in ,

ரகசியமாய் ஒரு சேதி (சிறுகதை) – சசிகலா ரகுராமன்

எழுத்தாளர் சசிகலா ரகுராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

விஜய்! விஜய்! விஜய்! எங்கும் விஜய் எதிலும் விஜய். இதுதான்  ஏழு வயது சூர்யாவிற்குத் தெரிந்த ஒரே தாரக மந்திரம்.

பதின்மூன்றே வயது நிரம்பிய விஜய் தான் அவனது நாயகன். மரம் ஏறணுமா? சைக்கிள் ஓட்டணுமா? விசிலடிக்கணுமா? கிரிக்கெட் விளையாடணுமா? சகலத்துக்கும் விஜய் தான் அவனுக்கு ரோல் மாடல்.

காலங்கள் உருண்டன. சில வருடங்களாக, அடிக்கடி விஜய்யைப் பார்க்க முடியவில்லை. சென்னையில் ஒரு பிரபல  ஐ டி கம்பெனியில் வேலையில் இருக்கிறான் விஜய். வேறு ஒரு வேலையாகச் சென்னை கிளம்பினான் சூர்யா.

வழி முழுவதும் விஜய் பற்றிய் ஞாபகங்களுடன், ரயிலில்  வந்து கொண்டு இருந்தான். விஜய் ஸ்டேஷனுக்கு வருவதாகச் சொல்லி இருந்தான். விஜய்யைக் காண்பதற்காகக் கண்கள் நிறையக் கனவுகளுடன் வந்து இறங்கிய சூர்யாவிற்கு ஒரு புதிர் காத்திருந்தது.

ரயில் நிலையத்தில் வந்து அவனை, வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பிய விஜய், அவனுக்குப் புதிதாகத் தெரிந்தான். அப்பாவி அம்பியாக இருந்த சூர்யாவிற்கு, சிறு வயதில்  ரெமோவாகத் திகழ்ந்த விஜய், அன்று அந்நியனாகத் தெரிந்தான். இதுவரை கண்டிராத விஜய் அது. இது உருவ மாற்றத்தால் வந்ததல்ல. மனம் உணர்ந்த ரகசிய உணர்வு அது.

வண்டியில் அவனுடன் பயணிக்கும் போது கண்ட விஜய் விநோதமானவன். சிக்னல் போட்ட பின்னும், நகராமல், பலமுறை எல்லோரும் ஹார்ன் அடித்தபின் கிளம்பும் விஜய். அதே போல்தான்,  உணவகத்திலும். தோசை சாப்பிட்ட பின்னும் விட்டத்தை வெறித்தபடி, வேறு சாப்பிடவும் ஆர்டர் செய்யாமல், இடத்தை விட்டும் நகராமல் ஏதோ யோசனையில் இருக்கும் தாமச விஜய்.

கடைசியில் இருவரும்  கோவிலுக்குச் சென்றார்கள். நீண்ட கூட்டம். முன்னாள் நகராமல்  தடுமாறிய விஜய், பின்னல் இருப்பவர்களையும் செல்ல அனுமதிக்காமல் தயங்கியவனாய், பக்கத்தில் இருக்கும் என்னையே கவனிக்காமல் இருந்தான்.

மனம் கிராமத்து கோவிலில் என்னுடன் அதீத சுறுசுறுப்புடன் சுற்றிய விஜய், அருகில் இருப்பவர்களிடம் வெள்ளந்தியாகப் பேசிக் கொட்டித் தீர்க்கும், அரவணைக்கும், நொடிக்கு நொடி புத்துணர்ச்சியுடன், சிரித்த முகத்துடனும் பேசும் விஜய், இவனல்ல.

எதையோ தொலைத்தவனாய். இருந்தும் இல்லாமல் இருந்தான். அவனைக் கண்டு மனம் வெதும்பியது. மனக்கோட்டை ஒன்று சரிவதை சூர்யாவால் அனுமதிக்க முடியவில்லை. அதைச் சரி செய்யத் துடித்தான்.

எதன் விளைவு இது? சென்னையின் தாக்கமா? அல்லது ஐ டி வேலையின் விளைவா? அல்லது உடல்நலப் பிரச்சினையா, என யோசித்துக்கொண்டே சூர்யா, “அண்ணா? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ?” எனக் கேட்டான்.

“பைன் நண்பா” என வலிய வரவழைத்த சிரிப்புடன் விஜய் கூறிய பதில், “ நாட் ஓகே  எனத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.

“எனது ஆஃபீஸிலும் சரி, எனது வீட்டிலும் சரி, நாங்கள் யாரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டோம். நான் யாரிடம் பேச  முயற்சித்தாலும், அவர்கள் அமெரிக்காவில் இருப்பவர்கள் அல்லது ஐரோப்பாவில் இருக்கும்  யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். சுற்றி நடக்கும் விஷயங்களோ, உள்நாட்டில் நடக்கும் விஷயங்களோ அவர்களுக்கு பொருட்டே இல்லை. பெரிய ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டு, “ என்ன? “ என்றால் , “உன்னிடம் இல்லை. “ என்கிறார்கள்.  அதனால், என்னருகில் இருப்பவர்கள் என்ன செய்தாலும் நான் பதில் கொடுக்காமல், கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகி விட்டேன். இதனால் ரொம்பத் தனிமையாக உணர்கிறேன். உனக்கு நான் சொல்வது புரிகிறதா, சூர்யா?”

“ புரியுது அண்ணா. ”

“ பக்கத்திலேயே இருந்தால் கூட, நீ என்னை மொபைலில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். நேரடியான மனிதர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்க் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏற்கனவே தொடர்புக்கு அப்பால் போய்விட்டார்கள்.”

“ ஒரு உள்ளங்கையின் கதகதப்பு, ஒரு தோள்பட்டையின் உரசல், அல்லது மிகப் பெரிய சத்தம் இவை தான் நிகழ் காலத்திற்கு அழைத்துவரத் தேவைப் படுகிறது. நான் இருப்பதை எனக்கே உணர்த்தும் இருப்பு அது. இன்னும் கொஞ்ச நாட்களில் அதுவும் மறந்து போகும் ” எனத்  தொண்டை கமர முடித்துக் கொண்டான், விஜய்.

சூர்யா விஜய்யை ஆரத் தழுவி, “ இப்போது தான் எல்லோரும் ஏன் நாய் வளர்க்கிறார்கள் எனப் புரிகிறது அண்ணா. நீங்கள் இப்படியே போனால் பைத்தியம் ஆகிவிடுவீர்கள். மாதம் ஒருமுறை, ஊருக்கு வாருங்கள். மொபைலை விட்டு எறிந்து விட்டு, மொபைலாக ஓடி ஆடி, இருங்கள் அண்ணா. ஊரில் பாதி நேரம் வலிமையான சிக்னல் இருக்காது. ஆனால் வலிமையான மனம் படைத்த நாங்கள் இருக்கிறோம்.” என்ற சூர்யாவை ஆரத் தழுவி, கட்டியணைத்து கண்ணீர் விட்டான் விஜய்.     

விஜய்யும் சூர்யாவும், அருகில் அமர்ந்து கண் பார்த்து, கை கோர்த்து, இதயங்கள் இணைந்து, உணர்வுகளைப் பரிமாறினார்கள். ரகசியமான அந்தத் தகவல் பரிமாற்றத்தில், பழைய விஜய் மீண்டும் புதிதாய்ப் பிறந்தான்.

எழுத்தாளர் சசிகலா ரகுராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    வேலை வேணும் (சிறுகதை) – ஜெயந்தி.M