2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இதுவரை
அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆட்ட அழகி மயிலுவின் ரெக்கார்டு டான்ஸ் கொண்டு வந்திருந்தார்கள். இரண்டு ஆட்டக்காரிகள் தயாராக இருக்க ஒருத்தியை மட்டும் தலைவரின் வீட்டுக்கு பிரத்தியேகமாக டான்ஸ் ஆட கூட்டிப் போயிருந்தார்கள். அந்த ஒருத்தி வந்தால்தான் ஆட்டத்தை ஆரம்பிப்போம் என்று மற்ற இவர்களும் சொல்லிவிட்டார்கள்.
இனி
நன்றாக ஏற்றியிருந்த போதை இறங்கிப் போய் உட்கார்ந்திருந்தார் தர்மலிங்கம். புல்லட் வரும் சத்தம் கேட்டு கதவு இடுக்கு வழியாக கண்களை வைத்துப் பார்த்தார். மளிகைக் கடை மாணிக்கமும் கவுன்சிலர் முத்துராசுவும் வந்து இறங்கி கொண்டிருந்தனர்.
கைகளைப் பிசைந்தபடி ‘இந்த மாயாண்டியை வேற இன்னும் காணோமே‘ என்று புலம்பியபடி போய் கதவைத் திறந்தார் தர்மலிங்கம். தோளில் கிடந்த துண்டால் முகத்தை ஒரு தடவை துடைத்தும் கொண்டார்.
‘தலைவரே… அங்கே ஒரே கலாட்டா தலைவரே… அந்த அம்மா வந்தாதான் ஆட்டத்தையே ஆரம்பிப்போம்னு சொல்லிட்டு பின்னாடியே உட்கார்ந்திருக்காளுங்க அவளுங்க ரெண்டு பெரும்…. கொஞ்சம் சீக்கிரம் அந்தம்மாவை அனுப்பி வைங்கய்யா”
‘என்ன சொல்றே முத்துராசு… அப்போவே நம்ம பண்ணையாளு அந்தம்மாவை நம்ம கார்லே கூட்டிக்கிட்டு போய்ட்டானே… அவனுக்காகத்தான் நான் காத்திட்டிருக்கேன். அவன் திரும்பி வந்து விழா மேடைக்கு என்னைக் கூட்டிட்டு போறேன்னு சொன்னானே… அவன் இன்னுமா அங்கே வந்து சேரலை…’
‘தலைவரே.., யாரும் வரலைங்க தலைவரே…. எனக்கு கைகாலெல்லாம் உதறுதுங்க தலைவரே…’
‘எனக்கு மட்டும் என்னவாம்….’
‘தலைவரே….’
‘இல்ல… வந்து… அங்கே கலாட்டான்றீங்க… அதான் எனக்கும் பதறுதுனு சொன்னேன்… கொஞ்சம் ஓவரா வேற குடிச்சிட்டேன்… நாக்கெல்லாம் குழறுது… என்னால வந்து பேசலாம் வேற முடியாது. நான் படுத்துக்கப் போறேன். நீதான் ஒரு குட்டித் தலைவர்தானே… போயி என் சார்பா நாலு வார்த்தை பேசி டான்ஸை ஆரம்பிச்சு வச்சிடு… எனக்கு ஒரு அவசர ஜோலின்னு மேடைல சொல்லிப்புடு… அந்தம்மா இந்நேரம் வந்திருக்கும்… அவங்க வந்தே சேரலைனாலும் நீங்க லேட் பண்ண வேணாம்… போங்க… போங்க… போயி ஆரம்பிங்க ஆட்டத்தை…’ நாக்குழறினார் தர்மலிங்கம்.
அவர்கள் செய்வதறியாது கைகளைப் பிசைந்தபடி திரும்பி நடந்தார்கள். அதற்குள் மாணிக்கம் யாருக்கோ போன் போட்டு பேசிவிட்டு, திரும்பி சொன்னான், ‘தலைவரே… அந்தம்மா இன்னும் அங்கே வந்து சேரலையாம் தலைவரே…’ அந்த நேரம் பார்த்து வியர்க்க விறுவிறுக்க அங்கே வந்து சேர்ந்தான் பண்ணையாள்.
‘தோ… மாயாண்டியே வந்துட்டானே…’ என்றவர், அவனை இழுத்து தன்னருகில் நிற்கவைத்துக் கொண்டு, ‘ஏன்டா… பாப்பாவை நீதானே கார்லே கூட்டிக்கிட்டு போனே… விட்டுட்டு வந்துட்டேதானே…’ என்றார் கண்ஜாடை காட்டியபடி. மாயாண்டியும் அவரது ஜாடையைப் புரிந்து கொண்டான்.
‘ஆமாங்கய்யா… கொண்டுபோய் இறக்கி விட்டுட்டு இப்போத்தான்யா வர்றேன்… ’ என்றான்.
தூரத்தில் நின்றபடியே, ‘தலைவரே…. ஆனா அங்கே இன்னும் அந்தம்மா வரலைன்றான்களே… என்ன செய்ய?’ என்றார் முத்துராசு.
‘இந்நேரம் வந்திருப்பா போப்பா… இல்லே வேற யாரையாவது கூட பார்க்கப் போயிருப்பா… இதெல்லாம் ஒரு மேட்டரா… இருக்கறவள்களை வச்சி டான்ஸை ஆரம்பி… போ… போ… லேட் பண்ணாத… ’
வேறெதுவும் பேசாமல் புல்லட்டை விரட்டிக் கொண்டு போய்விட்டனர் அவர்கள் இருவரும்.
xxxxxx
மாணிக்கமும் முத்துராசுவும் போய்ச் சேருவதற்குள், அங்கே பெருங்கலாட்டா அரங்கேறியிருந்தது. பந்தல் கொஞ்சம் ஒடிந்து, திரைச்சீலைகள் கிழிந்து, டியூப் செட்டுகள் உடைந்து, ஒயர்கள் அறுந்து.
பதறிப்போன முத்துராசிடம் ஒரு வாலிபக் கூட்டம் சாராயத்தைப் போட்டுக்கொண்டு ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லையென்று கலாட்டா செய்துவிட்டார்களென்று விவரம் சொன்னார்கள்.
டான்ஸ் ஆடும் ஒரு பெண்ணுக்கு நெற்றியில் கல் பட்டு காயமாகி, கட்டுப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். முத்துராசுவைப் பார்த்ததும் கோபம் தலைக்கேற கத்தினாள் அவள்.
‘ரொம்ப நல்ல வரவேற்பு குடுத்தீங்க சார், உங்க ஊர்லே… இப்படி ஒரு கேவலமான நிலைமை எங்களுக்கு எந்த ஊர்லேயும் வந்ததே இல்லை. உடனே எங்களை பத்திரமா என்க ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணுங்க… மின்மினியக்கா வேற இன்னும் வரவேக் காணோம். எங்களுக்கு பயமாயிருக்கு சார்… ’
‘அம்மா திடீர்னு இப்படி பேசினா எப்படிம்மா… ரெண்டு பாட்டுக்காவது ஆடாம எப்படிமா கூட்டம் களையும்… ஏற்கனவே லேட்டாயிடுச்சுன்னு ஒரு கும்பல் இப்பத்தான் கலாட்டா பண்ணிட்டு போயிருக்கு. திரும்பவும் கலாட்டா வர்றதுக்குள்ளே சும்மா பேருக்காவது ரெண்டு பாட்டுக்கு ஆடிட்டு போய்டுங்கம்மா… அதுக்கப்புறம் உள்ளூர் பசங்க மேடையேறி ஆடிக்கு வாங்க… விடிஞ்சதுமே உங்களைக் கூட்டிவந்த கார்லையே டவுனுக்கு அனுப்பி வைச்சுடறோம். கொஞ்சம் கோவிச்சுக்காம, ஆடப் போங்கம்மா… ’
‘முடியாது சார்…‘ என்றவள் அடுத்தவளைப் பார்த்து, ‘அடியேய், எனக்குத்தான் அடிபட்டிருக்கு, நீ வேனா ஒரே ஒரு பாட்டுக்கு போய் ஆடிட்டு வா. மீதி பாட்டுக்கு யாரையாவது வெச்சு இவங்க ஆடிக்கட்டும். சார்… நீங்க மின்மினியக்காவை கூட்டிட்டு வர்றேனு தானே போனீங்க… ஏன் கூட்டிட்டு வரலை…’
‘அம்மா, அவங்க கார்லே புறப்பட்டு வந்துட்டாங்களாம், ஆனா எங்கே போனாங்கன்னு தெரியலை… வேற தெரிஞ்சவங்க யாரையாவது பார்க்கப் போயிருக்காங்களோ என்னவோ… ’
‘சார், எங்களை கூட்டிட்டு வந்த கார் எங்களை இறக்கிவிட்டுட்டு அந்தக்காவை மட்டும் கூட்டிட்டு போச்சு. எங்கே போச்சு கார்… அவங்களுக்கு என்ன ஆச்சு… ஏன் இன்னும் வரலை… எங்களுக்கு விவரம் தெரிஞ்சாகனும். இல்லை உடனே நூறுக்கு போன் போட்டுடுவேன். நானே ஒரு போலீஸ்காரரோட பொண்ணுதான், தெரிஞ்சுக்கங்க… ’
செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டு வெளியே வந்த முத்துராசு, மாணிக்கத்திடம் சொல்லி தலைவருக்கு ஒரு போன் போடச் சொன்னான்.
அதற்குள் மைக்கில் யாரோ, ‘இப்போது ரெக்கார்டு டான்ஸ் ஆரம்பமாகப் போகிறது. ஒரு பாட்டு முடிந்ததும் நமது ஊர் வாலிப சிங்கங்கள் மேடையேறி ஆடலாம்… ’ என்று சொல்லி முடிக்க, திரை விலகியது.
போனில் விபரம் கேட்ட தர்மலிங்கம் பதறிப் போனார். ‘ஏம்பா, நீயே ஒரு அரசியல்வாதி. இப்படிப்பட்ட சூழ்நிலயைக் கூட சமாளிக்கத் தெரியாம தலைவரே தலைவரேனு என்னையே கூப்பிட்டிக்கிட்டு இருக்கே… நாலு பேரை விட்டுப் போயி தேடச் சொல்லுய்யா அந்த பொண்ணை. எங்கேயாவது தண்ணியைப் போட்டுக்கிட்டு மட்டையாகிப் படுத்துக் கிடக்குதோ என்னவோ, யார் கண்டது… போ போ தேடற வழியைப் பாரு…’ என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விட்டார் அவர்.
நூறுக்கு போன் போட்டு விடுவேன் என்ற அந்த பெண் ஏதோ தப்பு நடக்கிறது என்று பயந்து போன் போட்டே விட்டாள்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!





GIPHY App Key not set. Please check settings