in ,

பிராயச்சித்தம் (சிறுகதை) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அமுதா பரபரப்புடன் காணப்பட்டாள். அடிக்கடி கையை தூக்கி வாட்சைப் பார்த்துப் பார்த்து முணுமுணுத்தாள்.

“அய்யோ மணி ஒன்பது பத்து ஆயிடுச்சே!… ஒன்பதரைக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆயிடுமே!… ச்சே… இன்னிக்குப் பார்த்து இந்த பஸ் நம்மை பழி வாங்குதே?… வரட்டும்.. இந்த பாஸ்கரை இன்னைக்கு கண்டபடி திட்டித் தீர்த்திடறேன்”

ஏகப்பட்ட மக்களை அடைத்துக் கொண்டு, ஏகப்பட்ட புகையையும்… புழுதியையும்… பரப்பிக் கொண்டு, அவள் பஸ் வந்து விட்டது.  பஸ்ஸை ஓட்டி வரும் தன் காதலன் பாஸ்கரை காணப் போகிறோம் என்கிற ஆவல் ஒருபுறம் இருந்தாலும், எக்ஸாமுக்கு நேரமாகிவிட்டதே… என்கிற கவலை இன்னொரு புறமும் அமுதாவை வாட்டியது.

பஸ்ஸில் ஏறிய அமுதா டிரைவர் சீட்டுக்கு இடதுபுற இருக்கையில் அமர்ந்தாள்.

பாஸ்கரை ஒரு காதல் பார்வை  பார்த்து விட்டு, “பாஸ்… ஒன்பதரைக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆயிடும்…. இப்பவே மணி ஒன்பதே கால் ஆயிடுச்சு!…. என்னை எக்ஸாம் ஆரம்பிக்கறதுக்குள்ளார ஹால்ல கொண்டு போய் சேர்த்திடுவியா?… இல்லை எக்ஸாமே எழுத விடாமப் பண்ணிடுவியா?” செல்லமாய்க் கோபித்தாள்.

“அதான் இன்னும் கால் மணி நேரம் இருக்கல்ல?… அப்புறமென்ன?” என்றான் பாஸ்கர்.

“நீ என்ன செய்வியோ… ஏது செய்வியோ… எவ்வளவு வேகமா உன்னால போக முடியுமோ… அவ்வளவு வேகமாய்ப் போய்… என்னை எக்ஸாம் டைமுக்குள்ளார கொண்டு போய்ச் சேர்த்திடு!” என்றாள் அமுதா.

அந்த நிமிடத்தில் காதலியின் சொல்லே வேதவாக்காகத் தோன்ற பாஸ்கர் பஸ்ஸை சீற விட்டான்.  அடுத்தடுத்து வந்தபேருந்து நிறுத்தங்களில் பஸ்ஸை நிறுத்தாமலேயே பறந்தான்.

அங்கு நின்றிருந்தவர்களில் சிலர்,  “பஸ்ஸை நிறுத்தாமலே போறானே பாவி” என்று ஏசினாலும்,  “அதான் ஏற்கனவே ஓவர் லோடு ஏத்திட்டானே?… அப்புறம் எப்படி நிற்பான்?… அதனால்தான் நிற்காமல் பறக்கிறான்” என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டனர்.

கண்ணை மூடிக் கொண்டு பறந்த பாஸ்கருக்கு விதி… எதிரில்… ஒரு ஸ்கூட்டர் ரூபத்தில் வந்தது.

முன்புறம் ஒரு குழந்தையையும், பின் இருக்கையில் தன் மனைவியை ஏற்றிக் கொண்டு வந்த அந்த நபர் எதிரே வரும் பஸ்சின் அசுர வேகத்தைப் பார்த்துத் தடுமாற, டிராபிக் கான்ஸ்டபிளும் விஸிலடித்து பஸ்ஸை நிறுத்த முயல, இதையெல்லாம் உணரும் நிலையிலா இருந்தான் பாஸ்கர். கடைக்கண் பார்வையை அமுதா காட்டிக் கொண்டே இருந்தால் அவன் ஒரு நிலையிலா இருப்பான்.

“ட….மா…ர்”

ஸ்கூட்டரை மோதித் தள்ளி விட்டு, அதில் பயணித்தவர்களை ரோட்டோடு சேர்த்து அரைத்து விட்டுப் பறந்தது பஸ்.

என்ன நடந்தது என்பதை உணராத பாஸ்கர் தன் காதலியை சரியாக ஒன்பது இருபத்தியெட்டுக்கு கல்லூரி வாசலில் இறக்கி விட்டுவிட்டு,  “அப்பாடா… எப்படியோ அமுதாவை பரீட்சை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி கொண்டு வந்து சேர்த்திட்டோம்” என்கிற திருப்தியில் கல்லூரிக் காம்பவுண்டுக்கு வெளியே உள்ள பெட்டிக்கடையில் நிறுத்தி, ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தான்.

சிகரெட் புகையை ஆழ உறிஞ்சி, அழகாய் வெளியிட்டுக் கொண்டிருந்த பாஸ்கரை நோக்கி மூன்று பைக்குகளில், மூன்று டிராபிக் கான்ஸ்டபிள்கள் வந்து இறங்கினார்கள்.

கோர்ட்டில் ஐந்து வருடம் சிறைத்தண்டனை பெற்று, கோவை சிறையில் ஐந்து வருடங்களைக் கழித்து விட்டு விடுதலையடைந்த பாஸ்கர் சென்னையை நோக்கித் தன் காதலியை காணும் ஆவலில் அன்றே ரயிலேறினான்.

அமுதாவின் பழைய வீட்டில் வேறு யாரோ குடியிருக்க, அவள் கல்லூரித் தோழியொருத்தியின் வீட்டைக் கண்டுபிடித்தான். அங்குதான் அந்த இடிச்செய்தியைக் கேட்டான்.

“என்னது… அமுதாவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”

ஆரம்பத்தில் அழுதான். துடித்தான். பைத்தியம் போல் தெருவெல்லாம் திரிந்தான். சுய பச்சாதாபத்தில் உணவு உண்ணாமல் கிடந்தான்.  அந்த சுய பச்சாதாபம் ஒரு கட்டத்தில் கோபமாய் மாற, அந்தக் கோபம் ஒரு கட்டத்தில் வெறியா உருமாற, தீர்மானித்தான். “என்னை ஏமாற்றிய அவளை விட்டு வைப்பதா?… கூடாது… கூடவே கூடாது”

அமுதாவைத் தேடி அவள் வீட்டிற்கே சென்றான்.

கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்ற பாஸ்கரை ஒரு சிறுமி வித்தியாசமாக பார்த்து விட்டு உள்ளே ஓடினாள்.

“அம்மா யாரோ வந்திருக்கிறார்கள்” என்ற சிறுமியின் குரலைக் கேட்டு வாசலுக்கு வந்தாள் அமுதா.

வந்தவள் தாடி மீசையோடு பைத்தியக்காரன் போலிருந்த பாஸ்கரைக் கண்டு முதலில் பயந்தாள். பிறகு சுதாரித்துக் கொண்டு,

“வாங்க பாஸ்கர்!… நல்லா இருக்கீங்களா?” கேட்டாள்.

“என்ன… என்ன  கேட்டே?… “நல்லா இருக்கீங்களா?”ன்னா கேட்டே?… எப்படி எப்படி நல்லா இருப்பேன்?… ஐந்து வருஷமா ஜெயில்ல இருந்தப்ப ஒவ்வொரு நாளும் நீ என்னைப் பார்க்க வருவே… வருவே!ன்னு காத்திருந்தேன்!… நீ வரலை!… அங்கே ஒரு ஏமாற்றம்!… அதுக்கப்புறம்… எப்படியும் எனக்காக நீ காத்திட்டிருப்பே!ங்கற நம்பிக்கைல… விடுதலையானதும் நேரா உன்னைத் தேடி ஓடி வந்தேன்!.. இங்கே இன்னொரு ஏமாற்றம்!…  உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு அமுதா… அன்னிக்கு நான் பஸ்ஸை ஏன் ஸ்பீடா ஓட்டினேன்?… எதுக்காக…. யாருக்காக…. கண்ணுமண்ணு தெரியாம விரட்டினேன்?…நீ சொன்னதுக்காக… உன்னைக் கொண்டு போய் கரெக்ட் டைம்ல எக்ஸாம் ஹால்ல விடணும்ங்கறதுக்காக!…. கரெக்டாக் கொண்டு போய் விட்டேன்!… அதுக்கு எனக்குக் கிடைச்ச பரிசு என்ன தெரியுமா?… சிறைத் தண்டனை!… அஞ்சு வருஷ சிறைத் தண்டனை!… அதையும் சந்தோஷமா அனுபவிச்சேன்… ஏன் தெரியுமா?… எனக்காக என்னோட அமுதா காத்திட்டிருப்பா… அவ கழுத்துல தாலி கட்டி அவளோட சந்தோஷமா வாழப் போறோம்! என்கிற எதிர்பார்ப்பில்!… ஆனா நீ?…” கத்தி விட்டு மறுபக்கம் திரும்பி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “”இது நியாயமா சொல்லு அமுதா …நீ செய்தது நியாயமா?….சொல்லு!” அடித் தொண்டையில் கத்தினான்.

”இங்க பாருங்க பாஸ்கர்!… நான் செய்தது தப்புதான்… ஒத்துக்கறேன்!… ஆனா அந்தத் தப்புக்கான பிராயச்சித்தத்தை நான் செய்து விட்டேன்” என்றாள் அமுதா.

“என்னடி?… என்னை விட்டுட்டு வேற எவனையோ கட்டிக்கிட்டு ஜாலியா… சந்தோஷமா… வாழ்ந்திட்டிருக்கியே?… இதுவா… இதுவா பிராயச்சித்தம்?”

“கொஞ்சம் இருங்க பாஸ்கர்” என்ற அமுதா, அந்தச் சிறுமியைப் பார்த்து, “செல்வி…  போய் அப்பாவை கூட்டிக்கிட்டு வாம்மா” என்றாள்.

இரண்டே நிமிடத்தில் அந்தச் சிறுமி சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபரை ஒரு வீல்சேரில் அமர வைத்து, தள்ளிக் கொண்டு வந்தாள்.  வந்த மனிதருக்கு இடுப்புக்கு கீழே இரண்டு கால்களும் இல்லை.

ஏதும் புரியாமல் நின்றிருந்த பாஸ்கரிடம், “இவரை தெரியுதா உங்களுக்கு?”

அவன் உதட்டைப் பிதுக்க, “என்னால்…. அதாவது உங்களால்…. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பஸ் மோதி விபத்துக்குள்ளானவர்!… அந்த விபத்துல இவர் தன்னோட இரண்டு கால்களையும் இழந்து,  அழகான மனைவியையும் இழந்து, ஒரு பெண் குழந்தையுடன் தவித்துக் கொண்டிருந்தார்.  பாஸ்கர்… எனக்கு நீங்க இல்லாவிட்டால் இன்னொரு புருஷன் கிடைப்பான்!… அதே மாதிரி… உங்களுக்கும் என்னை விட்டால் இன்னொரு மனைவி கிடைப்பாள்!… ஆனால் அந்த மனிதருக்கு ரெண்டு கால் கிடைக்குமா?… அந்தக் குழந்தைக்கு ஒரு தாய் கிடைக்குமா? இரண்டு கால்களையும் இழந்த இவரை மணந்து கொண்டு அந்த குழந்தைக்கு தாயாக வர எவ சம்மதிப்பா?… யோசித்துப் பாருங்கள் பாஸ்கர்!… அதனால்தான் இந்த ஜென்மத்தில் நீங்களும் நானும் சேர்ந்து செய்த இந்த பாவத்துக்குப் பிராயச்சித்தமா… நானே அவரை மணந்து கொண்டு அந்த குழந்தைக்கு தாயாக… அவருக்கு மனைவியாக இருந்து பணிவிடை செய்து நம்ம பாவத்தை தீர்க்கிறேன்!… இது தப்பா சொல்லுங்க பாஸ்கர் இது தப்பா?”.

எதுவும் பேச முடியாத பாஸ்கர்,  “அமுதா நீ தங்க மனசுக்காரி அமுதா!.. இதே வேறொருத்த்ரா இருந்திருந்தா… பழி பாவத்தையெல்லாம் என் மேல் சுமத்தி விட்டுட்டு தாங்க எஸ்கேப் ஆகியிருப்பாங்க!… ஆனா நீ?… உன்னோட வாழ்க்கையையே தியாகம் செய்து பாவக்கறையை கழுவப் பார்த்திருக்கே!… நீ தெய்வப்பிறவி அமுதா!..” என்று சொல்லி விட்டு,  “விடு…விடு”வென்று வெளியே வந்த பாஸ்கர் மன திருப்தியுடன் வீதியில் நடந்தான்.

வழியிலிருந்த கோயிலைப் பார்த்து வழக்கம் போல் கன்னத்தில் போட்டுக் கொள்ளப் போனவன் நிறுத்தி விட்டு,  “இங்க மனித உருவில் தெய்வங்கள் நிறைய இருக்கு அவங்களையே கும்பிட்டுக்கலாம்!” என்று நினைத்தபடி வேகமாக நடந்தான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பஞ்சாயத்து (பகுதி 1) – நாமக்கல் வேலு

    சூப்பையன் (சிறுகதை) – முகில் தினகரன், கோயமுத்தூர்.