2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அகலமாயும், அடர்த்தியாயும் இருந்த மீசையை சவரக்கத்தியினால் சிறிதாக்கிக் கொண்டே சுப்பிரமணியிடத்திடம் கேட்டான் முருகேசன், ‘பாப்பா படிச்சு முடிச்சு வேலைக்கும் போயிடுச்சு. மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டீங்களா?’.
சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு இருந்த சுப்பிரமணியை, கிட்டத்தட்ட கிடுக்குப்பிடி போட்டாற்போல் தொடைமேல் காலை வைத்து அழுத்தி அமர்த்தி, முகச்சவரம் செய்து கொண்டிருந்தான் முருகேசன். குளிர்ந்த வேப்பமர நிழலும், காற்றில் கலந்து வந்த சோளப்பயிரின் வாசமும், முருகேசனின் பேச்சும், சுப்பிரமணிக்கு ஆனந்தமான கண்ணயர்வைக் கொடுத்திருந்தது.
முருகேசனின் கேள்வியால் திடுக்கிட்டு விழித்துப் பதில் சொன்னார் சுப்பிரமணி, ‘ரெண்டு வருசமா பாத்துக்கிட்டுத்தான் இருக்குது. என்னமோ கம்ப்யூட்டர்ல ஜாதகமெல்லாம் வருதாமே. அதிலதான் மாப்பிள்ளை பார்த்துக்கிட்டிருந்தாங்க. நமக்கு அதெல்லாம் எங்க புரியுது.. ஆனா இதுவரை எதுவும் சரியா அமையில…. பொண்ணுக்கும் வயசு கூடிக்கிட்டே போய் இருபத்தாறு ஆச்சு. பையனுக்கும் வர்ற வைகாசி வந்தா முப்பது முடிஞ்சு முப்பத்தொண்ணு ஆரம்பிச்சிடும். பொண்ணுக்கு மாப்பிள்ளை அமையாததால, பையனுக்கும் லேட்டாவுது. நம்ம பக்கத்துல பொண்ணுக்கு செய்யாம பையனுக்கு செய்ய மாட்டமில்ல….என்ன செய்யறது?’ என்றார் கவலையுடன்.
முடி திருத்தும் நேரம் முருகேசனுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய உகந்த நேரம் ஆகும். சவரம் செய்து கொள்பவர்களிடம் இருந்து அவனுக்குத் தெரியாத சில புதிய தகவல்களை வாங்கிக் கொள்வான். அதே போல் அவனிடம் உள்ள ஊர்த்தகவல்களை அவர்களிடமும் பகிர்ந்து கொள்வான்.
எவ்வளவு பெரிய ஆளானாலும், அந்த நேரம் முருகேசனோடு சினேக பாவத்தோடு இருந்தால் மாத்திரமே கத்தியினால் காயம் ஆகாது. பாதிச்சவரத்தில் எழுந்து போக முடியாதாகையால் அவனின் கேள்விகளுக்கு பதில் அளித்தே ஆக வேண்டிய கட்டாயம் சவரம் செய்து கொள்பவர்களுக்கு உண்டாகும்.
‘இதுக்குப் போய் ஏன் விசனப்படறீங்க? முதலிலேயே எங்கிட்ட சொல்லியிருந்தா இன்னேரம் கல்யாணமே முடிந்திருக்குமே? உங்களுக்கு நல்லாவே தெரியும், எங்கப்பன் காலத்திலிருந்தே இந்த கல்யாண தரகர் வேலையை நாங்க செஞ்சுக்கிட்டு இருக்கோம். நம்ம ஊரைச் சுற்றியுள்ள பதினைந்து கிராமங்களில் எனக்குத் தெரியாத குடும்பங்களே இல்லை. ஆத்தைத் தாண்டி அந்தப்பக்கம் இருக்கற கிராமங்களில் என்னோட சம்பந்தி, அதாங்க என் பையனோட மாமனாரு, இதே கல்யாண தரகர் வேலைதான் பாத்துக்கிட்டு இருக்கிறாரு. நாங்க ரெண்டு பேரும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறி எத்தனையோ கல்யாணங்களை நடத்தி வெச்சுருக்கோம். நீங்க என்னடானா கம்ப்யூட்டர் அது இதுன்னு போயி இத்தனை வருசத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்க’ என்று குறைபட்டுக் கொண்டான் முருகேசன்.
‘இப்பத்தான் என்ன? போகும்போது விஜயாவின் போட்டோவையும், ஜாதகத்தையும் கொடுத்து விடறேன். நல்ல மாப்பிள்ளை இருந்தா சொல்லு’ என்றார் சுப்பிரமணி.
‘அதெல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும்… கவலைப்படாதீங்க. என்கிட்ட நிறைய படிச்ச பசங்க ஜாதகம் இருக்கு. பொண்ணுங்களுக்குத் தான் இப்ப ரொம்ப டிமாண்ட். அது சரி…. நீங்க எந்த மாதிரி மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறீங்க?’ என்றான் முருகேசன்.
‘என்னைப் பொருந்த வரை பையனுக்கு ஐந்து ஏக்கர் விவசாய பூமியாவது இருக்க வேண்டும். ஏன்னா நமக்கும் அந்த அளவுக்கு பூமி இருக்குதுல்ல… சமமா இருந்தாத் தானே கெளரவமா இருக்கும்? நல்ல அந்தஸ்தான குடும்பமும், சொந்த பந்தங்களும் இருக்கணும். அப்பத்தானே கல்யாணத்திற்கு அப்புறம் போக்கு வரத்துக்கு ஒரு மதிப்பா இருக்கும்?’ என்றார் சுப்பிரமணி.
‘நல்லா சொன்னீங்க…. சம்பந்தின்னா ஒரு அந்தஸ்தோட நமக்கு சமமா இருக்கணுமில்ல?’ என்று அவருக்கு ஜால்ரா தட்டினான் முருகேசன். பெண் வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ, அவர்கள் பேசுவதை ஆமோதித்தால்தான் வண்டி அடுத்த கட்டத்துக்கு தடையில்லாமல் நகரும் என்பது தரகுத் தொழிலில் பல வருட அனுபவம் உள்ள அவனுக்கு நன்கு தெரியும்.
அடுத்த வாரத்தில் உள்ளூரில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் கிடாவிருந்து விசேசம். அந்த அழைப்பைச் சொல்வதற்காக சுப்பிரமணியின் வீட்டிற்குச் சென்றிருந்தான் முருகேசன். சுப்பிரமணியின் மனைவி சுசீலா கொடுத்த காப்பியைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே சுசீலா ஆர்வம் தாளாமல் கேட்டாள்,
‘விஜயாவுக்கு மாப்பிள்ளை பாக்கறேன்னு வீட்ல அவங்ககிட்ட சொன்னயாமே முருகேசா?’.
‘ஆமாங்க… இன்னும் ரெண்டு நாளில அம்மாவாசை வந்துடும். அது கழிஞ்சு வளர்பிறையில பாப்பா ஜாதகத்தை கையில எடுக்கலாம்னு இருக்க றனுங்க..’ என்றான்.
‘அப்பிடி பார்க்கும்போது, மாப்பிள்ளையோட வீடு நல்லா பெரிசா இருக்க வேண்டும் பாத்துக்க. அடேங்கப்பா விஜயா இவ்வளவு பெரிய வீட்டுக்கு மருமகளா? அப்படின்னு நம்ம ஊரு சனம் வாயில விரலை வைக்கணும்’ என்றாள் சுசீலா.
‘சரிங்க… அப்படியே பார்த்துவிடலாம்…’ என்றான் முருகேசன்.
‘ம்ம்.. அப்புறம் முக்கியமான ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். மாப்பிள்ளைக்கு, கூடப் பொறந்தவங்க யாரும் இருக்கக் கூடாது. முக்கியமா அக்கா, தங்கச்சி இருக்கவே கூடாது. நாத்தனார், கொழுந்தன் தொந்தரவெல்லாம் வராது பாரு..’ என்றாள் சுசீலா.
‘அது பிரச்சினையில்லைங்க… ஒரே பையன் இருக்கிற ஜாதகம் எங்கிட்ட நிறையா இருக்குதுங்க…’ என்றான் முருகேசன்.
‘அப்புறம் இன்னொரு விசயம்… ஒரு பத்து கிலோ மீட்டருக்குள் மாப்பிள்ளை வீடு இருந்தால் போக்கு வரத்துக்கும், விசாரிக்கவும் வசதியாக இருக்கும்’ என்றாள் சுசீலா.
‘அதுக்கென்னங்க பாத்துக்கலாம்’ என்றவுடன் நிறைவடைந்தாள்.
அப்போதே மாப்பிள்ளை கிடைத்ததைப் போல பூரிப்படைந்த சுசீலா, ‘இந்தா நம்ம தோட்டத்துத் தேங்காய்… வீட்டுக்குக் கொண்டு போய்க் கொடு’ என்று சிரித்துக் கொண்டே நான்கு தேங்காயை இலவசமாகக் கொடுத்தாள் முருகேசனுக்கு.
முருகேசன் டீக்கடையில் ஒரு வடை சாப்பிட்டுவிட்டு டீ குடித்துக்கொண்டிருக்கும்போது டீ கடைக்கு வந்தான் சுப்பிரமணியின் மகன் சீனிவாசன்.
‘டீ சாப்பிடு தம்பி…’ என்று உபசரித்தான் முருகேசன். அந்த நேரத்தில் கடையில் இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.
‘நீங்க பி.ஈ. மெக்கானிக்கல் படிச்சிருக்கறதா அப்பா சொன்னாருங்க தம்பி…’ என்று முருகேசன் ஆரம்பித்தவுடன் மடமடவென்று பேச ஆரம்பித்தான் சீனிவாசன்.
‘எங்கண்ணா…. நாலு பேப்பர் அரியர்ஸ்..கிளியர் பண்ணவே முடியல… நம்ம ஊரை விட்டு வெளியூர் போகவும் பிடிக்கல. அதனால, அப்பாவோட கூட விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கிறேன்.’ என்றான்.
‘அண்ணா… எனக்கும் வயசு முப்பதைத் தாண்டி விட்டது. விஜயாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது பெண் கொடுத்து பெண் கட்டும் இடமா பாத்தீங்கன்னா எனக்கும் பெண் கிடச்சுடும்’ என்றான் தொடர்ந்து.
‘பாக்கலாம் தம்பி… ஆனா என்ன வேலை பாக்கறீங்கன்னு பொண்ணு வீட்ல கேட்டா என்ன சொல்ல தம்பி? விவசாயம்னு சொல்லட்டுமா?’ என்றான் முருகேசன்.
‘இல்ல… என்னோட ஃபிரண்ட் ஒரு பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி வெச்சிருக்கான். அதில நான் பார்ட்னர்னு சொல்லுங்க… ஒண்ணும் பிரச்சினை இல்ல’ என்றான்.
‘சரிங்க தம்பி… அப்பிடியே செஞ்சர்லாம்’ என்று கூறிக் கிளம்பினான் முருகேசன்.
பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாகப் போய்விட்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான் முருகேசன். தூரத்தில் தோளில் பையுடன் போய்க்கொண்டிருந்த பெண் விஜயா போலவே இருந்தது. அருகில் சென்றவுடன் விஜயா என்பது உறுதியாயிற்று.
‘சென்னையிலிருந்து இப்போதான் வர்றியாம்மா?’ என்றான் முருகேசன்.
‘ஆமாங்கண்ணா… இரண்டு நாள் லீவு இருந்தது. சரி, ஊருக்கு வந்துட்டுப் போகலாம்ணு வந்தேன்’ என்றாள்.
அவள் முகத்தில் ஆரம்பித்திருந்த சுருக்கங்களும், பருக்களும், ஒட்டிக்கிடந்த கன்னங்களும் அவளின் வயதை பறைசாற்றுவதாக இருந்தன.
சைக்கிளை உருட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தான் முருகேசன், ‘நானே உங்கிட்டே பேசலாமென்று இருந்தேம்மா… அப்பா சொன்னாரா?’ என்றான்.
இந்தக் காலத்தில் பெண்களிடம் நேரடியாகப் பேசி அவர்களின் மனதில் உள்ளதைத் தெரிந்து கொள்வது நல்லது என்பதை அவனின் கடந்த கால அனுபவம் உணர்த்தியிருந்தது.
‘அப்பா போனில் சொன்னாருங்கண்ணா…. எனக்கு இரண்டே இரண்டு விருப்பம்தாங்க அண்ணா… ஒண்ணு பையன் சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்க வேண்டும். இரண்டாவது விருப்பம் என்னன்னா, பையன் நல்ல கலரா இருக்க வேண்டும். முதலில் சொன்னது கூட கொஞ்சம் அனுசரிச்சுக்கலாம். ஆனால் பையன் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்ங்க அண்ணா. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க இரண்டு பேரும் பைக்கில் போனா அவரை எல்லோரும் திரும்பிப் பார்க்க வேண்டும். என்னைப் பார்த்து மத்தவங்க பொறாமைப்பட வேண்டும். சின்ன வயசிலிருந்து என் மனசுக்குள் வளர்ந்து விட்ட ஆசை இது. இதை மாத்திரம் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்றாள் விஜயா.
நான்கு வருடங்கள் கழித்து முருகேசன் முகச்சவரம் செய்துகொண்டிருந்த போது சுப்பிரமணி கேட்டார், ‘ஏம்பா… அந்த பவானி மாப்பிள்ளை ஒண்ணு சொல்லிக்கிட்டிருந்தயே, அது என்ன ஆச்சு?’.
‘அது உங்க வீட்டம்மா வேண்டான்னுட்டாங்க… மாப்பிள்ள வீடு சின்னதா இருக்குதுங்களாம்’ என்றான்.
முருகேசன் மனதுக்குள் ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் எம்.ஜி.ஆர். ஆறு குணங்கள் கொண்ட பெண்ணைத் தேடும் காட்சிகள் மனதுக்குள் வந்து போயின. இந்த நான்கு வருடங்களில் அந்த வீட்டின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்காக பல நல்ல சம்பந்தங்களை விலக்கியது நிழலாடியது.
‘நல்லூர்ல ஒரு மாப்பிள்ள சொன்னயே என்னாச்சு?’ என்றார் சுப்பிரமணி.
‘எல்லாம் சரியா வந்துதுங்க.. மாப்பிள்ள கொஞ்சம் கலர் கம்மி. விஜயாம்மாவுக்கு புடிக்கலீங்க’ என்றான் முருகேசன்.
‘சரி.. வேற நல்ல இடம் இருந்தா சொல்லு’ என்றார் சுப்பிரமணி.
‘சரிங்க..’ என்றவன், ‘தாடி, மீசை எல்லாம் முழுசும் நரைச்சுப் போச்சுதுங்க..’ என்றான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings