எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வழக்கம் போல் விடியற்காலையில் கண் விழித்த மேகலாவுக்கு ஜன்னல் வழியே பறவைகளின் ஒலியும் குளிர்ந்த காற்றும் வந்தது கண்டு ஒருகணம் தான் எங்கிருக்கிறோம் என்று புரியவில்லை. கான்கிரீட் காடான சென்னை வீட்டில் தான் இல்லை என்பது மட்டும் புரிந்தது. திரும்பவும் கண்களை மூடி சிந்தித்தாள். மிக மெல்லிய ஒலியில் பிரார்த்தனை பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
மேகலாவுக்கு நேற்று இரவு கோவையின் ஒரு ஓல்ட் ஏஜ் ஹோமில் தன்னை இணைத்துக் கொண்டது நினைவில் வந்தது. மனம் முழுவதும் மண்டிக் கிடந்த வெறுப்பில் எழுந்து காலைக்கடன்களை முடிக்க கூட பிடிக்காமல் தன் இயல்புக்கு மாறாக படுக்கையிலேயே படுத்திருந்தாள். தனக்கு வேண்டாதவர்களைப் பற்றி நினைக்கக் கூடாது என்று அறிவு சொன்னாலும் மனம் முரண்டு பிடித்து நினைவுகளின் பின்னே சென்றது.
கல்வி துறையில் மாவட்ட முதன்மை அதிகாரி, தன் தம்பி தங்கைகளை படிக்க வைத்து ஆளாக்கியவள் என்ற பெருமையெல்லாம் மங்கி இன்று தான் ஒரு செல்லாக் காசாகி யாருக்கும் வேண்டாதவளாகி விட்டேன். தன்னிரக்கத்தால் மனம் கசிந்தது. அம்மா பங்கஜம் உயிரோடு இருந்தவரை வீட்டுக்கு வந்து போன உறவுகள் நாளாவட்டத்தில் தேய்ந்து இவளாக போன் செய்தால் பேசுவது என்றாகி விட்டது.
குருநாதன் பங்கஜம் தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்ததை பெருமையாக கருதுவாள் மேகலா. இரண்டு தம்பிகள் இரண்டு தங்கைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பான அக்காவாகத் தான் அவள் இருந்தாள். அதுவும் மேகலா கல்லூரியில் படிக்கும் போதே அவள் தந்தை ஒரு ஆக்ஸிடன்டில் இறந்து போனதில் தள்ளாடிய தன் குடும்பத்தை தைரியமாக ஒரு நிலைக்கு உயர்த்தியதும் அவள் தான்.
பணியில் இருந்த போதே அவள் தந்தை இறந்ததால் அவர் அரசு கல்வித்துறையில் பார்த்துக் கொண்டிருந்த க்ளார்க் வேலை அவளுக்கு கிடைத்தது. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றாலும் அதை அரைகுறையாக விடாமல் தபால் சேவை மூலம் முடித்து ஒரு டிகிரி வாங்கினாள்.
அதன் பின்னர் துறையின் தேர்வுகளை எழுதி தனது ஐம்பதாவது வயதில் மாவட்ட முதன்மை அதிகாரி ஆனாள். இப்படி தன்னை உயர்த்திக் கொண்டவள் தனது தம்பி தங்கைகளையும் அவர்கள் ஆசைப்படியே படிக்க வைத்தாள்.
மூத்ததம்பி இப்போது பெரிய ஆடிட்டர், சின்னத்தம்பி இன்ஜினியர் ஆகி பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறான். தங்கைகள் இருவரும் பி.எட் முடித்து ஆசிரியப் பணியில் உள்ளனர். தன் உழைப்பால் தன்னையும் தன் குடும்பத்தையும் நினைத்துப் பார்க்காத உயரத்திற்கு கொண்டு சேர்த்த மேகலா அனைவருக்கும் தகுந்த வயதில் திருமணமும் செய்து வைத்தாள்.
பேரன்கள் பேத்திகள் என வீடு நிறைந்ததில் மேகலாவின் அம்மா பங்கஜம் மனம் மகிழ்ந்தாள். இந்த வளமான வாழ்வு எல்லோருக்கும் கிடைக்க மேகலா இழந்தது அவளது திருமண வாழ்க்கையை.
அவள் அம்மா அடிக்கடி கூறுவாள் “உங்க அப்பா இருந்திருந்தாக் கூட நீங்க எல்லாம் இந்த அளவுக்கு நல்லா வந்துருப்பீங்களோ என்னவோ தெரியலை ஆனா நீ சாதிச்சுட்ட மேகலா” என்று பாராட்டுவாள். ஆனால் அடுத்த நொடியே “உன் வாழ்க்கையை காவு கொடுத்துட்டையேடி” என்று கூறி வருத்தப்படுவாள்.
“அக்கா எக்ஸாம் ஃபீஸ் கட்டணும் அக்கா புக்ஸ் வாங்கணும்” என அவளிடம் பணம் கேட்டு வாங்கிக் கொண்டவர்கள், “ஆமா இவதான் வீட்டையே தாங்கின மாதிரி எல்லாரையும் அதட்டிக்கிட்டு எல்லா விஷயத்திலும் தலையிடறா. இவ இல்லைன்னா இங்கே எதுவும் நடக்காதாக்கும். பெரிய தியாகின்னு நினைப்பு” என்று இப்போது கூறுவதைக் கேட்டு நொந்து போனாள் மேகலா.
எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என அவர்களிடம் சற்று கடுமை காட்டினாள் தான். அந்த கடுமை காரணமா இல்லை அவர்களின் தேவை பூர்த்தியானதால் அவள் மீது பாசமும் நேசமும் நீர்த்துப் போய் விட்டதா.
நினைவுகளின் துரத்தலால் சற்று எரிச்சலுற்ற மேகலா எழுந்து காலைக்கடன்களை முடித்தாள். ம்.. இனி வேளாவேளைக்கு மணி அடிச்சா சாப்பாடு என நினைத்தவள் இது என்ன ஜெயிலா என்று தோன்றியதில் புன்னகைத்தாள்.
இரண்டு அறைகள் கொண்ட தன் சிறிய காட்டேஜை விட்டு வெளியே வந்த மேகலா அந்த ஓல்ட் ஏஜ் ஹோமின் சுற்றுப்புற இயற்கை அழகைக் கண்டு வியந்தாள். ஹோமின் பின்புறம் மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்டு இருந்தது. கோவைக்கு உரித்தான ஜில் காற்றும் மரங்களும் பூச்செடிகளும் புல்வெளியும் நிறைந்து பசேல் என்றிருந்தது அந்த இடம்.
சற்று நேரம் நடக்கலாம் என நினைத்த மேகலா அங்கிருந்த நடைமேடையில் நடக்கத் தொடங்கினாள். அப்போது அவள் எதிரில் வந்த அவள் வயதை ஒத்த ஒரு பெண் பளிச் புன்னகையுடன் இருந்தாள்.
ஒரு பதில் புன்னகையுடன் அவளைக் கடந்த மேகலாவை நிறுத்திய அந்தப் பெண் “நீங்க தான் நேற்று புதுசா வந்தீங்களா? என் பேர் சித்ரா” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அவளுடன் பேச பிடிக்காமல், “ம்” என தலையை மட்டும் ஆட்டினாள் மேகலா.
“உங்க காட்டேஜ் எம் 4 எங்களோடது எம் 8 நானும் என் கணவரும் தங்கியிருக்கோம்” என்று பேசிக்கொண்டே போன சித்ரா அங்கே வாக்கருடன் அருகில் இருந்த காட்டேஜிலிருந்து வெளிவந்த ஒரு வயதான பெண்மணியைப் பார்த்து, “தங்கம்மா நான்தான் வரேன்னு சொன்னேன் இல்ல, அதுக்குள்ள அவசரமா” என்று கூறியபடி அந்த முதியவளிடம் சென்று அவர் நடக்க உதவி செய்தாள்.
மேகலா அவர்களைக் கடந்து சட்டென தன் காட்டேஜுக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டாள். மனத்தின் வெப்பம் அவளை நத்தையாய் சுருங்க வைத்தது. முதுமை அவளை என்ன பாடுபடுத்தப் போகிறதோ.
கூடப் பிறந்த சொந்தங்களால் உதாசீனப்படுத்தப்பட்டவளை முதுமையும் வாட்டினால் மேகலாவுக்கு அதை நினைக்கவே நடுக்கமாக இருந்தது. ஒருவேளை தானும் திருமணம் முடித்து கணவன் குழந்தைகள் என வாழ்ந்து கொண்டிருந்தால் இப்படி தோன்றாது என நினைத்தவளின் கண்கள் கலங்கியது.
அவள் அம்மா வற்புறுத்தியும் இவள் குடும்ப சூழ்நிலை புரிந்து இவளை மணக்க வந்த பாஸ்கரனை தவிர்த்தது தவறோ. ம்.. எல்லாம் காலம் கடந்த ஞானோதயம். இதனால் இப்போது யாருக்கு என்ன பயன்.
மேகலாவுக்கு நினைவுச் சுமையால் தலை வலித்தது. சற்று நேரம் எதையும் சிந்திக்காமல் இருந்தால் பரவாயில்லை என நினைத்து தன் போனில் ரேடியோவை ஆன் செய்தாள்.
மேகலா அந்த ஹோமுக்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. மனஇறுக்கத்தால் அவள் யாரிடமும் பேசவில்லை. ஆனால் அங்கிருந்த அனைவருக்கும் சித்ரா தவிர்க்க முடியாத ஒரு தோழியாக இருப்பதை கவனித்தாள்.
ம்.. சமூக சேவை செய்யறேன்னு சிலருக்கு இதெல்லாம் ஒரு ஃபேஷனா போச்சு. இவங்கெல்லாம் வீட்டில புருஷன் குழந்தைகளை கவனிக்க மாட்டாங்க. இங்கு வந்து ஸீன் போடுவாங்க என நினைத்த மேகலா, ‘ஐயோடா, சும்மா இருந்தா இப்படித்தான், நமக்கு கொஞ்சமும் சம்மந்தமே இல்லாத சித்ராவைப் பற்றி கூட தவறாக நினைக்கிறோமே’ என்று எண்ணி தன்னை நினைத்தே வெட்கப்பட்டாள்.
அதனால் அடுத்த நாளிலிருந்து வளாகத்தில் அமைந்துள்ள நூலகத்திற்கு சென்று நல்ல புத்தகங்களை எடுத்து வந்து படித்தாள். அன்று நூலகத்தில் புத்தகங்களை எடுத்துக் கொண்டிருந்த போது சித்ரா சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்த ஒருவரைத் தள்ளிக் கொண்டு நூலகத்தினுள் நுழைந்தாள். அங்கு மேகலாவைப் பார்த்த சித்ரா அவளிடம் இவர்தான் என் கணவர் சேகர் என சிரித்தபடி அவரைஅறிமுகப்படுத்தினாள்
வலது கை மடக்கி வாய் கோணியிருந்த சேகரை பார்த்து விக்கித்துப் போனாள் மேகலா.
“இவருக்கு பாலகுமாரன் எழுதின புக்ஸ் வேணும்னாரு. அதான் இவரையே கூட்டிட்டு வந்தேன்” என்றாள் சித்ரா அவளிடம்.
சித்ராவிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்தவளிடம் “என்ன மேகலா இப்படி திகைச்சுப் போயிட்டீங்க இதுவும் என் வாழ்க்கையில் ஒரு பகுதி என எளிதாக எடுத்துக்கோங்க” என்றாள் சித்ரா இலகுவாக.
“உங்களுக்கு பசங்க யாரும் இல்லையா இல்லை இருந்தும் உங்களை கவனிக்காம இப்படி விட்டுட்டாங்களா” என்று கேட்டாள் மேகலா கோபமாக.
“கூல் கூல் ” என்ற சித்ரா “இருங்க இவருக்கு புத்தகங்களை எடுத்து கொடுத்துட்டு வந்துடறேன்” என்று கூறி சக்கரநாற்காலியை உள்ளே தள்ளிச் சென்றாள்.
சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பு பாராட்டி உதவி செய்யும் சித்ராவுக்கு வாழ்க்கை இவ்வளவு துன்பமானதா என நினைத்த மேகலாவுக்கு கடவுள் மேல் கோபம் வந்தது.
கணவருக்கு புத்தகங்களை தேடி எடுத்து கொடுத்து விட்டு வந்த சித்ரா மேகலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “ரொம்ப இறுக்கமாவே இருக்கீங்க இந்த காரணத்தைப் பத்தி தெரிஞ்சுக்கவாவது என் கூட பேசுறீங்களே” என்றாள் அன்புடன். மேகலா.
“உண்மை தான் சித்ரா என் அனுபவங்கள் என்னை தளர விடவில்லை” என்றாள்.
“ம்.. நானும் கேள்விப்பட்டேன் நீங்க பெரிய ஆபீஸர் வி.ஆர்.எஸ் வாங்கிட்டு இங்கே வந்துட்டீங்கன்னு” என்ற சித்ராவிடம்
“அதெல்லாம் முடிஞ்சு போன கதை” என்றாள் மேகலா சலிப்புடன்.
மேகலாவைப் பார்த்து, “எங்களுக்கு பசங்க இருக்காங்களான்னு கேட்டீங்க தானே எங்களுக்கு குழந்தைகள் இல்லை ஆனால் எங்கள் இருவரின் உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளை எங்கள் பிள்ளைகளாக எண்ணி வளர்த்து ஆளாக்கினோம் இப்போ எல்லாரும் பெரிய வேலையில் வெளிநாடுகளில் நல்லா இருக்காங்க” என்றாள் சித்ரா இயல்பாக.
“இதை எப்படி இவ்வளவு சகஜமாக எடுத்துக்கீறீங்க அதுவும் உங்க கணவர் இப்படி இருக்கும் போது” என ஆதங்கத்துடன் கேட்டாள் மேகலா.
“அவங்கள நாங்கதான் படிக்க வைத்து வாழ்க்கையில் நன்கு உயர வைத்தோம். அதற்காக அவங்க நம்ம கூடவே இருக்கணும்னு நாம எதிர்பார்க்க முடியுமா. அவங்க எதிர்காலம் வெளிநாடுகளில் நல்லா இருக்கும்னு போனாங்க. அதை நாங்க எப்படி தடுக்கிறது. என் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் மருத்துவ கண்காணிப்பு இருக்கும் இந்த ஹோமில் சேர்ந்திருக்கோம்” என்ற சித்ரா, “காலமாற்றத்தில இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்கணும். நம்ம பக்கத்தில் இருக்கறவங்க தான் நமக்கு இப்போ சொந்தம்னு நினைச்சு அவங்க மேல அன்பு செலுத்தணும் அவங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யணும்” என்று பேசிக்கொண்டே போன சித்ராவிடம்
“ம்… இதெல்லாம் பேச நல்லாயிருக்கும், ஆனா நடைமுறையில் ரொம்ப கஷ்டம். இப்போ என்னையே எடுத்துக்கோங்க என் தம்பி தங்கைகளுக்காக என் மணவாழ்க்கையை விட்டுக் கொடுத்தேன். ஆனா அவங்க என்னையோ நான் செய்த உதவிகளையோ நினைச்சுக் கூட பார்ப்பது இல்லை. வாழைமரத்தை தண்டு வரை உபயோகப்படுத்திட்டு வெட்டி தூக்கி எறிகிற மாதிரி நான் இப்போ எங்கே இருக்கேன்னு கூட அவங்க கவலைப்படலை” என்று பொரிந்தாள் மேகலா.
அவள் கையை பற்றி கொண்ட சித்ரா”நீங்க உங்க உடன்பிறந்தவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் தானே எல்லா உதவிகளையும் பாசத்தோட செய்தீங்க அப்புறம் ஏன் கவலைப்படறீங்க” என்றாள் சித்ரா ஆதரவாக.
“நான் எதிர்பார்ப்பது ஒரு அன்பான விசாரிப்பு ஆறுமாசத்துக்கு ஒருமுறை என் வீட்டுக்கு ஒரு வருகை அவ்வளவுதான். மனசு வலிக்குது சித்ரா” என்ற மேகலாவின் குரல் தளுதளுத்தது.
“ஒரு தாய் வயிற்றில் பிறந்து ஒரே வீட்டில் வளர்ந்தாலும் ஒரு வயசுக்கு மேல உடன் பிறந்தவர்களே விருந்தாளி மாதிரி ஆயிடறோம். இதுதான் யதார்த்தம் மேகலா. அவங்க அவங்களுக்கு ஆயிரம் பிரச்சினை. எனக்குதான் இப்படி நடக்குதுன்னு பழசையே நினைச்சு வருத்தப்பட்டா மனம் பாரமாகி வெறுப்பு தான் வளரும். அது கோபமா மாறிடும். நம்மோட தினசரி வேலைகளே பாழாயிடும். நம் இயல்பு மாறிவிடும். அதைவிட அவங்க தவறுகளை பெருந்தன்மையா மன்னிச்சு மறந்துடுங்க. அவங்க வரும் போது வரட்டும்னு விட்டுட்டு நம்மை சுற்றி இருக்கறவங்களோட அன்பா பழகுங்க. அவங்களுக்கு ஏதாவது சின்ன சின்ன உதவிகள் செய்யுங்க. அதில் உங்க மனசே நிறைஞ்சுடும். ஒவ்வொரு நாளையும் இனிமையாக்க உங்க மனசை லேசா வைச்சுக்கோங்க மேகலா” என்று அறிவுறுத்தினாள் சித்ரா.
அப்போது அங்கு வந்த தோட்டக்காரரிடம், “என்ன சுப்பையா உடம்பு நல்லாயிடுச்சா வேலைக்கு வந்துட்டீங்களே இன்னைக்கு” என்று அவரை விசாரித்தாள் சித்ரா.
“ஆமாங்கம்மா இன்னைக்கு எனக்கு கொஞ்சம் பரவாயில்லை, நீங்க அய்யா எல்லாம் நல்லா இருக்கீங்க இல்ல” என்று அவளுடன் பேசிக் கொண்டே செடிகளுக்கு நீர் ஊற்றினார் தோட்டக்காரர்.
நம்மைச் சுற்றி வாழ்பவர்களே நம் அன்பு சொந்தங்கள் என்ற பாடத்தை அறிந்து கொண்ட மேகலா சுப்பையாவைப் பார்த்து புன்னகைத்தாள்.
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings