எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அவளை அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை நாளை அவளை எப்படியாவது முடித்து விடுவது என்பதில் இன்று அவன் தீர்க்கமாய் இருந்தான். இப்போது அவனுக்கு அவள் வேண்டாதவள் என்றாலும் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதால் அவளைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும்
சஞ்சனா. அவளை போலவே அவள் பெயரும் இருக்கட்டும் என்று அப்படி வைத்திருக்கலாம். ஆனால் அழகு பெயரிலும் அவளிலும் இருந்த அளவுக்கு அவள் நடத்தைகளில் இல்லை அதனால்தான் நாளை அவன் கைகளால் அவள் மரணமடையவிருக்கிறாள். வாழ்த்துகள் சஞ்சனா!
நல்ல அழகு நல்ல உயரம் நல்ல நிறம் எடுப்பான கேசம் துடிப்பான மேனி என்று குறை சொல்ல முடியாத அளவுக்கு அத்தனைக்கும் சொந்தக்காரி. நேற்றுவரை அவன் மனைவியாக இருந்தவள் நாளை பிணமாகி மண்ணுக்குள் செல்லவிருக்கிறாள். காரணம் காமேஷ்
அவனை அவள் சந்தித்திருக்க கூடாது இந்தநேரம் நானும் அவளுக்காக பரிதாபப்படுகிறேன். அவனால்தான் என் அருமை கதை நாயகி உயிரைவிடப் போகிறாள் . சரி நான் ஏன் வெறுமனே பேசிக்கொண்டே இருக்கிறேன் அடுத்த நகர்வை நோக்கி செல்வோம் நீங்களும் என்னை சற்று கவனமாக பின்தொடருங்கள்
அவளை அவன் திருமணம் முடிக்கும்போது அவளுக்கு ஈரொன்பதும் ஏழு மாதங்களும் அவன் நாழேலிலும் இருந்தான். இப்போது அவள் அவனை ஏமாற்ற நினைத்த காரணம் உங்களுக்கு சற்றே விளங்கியிருக்கும். ஆம் திருமணமாகி ஒரு குழந்தையோடு போதும் என்றாள். அளவான குடும்பம் வளமான வாழ்வு அதில் அவளுக்கு நம்பிக்கை அதிகம் இருக்கலாம் என்று நினைத்த சில மாதங்களில்தான் அவன் கணிப்பு தவறு அதற்கு காரணம் அடுத்த குழந்தைக்கு தகப்பனாக இன்னொருவன் வரிசையில் இருக்கிறான் என்று அறிந்து கொண்டான்
அவன் என்பதால் ஒருவேளை அவனுக்கு பெயரில்லையோ என்ற குழப்பமும், சொல்லாமல் நான் குழப்புகிறேன் என்று சற்றே என்மேல் கோபமும் உங்களுக்கு தலைதூக்கலாம். மன்னித்துக்கொள்ளுங்கள்
நகரின் மையப்பகுதியில் இருந்த அவனுடைய பெரிய நிறுவனமான எஸ்.எல்.பர்மாசூட்டிக்கல் நிறுவனத்தை சுற்று வட்டாரத்தில் அறியாதவர்கள் வெளியூர் நபர்களாக இருக்கவே வாய்ப்பு அதிகம் அப்படிப்பட்ட பிரபல்யமான நிறுவனத்தின் சேர்மன்தான் எஸ் லக்ஷ்மணபிரசாத் அந்த நிறுவனத்தின் நிர்வாக மேலாண்மை பிரிவில் சேர்ந்து இன்று ப்ரோமோஷனில் இருக்கும் காமேஷ் தான் இன்றைய நிலவரப்படி லக்ஷ்மண பிரசாத்தின் ஆஸ்தான எதிரி
அவனை இங்கு வேலைக்கு வைத்த பிறகு தன் மனைவியை நிறுவனத்தில் நிர்வாகத்தை பார்த்துக் கொள்ள அனுமதித்திருக்க கூடாது என்பதை இப்போதுதான் உணர்கிறான், காமேஷால் அவள் இப்போது 3 மாதம் என்றும் இனியும் சமாளிக்க முடியாது 1 வாரத்தில் வெளியூருக்கு ஓடி தப்பி பிழைத்து கொள்ளலாம் என்று இருவரும் திட்டமிட்டுள்ளதையும் ரகசியமாய் அறிந்துகொண்ட பிறகு, அவன் முதல்நாள் வேலைக்கு வந்தபோது அவனை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
சற்றே எண்ணெய் வடிந்த முகம், முகம் முழுக்க சோகம், சற்றே கசங்கிய ஆடையை பெல்ட்டுக்குள் விட்டு சரிசெய்தபடி நேர்முக தேர்வுக்கு வந்தவனிடம் அவன் கேட்ட முதல் கேள்வி
ஏனப்பா நேர்முக தேர்வுக்கு கொஞ்சம் நீட்டா வர வேண்டாமா?
ஸாரி சார் வீட்டுல அம்மா நான் மட்டும்தான் அம்மா படுத்த படுக்கை நான்தான் எல்லா வேலையும் பார்க்குறேன் வசதி குறைவு அயர்ன் பாக்ஸ் கூட இல்ல அதனால தான் என்ற போது அவனுக்காக அவன் பரிதாபப்பட்டான். காரணம் அவன் படிப்பு அவனது வசதியை விட சற்றே அதிகம்
பிஎஸ்சி பயாலாஜி
அன்றிலிருந்து அவனை கவனிக்கிற வகையில் வேலைகளில் அவனது சுறுசுறுப்பு லக்ஷ்மணனை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது நாளை அவன் மனைவி நிர்வாகத்தை கவனிக்க வேண்டி வருமானால் அந்த சுறுசுறுப்பு அவளையும் ஆச்சரியப்படுத்தி அவன் வலையில் விழச் செய்யும் என்பதை அவன் ஏனோ யோசிக்கவேயில்லை
முதல் 6 மாதங்கள் 6000 சொச்சம் சம்பளம் என்ற நிலையில் இருந்து 1 வருடத்தில் பதவி உயர்வு சம்பளஉயர்வு என்று இன்றைய நிலைக்கு அலுவலகத்தில் அதிக சம்பளம் வாங்குபவன் என்ற நிலைக்கு அவனை உயர்த்தியிருக்கிறேன் என்றால் அதற்கான குறைந்தபட்ச விசுவாசமாவது அவன் என்னிடம் காட்டியிருக்க வேண்டும்தானே! ஏனோ மறந்துவிட்டான். ஆனால் நான் மறக்க மாட்டேன் அதை அவனது இறுதி வேளையிலாவது அவனுக்கு நினைவுபடுத்துவேன் என்று அவன் அவனுக்குள்ளேயே சபதம் செய்திருந்தான்
சரி சற்றே காரியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவோம்
அன்று அலுவல் வேலைகள் முடிந்த பிறகு லக்ஷ்மணன் தன்னுடைய அறைக்கு அவனை வர சொல்லியிருந்தான். அவனுக்கு திட்டங்கள் தெரியாது என்பதால் அவன் வழக்கமான அழைப்பாக அதை நினைத்திருக்கலாம். அவன்தான் அலுவல் வேலைகளில் கெட்டிக்காரன் ஆயிற்றே
ஸார் மே ஐ கம் இன்
எஸ் கம் இன்
ஸார் வர சொல்லியிருந்தீங்க
எஸ் மிஸ்டர் காமேஷ் இன்னைக்கு ஒர்க் எல்லாம் ஓவரா?
எல்லாம் ஓவர் ஸார் பைல்ஸ் எல்லாம் பைல் பண்ணிவச்சுட்டேன் மார்னிங் நீங்க வந்ததும் ஸைன் பண்ணிட்டா வேலை முடிஞ்சுது ஸார்
நாளைக்கு… நாளைக்கு வேற வேலை கொஞ்சம் இருக்கு காமேஷ் நான் வர்றது சந்தேகம்தான் நாளைக்கு நீங்களும் என்னை பார்க்க வாய்ப்பிருக்காது ஸோ பைல்ஸ் எடுத்துட்டு வாங்க நான் இப்பவே ஸைன் பண்ணிட்றேன் என்று சொல்ல
அவன் அந்த வார்த்தையின் ஆழமான அர்த்தத்தை புரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அவன் வழக்கமான செயல்பாடுகள் உணர்த்தியது
வெளியில் சென்றவன் அதே வேகத்தில் பைலோடு உள்ளே வந்து ஸைன் வாங்கிவிட்டு செல்லும்போது கூட அவனுக்காக இவன் பரிதாபப்பட்டான். அவன் குடும்ப சூழ்நிலைக்காகவாவது அவன் கொஞ்சம் யோசித்திருக்கலாம்
காமேஷ்
ஸார்
நாளைக்கு நான் ஆபீஸ் வர கொஞ்சம் லேட் ஆகும். முக்கியமான வேலை நாளைக்கே பைல் க்ளோஸ் பண்ணனும் இல்லனா தள்ளி போய்டும் சிக்கல் ஆகிடும் மதியம் ஆபீஸ் நம்பருக்கு கால் பண்றேன் பீச் ரிசார்ட்டுக்கு வந்துடு அங்க பேசிக்கலாம்
ஓகே ஸார்
சொல்லிவிட்டு காமேஷ் கிளம்ப இந்த முகத்தை நாளை முதல் பார்க்க முடியாது என்பதை எண்ணி இதோ இரண்டு துளி கண்ணீர் உனக்காக, மிஸ் யூ ஸோ மச் இன் கமிங் டேஸ் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே கிளம்ப
அன்று இரவு முழுக்க சஞ்சனாவுக்கான நேரம். அதுபோக அவள் எப்போதும் அவனுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் என்பதால் நாளை இறக்கும்முன்பு அவளுக்கு ஒரு பரிசளிக்க விரும்பி
ஹாய் மை டியர் சஞ்சனா
ஹாய் பேபி
கம் ஆன் டியர் டேக் திஸ். திஸ் ஒன் இஸ் பெஸ்ட் கிப்ட் இன் மை லைப் பார் யூ, கீப் திஸ். பட் ஒன் கண்டிஷன், இந்த கிப்ட் நாளைக்கு காலைலதான் ஓபன் பண்ணனும் ஓகேவா?
அப்படி என்ன கிப்ட் பேபி?
காலைல பார்க்கத்தானே போற! அதை பார்த்தா நீ அதிர்ச்சி கூட ஆகலாம் பட் இட்ஸ் ஒன்லி பார் யூ, லவ் யூ டியர் சஞ்சனா என்று சொல்லிவிட்டு கன்னத்தில் வழக்கமான ஒரு முத்தமிட்டுவிட்டு சென்றபிறகு கண்டிப்பாக அவளுக்கு அதில் ஆர்வத்தை விட சற்றே அதிர்ச்சி இருந்திருக்ககூடும் காரணம் அவன் வார்த்தைகளில் இருந்த மாற்றம் காமேஷ்க்கு புரிந்திருக்காது ஆனால் சஞ்சனா புரிந்திருப்பாள். ஆனால் நீ சாகத்தான் வேண்டும் சஞ்சனா!
மறுநாள் காலை
அன்று அவன் காலை சீக்கிரமே எழுந்து விட்டிருந்தான் அன்று முடிக்க வேண்டிய கடமை அவனுக்கு மிக முக்கியமான கடமை. அதை இன்று அவனால் தவறவிட முடியாது
குட் மார்னிங் சஞ்சனா
குட் மார்னிங் டார்லிங்
ஓகே டியர் ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் நான் சீக்கிரம் கிளம்பணும் காபி வேண்டாம் அப்புறம் அந்த கிப்ட் மார்னிங் ஓபன் பண்ணனும்னு சொன்னேனே அதை இப்போ பண்ணிடலாமா? என்று கேட்க நேற்று இரவு அவள் முகத்தில் இருந்த ஆர்வம் இப்போது இல்லை என்பதையும் அதற்கு பின்னால் வேறு காரணம் இருக்கலாம் என்பதையும் அவன் உணர்வதற்குள் அவன் முதுகில் இறங்கிய கத்தி சற்றே அவன் ரத்தத்தை அதிக அளவு வெளியேறும்படி செய்துவிட்டு வெளியில் வந்தது
மன்னிச்சுக்கங்க முதலாளி என்ற காமேஷின் குரல் மிக நெருக்கமாக அவன் காதுகளில் எட்டியது. கணவன் சொன்னதை கடமைக்காகவேனும் இத்தனை நாட்களில் கேட்டவள் நேற்று மட்டும் சந்தேகம் வந்ததால் கேட்கவில்லை என்பதையும் கிப்ட் பாக்ஸை அவள் இரவே பிரித்து பார்த்துவிட்டாள் காமேஷ்க்கும் தகவல் சொல்லிவிட்டாள் இருவரும் இரவோடு இரவாக திட்டம் போட்டு தனக்கு முன்பே அதை செயல்படுத்திவிட்டனர் என்பதையும் உணரத் தொடங்கினான்
மெல்ல அவன் சரிய துவங்க சஞ்சனாவை நெருங்கியவன் நீ சொன்னமாதிரி நான் பண்ணிட்டேன் எனக்காக நீ ஒன்னு பண்ணனும் என்று கேட்க அவன் மீதுள்ள காதல் மயக்கத்தில் கணவன் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் வேளையிலும் காமேஷ் கண்களை பார்த்துக்கொண்டே என்னடா செல்லம் வேணும் என்று கேட்க
அதே விநாடி அவளுடைய வயிற்றில் அதே கத்தி மின்னல் வேகத்தில் இறங்கியது
சற்றும் அதை எதிர்பாராதவள் அவனை பார்த்தபடி கீழே சரிய ஸாரி சஞ்சனா என்ன இருந்தாலும் நீ இன்னொருத்தன் பொண்டாட்டி என்னதான் உன்னை நான் கூட்டி போய் வாழ்ந்தாலும் பெரிய பணக்காரன் பொண்டாட்டியை இவன் கூட்டி வந்துட்டான் அவ புருஷன் அவமானம் தாங்காம குத்திக்கிட்டு செத்துட்டான் அப்படின்னு தான் பேச போறாங்க ஏன்னா அப்படித்தானே நாம பிளான் செட் பண்ணோம். ஆனா அதுக்கு பின்னாடி இன்னொரு முக்கியமான விஷயம் உனக்கு தெரியாதுல்லையா? நான் வேற ஒரு பொண்ணை விரும்புறேன் அவளைதான் கல்யாணம் பண்ணிக்க போறேன் அதுக்கு எனக்கு பணம் வேணும் ஆடம்பர வாழ்க்கைக்கு நீ உதவியா இருப்பன்னு நினைச்சேன் நாளைக்கே அது உபத்திரவமா மாறிட கூடாதுல்லய்யா! அதான் இனி உன் பணம் நகை மட்டும் போதும் நீ வேணாம்னு முடிவு பண்ணிட்டேன் நீ நேத்து நைட் பிளான் சொன்னப்பவே எப்படியும் அடுத்து கல்யாண பேச்சுக்குதான் வருவன்னுதான் நான் ஒரு பிளான் போட்டேன். என் முதலாளி உனக்கு கிப்ட் பண்ணதுக்குள்ள கத்திதான் இருந்தது அதை வச்சு நாளைக்கு உன்னை கொல்லத்தான் பிளான் பண்ணிருக்காருன்னு தெரிஞ்சதும் அதை நானே பண்ணிடலாம்னு முடிவு பண்ணேன் பாவம் என்ன இருந்தாலும் என் முதலாளி கொலை பழிக்கு ஆளாக கூடாதுன்னு ஒரு விசுவாசமா இருந்துட்டு போகட்டுமே
பேசிக்கொண்டே போக மெல்ல மெல்ல பிரிந்து கொண்டிருந்த உயிர் அவளிடமிருந்து விடை பெற்ற அதே நேரத்தில்
டொம்
அதிக சத்தத்துடன் வெடித்த அந்த வெடிகுண்டால் அங்கிருந்த வீடு தரைமட்டமாகி சுற்றுவட்டாரங்கள் முழுக்க புகை மண்டலமாகி சற்று நேரத்தில் அங்கு சரசரவென மக்கள் கூட்டம் சேரத் தொடங்கி போலீஸ் பத்திரிக்கை ஆட்கள் என்று கூடத் தொடங்கியிருந்தது
உங்களுக்கு தெரியாத இன்னொரு உண்மையை முடிவில் சொல்லலாம் என்றுதான் காத்திருந்தேன்
அப்படியும் தன் திட்டத்தில் ஏதாவது தடங்கல் வரலாம் அல்லது அவளை தன் கையால் கொல்ல மனம் இடம் கொடுக்காமல் இருந்தால் என்ன செய்வது அப்படியே அதை மீறி அவளை தானே கொன்றுவிட்டாலும் அதை எப்படி வெளிவட்டாரங்களில் சமாளிப்பது என்று யோசித்து அவன் வீட்டிலிருந்து கிளம்பிய அடுத்த 20 நிமிடங்களில் வெடிக்கும் வண்ணம் வெடிகுண்டை வீட்டை சுற்றி இரண்டு இடங்களில் வைத்திருந்தான் பழியை தன் தொழில் எதிரிகள் மேல் போட்டுவிடலாம் என்ற உயர்ந்த எண்ணத்தில்
இதோ கதை முடிவுக்கு வந்துவிட்டோம். விசாரிக்க துவங்கிய போலீசுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை காரணம் உடல்கள் அனைத்தும் துண்டு துண்டாக சிதறிவிட்டது எங்கும் ரத்த சிதறல்களால் கொலை, முக்கிய தடயம் சிக்கியது என்ற தொணியில் அங்கு விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று வழக்கு குண்டுவெடிப்பு, சந்தேக மரணங்கள் என்று நிலுவையில் வைக்கப்பட்டு இன்றுவரை விசாரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது
“மனைவி அமைவதெல்லாம்…. இறைவன் கொடுத்த வரம்” பாடலை டேப்ரிக்கார்டரில் கேட்டுக்கொண்டே டீயை உறிஞ்சி கொண்டிருந்த ராகவன் அந்த வழக்கு விசாரணை பற்றிய செய்தியை படித்துவிட்டு அதற்காக கொஞ்சம் வருத்தப்பட்டுக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான்
எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings