‘மனதிலே உறுதிவேண்டும்!.. வாக்கினிலே இனிமை வேண்டும்’ என்று பாடினார் மகாகவி பாரதியார். அதாவது பேசுகிற பேச்சில் இன்சொல் புகுத்தி, சூழ்நிலையை இனிமையாக்கு என்பதே அதன் அர்த்தம்.
சரி, இன்சொல் என்றால் என்ன?”
அன்பு நிறைந்த சொல்லே இனிய சொல், மதுர வாக்கு என்றும் கூறுவர்.
இன்சொல் என்பது இன் மற்றும் சொல் ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கையாகும்.
அன்பு நிறைந்த இன்சொல், இரும்புக் கதவைக்கூடத் திறக்கும்.
“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவது” (குறள், 99).
இன்சொல் அளாவல் இடம் இனிதூண் யாவர்க்கும்.
செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.
நம் வாழ்வின் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவைகளில் தலையாயது நம் பேச்சு. நம் பேச்சில் இனிய சொற்களும் உண்டு, வன் சொற்களும் உண்டு! எத்தகைய சொற்கள் நம் வாழ்வை இனிமையாக்கும் என்று தெரிந்து கொண்டால் நல்ல வளமான வாழ்வு வாழலாம்.
வாழ்க்கையில் நாம் பலரைச் சந்தித்திருப்போம். பேச்சாலேயே வாழ்வைக் கெடுத்துக்கொண்டவர்கள் மிகப்பலர். ‘அவனுக்கு வாக்கிலே சனி’ என்பார்கள். நல்லதைப் பேசியே அறியாதவர்கள், நயமாகப் பேசிப் பழகாதவர்கள், நச்சுப் பேச்சிலும், நயவஞ்சகப் பேச்சிலும் அமிழ்ந்தவர்கள்.
இன்சொல் இருக்க வன்சொல் கூறுவது, புளித்த காயைத் தின்பதற்கு ஒப்பாகும் என்பது வள்ளுவர் நமக்கு வழங்கிய அறிவுமொழி.
இன்சொல்லால் ஏற்படும் நன்மைகள் குறித்து ‘இனியவை கூறல் என ஓர் அதிகாரத்தையே வைத்தார். செந்நாப்புலவன்.
உலகப் பெரியார் காந்தியடிகள் உட்பட சான்றோர்கள் எத்தனையோ பேர் இன்சொல்லால் ஈர்த்தவர்கள். இந்த மேதைகள் பணச்சுவை காட்டி, சொற்பொழிவாற்றியவர்கள் அல்ல; பண்புச் சுவை கூட்டி இலட்சியக் கருத்துக்களை இங்கிதமாகப் பொழிந்தவர்கள்.
பேச்சிலே போலித்தன்மை இருக்கக்கூடாது. காரியத்தைக் கெடுக்கின்ற கடுஞ்சொல் கூடாது; அதிகாரத் தொனியோடு கூடிய ஆணவச்சொல் கூடாது.
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுபவனை மனிதன் என்று கூறக்கூடாது. அத்தகையவன் மனிதருள் பதர் போன்றவன் என்கிறார் உலகப் பொதுமறைக்கு உரிமையாளர்.
உயர்வு பெற வேண்டும், சிறப்புப் பெறவேண்டும் என்று குறிக்கோளை இலக்கை நாடிச் செல்பவர்களின் பேச்சு இனிமையாக இருக்கவேண்டும். பேச்சிலே அன்பு தவழவேண்டும்; இனிமை இழைய வேண்டும்.
அப்படிப்பட்ட பேச்சு சுவையாக இருக்கவேண்டும். அதுவும் சுருங்கக் கூறி விளங்க வைக்கும் தன்மையில் அமையவேண்டும் ஒவ்வொரு சொல்லும் முத்துக்கள் போல உதிரவேண்டும்.
நம் எதிரிகள் கூட நம் பேச்சின் அணுகுமுறையால் நண்பர்கள் ஆகவேண்டும். எனவே பயனில்லாத வீண் பேச்சுக்களை விலக்க வேண்டும்.
வாயை அசைத்தால் சத்தம் என்பது எல்லோருக்கும் வரும். வார்த்தைகளை இணைத்தால் வாக்கியம் உருவாகும். ஆனால் பேசும் பேச்சு மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்க்கிறதா, அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா என்பதைப் பொறுத்து தான் நமது பேச்சுக்கான மரியாதை கிடைக்கிறது.
சிலர் பேசுவதைக் கேட்டால் நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று கூடத் தோன்றும். பேசும் போது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும்.
சிலரது பேச்சுகள் அருவருப்பாக சபை நாகரீகம் இல்லாமல் இருக்கும். சிலர் பேசுவது அந்த சூழ்நிலைக்கு சம்பந்தமில்லாததாக இருக்கும்.
சிலர் பேசுவது தற்பெருமையாக இருக்கும், சிலரது பேச்சில் எப்போதும் எதிர்மறையான சிந்தனை இருக்கும்.
சிலரது பேச்சில் எப்போதும் விரக்தி தெரியும். நல்ல சந்தோஷமான ஞாயிற்றுக் கிழமைகளில் கூட “நாளைக்கு திங்கட்கிழமை, ஆபிஸ் போறத நினைச்சாலே கடுப்பா இருக்கு” என்று மறுநாள் சோகத்தை சந்தோஷமான சூழலில் வெளிப்படுத்துவார்கள்.
இப்படி பல ரகங்களில் பேச்சுகள் உண்டு.
ஒரு நல்ல பேச்சாளர் என்பவர் பல புத்தகங்களை வாசிப்பவராகவோ அல்லது பல நல்ல பேச்சாளர்கள், பெரியவர்கள், அறிவாளிகளின் பேச்சுகளை கேட்டு உணர்ந்தவராகவோ தான் இருக்க முடியும்.
பல விஷயங்களை முழுமையாகத் தெரிந்திருப்பது நல்ல பேச்சை வெளிப்படுத்த அவசியமாகிறது. இந்த முழுமையாக என்ற வார்த்தை முக்கியமானது.
ஏனென்றால் நாம் உதிர்க்கும் வாக்கியம் செய்தியா அல்லது புரளியா என்பது நாம் அந்த விஷயத்தின் ஆழத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
நாம் பேசும் பேச்சுகளையே நயமாக நல்ல விதமாக பேசினால் நமது உறவுகளுக்கும் சுற்றத்தாருக்கும் மகிழ்ச்சி தானே?
உதாரணமாக காலையில் வேலைக்கு செல்லும் கணவனிடம் மனைவி, “ஏங்க பைக்ல பாத்துப்போங்க, பக்குவமா ஆபிஸுக்கு போயிட்டு போன் பண்ணுங்க” என்று சொல்வது அன்பின் வெளிப்பாடு.
அதே இவ்வாறு சிந்தித்துப் பாருங்களேன் “ஏங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி எதிர்வீட்டுக்காரர் வேலைக்குப் போறப்ப தண்ணி லாரில அடிபட்டு தலை நசுங்கி செத்துட்டாராம், நீங்க மறக்காம ஹெல்மட் எடுத்துட்டுப் போங்க”
இதுவும் அன்பு தான், தன் கணவன் தண்ணி லாரியில் தலை நசுங்கி செத்துப் போயிரக்கூடாது என்ற நல்ல எண்ணம் தான். ஆனால் அப்படி சொன்னால் நமக்கு வேலைக்குப் போகத் தோன்றுமா?
ஆக நல்ல பேச்சு என்பது எதை எப்படி சொல்கிறோம் என்பதில் உள்ளது.
சில நேரங்களில் மௌனத்திற்கு வார்த்தைகளை விட பலம் அதிகம்.
இப்படி பல விஷயங்களையும் அனுபவங்களையும் கடந்து வரவே தான் நமது பேச்சு முதிர்ச்சியானதாக மாறுகிறது. எல்லாருமே முதிர்ச்சியான அருமையான பேச்சை வெளிப்படுத்த இயலாது என்பது உண்மை தான்.
ஆனால் அதற்கான முயற்சியை தாராளமாக செய்யலாமே?
வாய் மட்டும் இல்லாட்டி நாய் தூக்கிட்டு போயிரும், என்ற புதுமொழியையும், வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழியையும் கருத்தில் கொண்டு, ஒரு நல்ல முதிர்ச்சியான பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings