in

ரெக்கார்டு டான்ஸ் (குறுநாவல் – பகுதி 1) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…                                               

ரேடியோ செட் பூட்டிய ஒற்றைச்சாளர வண்டி ஒன்று அந்த ஊருக்குள் நுழைந்தது. இரண்டு பக்கங்களிலும் பேனர் தட்டிகள்.  தட்டிகளில் ஆட்ட அழகி மயிலு ஒய்யாரமாய் போஸ் கொடுத்துக் கொண்டிருக்க, கீழே தலைவர் தர்மலிங்கம் கும்பிட்டபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஆள் மாட்டை அதட்டி அதட்டி சாட்டையால் லேசாய் அடித்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, இன்னொரு ஆள் ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டே துண்டு நோட்டீஸ்களை வீசிக் கொண்டிருந்தான்.  பெரியவர்களும் சிறியவர்களும் ஆவலுடன் ஓடிப்போய் நோட்டீசை வாங்கிக் கொண்டு கூடவே ஓதவும் செய்தனர்.

‘வருகிற எட்டாம் தேதி புதன்கிழமை ஆரம்பிக்க இருக்கும் நமது ஊரு அம்மன் திருவிழாவை முன்னிட்டு, மயிலம் ஆட்ட அழகி மயிலுவின் ரெக்கார்டு டான்ஸ் நடக்க இருக்கிறது. எல்லோரும் வந்திருந்து விழாவினை சிறப்பித்துத் தரும்படியும் ஆட்டத்தை கண்டுகளித்திடவும்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இப்படிக்கு விழா கமிட்டி, தலைவர் தர்மலிங்கம்‘ என்று அறிவித்துக் கொண்டே போனான் அந்த ஆள்.

எல்லோரும் பரபரப்புடன் கூடி, கடந்த முறை நடந்த விழாவின் சுவாரஷ்யங்களைப் பற்றியும், அப்போது நடந்த மயிலுவின் ஆட்டம் பற்றியும் மாறி மாறி பேசி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

xxxxxx

ன்னல் வழியாக கார் வருகிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தார் தர்மலிங்கம். ரெயிலில் வந்து இறங்கும் ஆட்டக்காரிகளை அழைத்துக்கொண்டு வர பக்கத்து டவுனிற்குப் தலைவரின் காரை எடுத்துக்கொண்டு போய் இருந்தான் மாயாண்டி. மாயாண்டி தர்மலிங்கத்தின் பண்ணையாள், வலது கை, டிரைவர்… இன்னும் எல்லாம்.

திடீரென்று அங்கே வந்து நின்றது கார். இரண்டு அழகிகள் இறங்கினார்கள். ஜன்னலுக்குப் பின்னால் தலைவர் தெரிய மாயாண்டி பின்பக்கம் கைகாட்டினான். ஆக மயிலு பின்பக்கம் உட்கார்ந்திருக்கிறாள் என்று புரிந்து போனது தர்மலிங்கத்திற்கு.

குஷியின் உச்சத்தில் மேஜை மேல் இருந்த சாராய பாட்டிலில் பாதியைக் காலி செய்து விட்டு கொத்துக்கறியிலும் கொஞ்சத்தை அள்ளி வாயில் போட்டுக் கொண்டார் தர்மலிங்கம்.

காரிலிருந்து மயிலுக்குப் பதிலாக புதியதாய் ஒரு அழகி இறங்கியதைப் பார்த்துவிட்ட தர்மலிங்கம் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். மயிலுக்கு நெளிவு சுழிவுகள் தெரியும். இவள் புதியதாய் தெரிகிறாளே, இவள் எப்படியோ என்று நினைத்து கைகளை பிசைந்தபடி உட்கார்ந்திருந்தார்.

அவரது நிலையைக் கண்டு மாயாண்டி, ‘ஐயா, விசாரிச்சேன், சின்னம்மாவுக்கு காய்ச்சலாம், அதான் வரலையாம். இவங்ககிட்டே சொல்லி விட்டிருக்காங்க… அதான் நேரா கூட்டி வந்துட்டேன்‘ என்று தன் எஜமானருக்கு செய்தி சொன்னான் பண்ணையாள் மாயாண்டி.

ரெக்கார்டு டான்ஸ் நாளில் மயிலுதான் எப்போதும் வந்து தலைவரின் பண்ணை வீட்டில் குத்தாட்டம் போட்டுவிட்டு போவாள். அதற்கு அவளுக்கு தனி ரேட்டும் உண்டு. ஆட்டத்திற்கு முன்பாக சாராய பட்டிலிலும்  பங்குபோட்டுக் கொள்வாள்.

ஆனால் இப்போது வந்திருப்பவளும் அழகாகத்தான் தெரிந்தாள். பவுடர் வாசனையும் செண்ட்டின் வாசனையும் கொஞ்சம் தூக்கலாகவே தெரிந்தது அவருக்கு.

‘வணக்கம்‘ செய்தவளை மயக்கத்துடன் சைகையில் உள்ளே வரச் சொன்னார் தர்மலிங்கம்.  மாயாண்டி ஓரம் கட்டிக் கொண்டான்.

XXXXXX

ரேடியோ ஸ்பீக்கர்கள் அலறின. ‘இன்னும் சற்று நேரத்தில் மயிலம் மயிலுவின் க்ரூப், கலக்கப் போகும் அதிரடி ரெகார்டு டான்ஸ் ஆரம்பமாகப் போகிறது… எல்லோரும் கலையாமல் அப்படியே அமர்ந்திருங்கள்… நன்றி… நன்றி… நன்றி…’

ஒரு வாலிபன் அலுத்துக் கொண்டான், ‘ச்சே… என்னடா இவனுங்க… இன்னும் சற்று நேரத்தில்னு ஒரு மணிநேரமா சொல்லிக்கிட்டே இருக்கானுங்க… எப்போடா மயிலு வந்து குத்தாட்டம் போடுவா… ’

‘அடேய், மொத்தம் மூணு அழகிகளாம்டா… மயிலு டான்ஸை மட்டும்தான் பார்ப்பியா… நான் கடைசி வரை இருந்……து எல்லாரோட டான்ஸையும் பார்த்துட்டுத்தான்டா போவேன்… முத்து ராசண்ணே சொல்லி இருக்காரு, கடைசியில நாமளும் மேடையேறி ஆடலாமாம்… ’

‘உனக்கு விஷயம் தெரியாதா… இந்தத் தடவை மயிலு வரலையாம்.  வேற யாரோ மூணு பேரு வர்றாங்களாம்… ரெண்டு பேர் உள்ளே போய்ட்டாங்க… இன்னும் ஒருத்தி மட்டும் வரணுமாம்… கார்த்தி சொன்னான்… ‘

‘டேய், எவ வந்தா என்னடா, நமக்குத் தேவை அவளுங்க போடற குத்தாட்டம். மேடை அதிரனும்.  நாமலும் ஆடனும்… அவ்ளோதான்….’

திரைக்குப் பின்பக்கம் மேக்கப் போட்டு வியர்த்துப் போய் உட்கார்ந்திருந்த இரண்டு டான்ஸ் அழகிகளும் கவலையுடன் உட்கார்ந்திருந்தனர். டான்ஸ் ஏற்பாடு செய்த கவுன்சிலர் முத்துராசு அவர்களை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.

‘ஸார்… தொல்லை பண்ணாதீங்க… மின்மினிதான் எங்க லீடர். அவங்க வந்த பிறகுதான் நாங்க மேடை ஏறுவோம்… நீங்க அவங்களை போயி அழைச்சுக்கிட்டு வாங்க… அவங்களை எங்கே கூட்டிட்டுப் போனாரு அந்த கார் டிரைவரு… ’

‘அம்மா நான் சொல்றதை கேளுங்கம்மா… ரசிகர்லாம் ரொம்ப கொதிச்சுப் போயி இருக்காங்கம்மா… நாம எவ்வளவு நேரம்தான் அவங்களை காத்திருக்க வைக்க முடியும். நம்ம ஸ்பான்ஸர் கம்பெனிகள் வேற நெருக்க ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க ஆரம்பிங்கம்மா… பின்னால அவங்க வந்து சேர்ந்துக்குவாங்க… அவங்க யாரையோ பார்க்கப் போயிருக்காங்கம்மா… ’

‘இல்ல சார்…நீங்க எங்களை விட்டுடுங்க… ப்ளீஸ்… ’

‘அம்மா… சும்மா அதையே சொல்லாதீங்கம்மா… நாங்க அட்வான்ஸ் குடுத்துதான்  உங்களை புக் பண்ணியிருக்கோம், அதையும் தெரிஞ்சுக்கங்க…..’

‘சார்… ஆளப் பார்த்து பேசுங்க… நாங்க உங்ககிட்டே கைநீட்டி பணம் வாங்கலை. யார்கிட்டே பணம் கொடுத்தீங்களோ அவங்ககிட்டே போயி பேசிக்கங்க. நீங்க இங்கே நின்னுக்கிட்டு எங்களோட மல்லுக்கட்டறதை விட்டுட்டு போயி மின்மினி அக்காவைக் கூட்டிக்கிட்டு வர்ற வழியைப் பாருங்க…’

ஸ்பீக்கர் அலறியது. ‘இன்னும் சற்று நேரத்தில் மயிலம் மயிலுவின் க்ரூப் கலக்கப் போகும் அதிரடி ரெகார்டு டான்ஸ் ஆரம்பமாகப் போகிறது… எல்லோரும்….’

முத்துராசு புலம்பினார், ‘இவனுங்க வேற…நம்ம நிலைமை புரியாம’ என்று முகத்தைச் சுழித்துக் கொண்டவர், ‘ச்ச்சை… இவளுங்க என்னடானா பெட்ரோமாக்ஸே வேனுங்கறாளுங்க‘ என்று புலம்பிவிட்டு கிசுகிசுக்கும் குரலில், ‘தலைவர் வீட்டுக்கு போனவளை இன்னும் காணோமே… டேய்… மாணிக்கம் புல்லட்டை எடுடா… போய் ஒரு நடை போயிட்டு வந்துடலாம்… ’ என்று  அவனை விரட்டினார்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காலத்தின் கொடுமை (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    கண்டுபிடித்த கடிதம் (சிறுகதை) – ரேவதி பாலாஜி