய்தி வந்து சேர்ந்தது.
‘ஸார்… எங்களுக்கு சாமி உத்தரவு கொடுத்துடுச்சு… மேற்கொண்டு பேசலாம்… எப்போ வர்றீங்க… ‘
xxxxxx
இவர்கள் அங்கே போனார்கள். கலந்து பேசினார்கள். அவர்களும் இங்கே வந்தார்கள். கலந்து பேசினார்கள். அவர்களது வீட்டுக்குப் போயிருந்த சமயம், மதியுடன் மொட்டை மாடிக்குப் போய் அரைமணி நேரம் பேசினான் பிரசாத். அவனுக்குப் பிடித்த நிறைய விஷயங்கள் அவளுக்கும் பிடித்திருந்தன. அவளுக்குப் பிடிக்காத விஷயங்கள் இவனுக்கும் பிடிக்காதவையாக இருந்தன.
நிச்சயதார்த்தம் நடந்தது. கோவிலில் வைத்து கல்யாணம். ஒரு மண்டபத்தில் வைத்து வரவேற்பு. கல்யாணம் ஓவர்.
ஒவ்வொரு பொண்ணாக தட்டிக்கழித்துக்கொண்டே போயிருக்க, திடீரென்று சாமி வரம் கொடுத்தது போல, மதி அவனது வாழ்க்கைக்குள் வந்து நுழைந்தாள். இவனை அவளுக்கு நிரம்பவே பிடித்திருந்தது. இவனுக்கும் அவளை நிரம்பவே பிடித்திருந்தது. மாமியார் மாமானாரை தனது பெற்றோரை நடத்துவது போலவே நடத்தினாள். அடுத்த வருடமே பிரணவ் பிறந்தான். அதற்கடுத்த இரண்டாவது வருடம் சுகுணா பிறந்தாள்.
மதி தானும் வேலைக்குப் போனால் நன்றாக இருக்கும் என்றாள். பிரசாத் சரி சொல்லிவிட்டான். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை வேலைக்குப் போகாமல் இருந்துவிட்டு பிறகு வேலைக்குப் போனாள்.
சுகுணா பிறந்த பிறகு அடுத்த கம்பெனிக்கு மாறினாள் மதி. பிரசாத்தும் இரண்டு கம்பெனிகள் மாறினான். கம்பெனி மாற மாற சம்பளம் ஏறிக்கொண்டே போனது. ஸ்கூட்டி வைத்திருந்த அவன், புல்லட்டுக்கு மாறினான். பின்னால் காருக்கு தாவினான். மதிக்கு கம்பெனி கார் வந்து போனது.
அடுத்த ஓரிரு வருடங்களில் அவனது அப்பா ரிடையர் ஆனார். அப்பா சொன்னார், ‘இதுவரை சின்ன இடத்துல இருந்துட்டோம், இப்போ குடும்பம் பெரிசாயிடுச்சு. பெரிய வீட்டுக்குப் போகலாமே… ‘
இவர்களது சேமிப்பு, அவரது ரிடயர்மென்ட் பணமெல்லாம் சேர்த்து எட்டு சென்ட் இடம் வாங்கினார்கள். வீடு கட்டுவதற்கு எஸ்டிமேட் போட்டார்கள். அப்பா நிறைய ஐடியாக்கள் கொடுத்தார். பட்ஜெட் அதிகரிக்க பற்றாக்குறைக்கு லோன் போட்டார்கள். கட்டிடம் எழ ஆரம்பித்தது. வீடு முழுமை அடைந்து வீடு கிருகப் பிரவேஷம் நடந்தது.
அப்பா அம்மா இருவரும் காசிக்குப் போய் வருவதாக் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். அவர்கள் திரும்பி வருவதற்குள் வீட்டை மாற்றிவிடுவதாக சொன்னான் பிரசாத். பழைய வீடு அப்படியே இருக்கட்டும், ரிப்பேர் செய்து வாடகைக்கு விடலாம் என்று முடிவு செய்து அப்படியே செய்தார்கள். பத்தாயிரம் வாடகையும் வந்தது.
வீட்டை காலி செய்துகொண்டிருந்தார்கள். சாமிப்படத்தை எடுக்கும்போது மதி கூப்பிட்டாள்.
‘ ஏங்க… சாமிப் படத்துக்குப் பின்னால ஏதோ ஒரு பாக்ஸ் இருக்குங்க… ‘
ஆவலுடன் ஓடினான். அங்கே ஒரு சில்வர் பாக்ஸ் இருந்தது. அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது, ஒரு நாள், நெளிந்து போயிருந்த தனது தங்கக்காப்பை அப்பா அதில் வைத்ததை அவன் பார்த்திருந்தான். அது அப்படியே இருந்தது. அத்துடன் இரண்டு பொட்டலங்கள். அப்பா ஏதோ விபூதி பொட்டலம் வைத்திருக்கிறார் என்று நினைத்து கொண்டு அவைகளைத் திறந்தபோது அதிர்ந்தான்.
மதி சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் வேறு யாரும் இல்லை என்று தெரிந்ததும், சட்டென அந்த பொட்டலத்தை அப்படியே கசக்கி குப்பைக்கூடையில் போட்டான்.
அந்த இரண்டு பொட்டலங்களிலுமே காய்ந்து போன சிவப்பு பூக்கள் இருந்ததை பிரசாத் அப்படியே மறைத்து விட்டான், மறந்தும் விட்டான்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings