in ,

கங்கை (சிறுகதை) – ராஜஸ்ரீ முரளி

காசிக்கு செல்லும் ரயிலில் அமர்ந்திருந்த ராகவன் நீண்ட பெருமூச்சு விட்டபடி கண்களை மூடினான்.ரயில் முன்னே செல்ல அவன் மனம் பின்னோக்கி சென்றது.

அம்மா சாராதாவின் அமைதி தவழும் முகம் அவன் மனதில் சப்பணம் போட்டு அமர்ந்து கொண்டது. எப்போதும் பளிச்சென்ற தோட்டத்தில் எளிமையான சுங்குடி புடவையை மடிசார் அணிந்தபடி, மஞ்சள் பூசிய முகத்தில், நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் அணிந்தபடி இருப்பாள். 

அவனுக்கு அப்போது பத்து வயதிருக்கும் தங்கை மாலதிக்கு ஆறு வயதிருக்கும். அப்பா தனியார் கம்பெனியில் வேலை ஒரளவு வந்த சம்பளம். ஆனால் பொறுப்பில்லாத அப்பா சீட்டு ஆடி தோற்று விட்டு, மீதமுள்ள பணத்தைகொண்டு வந்து அம்மாவிடம் தருவார்.

வருமானம் போதவில்லை என்றாலும் அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு அப்பளம், வடாம்,  வத்தல் செய்து குடும்பத்தை நடத்த, அப்பா ஊரை சுற்றி கடன் வைத்து விட்டு ஒரு நாள் சொல்லாமல், காணாமல் போனார்.

அழுது, ஓய்ந்து, அப்பாவை தேடி ஓய்ந்த அம்மா, தனது இரண்டு குழந்தைகளும் பசியால் வாடுவதை காண இயலாது தனக்கு தெரிந்த சமையலை தொழிலை சற்றே விரிவாக செய்ய ஆரம்பித்து, ஓயாமல் உழைத்து இரண்டு பேரையும் நன்கு படிக்க வைத்து,  நல்லமுறையில் திருமணம் செய்து வைத்து ,தனது கடமையை மிகவும் அழகாக செய்து முடித்தாள்.அப்பா என்றாவது ஒரு நாள் நிச்சயமாக திரும்பி வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தாள்.

அவளுக்கு ஒரேயொரு ஆசை தான் “ராகவா , ஒரு முறை என்னை காசிக்கு அழசுன்டு போறியா, கங்கையில் ஸ்நானம் செய்து விஸ்வநாதர், விசாலாக்ஷியை தரிசனம் பண்ணா போறும் வேறு ஒன்னும் வேண்டாம்.”என்று கேட்பாள்.

ராகவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்ட அவன் மனைவி பத்மா “ஏன்னா என்னாச்சு அழாதீங்கோ நம்ம கையில ஒன்னும் இல்ல எல்லாம் பகவான் செயல்.அழாதீங்கோ,அம்மாவை காசிக்கு கூட்டின்டு போக எவ்வளவு ஆசை பட்டீங்கோ, அது  முடியாமல் அம்மா படுத்த படுக்கையா ஆயிட்டா,இப்போ, அம்மாவோட “அஸ்தி”யை  கரைக்க காசிக்கு போறோம்.இதுல நம்ம தப்பு ஒன்னும் இல்ல எல்லாம் பகவான் இஷ்டம் தான் “.

காசிக்கு வந்து இறங்கிய ஆயிற்று, ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த தங்குமிடம் , விஸ்வநாதர் கோவிலுக்கு மிகவும் அருகில்,ராகவனுக்கு ஏனோ மனம் சஞ்சலத்துடனேயே இருந்தது.சொல்ல தெரியாத அவஸ்தை அவனை வாட்டியது.அம்மாவை நினைத்து அழுகை பொங்கி வரவே அடக்க முடியாமல் தவித்தான்.

தங்கை மாலதியின் நினைவு வந்தது அவளிடம் பேசினால் மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று தனது மொபைலில் அவளை தொடர்பு கொண்டான்.

“அண்ணா நீயும், மன்னியும் காசிக்கு போய் சேர்ந்தாச்சா, இந்த சமயம் பார்த்து எங்க  மாமியாருக்கு உடம்பு முடியாம போச்சு .என்னால் உங்க கூட வரமுடியவில்லையே தவிர என் மனசெல்லாம் அங்கே தான் இருக்கு”,

இடமெல்லாம் சௌகர்யமா இருக்கா, அண்ணா,மன்னி என்ன பண்றா”, விடாமல் பேசிய தங்கையின் குரலைக் கேட்டு ராகவனுக்கு இன்னும் துக்கம் தொண்டையை அடைத்தது.

“மாலதி என்னமோ தெரியலை இங்கே வந்தது முதல் மனசு சங்கடமாவே இருக்கு மா,  அம்மாவோட நினைவு அதிகமா இருக்கு, பாவம் அம்மா அவ எதையும் தனக்குன்னு  கேட்டதே இல்லை.ராகவா, ஒரு முறை காசிக்கு அழைச்சுன்டு போடா,இதை மட்டும் தான் கேட்பா,. அவ விருப்பப்படியே எல்லா ஏற்பாடுகளையும் செய்து நாளைக்கு கிளம்பனும்  என்று இருக்கும் போது தீடீரென அவளுக்கு உடம்புக்கு வந்தது.காசிக்கு அழைச்சுன்டு போக முடியாமல் போச்சு,இப்போ அவ “அஸ்தியா”எங் கூட வந்துருக்காளே, என்று சொல்லி  விட்டு கதறி அழுதான். கொஞ்ச நேரம் அண்ணா அழட்டும் மனதில் உள்ள பாரம் குறையும் என்று மாலதி அமைதியாக இருந்தாள்.

“அண்ணா போறும் அண்ணா,அழாதே இதெல்லாம் நடக்குன்னு நீ எதிர் பார்த்தியா,  இல்லை அண்ணா மன்னி அடிக்கடி சொல்லுவாளே எல்லாம் பகவான் இஷ்டப்படி தான் நடக்கும் என்று அது தான் அம்மா விஷயத்தில் நடந்துருக்கு.

அண்ணா மனசை தேத்திக்கோ, அம்மாவை நல்லபடியாக கங்கையில் சேர்த்துடு, அவ எங்கேயும் போகலை நம்ம கூட தான் இருப்பா”.தங்கை மாலதியின் பேச்சு ராகவனுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது.

எல்லாவற்றையும் அமைதியை உட்கார்ந்து கேட்டு கொண்டிருந்த பத்மா, “நான் சொன்னதை தான் மாலதி சொல்றா, தங்கை சொன்னா தான் உங்க மனசு சமாதானம் ஆறதோ, என்று சொல்லி விட்டு மெல்ல சிரித்தாள்.

“இல்ல பத்மா மாலதி வயசுல என்னை விட சின்னவளாக இருந்தாலும், ரொம்ப  நிதானமாக யோசித்து,பேசுவா நான் இப்படி அழும் போதெல்லாம் அம்மாவை போலவே எனக்கு ஆறுதல் சொல்லி தேற்றுவா”.”சரி தான் னா எனக்கு புரிந்தது மாலதி ரொம்ப கெட்டிகாரி , எப்போது எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து அதன் படி பேசுவா”.

கங்கை கரையில் ஏற்பாடுகளையும் அங்கே இருக்கும் ஒரு மடத்தின் வழியாக ஏற்பாடு செய்து கொண்டு, “கங்கையில் மூழ்கி விட்டு “ஈரத் துண்டுடன், அங்கே இருக்கும்”பாண்டா” என்று அழைக்கப்படும் புரோகிதர் முன்பு அமர்ந்தான் .

புரோகிதர் “சொல்லுங்க உங்க தாயார் பெயர், கோத்திரம் என்று கணீரென்ற குரலில் ஆரம்பிக்க,ராகவன் குரல் தழுதழுக்க,சாராதா,பாரத்வாஜ கோத்திரம்,பரணி நட்சத்திரம் என்றவுடன், சட்டென்று நிமிர்ந்த புரோகிதர் தழுதழுத்த குரலில் உன் பெயர் ராகவனா, என்றார்”.

“ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்ட ராகவன்,”என்னை தெரியவில்லையா, ராகவா நான் தான் உங்க அப்பா என்றார். வெடித்து சிதறிய அழுகையும், நீண்ட கேவலும் அவரிடமிருந்து வெளிப்பட, ராகவனுக்கு அவரது முகம் முழுவதும் தாடி, தளர்ந்த தேகம் அடையாளம் தெரியாதபடி இருக்கும் இவரா என் அப்பா, என்று கண்களை குறுக்கி கொண்டு பார்த்தான்.

சட்டென்று எழுந்து நின்றவனுக்கு கால்கள் உதற, கைகள், நடுங்க, நாக்கு உலர்ந்து போனது.

“பொறுப்பு இல்லாமல் அம்மாவை அழு வைத்து விட்டு எங்களை விட்டு ஒடி போன உங்கள் முகத்தில் முழித்தாலே பாவம் வந்து சேரும்”.

ராகவன் பத்மாவை பார்த்து “எழுந்திரு பத்மா வேறு யாராவது புரோகிதர்கள்  இருக்காளான்னு பார்க்கலாம்.இவர் எங்க அம்மாவுக்கு காரியம் செய்து வைத்தால் அது எங்க அம்மாவுக்கே பிடிக்காது. அவ ஆத்மா சாந்தி அடையாது அந்தளவுக்கு இவர் ஒரு மோசமான மனிதர்.என்று தீடீரென கத்த ஆரம்பித்த ராகவனை பார்த்து பத்மா மிரண்டு போனாள்.

பத்மா சுதாரித்துக் கொண்டு “ஏன்னா அம்மாவோட திதி நல்ல படியாக நடக்க வேண்டும்,  அம்மாவுக்கு இவர் கையால் தெவசம் பண்ணிக்க தான் இஷ்டம் போல இருக்கு. இல்லேன்னா இத்தனை புரோகிதர்கள் இருக்கும் போது இவர் கிட்ட ஏன் நாம வரணும்,சொல்லுங்கோ, எப்பவும் நான் சொல்வதை போல “எல்லாம் பகவான் இஷ்டப்படி “தான் நடக்கும்.மொதல்ல நாம் வந்த வேலையை குறை இல்லாம முடிப்போம் “. அப்புறமா நீங்க கோவப்படலாம். இந்த மாதிரி காரியங்களை ஆரம்பிச்சா நடுவே நிறுத்த கூடாது உங்களுக்கு தெரியாதா “என்று பத்மாவின் பேச்சு ராகவனுக்கு சரி என்று தோன்றியது.

பத்மா சொன்னது போல ராகவன் அமைதியாக அமர்ந்து அம்மாவை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சிரத்தையுடன் செய்து முடித்துவிட்டு, “இந்தாங்கோ தட்சணை என்று அப்பாவிடம் தட்டை நீட்டினான்.”

கதறி அழுதபடியே அவர் ராகவா ஏற்கனவே நான் அவளுக்கு பண்ண பாவத்தை இங்கே தொலைச்சுன்டு இருக்கேன், மேலும் என்னை பாவத்தில் தள்ளாதே என் மீது உனக்கு இருக்கும் கோவம் நியாயமான கோவம் தான்.ஆனா என் மனசுல இருப்பதை உங்கிட்ட சொல்வதற்கு எனக்கு அனுமதி கொடு என்று அவர் கெஞ்சாத குறையாக கேட்டார் “.

அவரைப் பார்க்க பத்மாவிற்கு பாவமாக இருந்தது “நீங்க சொல்லுங்க அப்பா, என்று அவள் சொன்னதை கேட்டு அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிவதைக் கண்ட ராகவன், பத்மாவை முறைத்தான்.

“என்ன பத்மா”அப்பா “ன்னு உறவு கொண்டாடின்டு இருக்கே,கிளம்பு நேரமாச்சு, என்றான்.

“ராகவா , இப்போது அவர் கூப்பிட்டது ஏனோ, அவனுக்கு கொஞ்சம் சிலிர்த்து போனது,  நடப்பதற்கு ஆரம்பித்த கால்கள் தயங்கி, தயங்கி நின்றன.

“ராகவா நான் பண்ண பாவத்துக்கு நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.தினமும் கங்கையில் ஸ்நானம் செய்வது வழக்கம் .இனி நான் ஸ்நானம் செய்யும் போதெல்லாம் இந்த கங்கையில் கலந்து விட்ட சாரதாவின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்பேன். அவள் நிச்சயமாக என்னை மன்னித்து விடுவாள்.”என்று சொல்லி விட்டு தள்ளாடியபடி சென்று விட்டார்.

அப்பா போவதையே பார்த்து கொண்டிருந்த ராகவன் கடைசியாக அம்மா,அப்பா இருக்கும் இடம் தேடி வந்து ஜெயித்து விட்டாள். கனத்த மனதுடன் காசிக்கு வந்த ராகவன் மனப்பாரம் நீங்கி புறப்பட்டான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புனரபி மரணம் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்? (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி