இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
திருந்திவிட்ட அதிசயமாக அதிகாலை நாலு மணிக்கு விழித்தாள் விமலி. விழித்தவுடன் முழித்தாள். தான் அணிந்திருந்த உடையைப் பார்த்து அதிர்ந்தாள். என்ன நைட்டியா? நான் வெல்வெட் கவுன் அல்லவா போட்டுக் கொண்டிருந்தேன். குழம்பியபடி எழுந்தவள் கமலி பாட்டியின் வெற்றிலை வாசம் வீடு முழுக்க நிரம்பியிருக்க, அறிந்து தெ(நெ)ளிந்தாள்.
அ..ட. ச்சை… அமெரிக்காவில் அழகிப் போட்டியில் நடந்து சென்றது கனவா? என்று நினைத்து பெருசாக மூச்சு விட்டாள். ஆனாலும் அந்தக் கனவை ஒரு நாள் நினைவாக்கியே தீருவது என்று சபதம் கொண்டாள்.
“விமலி குட்டி… என்ன அதுக்குள்ளே அதிசயமா எழுந்துட்ட” என்று கேட்டபடியே வந்தாள் கமலி பாட்டி.
“நா எந்திரிக்கறது இருக்கட்டும். நீ எதுக்கு இப்ப இவ்வளவு சீக்கிரமா குளிச்சிட்டு எங்க போக போற என்ன தனியா விட்டுட்டடு ? என்றாள்.
“கரும்பு, காய்கறி எல்லாம் வாங்க வேண்டாமா?இன்னிக்கு பொங்கல் ஃபெஸ்டிவல்” என்றாள் பாட்டி சிரித்துக் கொண்டே.
“சீக்கிரமா நீயும் குளிச்சிட்டு வா புதுசா பாவாடை சட்டை தாவணி எல்லாம் வச்சிருக்கேன் கட்டிக்கோ. பொங்கல் பண்ணனும் வா” என்றாள் தன் ஒன்றையடி கருப்பு ,வெள்ளைக் கூந்தலின் ஈரம் துடைத்தபடி.
“அட.. ஆமா, இன்னைக்கு லீவு இல்ல? சீக்கிரம் எழுந்துட்டேனே” என்ற பெரிய தவறு செய்தது போல தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் படுக்க சென்றாள் விமலி.
“நல்ல நாள் அதுவுமா என் வாயால வசவு வாங்காத. திரும்ப படுத்தியோ தலையில் தண்ணிய கொட்டிப்புடுவேன் ஆமா” என்று தனது கரகரத்த குரலை உச்சஸ்தாயில் உருட்டினாள் பாட்டி.
“சரி சரி கத்தாதே, என் காது ரெண்டும் செவிடாயிரும் போல இருக்கு” என்றாள் இரண்டு காதுகளையும் கைகளால் பொத்திக்கொண்டு.
“இன்னைக்கு என்ன ஸ்பெஷல் சமையல் பாட்டி” என்று பாட்டியைக் கொஞ்சி னாள் சாந்தமாக்கும் முயற்சியில்.
“வழக்கமா செய்யறது தான் சக்கரை பொங்கல், வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வடை, அப்பளம் அப்புறம் கரும்பு மஞ்சள் கொத்து எல்லாம் வச்சு சூரிய பகவானுக்கு பூஜை”என்றாள் கமலி பாட்டி முகம் மலர.
“ஏன் வழக்கமா பண்றது பண்ணனும் நாம வித்தியாசமா கொண்டாடலாமே என்றாள் விமலி.
“ஆரம்பிச்சிட்டியா உன் அட்டகாசத்த? படவா” என்று செல்லமாக அடிக்க ஓங்கிய கையை முதுகில் தட்டிக்கொடுத்து “என்ஜாய்” என்றாள் பாட்டி.
“மொதல்ல நீ கடைக்கு போய் வாங்க வேண்டியது எல்லாம் வாங்கிட்டு வா நான் அதுக்குள்ள ரெடியாயிடுறேன்” என்றாள் விமலி துள்ளிக் குதித்து படி.
“காய்கறி வாங்குற காசுல ஒரு யானையை விலைக்கு வாங்கிடலாம் போல இருக்கு” என்று அங்கலாய்ப்படியே வந்த பாட்டி திடுக்கிட்டாள் “யாரு? யார் நீங்க?.. உங்களுக்கு உங்களுக்கு யார் வேணும்?” கேட்டாள் வீட்டுக்குள் இருக்கும் ஒரு ஆண்மகனை பார்த்து .
“பாட்டி ஓவரா சீன் போடாத என்ன தெரியலையாக்கும்? நான்தான் விமலி” என்றாள் வரைந்த மீசையை சுருட்டிக்கொண்டு.
“உனக்கு பேரன் இல்லாத குறையை தீர்ப்பதற்காக நான் இன்னைக்கு புது அவதாரம் எடுத்து இருக்கேன்” என்றாள் கைகளில் அபய முத்திரையை காண்பித்து.
“அவதாரம்னு சொன்னியே அது ரொம்ப சரி” என்றாள் பாட்டி நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு.
தழைய தழைய பட்டு வேட்டியும் பட்டுச்சட்டையும் போட்டுக் கொண்டு தலையில் அங்க வஸ்திரத்தை முண்டாசாக கட்டிக்கொண்டு இருக்கும் பேத்தியை கண்டு கண்களில் மகிழ்ச்சியில் நீர் கோர்க்க அவள் முகத்தை கைகளால் தடவி முத்தமிட்டாள் பாட்டி.
பாட்டி வாங்கி வந்த கரும்பையும் காய்கறிகளையும் தரையில் பரப்பினாள் விமலி.
“ஓகே, பாட்டி இன்னைக்கு சமையல் மெனுவை ஒன்னு ஒன்னா சொல்லு என்றாள்.
“மொதல்ல சர்க்..கரை…ப் பொ..ங்க…ல்”.என்று ராகம் போட்டு இழுத்தாள் பாட்டி சோஃபாவில் அமர்ந்தபடி.
“இரு, இரு… அது எப்படி சர்க்கரைப் பொங்கலாகும் சர்க்கரை..னா..அது வெள்ளை சர்க்கரை தானே? நீ வெல்லத்தை தானே போடுவ அப்போ வெல்லப் பொங்கல் தானே சொல்லணும்?” கேட்டாள் விமலி புருவங்களை சுருக்கியபடி
“அதானே?” என்று பாட்டியும் முகவாய் கட்டையில் கை வைத்து யோசித்தாள்.
“ஆமா, என்னையே கேளு” என்று பாட்டியின் கன்னத்தை செல்லமாக இடித்து விட்டு
“நீ என்ன செய்யற, வெல்லம் கரும்புலேருந்து தானே தயார் பண்றாங்க அதனால நீ கரும்புப் பொங்கல் பண்ணிடு” என்றாள் விமலி.
“அப்போ அது சர்க்கரைப் பொங்கல் கிடையாது… சக்கைப் பொங்கல். கடிச்சு கடிச்சு துப்ப வேண்டியதுதான் என்று கைக்கொட்டி சிரித்தாள் பாட்டி.
அடுத்த மெனு யோசித்துக் கொண்டிருந்தாள் விமலி காய்கறிகளை வச்சு எப்ப பாரு “சாம்பார் தான் செய்யணுமா? என்று மெதுவாகச் சொன்னவள் “பாட்டி எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு” என்று கத்தினாள்.
“ஏண்டி கத்தற எனக்கு எழுபது வயசு தான். ஒத்துக்கிறேன் ஆனாலும் என் காது ஒன்னும் மந்தமாகலை” என்றாள் கடுகடுப்புடன்.
“கரும்புப் பொங்கல் சாப்பிட முடியாது. அதனால கரும்பு சாம்பாரா செஞ்சிடு. அதை முருங்கக்காய் மாதிரி கடிச்சு கடிச்சு துப்பிடலாம். எப்படி என் ஐடியா? என்று சொடுக்கினாள் விமலி.
“சகிக்கல” என்றாள் பாட்டி.
“காய்கறி எல்லாம் சேர்த்து போட்டு பொங்கல் பண்ணிடு என்றாள் விமலி.
“அது நான் வழக்கமா செய்வேனே வெஜிடபிள் காரப் பொங்கல்” என்றாள் பாட்டி
“நான் சொல்றது காரப் பொங்கல் இல்ல இனிப்பு பொங்கல். “இன்றைய ஸ்பெஷல் காய்கறி இனிப்பு பொங்கலும் கரும்பு சாம்பாரும்… வாவ் …டைட்டில் அருமையா இருக்கே…நான் youtubeல இன்னைக்கே இத போடுறேன்.. சரி சரி சமையல ஆரம்பி என்று அவசரப்படுத்தினாள் விமலி
.“ஓ இன்னைக்கு சமையலும் வேற ஒரு அவதாரமா?” என்றாள் பாட்டி பயந்தபடி.
“சரி, சரி பயப்படாதே நான் உனக்கு சமையலுக்கு ஹெல்ப் பண்றேன்” என்றாள் விமலி பாட்டியின் தோளை தட்டியபடி.
” இன்னிக்கு சமையலே நீ தான் பண்ணனும். நான் வீடியோ எடுக்கிறேன்” என்று எஸ்கேப் ஆனாள் பாட்டி.
“சரி, குட்டி…இன்னைக்கு உனக்கு உளுந்த வடை பண்ணவா? இல்ல பருப்பு வடை பண்ணவா?என்று கேட்டாள் பாட்டி.
“ஓ…அது ஒரு மெனு இருக்கா? மறந்துட்டேனே.. சரி, மிச்சம் என்ன இருக்கு? மஞ்சள் கொத்தும், வாழை இலையும் இருக்கா? வெரி குட். அது இரண்டையும் போட்டு அரைச்சு ஒரு வடையை செஞ்சிடலாம்”. என்றாள் கைத்தட்டி ஆர்பரித்து.
“மெனு எல்லாம் ஓகே தான் ஆனா நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. எனக்கு நான் தனியா செஞ்சுக்கறேன் உனக்கு என்ன வேணுமோ நீ செஞ்சு சாப்பிட்டு அனுபவி” என்று சிரித்தாள் பாட்டி.
“நான் மட்டும் எப்படி சாப்பிடறது? எனக்கு கம்பெனிக்கு ஆள் வேணுமே நாளைக்கு மாட்டுப் பொங்கல் இல்லையா சரி நானும், மாடும் சேர்ந்து நாளைக்கு சாப்பிட்டுக்கிறோம் என்று உற்சாகமாக சமையலறைக்குள் நுழைந்தாள் விமலி.
“இப்போது என் பேத்தி செய்யும் கரும்பு சாம்பாரும் காய்கறி பொங்கலும்… வாங்க… எல்லாரும் பார்க்கலாம் லைவ்வா” என்று குரல் கொடுத்தபடி வீடியோ எடுக்கத் தொடங்கினாள் பாட்டி.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
(லூட்டி தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings