எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“நீலா எல்லா பொருட்களையும் பெட்டியில் எடுத்து வச்சுட்டியா நாளைக்கு விடியற்காலையிலேயே கிளம்பணும். அப்புறம் அதை எடுத்து வைக்கல இத மறந்துட்டேங்கன்னு சொன்னேனா எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்” என்று தன் மனைவியிடம் அதட்டலாக கூறினான் கந்தமாறன்.
“நீங்க சொன்னபடி எல்லாம் எடுத்து வச்சாச்சுங்க அப்படி ஏதாவது விட்டுப் போனா அங்கே ஏதாவது கடையில் வாங்கிக்கலாம்” என்ற நீலாவை முறைத்த மாறன்
“அந்த பட்டிக்காட்டில் எங்கு இருக்கும் கடை எதையாவது உளறாதே” என்று இரைந்தான்.
“ஆமா எங்க பக்கத்து ஊரெல்லாம் உங்களுக்கு பட்டிக்காடு உங்க சோமையாம்பாளையம் தான் டவுனாக்கும்” என்று முணுமுணுத்தாள்.
“என்ன அங்க முணுமுணுப்பு” என்ற மாறனிடம்
“ஒண்ணும் இல்லைங்க எல்லாம் சரியா இருக்கான்னு திரும்ப செக் பண்றேன் “என புன்னகைத்தாள் நீலா.
கந்தமாறனின் தாய் மாமா சதாசிவத்தின் அமுத விழாவிற்கு தான் இருவரும் புறப்பட்டு கொண்டிருந்தனர் தன்னுடைய 81வது பிறந்தநாள் விழாவை கண்டிப்பாக தன் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில் தான் நடத்த வேண்டும் என்று சதாசிவம் சொன்னதால் உறவினர் அனைவரும் சற்று சுணக்கத்துடன் தான் வருகின்றனர்.
“கடல் மாதிரி எங்க வீடு மதுரையில் இருக்கு இல்ல ஒரு மண்டபம் புடிச்ச அங்கையாவது வச்சிருக்கலாம். இதெல்லாம் விட்டுட்டு கோவிலதான் நடத்தணும்னு அடம் பிடிக்கிறார் எங்க அப்பா” என்று பத்திரிகை கொடுக்கும் போதே புலம்பினான் அவர் மகன்.
அவர்கள் குலதெய்வம் கோவில் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் உள்ளது. அந்த கிராமத்துக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் தான் நீலாவின் பிறந்த ஊர் உள்ளது. இந்த சாக்கில் அங்கும் போய் தன் பிறந்த வீட்டையும் குடும்ப உறவுகளையும் பார்த்து வரலாம் என்ற ஆசை அவள் மனதில் ஓடியது.
அவள் அக்காவும் இதையே தான் போனில் பேசும்போது கூறினாள். சகோதரிகள் இருவரும் ஒரே வீட்டில் அண்ணன் தம்பிக்கு வாக்கப்பட்டுள்ளனர்.
“என்ன ரெண்டு பேரும் சேர்ந்து பிளான் போடுறீங்களாக்கும் உங்க வீட்டுக்கு போக அதெல்லாம் இங்க வேலைக்காகாது. விழா முடிஞ்சது நேரா மதுரையில் அண்ணன் வீட்டுக்கு வந்துட்டு மறுநாள் கோயம்புத்தூர் கிளம்பிடணும் சொல்லிட்டேன் எனக்கு வேலை இருக்குது” என்று நேற்றே கந்தமாறன் இவள் எண்ணம் புரிந்தது போல் எச்சரித்து விட்டான்.
குதூகலமும் கும்மாளமுமாக தன் அண்ணன்கள் அக்காவுடன் பிறந்த வீட்டில் விளையாடிய நாட்கள் நீலாவின் மனதை நிறைத்தது.
அளவான வருமானமே வந்தாலும் மனதிருப்தியுடன் ஆனந்தத்திற்கு குறைவில்லாமல் இருந்த வீடு எப்போதும் நல்லதையே நினைத்து அடுத்தவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மனிதர்கள் உள்ள கிராமம். விழா நாட்களில் அம்மா செய்த அதிரசத்தின் தித்திப்பையும் முறுக்கின் சுவையையும் இன்றும் அவள் நாக்கு உணர்ந்து கண்களில் நீர் கோர்த்தது.
ஊருக்கு போனா பெரியண்ணன் அண்ணி மாமா அத்தைன்னு எல்லாரையும் பார்த்துட்டு வரலாம். ஊருக்கு போய் மூணு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. இவர்கிட்ட கேட்டா அதான் எல்லாரையும் அப்பப்ப கல்யாணம் காட்சியில பார்க்கிறியே பத்தாதான்னு பதில் கேள்வி கேட்கிறார். அவள் மனம் அங்கலாய்த்தது.
