எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
திருவான்மியூரில் இருந்து பெரம்பூர் செல்லும் 29C பேருந்தில் ஏறமுடியா கூட்டம். எப்படியோ அடித்துப் பிடித்து உள்ளே நுழைந்து விட்டான் கலைவாணன். பேருந்து நடத்துனர் கூட்டத்தைப் பிளந்துகொண்டு தன் கடமையைச் செய்துக்கொண்டு வருகிறார்.
“டிக்கெட் கேட்டு வாங்கிக்கோங்க …அடுத்த ஸ்டாப்ல செக்கிங் வருவாங்க…கூட்டத்துல ஏமாத்திடலாம் என்று நினைக்கதீங்க அப்புறம் பைன் கட்ட வேண்டி வரும்.”
வசனங்களோடு …கலைவாணன் நசுங்கிக்கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார்
“தம்பி டிக்கெட் வாங்கு…எங்க போகணும்?”
“மைலாப்பூர் ஒண்ணு அண்ணே” என்று சொல்லிக்கொண்டே பேண்ட் பின் பாக்கெட்டில் கைவிட்டவனுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி …பர்ஸ் காணோம்
“தம்பி டிக்கெட் பிடி…காச எடு”
“அண்ணே…பர்ஸ் காணோம்”
“எத்தன பேர் கிளம்பியிருக்கிங்க இந்த மாதிரி…? டிக்கெட் வாங்கு இல்ல அடுத்த ஸ்டாப்ல இறக்கிங்கோ”
“ஹலோ… கண்டக்டர் …இந்தத் தம்பிய பாத்தா ஏமாத்தற மாதிரியா தெரியுது? இந்தாங்க பைசா… ஒரு டிக்கெட் கொடுங்க” என்று முன்வந்தார் ஒரு திருநங்கை.
கண்ணீர் மல்க நன்றி சொன்னான் கலைவாணன்.
“தம்பி கூட்டத்துல போகும் போது கவனமா இருக்க வேண்டாமா…? என்ன ஒரு பதட்டமா இருக்க?”
“அக்கா …ஒரு குழந்தைக்கு அவசரமா O+ அறிய வகை இரத்தம் கொடுக்கணும் ..அந்த இரத்த வகை எனக்கு இருக்கு அதுக்குதான் போறேன்”
“எனக்கும் அதே இரத்த வகைதான் தம்பி”
“அப்படியா…?”
“ஆனா என்ன பிரோயஜனம் …நாங்க இரத்த தானம் செய்ய முடியாதே?”
“ஏன் அக்கா?”
“சட்டத்தில் இடமில்லை”யாம்.
“இந்தா… இந்தப் பணத்த வச்சிக்கோ…டிபன் சாப்பிடு” என்று சொல்லி… சுருட்டிய ரூபாய் நோட்டுக்களை அவனிடம் திணித்துவிட்டு நின்ற பேருந்திலிருந்து இறங்கி நில்லாமல் போய் விட்டாள் …கலைவாணன் சொன்ன நன்றியைக் காதில் வாங்காமலே.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings