அதிகாரம் 31 ல் திருவள்ளுவர் ‘ வெகுளாமை ‘ என்ற தலைப்பின் கீழ் கோபம் எனும் சினம் பற்றி மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். சினத்தின் வயப்படுவதால் விளையும் தீமைகள், அதனை விட்டொழிப்பதால் விளையும் நன்மைகள் பற்றி இப்பத்துக் குறளில் தெளிவு படுத்தியுள்ளார். ஒளவையாரும் தன் பங்குக்கு ‘ஆத்திசூடியில்’ ‘ஆறுவது சினம்’ என்று கூறி மக்களை அமைதிப் படுத்துகிறார். முருகன் கோபம் கொண்டு பழனி மலையின் மேல் ஏறி நின்றிருந்த போது, ஒளவையார், ‘அரியது எது?, பெரியது எது? இனியது எது? கொடியது எது?’ என்று கேள்விகைளைத் தொடுத்த முருகனுக்கு பொருத்தமான பதில் கூறி அவனின் கோபத்தைத் தணித்தது புராணம்.
ஆனால் மனித குலத்திற்குக் கொடுக்கப் பட்டிருக்கும் சாபம் என்பதுதான் ‘கோபம்’ என்று சொல்லும் அளவிற்கு மனிதர்களின் உணர்வோடும், உடலோடும் பிணைந்திருப்பது கோபம்தான். மனிதர்களுக்கு மட்டுமே என்று ஒதுக்கி விட முடியாதபடி முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் கூட இந்நோய் உண்டு என்பது பழங்காப்பியம் மற்றும் இதிகாசங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். துர்வாசர் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ருத்ரனின் மறு அவதாரமோ என்ற அளவு முன் கோபமுடையவர். அமரர் தலைவனான இந்திரனையே ஆண்டியாகும்படி சினம் கொண்டு சபித்தவர் அல்லவா துர்வாசர்?. கெளதமரின் சினத்திற்கு உள்ளான அகலிகை கல்லாகப் போகும்படி சபிக்கப் பட்டாள் என்பதும் சினத்தினால்தானே?
முனிவர்கள் அல்லாது, தேவர்களும் சினத்திலிருந்து விடுபடாதவர்கள் என்பது புராணம் படித்தவர்களுக்குத் தெரியும். முருகனின் கோபமும், சிவன் பார்வதியின் யார் பெரியவர் என்ற கோபமும், அவர்களின் பிரிவும்… கல்வியா? செல்வமா? வீரமா? என்ற கோபப் போராட்டங்கள் எல்லாமே சினத்தின் அடிப்படையில் இருந்து பிறந்தவையே என்பது அனைவரும் அறியக்கூடியதே.
ஒரு முறை யோகாசன வகுப்பிற்குப் பயிற்சிக்காக சென்றிருந்தபோது பயிற்றுவிப்பாளர் ஒவ்வொரவராகக் கேள்வி கேட்டுக் கொண்டு வந்தார். ‘நீங்கள் என்ன காரணத்துக்காக இந்த வகுப்புக்கு வந்திருக்கிறீர்கள்?’ என்று. ஒவ்வொருவரும் ஒரு பதில் சொல்லிக் கொண்டு வந்தபோது ஒருவர் மட்டும், ‘எனக்கு அடிக்கடி கோபம் வரும். அதைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை. இந்த வகுப்பில் பங்கெடுத்தால் குறையுமோ என்று நினைத்துத்தான் வந்தேன்’ என்றார். பயிற்றுவிப்பாளர் கேட்டார், ‘சரி.. நீங்கள் அடிக்கடி கோபப்படுவது எதற்காக? எங்கே? வீட்டிலா? அலுவலகத்திலா?’.
பயிற்சி பெற வந்தவர் கூறினார், ‘வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி.. நான் சொல்வதை யாராவது கேட்கவில்லை என்றால் ‘சுர்’ எனக் கோபம் வந்துவிடும்’ என்றார்.
