in ,

புதிர்களின் நடுவில் (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

        ராஜகோபால் முகத்தில் கோப ரேகைகள் தாறுமாறாய் ஓடிக் கொண்டிருந்தன. ரம்யாவிற்கு அப்பாவின் முகத்தைப் பார்க்கவே பயமாயிருந்தது.    “ஏண்டா அவரைத் தன்னுடன் அந்த இண்டர்வியூற்கு அழைத்து வந்தோம்?” என்றிருந்தது.

      மதிய நேரமானதால் அந்தப் பேருந்து நிலையத்தில் அவர்களிருவரையும் தவிர வேறு யாருமேயில்லை.   தொண்டை வறண்டு ஒரு ஜூஸ் குடித்தால் தேவலாம் போலிருந்தது ரம்யாவிற்கு.  ஆனால், அதை அப்பாவிடம் கேட்க பயமாயிருந்தது.

      அங்கு யாரும் இல்லை, என்கிற தைரியத்தில் அப்பா தன் கோபத்தை நிதானமாய்க் கொட்ட ஆரம்பித்தார்.

      ‘ஏம்மா… நீ என்ன படிக்காத கிராமத்துப் பொண்ணா?… இந்தக் கோயமுத்தூரில் பொறந்து வளர்ந்திருக்கே… போதாக்குறைக்கு எம்.எஸ்.ஸி.வேற படிச்சிருக்கே… அப்புறம் ஏம்மா இண்டர்வியூல சகஜமாப் பேசாம வாய் குழறி… கை காலெல்லாம் நடுங்கி… வேர்த்து… விறுவிறுத்து… ச்சை… எனக்கே வெட்கமாயிருந்தது அப்ப நீ இருந்த கோலத்தைப் பார்க்க…” சொல்லியபடியே தலையிலடித்துக் கொண்டார்.

      ரம்யாவிற்கு அழுகை முட்டியது.  சிரமப்பட்டு அடக்கிக்  கொண்டு  நின்றாள்.

      ‘ஹூம்… உன்னையெல்லாம் படிக்க வைக்கக் கொட்டுன காசுக்கு நாலஞ்சு பசு மாட்டை வாங்கிக் கட்டியிருந்தா பெருசாவே சம்பாரிச்சிருக்கலாம்!… அது சம்பாதிச்சுக் குடுக்கற காசுல உனக்கொரு மாப்பிள்ளையையும் பார்த்துக் கட்டி வெச்சிருக்கலாம்..”

      ஒரு சிறிய அமைதிக்குப் பின், மீண்டும் ஞாபகம் வந்தவராய், ‘ஏம்மா… இண்டர்வியூல உன்கிட்ட கேள்வி கேட்டவங்கெல்லாம் மனுசங்கதானே?… பேயோ… பிசாசோ.. இல்லையே… அப்புறம் ஏன் அத்தனை பயம்?… கை காலெல்லாம் நடுங்குது, முகமெல்லாம் வேர்த்துப் போச்சு… வாயிலிருந்து வார்த்தைகளே வர மாட்டேங்குது!… ச்சை சனியன்… சனியன்!… எனக்குன்னு வந்து பொறந்திருக்கே பாரு..?” டன் கணக்கில் வெறுப்பை முகத்தில் தேக்கிக் கொண்டு பேசினார் அப்பா.

      ‘இல்லேப்பா… அத்தனை ஆம்பளைக முன்னாடி திடீர்னு போய் நின்னதில் கை கால் உதறலெடுத்திடுச்சு”  ரம்யா மெதுவாய்ச் சொல்ல,

      ‘அது சரி… கம்பெனின்னா ஆம்பளைங்க இருக்கத்தான் செய்வாங்க!… அது என்ன சாதாரண கம்பெனியா?… வெளிநாட்டுக் கம்பெனி… அதோட ஹெட் ஆபீஸ் ஜெர்மன்ல இருக்கு… அதனால நாளைக்கு வெளிநாட்டு ஆம்பளைங்க கூட வருவாங்க… போவாங்க.. அவங்க கூடவெல்லாம் பேசி சமாளிக்கணும்… ஏன்னா…. இந்த இண்டர்வியூவே ரிஸப்ஷனிஸ்ட் போஸ்ட்டுக்கு….!… இங்க ரிஸப்ஷனிஸ்ட்தான் வர்றவங்களையெல்லாம் கலகலப்பா… தெளிவாப் பேசி….வரவேற்கணும்!…. நீ என்னடான்னா… நாலு பேரை ஒரு சேரப் பார்த்ததுக்கே நடுங்கிப் போயிட்டே… ம்ஹூம்…நீயெல்லாம் எதுக்குமே லாயக்கில்லை!… போ…  வீட்டுக்குப் போய் அம்மா கிட்டே நல்லா சமையல் கத்துக்கோ… கூடிய சீக்கிரத்திலேயே எவன் தலையிலாவது கட்டி வெச்சிடறேன்… அங்க போய் சட்டி பானை கழுவு!”

      ‘அப்பா… எனக்கு முன்னப் பின்னே ஆம்பளைக கூடப் பேசிப் பழக்கமிருந்தா… ஆகும்…. நான் உங்களைத் தவிர வேற எந்த ஆம்பளை கிட்டேப்பா பேசியிருக்கேன்?… சொல்லுங்க பார்க்கலாம்” லேசாய் தைரியம் வரப் பெற்றாள்.

      ‘பேசியிருக்கணும்… பேசிப் பழகியிருக்கணும்… அதுதான்… இந்தக் காலத்துப் பொண்ணு… நீயும் இருக்கியே… தண்டம்…. தண்டம்!… தனியா ஏரோப்ளேன் ஏறி… அமெரிக்காவுக்குப் போய் வேலை பார்க்கிறாளுக உன் வயசுப் பொண்ணுக…”

      பேருந்து வந்து நிற்க இருவரும் ஓடிப் போய் ஏறி அமர்ந்தனர்.  

      “ஆடி போனா ஆவணி… இவ ஆள மயக்கும் தாவணி” பஸ்ஸில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

      பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யாவின் நினைவுகள் பின்னோக்கிப் பயணித்ததில் அவளுக்கு அந்த நாளைய சில காட்சிகள் கண் முன்னே விரிந்தன.  “எனக்கென்னமோ என் கிட்டே எந்தத் தப்புமே இல்லேன்னுதான் தோணுது!… எல்லாத் தப்பையும் தங்களிடம் வெச்சுக்கிட்டு.. என்னை எதுக்குத் திட்டறாங்க?”

      பழைய நினைவுகள் வரிசையாய் வந்து போயின.

      ஆறு வயது ரம்யா பக்கத்து வீட்டு சிறுவனோடு பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்தாள்.  ‘ஏய்… பொட்டக் கழுத… அங்க என்னடி ஆம்பளைப் பையனோட வெளையாட்டு.. வாடி எந்திரிச்சு” அவள் பாட்டி கத்தலாய் அழைத்ததோடு நில்லாமல் வந்து அவள் முதுகில் நாலு சாத்து சாத்தி இழுத்துச் சென்றாள்.  

போகும் போதே ‘இத்தோட சரி… இனி எங்காச்சும்… ஆம்பளைப் பசங்களோட வெளையாடிட்டு இருக்கறதைப் பார்த்தேன்… கன்னாமுழிய நோண்டிடுவேன்… ஜாக்கிரதை!” என்று மிரட்டினாள்.

      பதினோரு வயது ரம்யா வகுப்புத் தோழனுடன் அவன் சைக்கிளில் டபுள்ஸ் வந்து இறங்கிய போது, தாவி வந்து அவள் தலை முடியைக் கொத்தாய் பற்றிய அப்பா ‘என்ன ஒரு திமிர் இருந்தா… ஒரு ஆம்பளைப் பையனோட டபுள்ஸ் வருவே?… அதுவும் அவன் கூட ஒட்டி உரசிக்கிட்டு?… இந்த வயசுல உனக்கு ஆம்பளை சகவாசம் கேட்குதா?” என்று கேட்டவாறே தலை முடியை இப்படியும் அப்படியும் ராட்சஸத்தனமாய் ஆட்டினார்.  அம்மா குறிப்பிட்ட அந்த “ஆம்பளை சகவாசம்” என்னும் வார்த்தையின் அர்த்தம் கூடப் புரிபடவில்லை ரம்யாவிற்கு.

      பதினேழு வயது ரம்யா வசூலுக்கு வந்திருந்த கேபிள் டி.வி இளைஞனிடம் சரியாகப் படம் வராதது குறித்தும், சில சேனல்கள் தாங்கள் கேட்டிருந்தும் தங்களுக்கு வராதது குறித்தும் கேட்டுக் கொண்டிருந்த போது, வாசலுக்கு வந்த அப்பா ‘ஏய்… அவன்கிட்ட உனக்கென்னடி பேச்சு வேண்டிக் கெடக்கு.. வாடி உள்ளார!…” என்று அந்த மூன்றாம் மனிதன் முன்னாடியே அவமானப் படுத்தி அழைத்துச் சென்றது.

      உள்ளே சென்றதும் ‘ஏண்டி… பொம்பளைப்புள்ள அடக்க ஒடுக்கமா இருக்கணும்கறது உனக்குத் தெரியாதா?… வெளில நின்னு எவனோ கூடப் பேசிட்டிருக்கியே… ஒரு கூச்ச… நாச்சமே கிடையாதா உனக்கு?… த பாரு… இப்பச் சொல்றதுதான் நல்லாக் கேட்டுக்க… எங்காச்சும்…. எவனாச்சும் ஆம்பளைகளோட சேர்றது… பழகறதுன்னு வெச்சுக்கிட்ட… அவ்வளவுதான்… தொலைச்சுப் போடுவேன் தொலைச்சு!… ஹும்… இதையெல்லாம் உங்கம்மா சொல்லித் தரணும்… நான் சொல்லிட்டிருக்கேன்” என்று மெல்லிய குரலில் சாட்டையை வீசினார்.

      “லட்சுமி மில்ஸ் ஸ்டாப்பெல்லாம் இறங்குங்க” கண்டக்டர் கத்தலில் பழைய நினைவுகளிலிருந்து மீண்ட ரம்யா, “இவங்க என்னை சுதந்திரமா விட்டிருந்தா… நானும் ஆண்களோடு சகஜமாகப் பேசிப் பழகும் மன நிலையோட வளர்ந்திருப்பேனே?… இவங்கதான் என்னைக் கட்டிப் போட்டு வெச்சிருந்தாங்களே?… அப்படி நான் ஆண்களோட பழகியிருந்தா என்னவாகியிருக்கும்?… நானென்ன காதல் கத்திரிக்காய்னு விழுந்து எவனாச்சு கூட ஓடியா போயிருப்பேன்?… அப்படி செஞ்சா குடும்ப மானம், எதிர்கால வாழ்க்கை எல்லாமே கெட்டுப் போயிடும்ன்னு எனக்குத் தெரியாதா?…”

      வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில், பல் வேறு சூழ்நிலைகளில் ஆண்களுடனான யதார்த்தப் பேச்சு வழக்குகளைக் கூட, மாபெருந் தவறாய்ப் பேசியவர்கள் இன்று தன்னைப் பார்த்து, ‘நீ இந்தக் காலத்துப் பொண்ணுதானா?…. தண்டம்… தண்டம்!” என்று விகல்பமாய்க் கேட்டது ரம்யாவிற்கு புரியாத புதிராய் இருந்தது.

      பாவம், அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை…. அதுதான் இன்று வரை பெண் இனத்திற்கே புரியாத புதிராய் விண் வரை நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றது, என்கிற உண்மை.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)     

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீதும் நன்றும் (சிறுகதை) – முகில் தினகரன்

    சிவந்த மேகங்கள் (பகுதி 2) – இரஜகை நிலவன்