in

ரகசியம் உடைந்தது (சிறுகதை) – ✍ சியாமளா வெங்கட்ராமன், சென்னை

ரகசியம் உடைந்தது (சிறுகதை)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ந்த கல்யாண கூடம் சற்றுமுன் நிரம்பி வழிந்தது. மாங்கல்ய தாரணம் ஆனதும் சட்டென்று கூட்டம் அனைத்தும் கலைந்தது. ஆனால் ஆங்காங்கே வட்டமேசை மாநாடு போல் சொந்தங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்

பரிமளாவும் அவர் சொந்தங்களும் பழைய கதைகளையும் உறவுக்காரர்களை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த இடத்திற்கு அவருடைய இறந்து போன மன்னியின் மன்னி விசாலம் வந்து உட்கார்ந்தாள். அவர் கொஞ்சம் சாது, பேச்சு அங்கு இங்கே என சுற்றி வந்தது.

திடீரென்று விசாலம் பரிமளாவை பார்த்து பெருமூச்சு விட்டாள்

“ஹும் இன்னார்க்கு இன்னார் என்று கடவுள் எழுதி வைத்திருக்கிறார் என்பது உண்மைதான்” என்றாள்.

அதைக் கேட்ட பரிமளாவின் அக்கா பெண் உஷா, “என்ன திடீரென்று சொல்கிறீர்கள் என்ன விஷயம்?” எனக் கேட்டாள்

”என் மச்சினர் பரிமளாவை தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார், என் மாமியாரும் எங்கள் குடும்பத்தாரும் பரிமளா தான் எங்கள் வீட்டு மருமகள் என்று நினைத்தார்கள். ஆனால் உங்கள் சித்திக்கு வேறு இடத்தில் ஒரே வாரத்தில் நிச்சயத்து கல்யாணம் செய்து விட்டார்கள்” என்று கூறினாள் விசாலம்.

இதைக் கேட்ட உஷா, “சித்தியின்  மன்னி இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லையா?” என கேட்க

“ஏன் இல்லை? இந்த விஷயத்தினால் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு குடும்பமே இரண்டாக பிரிந்தது“ என விசாலம் கூற, அதைக் கேட்டு பரிமளா கண் கலங்கினாள்

அதைப் பார்த்த மற்றவர்கள் அவளை சமாதானப்படுத்தினார்கள்.

“என்ன சித்தி இதுவரை தெரியாத கதையாக இருக்கிறது”  என உஷா கேட்க

“ஆமாம்… விசாலம் சொல்வது உண்மைதான்” என்று பரிமளா கூற, மற்றவர்கள் அதைக் கேட்க தயாரானார்கள்.

“நான் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது என் அம்மா எங்க அண்ணாவிற்கு திருமணம் செய்ய வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் திருச்சிக்கு போய்விட்டு வரும்போது அந்த கம்பார்ட்மெண்டில் இருந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.

பேச்சுவாக்கில் தன் பையனுக்கு பெண் பார்ப்பது பற்றி கூறினார்கள். அவரும் அவருக்கு தெரிந்த பெண் இருப்பதாக கூறி ஜாதக பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்தார். என் அம்மாவின் எண்ணம் போல நிறைய பேர் இருக்கும் குடும்பம் என்பது தெரிந்தது கூடப்பிறந்தவர்கள் நிறைய பேர் இருந்தால்தான் அந்தப் பெண் தன் குடும்பத்தை அன்பாக நடத்துவாள் என்பது எங்க அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. 

எனவே அந்தப் பெண்ணைப் பார்த்து என் அண்ணாவிற்கு திருமணம் செய்து விட்டார். நானும் ஆசிரியர் பயிற்சி முடித்து உள்ளூரிலேயே வேலை கிடைத்தது என் மன்னியும் எங்களிடம் ரொம்ப ஆசையாக இருந்தார்கள். என் மன்னியை பார்க்க அவர்கள் அண்ணா பாஸ்கர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்பொழுது என்னைப் பார்த்துவிட்டு அவர் மனதில் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது போல் தெரிகிறது. 

ஆனால் அதை யாரிடமும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு மேல் ஒரு அண்ணா இருந்தார் அவருக்கு திருமணம் ஆகவில்லை அதற்குப் பின் கூறிக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார். இவ்வாறாக மூன்று வருடங்கள் ஓடியது.

அவர் அண்ணாவுக்கும் கல்யாணம் ஆயிற்று, பாஸ்கருக்கு திருமணம் செய்ய வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போது பாஸ்கர் தன் மனதில் உள்ளதை கூறினார். அவர்கள் அம்மா உட்பட அனைவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார்கள். என் மன்னிக்கு ரெட்டை சந்தோஷம். உடனே என் அம்மாவிடம் இதைப் பற்றி கூற என் அம்மாவும் அதை ஒப்பு கொண்டார்கள்

கையில் காலணா இல்லாமல் எப்படி இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்வது என்று நிலையில் இந்த ஏற்பாடு கரும்பு தின்ன கூலியா என்று சந்தோஷப்பட்டார்கள். உடனடியாக அதே ஊரில் இருந்த தன் பெரிய அக்காவிடமும் சென்னையிலிருந்த தன் சின்ன அக்காவிடவும் இதைப்பற்றி கூறினார்கள். 

சின்ன அக்கா உடனே சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தார்கள். என் அம்மாவிடம் இதைப் பற்றி பேசி இந்த திருமணம் வேண்டாம் என்றும் 9 பேர் அடங்கிய குடும்பத்தில் கொடுத்தால் காலம் முழுவதும் இவள் கஷ்டப்படுவாள் மேலும் பெண் கொடுத்து பெண் வாங்குவது என்பது மருத்துவரீதியாக நல்லது இல்லை என்றும் கூறி இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார்கள.

இதை என் அம்மா என் மன்னியிடம் கூற என் மன்னிக்கும் என் அம்மாவிற்கும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் என் மன்னி எப்பொழுது என் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரியப்படவில்லையோ நீங்கள் என்னுடன் இருக்க வேண்டாம் நீங்கள் இந்த வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என்று என் அம்மா மற்றும் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள்

என் அண்ணா இருதலை கொள்ளி எறும்பு போல்  தவித்தான். நாங்கள் தனியாக ஒரு வீடு பார்த்துக் கொண்டு நான்கு வருடம் இருந்தோம். அண்ணா மன்னி இருவரும் எங்களைப் பார்க்க வரவே இல்லை. திடீரென்று தெரிந்தவர் மூலம் எனக்கு ஒரு வரன் வந்தது, அவர்கள் நாங்கள் சொன்ன எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொண்டார்கள். ஒரே வாரத்தில் திருமணம் நடைபெற்றது”

உஷா: “திருமணத்திற்குஉங்கள் மன்னி வந்தார்களா?”

பரிமளா: “அது ஏன் கேட்கிறே? நானும் வரமாட்டேன் உங்கள் அண்ணாவும் வரக்கூடாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்கள். அப்போது எங்கள் பாட்டி என்னை கூப்பிட்டு நீ சென்று நமஸ்காரம் பண்ணி மன்னியை அழைத்து வா என்று கூறினார்கள். நானும் அவ்வாறு சென்று என் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறி அவர்களை அழைத்து வந்தேன் என் திருமணமும் முடிந்தது.

அதற்குப் பிறகும் என் மன்னி எங்கள் வீட்டிற்கு வர மாட்டார்கள், ஆனால் என் அண்ணனை அனுப்பினார்கள். இதை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் கடைசி வரை என் அம்மாவையும் தங்கையும் வைத்துக் கொள்ள மறுத்தார்கள். என் அம்மா தங்கையையும் ஏன் என்னுடன் இருந்தார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. இதை இன்று விசாலம் 60 வருடங்களுக்குப் பிறகு போட்டு உடைத்து விட்டாள்” என பரிமளா கூறி முடித்தாள்.

உடனே விசாலம் பரிமளாவின் கையைப் பிடித்து, “என்னை மன்னித்துக் கொள், எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்து நான் இதை சொல்லி விட்டேன்” என்று கூற

“இதுவரை நாங்கள் எல்லோரும் பாட்டி பெண் சம்பாதிக்கிறார் என்ற எண்ணத்தில் தனியாக இருந்தார் என்று நினைத்தோம். அது தவறு என்று இப்போது தெரிந்து கொண்டோம், பாட்டியிடம் மானசீகமாக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்” என்று கூறினாள் உஷா

உஷா: “சித்தி  உன்னை ஒன்னு கேட்கட்டுமா? சித்தப்பாவுக்கு இந்த விஷயம் தெரியுமா?”

பரிமளா: “திருமணமானதும் நீங்கள் ஏன் தனியாய் இருக்கிறீர்கள் என்று கேட்க நான் எல்லா விஷயத்தையும் கூறினேன் அது முதல் சித்தப்பாவிற்கு என் மீது அசாத்திய நம்பிக்கை வந்தது அதனால் எங்களுடைய அன்பு பல மடங்கு பெருகியது”

“இதிலிருந்து நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உண்மை என்றாவது ஒரு நாள் வெளிப்படும் என்பது தான்” என்று கூறிய பரிமளாவின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகிற்று.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வல்லபி ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை