எழுத்தாளர் சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அடியே வளரு சேதி கேட்டியாடி ?”
“அட! ஆமாக்கா நானும் உங்கிட்ட வெவரம் கேட்கணும்னு தான் இருந்தேன் நீயே வந்துட்ட. என்னக்கா இது? காலம் போன காலத்துல ஓரே கூத்தாவுல இருக்கு?”.
“காடு வா வாங்குது வீடு போ போங்குது. இந்த லட்சணத்துல இந்த மீசக்காரனுக்கு வந்த ஆசையப் பாத்தியாக்கும்!”.
“ஆசையாரவிட்டதுக்கா?”.
“அதச்சொல்லு…,”
“ஆமா அந்தப் பொம்பளைக்கும் புருஷன் தவறிட்டானாம்லா புள்ளைங்க சேந்து இந்தக் கல்யாணத்த நடத்துச்சாம்ல?”
“அப்படிதான் பேசிக்கிறாங்க அக்கா. பாக்க இப்பவே மூக்கும் முழியுமா அம்சமா இருக்கு. சின்ன வயசுல எப்படி இருந்திருக்குமோ?”.
“அது எப்படி இருந்தா நமக்கென்ன வா நாம பொழப்பப் பாக்கப் போவோம்”.
இவர்களின் அங்கலாய்ப்புக்குச் சொந்தக்காரனான மீசைக்காரனோ தன் வீட்டில் வளைய வளையச் சுற்றிவருகிறான் அவன் ஆசைக்காதலியை.
முத்துவுக்குப் பள்ளிக்கூடப் படிப்பே ஏறாதப்ப அவன் கல்லுரியில சேந்ததுக்குக் காரணம் என்னவோ லெட்சுமி தான். அவளைப் பாக்காம இருக்கமுடியாது அவனால. அவளுக்காவே ஒருநாளும் விடுப்பெடுக்காமப் பள்ளிகூடம் வந்துடுவான்.
பரிட்சையில பெயில் ஆனா அவகூடச் சேர்ந்த அடுத்த வகுப்புக்குப் போகமுடியாமப் போய்டுமேங்குற ஓரே காரணத்துக்காக ஓவ்வொரு முழுஆண்டுத் தேர்விலும் முப்பத்தி அஞ்சு மார்க்க வாங்கிடுவான் . தத்தி தத்தி ஒருவழியாப் பள்ளிக்கூடத்தக் கடந்தவன் இப்பக் கல்லூரில முழிச்சிக்கிட்டு நிக்கிறான். அதுக்கும் காரணம் அவ தான் பாவிப்பயமவ படிச்சுக்கிட்டே இருந்தா அவனும் என்ன பண்ணுவான் பாவம்.
வகுப்பறையில வாத்தியார் பாடம் எடுக்கும் போது இவன் மட்டும் லெட்சுமியப் பாத்துக்கிட்டு இருப்பான். இவன் இப்படிப் பாக்குறத ஒரு நாள் அவன் கூட்டாளி சேகர் கவனிக்கத் தவறல.
“ஏண் டா எப்பப் பாரு உன் கண்ணு இடது பக்கமே பாக்குதே ஏன்?”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே”
“டேய் நடிக்காத டா. நீ அந்தப் புள்ளையப் பாத்து வழியிறது பச்சையா தெரியுதுடா ரெங்கன்மவனே !”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல நீ கண்டதையும் உளறாத”
“நான் கண்டத தான் டா சொல்லுறேன். இப்ப நீயா உண்மையச் சொல்லப்போறியா? இல்ல நா அந்தப் புள்ளையக் கூட்டுக் கேக்கவா?.”
“டேய் டேய் அப்படியெல்லாம் பண்ணாதடா நானே சொல்லிடுறேன் .”
“அப்படி வா வழிக்கு”
“எனக்கு அந்தப் புள்ளையப் புடிக்கும் டா.”
“எனக்குப் புடிக்கும் னா அப்பனா அந்தப் புள்ளைக்கு?.”
“அதான் தெரியல டா!”.
“தெரியலயா?.., “
“ஆமா டா நான் ஸ்கூல் படிக்கிறப்பத்துல இருந்தே அந்தப் புள்ளனா எனக்கு இஷ்டம். ஆனா ஒரு தடவ கூட அந்தப் புள்ளக்கிட்ட பேசுனது கிடையாதுடா. இந்தக் காலேஜ்ல சேர்ந்தது கூட அந்தப் புள்ளைக்காகத் தான் டா”
“அடப்பாவி நான் ஏதோ இங்க வந்து புடிச்சுப்போய் பாக்குறேனு நினைச்சா. நீ வருஷ காலமா இதே பொழப்பாத் திரியிறபோலயே….,”
“டேய் நீ கேட்டேனு நான் சொல்லிட்டேன். ஆனா நீ யாருக்கிட்டயும் சொல்லிடாத டா”.
“நா சொல்லுறது இருக்கட்டும் டா மொதல்ல நீ அந்தப் புள்ளக்கிட்ட சொல்லுடா அப்பறம் காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தள்ளிட்டுப்போனமாதிரி ஆகிடப்போது உங்கதை”
“உன் வாய வைக்காத டா”
“ஆமா டா நல்லது சொன்னா எவன் கேக்குறிங்க?”.
இருவரும் பேசியபடியே தங்களின் வீட்டை நோக்கிப் பயணப்பட்டனர்
இரவு உணவுக்குப் பின் மாடிக்குச் சென்ற முத்து அவனோட பாட்டி காலத்து டிரங்கு பெட்டியத் திறந்தான். செவ்வகவடிவத்துல நல்ல கனமான பெட்டி அது, பெட்டியோட இரு பக்கமும் அமுக்கித் திறக்குற வடிவத்துல பட்டனும் நடுவுல ஒரு பூட்டும் இருக்கும். அந்தக் குட்டிப் பூட்டுக்கான சாவி எப்போதும் முத்து கிட்ட தான் இருக்கும் .
மேட்டுக்குடித் திருவிழாவில வாங்குன கண்ணாடி வளவி, வயக்காட்டுச் சோலியாப் போனப்ப எடுத்தமயில் தோகை, ரோஜாப்பூ, குழந்தைங்க படம்,இதயம் வடிவம் இப்படி அழகழகான படம் போட்ட வாழ்த்து அட்டைகள் ,எஸ்னு போட்ட கீச்செயினு இப்படி லெட்சுமிக்குக் குடுக்க நெனச்ச அத்தன பொருட்களையும் வாங்கிப் பத்திரமாச் சேத்து வச்சுருக்கான் அந்த டிரெங்கு பெட்டியில.
சாவியப் போட்டுப் பூட்டத் திறந்து உள்ள இருக்குற பொருட்கள ஒரு தடவயாச்சும் பாத்தா தான் அந்த நாளே அவனுக்கு முடியும். இத்தன வருஷத்துல முத்து தன் காதலச் சொல்ல முடியலங்குறத விட அவன் சொல்லுறதுக்காக எந்த பிரயத்தனமும் பண்ணலங்குறது தான் நிஜம்.
நம்ம மனசு இப்படித் தான் உறுதியாக் கிடைக்குமா கிடைக்காதான்னு தெரியாத விஷயாத சொல்லி இல்லன்னு ஆகிட்டா என்ன பண்ண. அதுக்கு சொல்லாமலேயே தனக்குள்ள வச்சிக்கிட்டு அதுபோக்குல ஒரு தனி உலகத்துல வாழ்ந்து சந்தோஷப்படும். அப்படித் தான் முத்துவும் லெட்சுமிக்கிட்டச் சொல்லி அவள் அவனை மறுத்துட்டா என்ன பண்ணுறதுனு சொல்லாமலே திரியுறான்.
பத்தாங்கிளாஸ் படிக்கிறப்ப ஒரு சமயம் பேனால மையடைக்காமப் போயிட்டான். அன்னைக்குனு பாத்து கணக்கு வாத்தியர் ராமச்சந்திரன் வகுப்புல பேனாவும் மக்கர் பண்ண முழிச்சுக்கிட்டு நின்னான். வாத்தியருக்கு தெரிஞ்சா பேனாகூட கொண்டு வராம என்னத்துக்குல நீ ஸ்கூலுக்கு வாரனு அடிவெளுத்துடுவாரு.
பயந்துக்கிட்டு இருந்தவன் கைல ஒரு பேனா வந்து விழுந்தது. தான் கேக்காமலேயே தனக்கு உதவி செஞ்சது யாருன்னு பாத்தான் காலண்டர் அட்டைப்படத்துல வர்ர லெட்சுமியாட்டம் சிரிச்ச படியே பாத்தா லெட்சுமி. தன் நிலைமை தெரிஞ்சு கேக்காம உதவி செஞ்சவ மேல ஒரு ஈர்ப்பு வந்தது.
காதல் அப்படித்தான. அது வர்ரதுக்கும் போறதுக்கும் அற்பமான காரணமே போதுமில்லையா?. முத்துவுக்கு இந்த காரணமே போதுமானதா இருந்தது அவமேல அவனுக்கு காதல் துளிர்விட .அதுக்கப்புறம் அடிக்கடி அவளப் பாப்பான். ஆனா அவ பாக்குற மாதிரித் தெரிஞ்சா எங்கயோ பாக்குறமாதிரி நடிப்பான்.
ஒரு நாள் கூட படிக்கிற புள்ளவச்சிருந்த மயில் தோகைய ஆசையா அவ வாங்கிப் பாக்குறதப் பாத்தவன் மறுநாளே அவன் அப்பாக்கூட வயக்காட்டுச் சோலிக்குப் போனான்.
“வானு கூப்பிட்டாக் கூடச் வராதப் பய இன்னைக்கு மொத ஆளா வார. என்னலே சமாச்சாரம்னு அவன் அப்பன் ரெங்கன் கேக்க ஏதேதோ சொல்லி மழுப்பிட்டு கூடவே போனவன் வயக்காட்டுச் சோலியப் பாக்காமப் பக்கத்துல இருந்த தென்னந்தோப்புக்குள்ள போயி மயில் தோகைக்காக அலைஞ்சான்.
தோப்புக்குள்ள கிடந்த காக்கா முள்ளு அவன் காலப் பதம் பாக்க ரத்தம் வடியிறத கூட பொருட்படுத்தாம தேடினான் மயில் தோகையை .அவன் தேடுதலுக்குப் பலனாக ஒரு மயில் தோகையும் கிடைச்சது அவனுக்கு . காலுல இரத்தம் வழிய வீடு வந்து சேர்ந்தான் .குத்துனது காக்கா முள்ளுங்குறதால ரெண்டு நாளு வலி தாங்கமாட்டாமக் காலக் கெந்திக் கெந்தித் தான் நடந்தான் .
இரத்தம் சிந்தி அந்த மயில் தோகைய எடுத்தும் ஒரு பயனும் இல்லை . அத லெட்சுமிக்கிட்ட குடுக்கத் தைரியம் இல்லாமப் பெட்டில பூட்டி வச்சிருக்கான்.
மயில் தோகை மட்டுமில்ல. அவ பொறந்தநாளு, பொங்கல், தீபாவளி இப்படி ஒவ்வொன்னுக்கும் அழகழகா கிரீட்டிங் கார்ட்ஸ் வாங்கி அதையும் குடுக்காம அந்தப் பெட்டிக்குள்ள வச்சி ரசிச்சுப்பான்.
அந்த காலத்துல இராசாக்களோட உசிரு ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஒரு கிளியோட உடம்புல இருக்குனு கதை சொல்லுறமாதிரி நம்ம முத்துவோட உயிரு அந்த இரும்பு பெட்டிக்குள்ள தான் இருக்கு. அத யாரையும் தொடவும் விடமாட்டான்.
நாளும் பொழுதம் இப்படியே போக இப்ப ரெண்டு பேரும் காலேஜ்ல வந்து நிக்கிறாங்க ஆனாலும் முத்துக்குத் தைரியம் மட்டும் வரல.
சேகரும் பல தடவ சொல்லிப் பாத்தான் காதலச் சொல்லிடுடானு. ஆனா முத்து சொல்லறதா இல்ல. அவனோட இந்தப் போராட்டம் முடிவு வந்தது. கடைசி வருசம் காலேஜ் படிக்கும் போது லெட்சுமிரெண்டு நாளா வரல என்ன ஏதுன்னு அவ கூட்டாளி பிள்ளைங்கிட்ட விசாரிக்கையில முத்து தலைல வந்து விழுந்தது இடி.
லெட்சுமிக்குக் கல்யாணம் ஆகப்போகுது முத்து . முந்தாநேத்து தான் பொண்ணு பாக்க வந்தாங்க. மாப்பிள்ளைக்குப் பொண்ண ரொம்பப் பிடிச்சிருக்குனு சொல்லவும் மொத முகூர்த்தத்துலயே கல்யாணம் வைக்கலாம்னு மாப்பிள்ளை வீட்டுல சொல்லிட்டாங்க . இனி அவ நேராப் பரிட்சை எழுத தான் வருவா . சரி நா வாரேன் என்ற படியே சரிகா கிளம்பிவிட முத்து தான் சிலையாகிப் போனான் செய்வதறியாது.
“டேய் விடுடா பொண்ணு தான பாத்துட்டுப் போயிருக்காங்க வாடா நாம போயி அவ கிட்ட பேசலாம் .”
“என்னத்தடா பேசச் சொல்லுற “.
“என்னடா இப்படி கேக்குற? “.
வேற எப்படி டா கேக்க?. எல்லாம் கைய மீறிப் போச்சுடா. அவ கிட்ட என் காதலச் சொல்லி அவ புடிக்கலனு சொல்லிருந்தாக் கூடப் பரவால டா. ஆனா இப்படிக் கடைசிவர என் காதல அவகிட்டச் சொல்லமுடியாமப் போயிடுச்சே அதான் தாங்க முடியல.”
நண்பனுக்கு என்ன ஆருதல் சொல்லனு தெரியாமச் சேகரும் பரிதாபமாக நின்னான். இன்னையோட லெட்சுமி காலேஜ்கு வந்து ஒரு மாசம் ஆகப்போகுது. அவளப் பாக்காமா முத்து நடைப்பிணமாகத் திரிந்தான் .
ஒருவழியாகப் பரிட்சையும் வந்தது. லெட்சுமி எப்படியும் வருவா அவளைப் பாத்துடலாம்னு ஆர்வமாகக் கிளம்பிவந்தான் முத்து . அவன் நெனச்ச மாதிரி அவளும் வந்தா.
பல நாள் தவமிருந்து அவளப் பாத்தவனுக்கு ஒரு நிமிசம் இதயம் நின்னு துடிச்சது. பெல் அடிக்கவும் எல்லாரும் தேர்வு அறைக்குள் சென்றனர். லெட்சுமிக்கும் முத்துவுக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டு இருந்தது .
முதல் வரிசைல லெட்சுமி உக்காந்திருக்க அவளுக்கு இடது பக்கமா பக்கவாட்டுல முத்துக்கான இடம் இருந்தது. பரீட்சை எழுதாம அவளையே பாத்துட்டு இருந்தான் . தேர்வு முடியவும் எல்லாரும் பேப்பர குடுத்துட்டுப் போக அவனும் பேப்பரக் குடுத்துட்டு லெட்சுமியத் தேடிபோனான்.
காலேஜ் வாசல்ல அவளைப் பாத்தவன் எதையும் யோசிக்காம நேரா அவகிட்டப் போனான். பல வருஷமா வராத தைரியத்தோட. காலமும் சூழலும் தான் ஒருத்தன வீரனாகவும் கோழையாகவும் மாத்துங்க. மத்தப்படி நாமெல்லாம் வெறும் மனுசப் பயலுகதான முத்து மட்டும் இதுக்கு விதிவிலக்கில்லயே. இப்ப அவன வீரனாக்கி அவ முன்னாடி நிப்பாட்டி இருக்கு காலம்.
“என்னையாக் கட்டிக்கிறியா ?”.
ஹாங் னு லெட்சுமி முழிக்க
“உன்னையத் தான் கேக்குறேன் என்னையக் கட்டிக்கிறியா ?”
“நீங்க.. அது …, ” அப்படினு லெட்சுமி இழுக்க
செதருதேங்காய் உடைச்ச மாதிரி பேச ஆரம்பித்தான் முத்து
“இங்க பாரு எனக்கு நீ நானா உசிரு. இன்னைக்கு நேத்து இல்ல நம்ம ஸ்கூல் படிக்கைல இருந்தே நீ னா எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்படிச் சொல்லனு தெரியால. எங்க நான் சொல்லி நீ பிடிக்கலனு சொல்லிடுவியோனு தான் இத்தன வருஷமா உங்கிட்ட எதையும் சொல்லாம இருந்தேன். ஆனா இப்ப எல்லாம் என் கைய மீறிப் போனமாதிரி இருக்கு உனக்கு கல்யாணம்னு தெரிஞ்ச நாள்ல இருந்து இப்ப உன்ன பாக்குற வரைக்கும் நான் எப்படித் தவிச்சேனு உனக்கு சொன்னா கூட புரியாது”
“இப்பிடி திடுதிடுப்புனு வந்து கட்டிக்கிரியானு கேட்டா என்ன சொல்ல முடியும்?. எனக்கு வீட்டுல மாப்பிளை பாத்துட்டாங்க அடுத்த மாசம் கல்யாணம் இந்தப் பரீட்சைக்கு மட்டும் தான் நான் வருவேன் . தேவ இல்லாம மனசுல ஆசைய வளத்துக்காதீங்க வழிய விடுங்க நான் போகணும்…,”
“நீ என்ன கட்டிக்கக் கூட வேண்டாம். உங்க வீட்டுல சொல்லுறவனயே கட்டிக்கோ . ஆனா என்னப் பிடிச்சிருக்கா இல்லையானு மட்டும் சொல்லிட்டு போ புள்ள..,”
“இந்தக் கேள்விக்கு நா என்ன பதில் சொன்னாலும் அது வீதில கொட்டுன அரிசியாட்டம் அள்ளவும் முடியாது ஆக்கவும் முடியாது . அதனால நீங்க கண்டதையும் நினைச்சு மனச குழப்பிக்காம போய் வேற வேலையப் பாருங்க” என்ற படியே அவனை கடந்து சென்றாள்.
அன்னைக்கு இராத்திரி ரெண்டு பேருக்குமே சிவராத்திரியா போச்சு . விடியவிடியத் தூங்காம யோசிச்சிட்டு இருந்தாங்க.
பாவி மவ புடிச்சிருக்கு புடிக்கல எதையாவது சொல்லித் தொலைச்சிருக்கக் கூடாதானு அங்க ஏக்கத்துல அவன் தவிக்க. இங்கயோ இப்ப வந்து சொன்னத கொஞ்ச நாளைக்கு முன்னால சொல்லிருக்க கூடாதானு அவளும் மருகுனா.
முத்து பாக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாளுலயே இவளும் அவனப் பாக்க ஆரம்பிச்சா . ஆனா அவனுக்கு நம்மள புடிக்குமா இல்லையானு குழப்பத்திலயே இவளும் அவன் கிட்ட எதையும் வெளிக்காட்டிக்கல.
அந்தக் கடவுள் கூட என்ன ஆசை காட்டி மோசம் பண்ணிட்டானே . எதுக்காக நான் ஏங்கித் தவிச்சேனோ அந்த ஒரு வார்த்த இன்னைக்கு அவன் வாயில இருந்து வந்தும் அத அனுபவிக்க முடியாத பாவியாகிட்டேனே அவனப் பிடிக்கும்னு அவங்கிட்ட சொல்லமுடியலயே.
மனசுக்குள்ளயே அவ. அழுக இதையெல்லாம் மறந்துடு லெட்சுமி அப்பா உன்னையக் கேட்டு தான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்காரு அவரு கேக்கும் போது உங்க விருப்பம்னு சொல்லிட்டு. இப்ப இப்படி அழுது என்ன ஆகப்போகுது. எல்லாம் கைய மீறிப் போச்சு பேசாம அப்பா பாத்த மாப்பிளையக் கட்டிக்கிட்டு வாழுற வழிய பாரு என அவள் மனசாட்சி அவளிடம் வாதிட்டது.
அப்பா பேச்ச மீறாதவ லெட்சுமி. அவரும் அவ விருப்பத்துக்கு மாறாக எதையும் பண்ணுவது கிடையாது. அவகிட்டக் கேட்டுதான் இந்தக் கல்யாணத்த முடிவு பண்ணினார்.
அவரு கேக்கும் போதும் இவ மனசுல முத்துமேல அபிப்பிராயம் இருந்தது என்னமோ நெசந்தான். ஆனா அவனோட விருப்பம் என்னனு தெரியாம அவளால எந்தமுடிவும் எடுக்க முடியாம அவ அப்பா கேட்டதுக்கு சரினு சொல்லிட்டா. தாமதமாக வழங்கப்படும் நீதி மட்டும் இல்ல தாமதமாக கிடைக்கும் பதில்களும் அநீதிக்குச் சமம்.
நாட்களும் நகரக் கல்யாண நாளும் வந்தது ஊரையே கூட்டி வெகு விமர்சையாகத் தன் மவ லெட்சுமி கல்யாணத்த நடத்துனாரு .
ரவீந்தரன் வெட்ஸ் லெட்சுமி என்று மண்டப வாசலில் வைத்திருந்த பலகையை பார்த்தபடியே நின்ற முத்துவின் கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
தன் கையறு நிலையில் செய்வதறியாது துடிக்கும் மனதின் வலியைவிட இவ்வுலகில் பெரிய வலி இருப்பதாக அப்போதைக்கு முத்துவுக்குத் தோன்றவில்லை . லெட்சுமி அறியா வண்ணம் திருமணத்தில் கலந்து கொண்டவன் மாங்கல்யம் அவள் கழுத்தில் ஏறிய மறுநொடி அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
பொண்ணுங்களோட வாழ்க்கையில தான் குடும்ப மானம், கௌரவம், மரியாதை இப்படி எல்லாத்தையும் இந்தச் சமூகம் பூட்டி வைக்கும் .அதக் கடைசிவர காப்பத்தனும் அப்படினு நிர்பந்திக்கும். இதில் ஆண்களுக்கு விதிவிலக்கு திருமணத்துக்குப் பின் தன் மனைவியிடம் ஒரு ஆண் தன் பழைய காதலைப் பற்றிப் சிலாகித்து போசலாம்,
இரண்டாவது மனைவியிடம் முதல் மனைவியை வழிபட நிர்பந்திக்கலாம். இவையெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட இந்த சமுதாயத்தில் லெட்சுமியால் என்ன மாற்றம் செய்துவிட முடியும். தன் மனதை மாற்றிக்கொண்டு ரவீந்திரன் மனைவியாக வாழ்வதைத் தவிர.
எல்லாம் சீராகப் போய்க்கொண்டிருந்தது ரவீந்தரன் லெட்சுமி தம்பதிக்கு அழகிய மகனும், மகளுமாக அடுத்தடுத்து இருகுழந்தைகளுடன் நிறைவான வாழ்க்கை செல்ல .முத்து மட்டும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தான் அவனின் அம்மா இருந்தவரை எவ்வளவு முயற்சி பண்ணியும் அவன் மனதை மாற்ற முடியவில்லை இறுதியில் அவளின் மூச்சும் நின்றது.
பொற்றோரின் இழப்புக்கு பின் தனியாளாய் இருந்த முத்துவுக்கு அவனின் டீக்கடையே எல்லாமுமாக இருந்தது . சொந்தமாக அவனே வைத்த டீக்கடை அது.
பஸ்டாப்புக்குப் பக்கத்திலேயே ஒரு டீக்கடை போட்டு நடத்தி வந்தான் முத்து. பஸ்டாப்புல வச்சதுக்கு ஒரு காரணமும் இருக்கு லெட்சுமியப் பக்கத்துல இருக்குற பாட்டாக்குளத்துல தான் கட்டிக்குடுத்துருந்தாங்க அந்த ஊருல இருந்து எந்த ஊருக்குப் போகணும்னாலும் முத்து ஊரான சாலைபுரத்தத் தாண்டி தான் போகனும்.
நாற்பதைத் தாண்டுன வயது. நல்ல ஐய்யனாரு மாதிரி வாட்ட சாட்டமான உடம்பு. வெட்டருவாளாட்டம் வளைஞ்ச மீசையும் என ஆளே தோரணையாத் தான் இருப்பான் முத்து. அவன் கடைக்கு ஆசை ஆசையா எம்.எஸ் டீக்கடைனு பேரு வச்சான் ஆனா இந்த ஊருசனம் வச்ச பேரசொல்லி என்னைக்கு கூப்பிட்டுருக்கு கன்னங்கரேல்னு பாக்க வெட்டருவா மாதிரி இருக்குற அவன் மீசைய அடையாளமாக்கி மீசக்காரன் கடைனு ஒரு புதுப்பெயர வச்சது. அந்த பேரே காலப்போக்குல அவனுக்கும் சொந்தமாகிட அவன மீசைக்கரான்னு கூப்பிட ஆரம்பிச்சது ஊரு சனம்.
கல்யாணம் காட்சினு எதுவும் பண்ணாமத் தனிகட்டையா இருந்தாலும் ஊருக்குள்ள அவனுக்குனு தனி மரியாதை உண்டு. யாரையும் எடுத்து எரிஞ்சு பேசாதவன் பலபேர் பொண்ணு குடுக்கப் போட்டாபோட்டி போட்டும் முடியாதுனு தீர்க்கமா சொல்லிட்டான்.
அண்ணே நாலு டீ ஒண்ணு சீனி தூக்கலா என்றபடியே வந்து அமர்ந்தனர் சிலபேர்.
முத்துவும் வழக்கம்போல கடைல உள்ள கஸ்டமர்கிட்ட பேசிக்கிட்டே டீ போட்டுக் கொண்டிருக்க டமார் என்ற பேரிரைச்சலுடன் ஒரு மஞ்சள் நிறச் சரக்கு லாரியில் டூவீலர் மோதியது
பஸ்டாப்பில் இருந்த எல்லோரும் அடித்துப் பிடித்து ஓடிப் போய்ப் பார்க்க. ஆட்கள் வருவதை கண்டு லாரியின் ஓட்டுனர் எகிரிக் குதித்து ஓடிவிட்டான். கூட்டத்தை விலக்கியபடி உள்ளே வந்த முத்து அடிபட்டுக் கிடந்தவனைக் கண்டு அரண்டுபோனான்.
பின் சுதாரித்துக்கொண்டு அடிபட்டவனுக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்தான் . லாரி வேகமாக மோதியதாலும் ஹெல்மெட் போடாமல் இருந்ததாலும் வண்டியில் மோதிய நொடியே தூக்கி வீசப்பட்ட ரவீந்தரன் அந்த இடத்திலேயே உயிர் இழந்திருந்தான்.
தான் நேசித்த லெட்சுமிக்கு ஒரு துன்பம் வரும் போது அவளைவிடப் பலமடங்கு வேதனைக்குள்ளானான் முத்து. அவனின் அருகில் இருந்தவர்களின் உதவியால் ஆம்புலன்ஸ் வரவைகப்பட்டது. அம்புலன்ஸில் முத்துவும் பயணித்தான்
அவனின் வேண்டுதல் எல்லாம் எப்படியாவது ரவீந்தரனைக் காப்பாத்திவிட வேண்டும் என்பது மட்டுமாகதான் இருந்தது. தனக்குத் தெரிந்த எல்லாத் தெய்வங்களையும் வேண்டினான்.
ஆம்புலன்ஸ் பெரியாஸ்பத்திரி வாயிலில் வந்து நின்றது. அவசரமாக வந்த இரண்டு வார்டுபாய்கள் ரவீந்தரனை ஸ்டெக்சரில் படுக்கவைத்து உள்ளே தூக்கிச் சென்றனர் . மருத்துவர் பரிசோதித்து அடிபட்ட இடத்திலேயே உயிர் போனதாகக் கூறவும் முத்துவுக்கு உயிர் போனது எப்படி லெட்சுமி இதைத் தாங்குவாள் துடிதுடித்துப் போனான் அவன்.
தகவல் சொல்லப்பட்டு ரவீந்தரன் குடும்பம் அங்கு வந்து சேர்ந்தது கண்ணீர் மல்கக் கதறி அழக்கூட தெம்பில்லாமல் நடைப்பிணமாக வந்தாள் லெட்சுமி. பாவாடை தாவணியில் அழுதப்படிய வாரிய பின்னலை அழங்கரிக்கும் குண்டு மல்லிகையும் நெற்றியில் வட்ட வடிவத்தில் மெரூன் நிற பொட்டும் அதற்கு மேலாக திருநீறும் பூசி பளிச்சென்ற புன்னகையுடன் கல்லூரியில் வலம் வந்த அதே லெட்சுமி தான். இப்போது கலைந்த கேசமும் , பொலிவிழந்த முகமும், துவண்ட நடையுமாக வருகிறாள் .
பார்க்கப் பார்க்க முத்துவின் மனம் ரணமாகியது.
“ஐய்யோ போயிட்டீங்களே. இப்படி எங்கள விட்டு போறதுக்கா அவசர அவசரமாக் கிளம்புனீங்க?”
லெட்சுமி கதறி அழுவதைக் காண முடியாது அங்கிருந்து சென்றான் தொலைவில் இருந்த புங்கை மரத்தடியில் அமர்ந்தவனின் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை .
ரவீந்தரனின் உடல் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு ஈமக்காரியங்கள் செய்யப்பட்டது அனைத்தும் நடந்து முடியும் வரை முத்துவும் அங்கிருந்தான். தான் நேசித்தவளின் துயரைத் தன் துயரமாகக் கருதினான்
ரவீந்தரனின் மறைவுக்குப் பின் ரவீந்தரனின் தாயார் பார்வதியின் பாதுகாப்பில் வாழ்ந்தாள். ரவீந்தரனின் குடும்பம் ஓரளவுக்கு வசதிவாய்ப்போடு இருந்ததால் அவனின் மரணம் மட்டுமே மீளாத இழப்பாக இருந்தது .
கல்லூரி படித்து வந்த லெட்சுமியின் மகன் கணேசனுக்கும் படித்து முடித்தவுடன் நல்ல வேலை சென்னையில் கிடைக்க பணி நிமித்தமாகச் சென்றான் அவனின் தங்கை சுஜாவுக்கு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துவைத்துத் தன் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்றினாள்.
சிலவருடங்களிலேயே பார்வதியும் காலமாக லெட்சுமி தனிமரமாக நின்றாள்
வழக்கமாகத் தான் சென்று வரும் கோவிலுக்கு லெட்சுமி செல்கையில் எதிரில் வழிமறித்தபடி நின்றான் முத்து. இதைச் சற்றும் எதிர்பாராத லெட்சுமி கொஞ்சம் பயந்துதான் போனாள். யாரும் பார்த்து விடுவார்களோ என்ற அவளின் பயத்தைக் கண்கள் காட்டிட. யார் பாத்தா எனக்கு என்னனு நின்றான் முத்து
“எப்படி இருக்க புள்ள….,”
“நல்லாருக்கேன்…,”
“பதிலுக்கு என்ன கேக்க மாட்டியா…,”
“நீங்க எப்படி இருக்கிங்க…,?”
“இன்னமும் உன் நெனப்புல தான் இருக்கேன்…,”
இதைச் சற்றும் எதிர்பாரதவள் ஆச்சரியமும் பதட்டமும் அப்பட்டமாக முகத்தில் தெரிய விழித்தாள்…
“நீங்க எ…ன்னன. “என்று வார்த்தைகள் தந்தி அடிக்கக் கேட்டவளிடம்
“சற்றும் சலமில்லாது அழுத்தமாகக் கேட்டான் . “என்னக் கட்டிக்கிறியா புள்ள…,?”
முப்பது வருடத்திற்கு முன்பு கேட்ட அதே கேள்வி உரைந்து போனாள் அவள்.
“கேட்டதுக்குப் பதில் சொல்லு புள்ள என்னக் கட்டிக்கிறியா……,?”
“நீங்க சுயநினைவோட தான் பேசுறீங்களா…?”.
“ஆமா….”கனீறென்று வந்தது பதில்
“என்ன ஆமா.., எனக்குக் கல்யாணம் ஆகி என்னோட குழந்தைகளுக்கு இப்பக் கல்யாணம் ஆகி நான் பேரன் பேத்தி பாத்தாச்சு இப்ப வந்து கட்டிக்கிறியானு கேக்கிங்க தப்பில்லையா”.
“எது தப்பு…, ?”
“உங்களுக்கு என்ன மூள கலங்கிட்டா….?”
“நான் சொல்ல வேண்டிய காலத்துல சொல்லாம விட்டேன் பாரு அது தப்பு . அப்ப இருந்த பயம் என்ன தடுத்துருச்சு. ஆனா இப்ப எனக்கு எந்த பயமும் இல்லை நான் தெளிவாத் தான் பேசுறேன் . இப்ப நீ உன் மனசுல இருக்குற உண்மையான பதிலைச் சொல்லு… “
“என்ன பதில் நீங்க எத்தன தடவ கேட்டாலும் என் பதில் இது தான். இத்தன வயசுக்கு அப்புறம் யாராவது இப்படி ஒரு கூறுகெட்ட வேலையப் பாப்பாங்களா? . இனி இந்த மாதிரி பேசிக்கிட்டு என் முன்னாடி வந்து நிக்காதீங்க”.
“சரி நா இனி உன் முன்னாடி வரல. ஆனா நீ நான் கேட்ட கேள்விக்கு உன் மனசுல இருக்குற பதிலச் சொல்லு அடுத்தவங்களப் பத்தி யோசிக்காத உன்னையும் என்னையும் பத்தி மட்டும் யோசி”.
“இதுல யோசிக்க என்ன இருக்கு எல்லாம் முடிஞ்சிட்டு காலம் போன காலத்துல வந்து காதல் கீதல்னு சொல்லிட்டு இருக்கிங்க”.
“என் மனசுல உள்ளத நான் சொன்னேன் உன் மனசுல இருக்குறத நீ சொல்லு”.
“உங்களோட தொல்லையாப் போச்சு என் மனசுல எதுவும் இல்லை”.
“பொய் சொல்லாத. உன் வாயி வேணாப் பொய் சொல்லலாம் ஆனா உன் கண்ணு சொல்லாது எங்க என்னப் பாத்துச் சொல்லு உன் மனசுல நான் இல்லவே இல்லனு”.
கலங்கிய கண்களுடன் நின்றவளால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை
“நீ பயப்படுற புள்ள. உண்மைய ஒத்துக்கிட்டா எங்க இந்த ஊரு நம்மள அசிங்கமா நினைக்குமோனு பயப்படுற புள்ள. உம் மனசுல நான் இருக்கேன் புள்ள. நாம கடைசியாப் பாத்துப் பேசுனப்பவே உன் கண்ணுல காதல பாத்தேன் என்னால அப்ப எதுவும் பண்ண முடியல .இத்தன வருஷத்துல அத நினைச்சு நான் வருத்தப்படாத நாளே கிடையாது. நீ இன்னொருத்தனுக்குப் பொண்டாட்டி ஆகிட்டனு மூளைக்கு தெரிஞ்சாலும் இந்த மனசு அத ஏத்துக்க முடியாமத் தவிச்ச தவிப்ப உனக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பேன்.
முதல் தடவ என் காதலச் சொன்னப்ப உன் அப்பாக்காக யோசிச்ச. இந்த முறை உன் பிள்ளைங்களுக்காக யோசிக்க .நீ எப்ப தான் உனக்காக யோசிப்ப சொல்லு. இந்த முறையாவது உனக்காக யோசி. உன் பசங்ககிட்ட கூட நான் பேசுறேன். முறையா கல்யாணம் பண்ணி நாமளும் வாழலாம்”.
“நீங்க சொல்லுறது உங்களுக்கே அபத்தமா இல்ல. ரெண்டாம் கல்யாணம் அதுவும் ஐம்பது வயசுல பாக்குறவங்க காரித் துப்பிருவாங்க “.
“ரெண்டாங் கல்யாணம் பண்ணுனா என்ன தப்பு . கல்யாணத்துக்கும் வயசுக்கும் என்ன சம்பந்தம் சொல்லு.எத்தனையோ ஆம்பளைங்க துணைய இழந்த பின்னாடி இரண்டாம் கல்யாணம் பண்ணல “.
“அதுவும் இதுவும் ஒண்ணா?… “
“ஒண்ணுதான் . எல்லாத்துக்கும் நம்ம மனசு தான் காரணம்”.
“நீங்க என்ன சொன்னாலும் சரி நா இந்த அசிங்கத்தப் பண்ண ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்.”
“எது புள்ள அசிங்கம்? எது அசிங்கம். உம் புருஷன் இருக்கைல வந்து உன்ன கட்டிக்க கேட்டேனா , இல்ல ரெண்டு பேரும் திருட்டுத் தனமா வாழ்வோம்னு சொன்னேனா. எத அசிங்கம்னு சொல்லுற. கல்யாணங்கிறது வெறும் தாம்பத்திய சுகத்துக்கு நடக்குறது இல்ல. அது ஒண்ணுக்கு ஒண்ணு துணையா வாழ அமைச்ச அமைப்பு அவ்வளவு தான். என்ன கட்டிக்கிறியானு நான் கேட்டது கூட சொகத்துக்கு இல்ல. இருக்குற மிச்ச காலத்துலயாது உம் மொகத்த பாத்துக்கிட்டே வாழனும்னு ஆசைல தான் கேட்டேன்.”
முத்து பேசப் பேச அழுகை மட்டுமே வந்தது லெட்சுமிக்கு
“அழாத புள்ள, நீ அழுதா என்னால தாங்க முடியாது. உன்ன அசிங்கப்படுத்தவோ கஷ்டப்படுத்தவோ நான் நினைக்கல இந்த உடம்பு மண்ணுக்குள்ள மக்குறதுக்குள்ள உன்னோட வாழணும்னு ஆசைல தான் கேக்குறேன். நீ உன் விருப்பத்த மட்டும் சொல்லு இந்த முறை உன்னச் சேர்ந்தவங்ககிட்ட நான் பேசுறேன். தூக்கு தண்டன கைதிகிட்டக் கூட கடைசி ஆசை கேப்பாங்க. நீயும் இத அப்படி நெனச்சுக்கோ புள்ள .நல்லா யோசி உனக்கு என்ன கட்டிக்க சம்மதம்னா நாளைக்கு இதே கோவில்ல நாம சந்திக்கலாம்.
எழுத்தாளர் சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings