in

புரியாத புதிர் (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர், கோவை

புரியாத புதிர் (சிறுகதை)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

முகநூலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த புவனா, ஒரு ஃபுரொஃபைல் பிக்சரைப் பார்த்தவள், ‘என்ன இது சுந்து அண்ணா மாதிரியே இருக்கே?’ என நினைத்து வேகமாக அதன் ஃபுரொஃபைல் டீடெய்ல்ஸைப் பார்த்தாள்.

ராஜேஷ் சுந்தரம் என்ற பெயரைப் படித்ததும், ‘அட நம்ம சுந்து  அண்ணா பையன் ராஜேஷ், இப்ப யுஎஸ்ல இருக்கானா, முப்பது வயசு இருக்குமா?’ என தனக்குள் கேட்டுக் கொண்டவள் மனம் சுந்து அண்ணாவை நினைத்துக் கலங்கியது.

இப்ப மாதிரி விழிப்புணர்வும் மருத்துவ வசதியும் அப்போ இருந்திருந்தா உங்களை காப்பாற்றி இருக்கலாம் என மனதில் புலம்பிய புவனாவிற்கு, அவள் மைத்துனர் சுந்து என்ற சுந்தரம் நோயால் பட்ட கஷ்டமும் வலியில் துடித்து உடல் வேதனையால் இறந்ததும் படம் போல் ஓடியது.

அண்ணாவிற்கு உடம்பு முடியாமல் போய் இரண்டு மாதங்களாகி விட்டது. “மாயமாய் வந்ததேடி அம்மா மாயமாய் வந்துடுத்தே, 37 வயசில இப்படி ஒரு வியாதி என் பிள்ளைக்கு வரணுமா, நான் என்ன பண்ணுவேன்?” மாமியாரின் புலம்பலைக் கேட்கும் போது புவனாவிற்கு மனதை பிசைகிறது. 

அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டிலும், “இது லிவர் கேன்சரில் அட்வான்ஸ் ஸ்டேஜ். இதுக்கு எதுவும் செய்ய முடியாது. அவர் இருக்கும் வரை அவரை சந்தோஷமா வைத்துக் கொள்ளுங்களேன். இன்னும் ஆறு மாதங்கள் இருக்கலாம், எல்லாம் கடவுளின் கைகளில் உள்ளது. ஆனால் அவரது நாட்கள் எண்ணப்படுகிறது”

டாக்டர் சொன்ன போது புவனாவின் கணவன் சபேசன் இடிந்து போய் விட்டான். 

வீடு நிறைய மனிதர்கள். எல்லா முகங்களிலும் சொல்ல முடியாத சோகம். சுந்தரம் தனக்கு கேன்சர் எனத் தெரிந்த அன்று கண்ணீர் விட்டு அழுதார். அதன் பின் முகம் இறுகி மெளனமாகவே இருந்தார்.

சுந்தரத்தின் மனைவி சாந்தாவின் முகம் எதையும் வெளிக்காட்டாத பாவனையில் இருந்தது. சென்னையிலிருந்து சுந்தரம் தஞ்சை வீட்டுக்கு வந்து பத்து நாட்கள் ஆகி விட்டது. அவர்கள் மகன் ஐந்து வயது ராஜேஷுக்கு எதுவும் புரியவில்லை.

“அம்மா, நாம எப்போ ஊருக்கு போலாம்” இதே கேள்வியால் தன் அம்மாவை துளைக்கிறான்.

“நீ அம்மம்மா கூட நம்ம ஊருக்கு போயிடு கண்ணா, நான் அப்புறமா வந்து உன்னைப் பார்க்கிறேன்” என சாந்தா மன்னி அவனை சமாதானப்படுத்துவாள். 

சுந்து  அண்ணா மும்பையில் மத்திய அரசு வேலையில் நல்ல போஸ்ட்டில் இருந்தார். ஆபீஸ் டூரில் இருந்தவருக்கு நிற்காமல் வாந்தியும் காய்ச்சலும் ஏற்பட, மெடிக்கல் லீவில் தஞ்சை வீட்டுக்கு வந்து விட்டார்.

குடும்ப டாக்டர் இரத்தப் பரிசோதனை ரிசல்ட்டைப் பார்த்து விட்டு சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்க்கு அனுப்பி வைத்தார். அங்கு கேன்சர் என உறுதி செய்யும் வீட்டில் அனைவரும் ஆடிப் போயினர்

புவனாவின் மைத்துனன் சுந்தரம் மிகவும் உற்சாகமான மனிதன். புவனாவின் அண்ணா ராமுவின் ஆத்ம நண்பன் ஆதலால், புவனா அவனையும் அண்ணா என்றே பாசத்துடன் அழைப்பாள்.

அவளுக்குத் திருமணத்திற்கு வரன் பார்க்கிறார்கள் என்றதும் தன் தம்பி சபேசனின் ஜாதகத்தை கொடுத்து பார்க்க அது நல்ல விதமாக திருமணத்தில் முடிந்தது. 

புவனாவின் மாமனார், மாமியாருடன் உடன் பிறந்தவர்கள் அதிகம். அவர்களுக்கும் நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் என குறைவில்லாமல் குழந்தைகள். எனவே வருடத்தில் பாதி நாட்கள் வீட்டில் நிச்சயதார்த்தம், வளைகாப்பு, சீமந்தம்,  பிறந்த நாள் விழாக்கள் என விசேஷங்கள் வந்து கொண்டே இருக்கும்.

புவனாவின் கணவன் சபேசன் தஞ்சை  கார்ப்பரேஷனில் உள்ளூரிலேயே  வேலை பார்த்ததால், அவனும் மாமனாரும் தான் எல்லா ஏற்பாடுகளையும் கவனிப்பர்

குடும்பத்தில் ஒரு விசேஷம் என்றால் சுந்தரம் மும்பையிலிருந்து வந்த பின்தான் வீடு களை கட்டும். விடியற்காலை நாலு மணியளவில் அவர் வந்ததும் உடனடியாக அனைவரையும் எழுப்பி, “என்ன தூக்கம், எழுந்திரு ஒரு கை குறையுது பார்” என சீட்டுக் கச்சேரியை அப்போதே ஆரம்பித்து விடுவார். 

மன்னி சாந்தாவோ ஒருவருடனும் பேசாமல் தன் மகனுடன் புவனாவின் அறையில் வந்து படுத்துக் கொள்வாள். அவ்வளவு கலகலப்பான மனிதர் ஏன் மனைவியிடம் பேசவே மாட்டேன் என்கிறார் எனத் தோன்றும் புவனாவிற்கு.

ஊர் திரும்பும் வரை அண்ணா, மன்னி இருவரிடமும், “அது எடுத்துக் கொடு, இது வேணாம்” என்ற சாதாரண வார்த்தை பரிமாற்றம் கூட கிடையாது. சுந்தரம் மிக உற்சாகமாக தன் தம்பி தங்கைகள் உடன் சகஜமாக பேசி சிரித்துக் கொண்டு இருப்பார்.

மன்னியோ, “அய்யோ, எப்போதடா ஊருக்குப் போய் சேருவோம்” என்ற முகபாவத்துடனேயே இருப்பாள். வருடத்தில் பாதி நாட்கள் சாந்தா அவள் பிறந்த வீட்டுக்கு சென்று விடுவாள் அல்லது அவள் அம்மா மும்பையில் இருப்பார். 

புவனாவிற்கு மனமெல்லாம் இதே சிந்தனை. அண்ணா மன்னி இரண்டு பேருக்கும் என்னதான் பிரச்சனை, மன்னி எல்லாம் செய்யறா தான், ஆனால் எதிலுமே ஒரு ஒட்டாத தன்மை அது ஏன்? ஒரு பெரிய இடைவெளி கண்ணுக்கு தெரியாத திரை போல.

வழக்கம் போல் குளிப்பது, துவைப்பது என அவள் வேலைகளை மட்டும் பார்த்து விட்டு, அதன் பின் கணவர் அருகில் அமர்ந்து கொண்டு, “யாருக்கு வந்த விருந்தோ” என்பது போல் விட்டேத்தியாக ஏதாவது பத்திரிகையில் படித்துக் கொண்டிருக்கும் சாந்தாவைப்  பார்க்க புவனாவிற்கு பற்றிக் கொண்டு வரும். என்ன பெண் இவள் என்று இருக்கும். 

மைத்துனர் சில நேரங்களில் “புவனா, சாந்தா அவியல் பண்ணினா பிரமாதமா இருக்கும் தெரியுமோ” என்று சொல்லும் போது புவனா சிரித்துக் கொள்வாள். ஆனால் அவளறிந்து மன்னி சாந்தா ஒருமுறை கூட இந்த வீட்டு சமையலறையை எட்டிப் பார்த்ததில்லை.

தனியாக இருவரும் கோயிலுக்கு செல்லும் போது புவனா சாந்தாவிடம், “ஏன் மன்னி உங்களுக்கு கலக்கமாயில்லையா, அண்ணா  இப்படி  உடம்புக்கு முடியாம படுத்துண்டு இருக்காறே?” என்பாள் பொறுக்க முடியாமல்.

சாந்தா முகத்தில் வெறுப்புடன், “எனக்கு மனசு விட்டு போச்சு புவனா. ஒரு பொண்ணு எதை வேணா தாங்கிப்பா, ஆனா இன்னொரு பெண் தன் இடத்துக்கு வருவதை தாங்கிக்க முடியுமா நீயே சொல்லு”

மன்னி சொல்வதைக் கேட்டு புவனா அதிர்ச்சியானாள். அவளால் நம்பவே முடியவில்லை. சுந்து அண்ணாவா  இப்படி. 

இரவில்  வேலை முடித்து  களைத்து அயர்ச்சியுடன் வரும் கணவனிடம் மெதுவாக சாந்தா சொன்னதைக் கூறி இப்படி கூட இருக்குமா என்று கேட்க, “பைத்தியம் மாதிரி உளறாதே” என ஒரே வரியில் புவனாவின் வாயை அடைத்தான் சபேசன். 

சில நேரங்களில் வலி பொறுக்க முடியாமல் சுந்தரம் புவனாவின் மாமனாரிடம், “அப்பா எனக்கு எதையாவது கொடுத்து என்னை மெர்ஸி கில்லிங் பண்ணிடுங்கோ” என்று சொல்லும் போது தன்னை மீறி வரும் கேவல்களை அடக்க வாயில் துண்டை வைத்துக் கொண்டு நிற்கும் மாமனாரைப் பார்க்கையில் புவனாவிற்கு கண்கள் குளமாகி விடும்.

எழுபத்தி ஐந்து வயதில் அவருக்கு ஏற்பட்ட சோகத்தை நினைத்து புவனாவின் மனம் ரணமாகும். இப்போது மாதிரி லிவர் டிரான்ஸ்பிளான்டேஷன் செய்ய வாய்ப்பு குறைவாக இருந்த காலம். 

பெரிய மைத்துனர், நாத்தனார்கள், கொழுந்தனார்கள் என அனைவரும் அவரவர் ஊர்களில் இருந்து வருவதும் போவதுமாக இருந்தனர். வீட்டில் அனைவரும் மெளனமாக ஒரு நிகழ்வுக்காக காத்திருப்பது போல் இருந்தனர்.

தினமும் இரவு எட்டு மணியளவில் டாக்டர் வீட்டுக்கு வருவது வழக்கமானது. டாக்டர் குணசீலன் மிகவும் பொறுமைசாலி.

“சுந்தர் எப்படி இருக்கீங்க வலி இப்போ எப்படி இருக்கு? ” என மென்மையாக கேட்பதே ஆறுதலாக இருக்கும்.

“டாக்டர் என் வயித்தில என்னதான் இருக்கு? எனக்கு கனவில கொம்பு முளைச்ச மனுஷங்களா வராங்க,  ஏன்?” அண்ணா கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் கூறுவார் குணசீலன். 

“நிறைய புத்தகங்கள் படிங்க,  உங்களால படிக்க முடியலைன்னா யாரையாவது படிக்கச் சொல்லி கேளுங்க. மியூசிக் கேளுங்க,  மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்” என்பார் டாக்டர் பரிவுடன். 

வீட்டுக்கு கிளம்பும் போது மெடிக்கல் கிட்டை எடுத்து வரும் சபேசனிடம், “இரவு எந்த நேரத்திலும் தயக்கம் வேண்டாம். ஏதாவது சுந்தரத்திற்கு பிரச்சினைன்னா கூப்பிடுங்க, நான் வந்து பார்க்கிறேன்” என்று கூறுவார் குணசீலன்.

இந்த டாக்டர் மட்டும் இல்லையென்றால் தன் மைத்துனரின் நிலையை புவனாவால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

சுந்தரத்திற்கு அந்த வார ஆரம்பத்தில் இருந்தே பழச்சாறு கூட குடிக்க முடியவில்லை. கண்கள் முகம் புருவம் என எல்லாம் மஞ்சளாகி விட்டது. படுக்கையில் இருந்து எழக் கூட முடியவில்லை அவரால்.

இரவு விசிட் வந்த டாக்டர், “என்ன சுந்தர் ரொம்ப வீக்கா இருக்கார், டிரிப்ஸ் போட்டுருவோமா?” என்று கேட்டார்.

டிரிப்ஸ் போட்டு விட்டு அண்ணாவின் அறையை விட்டு வெளி வந்த டாக்டர், சபேசனிடம், “சுந்தரத்தின் பல்ஸ் கொஞ்சம் வீக்கா இருக்கு. அதனால அவர் பக்கத்திலேயே இருங்க” என்று கூறிச் சென்றார். 

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் அனைவரும் ஆஜர். அண்ணா உடம்புக்கு முடியாமல் படுத்ததில் இருந்து இது வழக்கமாகி விட்டது.

சுந்தரத்தின் அறையில் இருந்த சபேசன் ஹாலுக்கு வந்து, “ஒரு நிமிஷம் எல்லாரும் சுந்து ரூமுக்கு வாங்கோ, அவன் நம்ம எல்லாரையும் ஒட்டா சேர்த்து பார்க்கணும்னு சொல்றான்” என்றான் கவலையுடன்.

அனைவரும் மௌனமாக போய் நின்றனர். சுந்தரத்தின் முகத்தில் தாங்கொண்ணாத் துயரம். எல்லாருடைய முகத்தையும் ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்து மனதில் வாங்கிக் கொண்டவர், “போயிட்டு வாங்கோ” என படுக்கையில் சாய்ந்து கொண்டார்.

புவனாவிற்கு, சுந்தரம் மன்னி சாந்தாவின் முகத்தை ஏறிட்டும் பார்க்காதது உறுத்தலாக இருந்தது. 

அன்று மாலையே அண்ணா மயக்க நிலைக்குப் போய் விட்டார். இரவு வந்த டாக்டர் சுந்தரத்திற்கு  பல்ஸ் பார்த்து விட்டு, “பார்க்கலாம், தேவைன்னா கூப்பிடுங்க” என்று கூறியவர் அண்ணாவின் முகத்தை உற்றுப் பார்த்து விட்டு சென்று விட்டார்.

இரவே அண்ணாவின் உயிர் அடங்கியது. பதிமூன்றாம் நாள் காரியம் முடிந்து மன்னி சாந்தா, அவர் குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பும் பொழுது மாமனார் சிறுவன் ராஜேஷின் கையை பிடித்துக் கொண்டு சாந்தாவிடம் “இது உன் வீடம்மா, நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம். இவன் என் பேரனம்மா, ஞாபகத்தில் வைச்சுக்கோ” என்றார் தளுதளுத்தபடி. 

சுந்தரம் இறந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது.  சாந்தாவிடம் இருந்து கடிதமோ போனோ எதுவும் வரவில்லை. புவனாவின் மனதை வண்டாய் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு அன்று விடை கிடைத்தது.

மும்பையில் ஒரு இண்டர்வியூ முடித்து விட்டு வீட்டுக்கு வந்த தன் நாத்தனார் பையன் ரமேஷிடம் புவனா விசாரித்தாள்.

“என்னடா ரமேஷ், சாந்தா மாமியை பார்த்துட்டு வந்தயா எப்படி இருக்கா மாமி” என்றவளிடம்

“என்னத்தை சொல்ல மாமி, இப்போ  சுந்தர மாமா ஆஃபீஸில் தான் சாந்தா மாமி வேலை செய்யறா. ஆனா  என்னோட அதிகம் பேசலை. யாரோ ஒருத்தர், மாமி ஊரிலேந்து வந்தவர் போல. அவரோடையே பேசிட்டு வெளியே போயிட்டாங்க இரண்டு பேரும். நான் கிளம்பி வந்துட்டேன்” என்றான் ரமேஷ் சலிப்புடன்.

புவனாவிற்கு முடிச்சு ஒன்று அவிழ்ந்தது போல் இருந்தது. 

கணவன் ,மனைவி உறவு சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் நட்பு நிலையில் இருக்க வேண்டும். அண்ணா, உடல் வேதனையால் மட்டுமல்ல, எதையும் பகிர்ந்து கொள்ள இயலாது மனஉளைச்சலாலும் துடித்து இருக்கிறார்  என புரிந்து கொண்டாள் புவனா.

ஆண்டுகள் பல கடந்தாலும் அண்ணா அணுஅணுவாக உடல் உபாதையில் வேதனைப்பட்டு துடித்து இறந்தது தான் வீட்டில் அனைவர் மனதிலும் தழும்பாக இருக்கிறது. 

புவனாவின் சிந்தனை ஓட்டத்திற்கு கடிவாளமிட்டது வாசல் அழைப்பு மணி.

“இதுவும் கடந்து போவாய், காலம் தான் அனைவரின் மனப்புண்ணுக்கும் மருந்தாகிறது” என நினைத்த புவனா வாசலில் யார் எனப் பார்க்க விரைந்தாள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காக்க! காக்க! ❤ (பகுதி 7) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 19) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்