பயிற்றுவிப்பாளர் தொடர்ந்தார், ‘என் குரு கூறிய ஒரு கதையைக் கூறுகிறேன் கேளுங்கள். பூகோள சாஸ்திரத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள ஒரு மாணவன் ஒரு நாள் படகில் ஏறி ஒரு நதியில் பயணம் மேற்கொண்டான். அவன் கையில் அவன் தயாரித்து வைத்திருந்த அந்த நதியின் வரைபடம் இருந்தது. அந்த வரைபடத்தில் இருந்தபடியே அந்த நதியின் பாதை இருந்ததைப் பார்த்து பெருமகிழ்ச்சி கொண்டான். ஆனால் ஓரிடத்தில் வரைபடத்தில் நதியின் போக்கு வலது புறம் திரும்புவதாக இருந்தது. நதியோ இடது புறம் வளைந்து ஓடியது. உணர்ச்சி வசப்பட்ட அவன் ‘இது தவறு.. எப்படி என் ஆராய்ச்சி பொய்யாகும்?’ என்று கோபப்பட்டு பாதி வழியில் ஆராய்ச்சியைக் கைவிட்டு இறங்கிச் சென்றுவிட்டான். கொஞ்சம் கோபப்படாமல் நிதானமாக யோசித்திருந்தால், பெரு மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், மலைச் சரிவினாலும் நதி தன் போக்கை மாற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்திருப்பான். தன் திட்டப்படிதான் நடக்க வேண்டும் என்று எதற்கும், யாருக்கும் வளைந்து கொடுக்காமல் கோபப்படுபவர்கள் எல்லோரின் நிலையும் இதுதான்’ என்று கதையை முடித்தார் பயிற்றுவிப்பாளர்.
பிறகு பயிற்சி பெற வந்தவரை நோக்கி, ‘வருகின்ற நாட்களில் உங்களுக்குக் கோபம் வரும்போதெல்லாம் இந்தக் கதையை நினைவு கூர்ந்து உங்களின் கோபத்தை அடக்க முயற்சி செய்யுங்கள். பயிற்சி முடியும் நாளன்று உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்றார்.
அதேபோல் பயிற்சியின் நிறைவு நாளன்று, பயிற்சி பெற வந்தவர் தனது அனுபவத்தை எடுத்துரைத்தார். ‘நீங்கள் கதை சொன்ன அடுத்த நாளே அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. வாகன நெருக்கடி மிகுந்த சாலையில், இரு சக்கர வாகனத்தில் ஓரிடத்தில் இடதுபுறம் திரும்பியபோது, ஒருவர் வேகமாக இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துவிட்டார். தவறு அவருடையது. மற்ற சமயமாக இருந்திருந்தால் கோபப்பட்டு கத்தியிருப்பேன். கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டேன், ‘தவறாக வருகிறீர்கள். வேகமாகவும் வருகிறீர்கள். நானும் அதே வேகத்தில் வந்திருந்தால் இருவரும் மோதி, கீழே விழுந்து அடிபட்டிருக்கும். என்ன அவசரம், மெதுவாக, சரியான பாதையில் வந்திருக்கலாமே?’ என்று பொறுமையாகக் கேட்டேன். அதற்கு அவர், ‘தொழிற்சாலையில் ஒரு முக்கியமான் இயந்திரம் பழுதாகி நின்றுவிட்டது. நான் சென்றுதான் சரியாக்க வேண்டும். அந்த அவசரத்தில்தான் வந்துவிட்டேன். தவறு என்னுடையதுதான். மன்னிக்கவேண்டும்’ என்று பரிதாபமாக வேண்டினார். நானும் சிரித்துக் கொண்டே ‘பரவாயில்ல..பார்த்துப் போங்க.. நம்ம எல்லோருக்கும் குடும்பம் இருக்கு’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன். மனதிற்கு நிறைவாக இருந்தது’ என்று முடித்தார்.
பயிற்றுவிப்பாளர் சொன்னார், ‘இதுதான் சரியான வழி. நமக்குக் கோபம் வரும்போது நமது அறிவு தன் செயல் திறனை இழந்து விடுகிறது. அந்தச் சமயத்தில் நமது உடல் உறுப்புக்கள் அறிவின் கட்டுப் பாட்டில் இருந்து விடுபட்டு தன்னிச்சையாக செயல்படத் தொடங்கிவிடும். அந்த நிலையில் நடப்பதுதான் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை கடும் சொற்களால் சாடுவதும், அடிப்பதும், வெட்டுவதும். கோபம் அடங்கி, அறிவு விழித்துக் கொள்ளும்போது காலம் கடந்திருக்கும். அந்த மனிதன் தன் செயலுக்கு வருத்தப்பட்டுக்கொண்டு சிறைச்சாலையில் முடங்கிக் கிடப்பான். அப்படித்தான் கணவனை இழந்த கண்ணகி கோபத்தில் மதுரையை எரித்தாள். அஞ்சனை மைந்தன் இலங்கையை எரித்தான். இதனைச் சிலர் ‘அறச்சீற்றம்’ என்பார்கள். அறத்திற்காக கொள்ளும் சீற்றத்தால் அழிவும், மற்றவர்களுக்கு இழப்பும் இருக்கக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து’ என்று கூறி முடித்தார். நாமும் நம் கோபத்தை அடக்கி அதன் நன்மைகளை அனுபவிக்க முயற்சி செய்தால் என்ன?
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings