in ,

பொறுமையாகவும் சாதிக்கலாம் (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

       “சுயமா உழைச்சு… நாலு காசு சம்பாதிச்சிருந்தா காசோட அருமை தெரியும்!… எவனோ சம்பாதிக்கிற காசுலதானே… இத்தனை ஆட்டம் போடறே?…தான் அருமை தெரியலை!… ஹும்… பொறுப்பு இல்லாத பயல்!” சமையலறையில் வேலை செய்தபடி மகனைத் திட்டிக் கொண்டிருந்தாள் வடிவம்மா.

      “அம்மா!… நான்தான் சொல்றேனே?… எனக்கே தெரியாமல் நடந்து போச்சுன்னு!.. நீ இப்படிக் கத்தினா மட்டும் தொலைஞ்சு போன என்னோட சைக்கிள் கிடைச்சிடுமா?” முருகனும் பதிலுக்குத் தாயை எகிறினான். வசவுகளைத் தாங்கிக் கொள்ள முடியாத விடலை வயசு அவனுக்கு.

      “பேசாதடா!… பிளஸ் டூ படிக்கிறவனாட்டமா நடந்துக்கறே?… ஹும்… இப்படியே போனா என்னைக்குத்தான் பொறுப்பு வரும் உனக்கு?”.

      அப்போது, வீட்டுக்குள் நுழைந்த முருகனின் தந்தை கிருஷ்ணன் மனைவியின் கத்தலைக் கேட்டு,  “என்னடி நடந்தது?.. ஏண்டி பையனைத் திட்டிக்கிட்டே இருக்கே?” கேட்டார்..

      “நடந்தது என்ன?ன்னு உங்க அருமை மகனையே கேளுங்க” அவளுடைய தாக்குதல் மகனை விட்டு விட்டு, இப்போது புருஷனுக்குத் தாவியது.

      “என்னப்பா பண்ணினே?… சொல்லுப்பா” வெகு இயல்பாகக் கேட்டும் முருகன் பதில் சொல்லாமல் நின்றான்.

      “அவன் எப்படிச் சொல்லுவான்?… “வேண்டாம்… வேண்டாம்னு சொல்லியும் கேட்காம… அவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தீங்களே… இப்ப அதைத் தொலைச்சிட்டு வந்து நிக்குது சனியன்”.

      கிருஷ்ணன் மகனைப் பார்க்க, “அது… வந்துப்பா…. ஃப்ரெண்ட்ஸ்களோட சேர்ந்து கிரிக்கெட் பார்க்க நேரு ஸ்டேடியத்திற்கு போனப்ப சைக்கிளை வெளியே நிறுத்தி இருந்தேன்!… திரும்பி வந்து பார்த்தப்ப சைக்கிளை காணோம்” பரிதாபமாய் பதிலளித்தார்.

       “அடச்சே… இதுதானா?… நான் கூட என்னமோ… ஏதோ?ன்னு பயந்திட்ட்டேன்!… சரி… பரவாயில்லை போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து வெச்சிட்டா… அவங்க கண்டுபிடிச்சுக் குடுத்துடுவாங்க!… அவங்களுக்குத் தெரியும் இந்த ஏரியாவுல சைக்கிள் திருடன் யாரு?… அவன் இப்ப சைக்கிளை எங்கே வெச்சிருப்பான்?… எல்லாம் தெரியும்!… நீ கவலைப்படாதப்பா… வண்டி கிடைச்சிடும்… ஏன்னா…?.. அது உழைச்சு சம்பாதிச்ச காசுல வாங்கினதாக்கும்” என்று மனசுக்குள் கோபமும் எரிச்சலும் ஏற்பட்டும் அதை மகனிடம் காட்டாமல் தவிர்த்தார்.

“ஓ… ரொம்ப நல்லாருக்கு… நீங்க பேசறது!… இப்படி எதுக்குமே அவனை கண்டிக்காம விட்டுட்டா… சுத்தமா பொறுப்பில்லாமல் போயிடுவான்!” வடிவம்மா விடுவதாய் இல்லை.

      “வடிவு… நீ கொஞ்சம் பேசாம இருக்கியா?… தம்பி நீ போப்பா…” மகன் பக்கம் திரும்பி அவனை அங்கிருந்து நகர்த்தினார் கிருஷ்ணன்.

      இதுதான் சமயம் என்று அங்கிருந்து உடனே நகர்ந்தான் முருகன்.

      அவன் போனதும் மனைவியிடம் வந்த கிருஷ்ணன், “வடிவு.. கொஞ்சம் நான் சொல்றதைத் தெளிவாக் கேட்டுக்கோ!… இந்த வயசுல… அவனைத் திட்டறதினாலேயோ.. இல்லை அடிக்கிறதுனாலேயோ…. அவனுக்குப் பொறுப்பு வந்திடாது!… அதுக்கு பதிலா ஆவேசமும்… ஆத்திரமும்… மனசுல வந்து ஒட்டிக் கொள்ளும்!… அப்புறம் அதுவே கடைசி வரைக்கும் மாறாம இருந்து அவனுடைய கேரக்டரையே மாத்தி… அவனோட எதிர்காலத்தையே நாசமாக்கிடும்!” கனிவாய் சொன்னார்.

      “அது சரி… கண்டிக்காம விட்டுட்டா மட்டும் இவன் திருந்திடுவானா?” வடிவு எதிர்க்கேள்வி கேட்டாள்.

      “இப்பத்த இளசுகளைக் கண்டித்து…. மிரட்டறதை விட அதுக கையில் பொறுப்பைக் கொடுத்துட்டா… அதுல இருக்கிற கஷ்ட நஷ்டங்களை அவங்க புரிஞ்சுக்கிட்டு…. ஆட்டோமாடிக்கா திருந்திடுவாங்கடி!…” என்றவர் மனையின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து,  “நம்ம பையனைத் திருத்த நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன்!’ என்றார்.

“திட்டமா?… என்ன திட்டம்?”

“இப்பச் சொல்ல மாட்டேன்… அடுத்த வாரம் அதைச் செயல்படுத்த ஆரம்பிப்பேன் பாரு அப்ப உனக்கே புரியும்” ஆணித்தரமாய் பேசினார் கிருஷ்ணன்.

      “ம்ஹும்… எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை!” என்று. சொல்லி விட்டு வடிவம்மா அங்கிருந்து நகர்ந்தாள்.

      அடுத்த வாரத்தில் ஒரு நாள், முருகனை அழைத்த கிருஷ்ணன்,  “முருகன் எனக்கு வயசாயிட்டது… அதனால மறதி அதிகம் ஆயிட்டதப்பா!… என்னால சரிவர கணக்கு வழக்கெல்லாம் பார்த்து… வீட்டுச் செலவுகளைச் செய்ய முடியல!… யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்?… எவ்வளவு கொடுத்தோம்?… என்பதெல்லாம் சட்டுன்னு ஞாபகத்துக்கு வராம மறந்து போயிடுது…. சரி.. பொறுப்பை உங்கம்ம்மா கிட்ட கொடுத்திடலாம்னு நெனச்சேன்.. ஆனா… அவ படிக்காதவ!… கணக்கு வழக்குல ஏமாந்துடுவா!… நீ படிச்சவன்… உன்னால தான் இனிமே இதை சரியாச் செய்ய முடியும்!… அதனால நீயே இனிமேல் பார்த்திடுப்பா!”.என்றார்.

      “சரிப்பா!” என்ற முருகனின் மனசுக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷமும்,  “குடும்பத்தையே நாம்தான் நிர்வகிக்க போகிறோம்!” என்கிற பெரிய மனுஷத் தோரணையும் உண்டானது.

“இந்த மாசத்திலிருந்து என்னோட சம்பளப் பணத்தை அப்படியே உன்கிட்ட கொடுத்திடறேன்!… நீயே கவனிச்சிடுப்பா”

 “கண்டிப்பா நானே கவனிக்கிறேன்ப்பா” என்றான் முருகன் மகிழ்ச்சியுடன்.

 “ஒண்ணு ஞாபகம் வச்சுக்க முருகன்!… நான் பார்த்துட்டு இருந்த வரைக்கும் மாசம் ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தி பேங்க்ல போட்டுட்டு வரேன்!… எதுக்குத் தெரியுமா?… உன்னோட காலேஜ் செலவிற்காக!”

“நீங்க கவலையே படாதீங்கப்பா!…. நான் அதுக்கு மேலேயும் மிச்சப்படுத்திக் காட்டுகிறேன்!” என்றான் நம்பிக்கையுடன்.

கிருஷ்ணன் மனசுக்குள் சிரித்துக் கொண்டார்.

      முருகனின் நம்பிக்கை முதல் மாதத்திலேயே வீண் போனது.  “அப்பா ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தினாராம்!…ச்சை… என்னால் அதைக் கூட மிச்சப்படுத்த முடியலையே!… எங்கேயோ தப்பு நடந்திருக்கு!… மளிகை சாமான்கள் வாங்கினதில் ஏமாந்திருப்பேனா?” யோசித்து யோசித்து தலையை பிய்த்துக் கொண்டான்.

      “இனிமேல் மளிகை சாமான்கள் வாங்கும் போது நாலு கடையில் கேட்டு… விசாரிச்சு… எங்க விலை கம்மியோ அங்கதான் வாங்கணும்!… வேற எந்த செலவை குறைக்கலாம்?.. ம்ம்ம்… என்னோட செலவுத் தொகை கூட ஜாஸ்தியா இருக்கற மாதிரித் தெரியுது… அதையும் குறைச்சிடலாம்”

 அவன் முயற்சி வெற்றி அடைந்ததில் அடுத்த மாசமே ஆயிரம் ரூபாயை மிச்சமாக்கி வங்கியில் சேர்த்தான்.

      “நானும் அப்பா மாதிரியே ஆயிரம் ரூபாயை மட்டும் மிச்சப்படுத்தினால் போதுமா?… என்னோட திறமையைக் காட்ட வேண்டாமா?” உற்சாகத்துடன் மேலும் பல செலவுகளைக் குறைத்தான். அதன் காரணமாய் வங்கிக்குச் செல்லும் தொகை இரு மடங்காகியது.

      ஐந்து மாதங்கள் உருண்டோடியது. பரீட்சைகள் நெருங்க ஆரம்பித்தது. முருகன் படிப்பில் சீரியஸாக மூழ்க ஆரம்பித்தான்.

இரவு, ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த முருகனுக்கு உள் அறையில் அம்மாவுடன் அப்பா பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.  அதை தன் பெயரும் அடிபட படிப்பதை நிறுத்தி விட்டுக் கூர்ந்து கவனித்தான்.

       “பார்த்தியாடி… என்னமோ சொன்னே?…  “அவன் கிட்ட பொறுப்பைக் குடுத்தா குடும்பமே நடு ரோட்டுக்கு வந்துடும்”ன்னு!… பயல்.. மாசம் ரெண்டாயிரம் ரூபாய் மிச்சப்படுத்தி பேங்க்ல போட்டுகிட்டிருக்கான் என்னால கூட முடியாம இருந்தது” என்றார் பெருமையுடன்.

       “ஆமாங்க!… நீங்க செஞ்சது தான் ரொம்பச் சரிங்க!.. அடிச்சுத் துன்புறுத்தி சொல்றத் விட அரவணைச்சுச் சொன்னா இளசுகள் நல்லாப் புரிஞ்சுக்குங்க!… எனக்கு இதுல ரொம்ப ஆச்சரியம் என்ன?ன்னா… மாசம் ஏழெட்டு சினிமா பார்த்துட்டிருந்த பையன்… இப்ப தியேட்டர் பக்கமே போறதில்லை!” வ்டிவம்மா வியப்புடன் கூறினாள்.

      லேசாய் சிரித்த கிருஷ்ணன்,  “அதைவிட இன்னொரு ஆச்சரியம் கூட இருக்கு கேளு!… அன்னைக்கு அவன்கிட்ட  “வேணும்ன்னா.. இன்னொரு புது சைக்கிள் வாங்கிக்கப்பா”ன்னு சொன்னேன், அதுக்கு அவன் சொல்றான் “எதுக்குப்பா அனாவசியமா மூணாயிரம் ரூபாயை அதுல முடக்கணும்!… என்னோட ஸ்கூல் என்ன பத்துக் கிலோமிட்டர் தள்ளியா இருக்கு?… ஜஸ்ட் ஒரு கிலோமீட்டர்தானே?.. நடந்தே போயிடுவேன்!… நடக்கிறது கூட உடம்புக்கு ஒரு நல்ல உடற்பயிற்சிதானே?… அப்படிங்கறான்”.

இருவரும் மெலிதாக மகனுக்கு கேட்காதபடி சிரித்தனர்.

      இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முருகனின் மனசு லேசாகியது.  

“அப்பா நீங்க உண்மையிலேயே ஜீனியஸ் அப்பா!… கண்டிக்காமக் கூடத் திருத்த முடியும்னு காட்டிட்டிங்களே அப்பா!… ஒருவேளை நீங்க என்னைத் திட்டி அடிச்சிருந்தாக் கூட நான் திருந்தியிருப்பேனா என்பது சந்தேகம்தான்!… எப்படியோ எதிர்காலத்தில் எதையும் நான் பொறுப்பாக கவனிக்கறதுக்கான எக்ஸ்பீரியன்ஸை எனக்கு இப்பவே கொடுத்துட்டீங்களே!”

 பெரிய படிப்பு எதுவும் படிக்காத தந்தையின் பெருந்தன்மையோடு கூடிய அறிவுத்திறன் அவனை புல்லரிக்க செய்தது.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குப்பனுக்காக கடவுளே வருவார் (சிறுகதை) – முகில் தினகரன்

    எல்லோருக்கும் பெய்யும் மழை (சிறுகதை) – முகில் தினகரன்