நான்கு தூண்களுடன் முற்றம் வைத்த வீடு. அதைச் சுற்றி சமையலறை சாமியறை படுக்கையறைகள் கட்டப்பட்டிருக்கும். முற்றத்தை சுற்றியுள்ள வராண்டாவில் நால்வரும் ஓடிப் பிடித்து விளையாடுவர். பாட்டி முகமலர்ச்சியுடன் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு நால் வரையும் விழுந்துடாதீங்க பிள்ளைங்களா என்று அவ்வப்போது எச்சரித்துக் கொண்டிருப்பாள். உள்ளூரிலேயே வாக்கப்பட்டு இருக்கும் அவள் அத்தைகள் வந்துவிட்டால் வீடே ஆனந்த கூத்தாடும்.ஒரே சிரிப்பும் களிப்புமாக நாட்கள் ஓடிய காலம் அது.
மாடிக்குப் போக வீட்டிற்குள்ளேயே இருக்கும் மரத்தால் ஆன படிகள் அதன் கீழே ஒழிந்து கண்ணாமூச்சி ஆடும் போது ஒரு முறை சின்ன அத்தையின் மகன் அவள் கன்னத்தில் முத்தமிட்டதை இப்போது நினைத்தாலும் அவள் உடல் சிலிர்த்தது.
ஆண் பெண் உறவைப் பற்றி அறியாத வயது, அவனுக்கு கொக்காணி காண்பித்து விட்டு அழுதபடி பாட்டியிடம் தஞ்சமடைந்த நீலாவை அணைத்து “அவன் உன் முறை பையன் தானே எதுக்கு அழுவுற” என்று அவளுக்கு ஆறுதல் கூறிய பாட்டியின் முகம் அவள் நினைவுக்கு வந்தது.
அன்பைப் பொழிந்தவர்கள் எல்லாம் மண்ணுக்குள் போய் படமாகி விட்டனர். சர்வ நிச்சயமாக அனைவருக்கும் இறப்பு வரும் என்று தெரிந்தும் அதைப்பற்றி நினைக்காமல் எந்த நம்பிக்கையில் வாழ்கிறோம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் இருப்பது தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போலும். நீலாவின் மனம் அவள் வீடு முழுக்க சுற்றி அலைந்து தத்வார்த்தமான ஒரு முடிவுக்கு வந்து நின்றது.
“என்ன நின்னுக்கிட்டே உங்க வீட்டுக்கு போன மாதிரி கனவு காணுறயாக்கும்” என்று அவள் கணவன் கேட்ட பின்பே நீலா எண்ண அலைகளிலிருந்து மீண்டாள்.
மறுநாள் விடியற்காலை காரில் கிளம்பி மதுரையில் கந்தமாறனின் அண்ணன் வேலுச்சாமியின் வீட்டுக்கு வந்தனர். நீலா தன் அக்காவை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள்.
கந்தமாறன் தன் அண்ணனிடம் நலம் விசாரித்து விட்டு “அண்ணா மாமா வீட்டுக்கு சாயங்காலம் போனா போதுமில்ல” என்று கேட்டவன் தங்கள் பிசினஸ் விஷயமாக பேச ஆரம்பித்தான்.
தன் அக்காவுடன் உள்ளே வந்த நீலா அவள் அக்காவிடம் “மாமா என்ன சொன்னாரு நம்ம ஊருக்கு போக” என்று ஆசையாக கேட்டாள்.
“இந்த விஷயத்தில் அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஒண்ணாத் தான் இருக்காங்க. எனக்கும் தடா தான்” என்றாள் அவள் அக்கா வெறுப்பாக.
மாலை கல்லூரியில் படிக்கும் அவர்கள் பிள்ளைகள் வந்ததும் இரண்டு குடும்பமும் காரில் புறப்பட்டு அண்ணா நகரில் இருக்கும் தங்கள் மாமா வீட்டுக்கு வந்தனர். வீட்டினுள் நுழைந்தவர்களை ஈசி சேரில் வெள்ளை வெட்டி சட்டையில் கனகம்பீரமாக அமர்ந்திருந்த அவர்கள் மாமா சதாசிவம் அனைவரையும் வரவேற்றார்.
கந்தமாறனுக்கு முறுக்கு மீசையும் கட்டுடலுமாக இருந்த இளமைக்கால மாமாவின் முகம் மனத்தில் மின்னி மறைந்தது. தங்கள் கிராமத்து கிணற்றில் மாமா தங்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தது என நிகழ்ச்சிகள் நொடியில் மனதில் ஓடியது
பழைய இடங்களையும் நம் வீட்டு மனிதர்களையும் பார்க்கும்போது வரும் நினைவுகள் நம்மை இளமையாக்குமோ. அதுதான் நீலாவும் பிறந்து வீட்டுக்குப் போக ஆசைப்படுகிறாளோ என்றும் நினைத்தவனை சுற்றுப்புற சிரிப்பு கலைத்தது உறவினர்கள் ஒவ்வொருவராக வர வர அங்கே எங்கு திரும்பினாலும் மத்தாப்பூக்களாய் சிரிப்பும் குதூகலமும் வீட்டினுள் ஆனந்தம் வழிந்தது.
சதாசிவமும் அவர் மனைவியும் குடும்பத்தாரின் ஆரவாரத்தை மனமகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நீலாவின் மகன் சதாசிவத்திடம் தாத்தா உங்களுக்கும் பாட்டிக்கும் கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு என்று கேட்டான்.
அது இருக்கும் ஒரு 60 வருஷத்துக்கு மேல. எனக்கு 19 வயசு ஆன போதே உங்க பாட்டியை கட்டி வச்சுட்டாங்க அப்போ அவங்களுக்கு 10 வயசு என்றார் சதாசிவம் சிரித்தபடி.
“இன்ட்ரஸ்டிங் இத்தனை வருஷம் எப்படி சேர்ந்து இருக்கீங்க ரெண்டு பேரும் சண்டை போடாம” என்றான் நீலாவின் இளைய மகன். “அதுல தான் ஒரு சூட்சமம் இருக்குது” என்றார் சதாசிவம்.
இப்போது அனைவரும் பேச்சை நிறுத்திவிட்டு சதாசிவம் சொல்லப்போவதை கவனித்தனர். “திருமணமானதும் ஒரு பெண் பிறந்த வீட்டை தன் வீட்டு மனிதர்களைப் பிரிந்து கணவனை மட்டுமே நம்பி தன் புகுந்த வீட்டுக்கு வரா. முதல் ஆறு மாசத்துக்கு ரெண்டு பேருக்கும் எதுவும் புரியாது அவங்க இனகவர்ச்சியில ஒரு மோகத்தில் மயங்கி இருப்பாங்க”.
டாக்டருக்கு படிக்கும் ஒரு பேத்தி ஹார்மோன்ஸ் மேஜிக் என்று கூறி புன்னகைத்தாள்.
“அதுக்கு பிறகு தான் அவங்க உண்மையான குணம் தெரியவரும்.அப்போதான் மனைவிக்கு தகுந்த மாதிரி கணவனும் கணவனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும் நடந்துக்கணும்” என்று சதாசிவம் கூறியதும்
அவர் மனைவி “என் புகுந்த வீட்டு மனுஷங்ககிட்ட நான் எப்படி அனுசரிச்சு நடந்துக்கிறேனோ அதே மாதிரி தாத்தாவும் என் பிறந்து வீட்டு மனுஷங்களை அனுசரிச்சு நடந்துக்குவாரு. என் வீட்டிலேயோ அவர் வீட்டிலேயோ குற்றம் குறை இருந்தாலும் அதை சுட்டிக்காட்டி ஏசி ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்க மாட்டோம்” என்றார் முகமலர்ச்சியுடன்.
“அப்போ உங்களுக்குள்ள சண்டையே வந்ததில்லையா தாத்தா” என்று இன்னொரு பேத்தி கேட்க
சதாசிவம் சிரித்தபடி “சண்டை வராமல் என்ன போட்டு இருக்கோம் ஆனா கொஞ்ச நேரத்திலேயே ஏன் இப்படி செஞ்சோம்னு யோசனை செய்வோம் யார் மேலேயோ இருக்கிற கோபத்தை ஒருத்தர் மேல ஒருத்தர் காட்டி இருக்கோம்னு புரிஞ்சிக்குவோம். உடனே பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுடுவோம். அவ்வளவுதான் கோபம் எல்லாம் ஓடிடும்”.
“என் மனைவியின் ஆசையை நானும் என்னுடைய ஆசையை அவங்களும் பரிபூரணமா நிறைவேற்றுவோம். இந்த அமுத விழாவையே எடுத்துக்கோங்க. என்னோட ஆசைப்படி எங்க குலதெய்வம் கோவிலில் நடத்த சம்மதித்த உங்க பாட்டி யார் சொல்லியும் அதை மாற்றக்கூடாது என்று சொல்லிட்டாங்க என் மகனிடம் எந்த இடத்திலையும் எந்த விஷயத்திலும் யாரிடமும் நாங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்திட மாட்டோம் ஆனா நாங்க எங்களுக்குள்ள எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துடுவோம். இதுதான் திருமண வாழ்க்கையோட வெற்றிக்கு காரணம் ஆனா எல்லாத்துக்கும் மேல கடவுளோட ஆசிர்வாதம் நாங்கள் இத்தனை வருஷம் சேர்ந்து இருக்க வழி வகுத்துருக்கு” என்றார் உணர்ச்சி பெருக்குடன்.
அங்கு இருந்த அனைவருமே இதைக் கேட்டு நெகிழ்ந்து போயினர். சற்று நேரத்தில் நீலாவை கூப்பிட்ட கந்தமாறனிடம் “என்ன நாளைக்கு விழா முடிஞ்சதும் எங்க வீட்டுக்கு போயிட்டு வரலாம் தானே” என்று மகிழ்வுடன் கேட்டாள். மனைவியின் மனதை புரிந்தவன் சம்மதம் என்பது போல் தலையை அசைத்தான் கந்தமாறன்.
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings