எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நள்ளிரவு எல்லோருக்கும் நல்லிரவாக, வீட்டில் அனைவரும் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தனர். விவேக் மட்டும் திடுமென எழுந்தான் …குப்பென உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியிருந்தது. ஒருவேளை கரண்ட் போய் இருக்குமோ? ஏசியை பார்க்க அது தன் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தது …
மனதில் வீசும் அனலை எந்த ஏசி குளிரச் செய்ய முடியும்? இனி தூங்கிய மாதிரி தான் என்று எழுந்து உட்கார்ந்தான் .
ஏன் அந்த கொடூரமான கனவு திரும்ப திரும்ப வருகிறது அவனுக்கு புரியவில்லை …பாய்ந்து வரும் சிங்கம் …துரத்திக் கொண்டு ஓடி சில மனிதர்களை கைவேறு கால்வேறாக பிய்த்து எறிந்து சுவைக்கிறது …அவ்வப்போது வரும் என்றாலும் அதற்காக கனவின் கொடூரம் அவனால் தாங்க முடியாததாக இருந்தது.
ஏசியின் டெம்பரேச்சரை குறைத்து, குளிரைக்கூட்டி ,அந்த குளிர்ச்சியில் சற்று நேரத்தில் தூங்கிப் போனான்.
காலையில் குளித்து காலேஜுக்கு மடமடவென கிளம்பினான்
“அம்மா சீக்கிரம் டைம் ஆச்சு நான் இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன் …டிபன் ரெடியாயிடுச்சா? மதியம் கேண்டின்ல சாப்பிட்டுகிறேன் “
“இருடா.. எல்லாம் ரெடியாயிடுச்சு.. உக்காரு …”என்றபடியே பார்வதி டிபனை டேபிளில் வைத்து, தட்டையும் வைத்தாள்.
“அப்பாவுக்கு பண்ண புளியோதரை இருக்கு ..ஒரு டப்பால போட்டு வச்சிருக்கேன் எடுத்துட்டு போ” என்றாள்.
“சரி குடு… பத்து மணிக்கு ஒரு ரவுண்டு புளியோதரையை முடிச்சிடுவோம்.. .” என்று டப்பாவை வாங்கி காலேஜ் பேக்ல வைத்துக் கொண்டான்.
இவ்வளவு அவசரமாக விவேக் எங்கே ஓடுகிறான்? ..போகும் வழியில் சென்ட்ரல் லைப்ரரி பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பச்சைக்கிளி ஜனனியை பார்க்கத்தான். ஜனனியும் ,அவனும் ஒரு வருடமாக காதலித்துக் கொண்டிருந்தார்கள்.
இத்தனைக்கும் இருவரும் வெவ்வேறு கல்லூரி மாணவர்கள்.
ஒரு இன்டர்காலேஜ் கலை விழாவில் கவிதையில் ஆரம்பித்த பழக்கம் காதலாய் மெல்ல மலர்ந்தது …சென்ட்ரல் லைப்ரரி இவர்கள் அறிவை வளர்த்ததோ இல்லையோ காதலை வளர்த்தது .விவேக், இன்ஜினியரிங் பைனல் இயர் ஸ்டூடண்ட் …ஜனனி கலைக் கல்லூரியில் ஹிஸ்டரி- எக்கனாமிக்ஸ்- சைக்காலஜி குரூப் ..
“என்னடா இவ்வளவு நேரமாச்சு.. எவ்வளவு நேரம் தான் பஸ்சுக்கு காத்திருக்கிறாப்புல நடிச்சுகிட்டு நிக்க..? ” என்று கடுகடுத்தாள் ஜனனி..
“சாரி சாரி ..காலையில எந்திரிக்க கொஞ்சம் நேரமாயிடுச்சு “. இரவு அவன் மனதிலடித்த புயல் அவன் தூக்கத்தை கெடுத்ததால் காலையில் லேட்டாக எழுந்ததை எப்படி அவளிடம் சொல்லுவான்?
“ஏண்டா விவேக் முகமெல்லாம் டல்லா இருக்கு? “அவன் முகம் கொஞ்சம் வாடினாலும் ஜனனிக்கு பொறுக்காது ..என்மேல் தான் இவளுக்கு எவ்வளவு பாசம் ..விவேக் மனம் உருகியது.
இருவரும் லைப்ரரியில் கூட்டம் இல்லாத அந்த ‘ஆராய்ச்சி புத்தகங்கள்’ பகுதியில் அமர்ந்தார்கள் ..அன்றாட வாழ்க்கை மனிதர்களை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கும்போது.. இந்த ஆராய்ச்சி புத்தகங்களை படிக்க யார் வருவார்கள்? எனவே அந்த பகுதி கம்மென்று இருந்தது .
“ஜனனி! அம்மா இன்னைக்கு புளியோதரை பண்ணி இருந்தாங்க.. அம்மா புளியோதரை சூப்பரா இருக்கும். இந்தா உனக்கு எடுத்துட்டு வந்தேன்” என்று டப்பாவையும் ஸ்பூனையும் அவளிடம் தள்ளினான்.
“தேங்க்ஸ் டா அத்தை புளியோதரை சூப்பராக இருக்கும் “
புளியோதரையை சாப்பிட்டுக் கொண்டே ஒரு மணி நேரம் கதையடித்து விட்டு காலேஜ் டைம் வந்ததும் ரெண்டு பேரும் அவரவர் வண்டியில் ஏறி பறந்தார்கள் ..
மாதங்கள் சில உருண்டோட ..கடைசி வருட படிப்பு நல்லபடியாக முடிந்தது.. விவேக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலையும் கிடைத்து விட அவன் அம்மா, அப்பா நிம்மதியானார்கள்..
சில மாதங்களாக தொந்தரவு இல்லாமல் இருந்த விவேக், அன்று இரவு பதறி எழுந்தான். மனம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தது ..அனலடித்தது ..காலை எழுந்ததும் சரியான தூக்கம் இல்லாமல் தலை வலித்தது.
அவ்வப்போது இதுபோல இரவுகள் அவனை பயமுறுத்தினாலும், மற்ற நாட்கள் சாதாரணமாக கழிய, அவ்வளவு கவலைப்படாமல் இருந்தான்.நாளாக, நாளாக அவன் மனதிலே ஒரு பதட்டம் உருவானது ..
இது ஏன் தனக்கு மட்டும் இப்படி ஒரு பிரச்சனை வருகிறது?. யாரிடமும் இதை சொல்லவும் யோசனையாக இருந்தது. .அப்படியும் நெருங்கிய நண்பனிடம் கூறிய போது ” விபூதியை பூசி விட்டு தூங்கு” என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
ஜனனியிடம் சொல்லலாமா என்று தோன்றியது. இல்லை.. இல்லை.. ஜனனி டென்ஷனாகி விடுவாள். எனக்கு ஒரு சிறு தலைவலி என்றாலே அவளுக்கு தாங்கிக் கொள்ள முடியாது. இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம் ..டாக்டர் யாரிடமாவது போவோமா? .டாக்டரிடம் சொல்லும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. காலையில் எழுந்தால் தான் நார்மலாக வேலை பார்க்கிறேனே …தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான் விவேக்.
புதிய வேலை, புதிய சூழல், அவன் மனதிற்கு ஒரு ஆறுதல் அளிக்க, மனதில் கொஞ்சம் நிம்மதி வந்தது. பிரச்சனையும் குறைந்தது ..ஜனனியும் படித்து முடித்து வேலைக்கு ட்ரை பண்ணிக் கொண்டு இருந்தாள்..
“விவேக் அதிக நாள் வீட்ல கடத்த முடியாது வேலையெல்லாம் அப்புறம் முதல்ல கல்யாணத்த பண்ணிக்கோன்னு எங்கப்பா அம்மா ஆரம்பிச்சிட்டாங்க. “
“எனக்குத்தான் வேலை கிடைச்சிடுச்சே…நான் அப்பா அம்மா கிட்ட உன்னைப் பத்தி பேசுறேன். ஞாயிற்றுக்கிழமை என்கூட வா.. என் வீட்டில் உன்னை அறிமுகப்படுத்துகிறேன்”
விவேக்கின் அப்பா அம்மா அவ்வளவு பழமைவாதிகள் அல்ல.
ஜனனியை அவர்களுக்கு பிடித்துப் போக, மகனின் விருப்பத்தை நிறைவேற்ற ..ஜனனி வீட்டில் பெண் கேட்டு வருவதாக சொன்னார்கள்.
இது தரப்பு பெற்றோரும் பேசி முடிவு பண்ண… கல்யாணம் இன்னும் மூன்று மாதத்தில் என்று முடிவானது ..
“என்னடா நம்ம கல்யாணம் இப்படி சப்புன்னு முடிவாயிடுச்சு! ரெண்டு சைடு அப்பா அம்மாவும் சண்டை போட்டுக்கல.. நம்ம காதல்ல எந்த வில்லனும் இல்ல ..ஒரு விறுவிறுப்பான சீன் இல்லாம ..நேர சுபம் கார்டு விழுந்துருச்சு “
“நீ வேற ஏம்மா.. இன்னும் ரெண்டு குடும்பமும் சண்டை போட்டு வேற மண்ட காயனுமா? “
விவேக்-, ஜனனி கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாய் நடந்தது …விவேக் அம்மா வருங்கால மருமகளை கூட்டிக்கொண்டு புடவை கடைக்கும், நகை கடைக்குமாக அலைந்து கொண்டிருந்தாள். விவேக்கும் அவர்களுடன் இணைந்து கொண்டான் …நடுவே இருந்த சஞ்சலங்கள் மறைய முழுக்க முழுக்க சந்தோஷமாக இருந்தான்.
நிச்சயக்கப்பட்ட சுபயோக சுப தினத்தில் தடபுடலாக திருமணம் நடக்க, ஜனனியின் சங்குக் கழுத்தில் விவேக் தாலி கட்டினான்.திருமணம் முடிந்து ஜனனியின் வீட்டில் தங்கினர் .ரெண்டு நாள் கழித்து விவேக் வீட்டில் மறு வீடு தடபுடலாய் விருந்துடன் நடந்தது. அன்று இரவு விவேக் அறையில் ஜனனி ..
தான் தனித்து புழங்கிய அறையில், இன்று மனைவியுடன். நன்றாக அலங்கரிக்கப்பட்ட அந்த அறை அவர்கள் மன மயக்கத்தை அதிகப்படுத்தியது. மகிழ்வாய் இணைந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கினர் இருவரும்.
தேன் உண்ட வண்டாய் இருவரும் அசந்து தூங்கிக் கொண்டிருக்க …விவேக் பதறி எழுந்தான் வழக்கம்போல் வேர்த்துக் கொட்ட, உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. தற்செயலாய் கண்விழித்த ஜனனி அவனை அந்த கோலத்தில் பார்த்து பதறிப் போனாள்.
“என்னாச்சு விவேக் என்ன பண்ணுது? ஏன் இப்படி உன் உடம்பெல்லாம் நடுங்குது. ?” என்றபடி ஒரு டவலை எடுத்து அவன் முகத்தை துடைத்து விட்டாள். தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள்.
“ஒன்றுமில்லை ஜனனி எனக்கு அவ்வப்போது இப்படி வரும். தானா சரியாகிவிடும்.. நீ பயப்படாதே.. படுத்துக்கோ..” என்றான் மெதுவாக.அதற்கப்புறம் ஜனனியின் மனதில் அமைதியில்லை ..தூக்கம் தொலைந்து போனது.
மறுநாள் ஜனனியும், விவேக்கும் பீச்சில் உட்கார்ந்திருந்தனர். அலைகளை கையால் அளைந்தபடி எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள் ஜனனி.
“சாரி..ஜனனி நான் என்னுடைய இந்த பிரச்சனையை கல்யாணத்துக்கு முன்னாலேயே உன்கிட்ட சொல்லி இருக்கனும் .உனக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்னு புரியிது என்ன மன்னிச்சுக்கோ “
“அட முட்டாள்! நான் அப்படி நினைக்கலை. இத்தனை நாள் என் கூட பழகியும், உனக்கு ஒரு பிரச்சனை இருப்பதை ஏன் என்கிட்ட சொல்லல ..இவ்வளவு நாள் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கியே..” என்றாள்.
மறுநாளே அவனை தன் புரொபசர்..டாக்டர் சந்திரசேகரிடம் அழைத்துப் போனாள்..அவர் பிரபல சைக்கியாட்ரிஸ்ட் ..
விவேக் தன் பிரச்சனையை அவரிடம் கூறினான் திடீரென மனதில் அனலடிக்கும் உணர்வு.. ஒரு குழப்பம் வரும், உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டும்..அதுக்கான காரணம் எதுவும் புரியவில்லை டாக்டர் ” என்று கூறினான்..
டாக்டர் சந்திரசேகர் ஜனனியிடம், அவனது’ ஆழ்மனதுக்குள் இருக்கும் பிரச்சினையை கண்டுபிடித்தால் தான் இது சரியாகும்’ என்று கூற, இருவரும் சம்மதித்தனர்.
தன்னுடைய பரிசோதனை எல்லாம் முடித்த பிறகு …டாக்டர் சந்திரசேகர் ஜனனியிடமும் விவேக்கிடமும் …
“நீங்கள் பயப்படும்படி பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை அவருடைய ஆழ்மனதில் அவர் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பினாலேயே இதுபோல வருகிறது” என்றார். அவன் ஆழ் மனதிற்குள் போய் அவர்களுடைய சிறு வயது அனுபவங்களை கேட்ட போது அவன் பகிர்ந்ததை அவர்களிடம் கூறினார் …
“விவேக் சின்ன பிள்ளையா இருக்கும்போது அவங்க அப்பா அம்மா இருந்த பகுதியில ஒரு அரசியல்வாதிஇருந்திருக்கான். அவனுக்கு கூட்டாளியாக ஒரு தாதாவும் இருந்திருக்கான். இந்த கும்பல் அந்த ஏரியால இருக்குற மக்களை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க ..அடிக்கடி வீட்டுக்குள்ள புகுந்து கலாட்டா பண்றது.. கடைகளில் வந்து தண்டால் வசூலிக்கிறது. இவங்க அராஜகத்தை பத்தி விவேக்கோட அம்மா அப்பா பேசும்போது விவேக் கேட்டுகிட்டு இருந்திருக்கான் ..அவன் மனசுல அவங்கள யாரும் எதுவும் செய்ய முடியலையே என்ற ஒரு கோபம் இருந்திருக்குது ..
ஒருநாள் இவன் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது இந்த ரவுடி கும்பல் யாரையோ துரத்திட்டு போயி வெட்டுறத கண்ணால பாத்திருக்கான். அதற்கப்புறம் அந்த ஏரியால இருக்க வேண்டாம்னு சீக்கிரமே காலி பண்ணி இவங்க குடும்பம் வேற இடத்துக்கு போயிட்டாங்க .
ஆனால் விவேக் உன்னுடைய சிறு வயசுல, ஆழ் மனசுல அந்த அரசியல்வாதி,தாதா கூட்டத்தைப் பற்றி ஒரு வேகமும், கோபமும் இருந்திருக்கு..அதுவே உன்னை அறியாமல் ஒரு கனவா மாறி உன்னுடைய கோபம் சிங்கங்களா மாறி அந்த ரவுடி கூட்டத்து மேல பாய்ந்து அப்படியே அவங்க எல்லாத்தையும் ஓட விட்டு கடிச்சு துண்டு துண்டாகிற மாதிரி ஒரு கொடூர கனவு வந்திருக்கு.அது அந்த கொலையை கண்ணால பாத்ததினுடைய பாதிப்பா இருக்கலாம் .அதனாலதான் உனக்கு நடுராத்திரி திடீரென்று தூக்கத்தில் முழிப்பும் , மற்ற பிரச்சனைகளும் . “
டாக்டர் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் ” அவன் தனியாக இருக்கும்போது ஒரு பாதுகாப்பின்மை இருந்திருக்கும். திருமணமான பிறகு சந்தோஷமான மூடிலிருக்கும் போது எப்படி அந்த பதற்றம் வந்தது.?” என்றாள் ஜனனி.
“ஜனனி .. நீ கல்யாணமாகி வந்த பிறகு அவனுக்கு மனதில் சந்தோஷமும் நிம்மதியும் இருந்தாலும், எங்கே இந்த விஷயம் தெரிந்தால் நீ அவனை விட்டு விலகி விடுவாயோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம் “
டாக்டர் இதிலிருந்து விவேக்கை எப்படி வெளியே கொண்டு வருவது என்று கவலையுடன் கேட்டால் ஜனனி ..
“நீ கவலையே படவேண்டாம் ஜனனி பிரச்சனை என்னனு நமக்கு தெரிந்துவிட்டது .இனி அவன் மன பாதிப்பிலிருந்து அவனை மெல்ல மெல்ல வெளியே கொண்டு வந்து விடுவேன். அப்புறம் ஜனனி தனிப்பட்ட முறையில் உனக்கு என் பாராட்டுகள்.. இதுபோல நேரத்தில உணர்ச்சிவசப்பட்டு அவனை குற்றம் சொல்லாமல், நீ பொறுமையா அவனுடைய பிரச்சினையை அணுகி, அவன என்கிட்ட கூட்டிட்டு வந்த..”
“டாக்டர் நானும் ஒரு சைக்காலஜி ஸ்டுடெண்ட் தானே.. அதுதான் அவனுடைய பிரச்சினையை எனக்கு மனரீதியாக அணுக உதவியது. “
பிறகு விவேக்கை உள்ளே அழைத்து… “விவேக் நீங்க சீக்கிரம் குணமாயிடுவீங்க.. உங்களுக்கு உள்ளது ரொம்ப சின்ன பிரச்சனை.. அதனால இதப் பத்தி கவலைப்படாம நீங்களும், ஜனனியும் சந்தோஷமா வாழுங்க …சீக்கிரத்துல ஜனனியோட குழந்தை என்னை தாத்தான்னு கூப்பிடனும் ” என்று சிரித்தார் டாக்டர். சந்திரசேகர் …
விவேக் ஜனனியை அன்புடன் அணைத்துக் கொள்ள வெட்கத் துடன் சிரித்தாள் ஜனனி .
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
 
 

 
 
 
 
 



GIPHY App Key not set. Please check settings