2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்த இடத்தை சோகம் மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்ததால் ஒருவித அவஸ்தையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. தலைக்குக் கைகளைத் தாங்கல் கொடுத்தபடி வியாதியஸ்தனைப் போல் திண்ணையில் விரக்தியுடன் அமர்;ந்திருந்தான் விஸ்வநாதன்.
சரியாக அரைமணி நேரத்திற்கு முன்புதான் ஏற்கனவே எரிந்து கரிக்கட்டையாகிப் போயிருந்த தங்கை அமுதாவின் உடலை சுடுகாட்டில் மீண்டும் ஒரு நெருப்புப் படுக்கையில் இட்டு தீ நாக்குகளுக்கு தீனியாக்கி விட்டு வந்திருந்தான். அவளைப் பற்றிய நினைவுகளே திரும்பத் திரும்ப மனதில் வந்து போய்க் கொண்டிருந்தன.
‘ஆண்டவா… அவளுக்கு ஏன் இந்த தண்டனை?… ஒரு பாவமும் அறியாதவளாயிற்றே!… தொடங்கிய நேரத்திலேயே அவள் இல்லற வாழ்க்கையை முடித்து விட்டதில் என்ன சாதித்து விட்டாய் நீ?’
தந்தை இறந்தவுடன் அந்த ஸ்தானத்தை ஏற்றுக் கொண்டு தங்கைக்கு சீரும் சிறப்புமாய்த் திருமணம் செய்து பார்த்து மகிழ்ந்தவன் விஸ்வநாதன். வந்த மாப்பிள்ளையும் சொக்கத் தங்கம்தான்.
ஆனால் பாழாய்ப் போன விதிதான் அவர்களை வாழ விடாமல் செய்து விட்டது. சமையல் செய்கையில் சேலையில் பற்றிய நெருப்புப் பேனா அவள் வாழ்க்கை அத்தியாயத்திற்கு ‘முற்றும்’ எழுதி விட்டு தன் முனையை முறித்துக் கொண்டது.
‘தம்பி… கொஞ்சம் இப்படி வர்றியா?” பக்கத்தில் வந்து கிசுகிசுத்தது ஒரு பெரிசு.
எழுந்தவனை சற்று ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்று “தம்பி… நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதே!… எனக்கு உங்க மாப்பிள்ளை மேல் கொஞ்சம் சந்தேகமா இருக்கு!…”
“என்ன சொல்றீங்க?” விஸ்வநாதனின் விழிகள் சற்றுப் பொpதாகின.
“உஷ்… மெதுவா… மெதுவா… எனக்கென்னவோ… உன் தங்கை அமுதாவோட புருஷன்தான்… அவளை மண்ணெண்ணை ஊத்திக் கொளுத்தியிருப்பானோன்னு தோணுது!” சுற்றுமுற்றும் பார்த்து விட்டு ரகசியக் குரலில் சொன்னது அந்தப் பெரிசு.
கேட்டவுடன் அதிர்ச்சியூட்டிய அந்த வார்;த்தைகளை நிதானமாக மனதிற்குள் அசை போட்டான் விஸ்வநாதன்.
அமுதாவும் அவள் கணவன் குமாரும் வாழ்ந்த அந்த ஐந்து வருட மணவாழ்க்கை அவன் கண் முன் திரைப்படமாய் ஓடியது. ஏத்தனை சந்தோஷங்கள்… எத்தனை மகிழ்ச்சிகள்!… ஒரு சிறு துளிகூட மனஸ்தாபமோ… கடுஞ் சொற்களோ கலக்காத இன்பக் காவியமாச்சே… அவர்களின் மணவாழ்க்கை.
“ச்சே!… கண்டிப்பா நம்ம மாப்பிள்ளை அப்படிப்பட்டவரில்லை!… அவர்; சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்;!”
“யோவ் பெரிசு… என்னோட மாப்பிள்ளையைப் பத்தி உனக்கு என்னய்யா தொpயும்?… சும்மா வாய் இருக்குன்னு எதையாவது பேசிட்டுத் திரியாதே! அப்புறம் வருத்தப்படுவே!” கோபத்துடன் பேசினான் விஸ்வநாதன்.
“தம்பி… தம்பி… கோபப்படாதப்பா… என் மனசுல பட்டதைச் சொன்னேன்… ஆனா ஒண்ணு மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுக்கப்பா… இந்த அருணாச்சலம் எதையும் காரண காரியமில்லாமச் சொல்ல மாட்டான் அவ்வளவுதான்!” சொல்லி விட்டு நகர்ந்தது அந்தப் பெரிசு.
மீண்டும் வந்து திண்ணை வாசற்படியில் அமர்ந்த விஸ்வநாதன் கண்களில் சோகமே உருவாய் அமர்ந்திருந்த மாப்பிள்ளை குமார் பட்டான். ‘ஹூம் இந்த அப்பிராணியையா சந்தேகப்படறாங்க?… ஆண்டவனுக்கே அடுக்காது’
அங்கேயே தங்கி இருந்து பனிரெண்டாம் நாள் காரியங்களையும் சிரத்தையுடன் முடித்த விஸ்வநாதன், மாப்பிள்ளையிடம் விடை பெறும் போது தங்கை மகன் பாபுவையும் தன்னுடனே அழைத்துச் செல்ல விரும்புவதாகச் சொல்ல, “ம்” ஒற்றை வார்த்தையில் சம்மதம் வந்தது.
மூன்று நாட்களுக்குப் பிறகு, இரவு 10.00 மணி. கட்டிலில் படுத்தபடி விட்டத்தையே உற்றுப் பார்;த்துக் கொண்டிருந்தான் விஸ்வநாதன்.
“என்னங்க?… ஏதோ யோசனையில் இருக்கீங்க போலிருக்கு!” அருகில் வந்து நின்ற அவன் மனைவி கற்பகம் கேட்டாள்.
“வேறென்ன யோசனை?… எல்லாம் செத்துப் போன தங்கச்சியப் பத்தித்தான்!… பாவம்டி அவ பையன்… மூணு வயசுல அம்மாவ இழந்து… ச்சே… அந்தப் பிஞ்சு மனசுல எத்தனை வேதனை இருக்கும்…” சொல்லும் போதே குரல் கரகரத்தது.
”சரி… சரி… அதையே நினைச்சுக்கிட்டு நீங்க உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க!… அதான் அந்தப் பையனை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திட்டோமே!” கணவனை ஆறுதல் படுத்தினாள் கற்பகம்.
“ஆமாம். கற்பகம்… அந்த வீட்ல இருந்தா திரும்பத் திரும்ப அவனுக்கு தாய் ஞாபகம்தான் வரும்… அதனால கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுல இருக்கட்டும்னுதான் இங்க கூட்டியாந்தேன். அது செரி கற்பகம்… பையன் நல்லா சாப்பிடறானா?…”
“ம்ம்… நம்ம ரகுவுக்கு அவனுக்கும் ஒண்ணாத்தான் சாப்பாடு ஊட்டி விட்டேன் நல்லாத்தான் சாப்பிட்டான்… நம்ம ரகுவோட வெளையாடிட்டே இருக்கறதினால அம்மா ஞாபகம் வர்றது கொஞ்சம் கம்மியாயிருக்கு!”
“…………………”
“என்னங்க… உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்னு நெனைக்கறேன்… ஆனா தயக்கமாயிருக்கு!” கணவனின் நெஞ்சுப்பகுதி முடிகளைக் களைந்தவாறே சொன்னாள்.
“ம்… சொல்லு கற்பகம்… தயங்காமச் சொல்லு!”
“வந்து… வந்து… சாவு வீட்டுல ஒரு பெண்மணி என்கிட்ட சொன்ன ஒரு விஷயம் நெஞ்சுக்குள்ளார உறுத்தலாயிருக்குங்க!”
“அப்படி என்ன சொன்னாங்க?” புருவத்தை உயர்;த்திக் கேட்டான்.
“நம்ம அமுதாவோட சாவுக்கு அவ புருஷன்தான் காரணம்னு…” அதற்கு மேல் பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.
“எப்படியாம்?”
“மாப்பிள்ளைதான் அவளை எரிச்சிட்டார்னு…”
‘விருட்’டென்று எழுந்து அமர்ந்தவன், ‘ச்சீய்… வாயை மூடுடி… எவளோ எதையோ உளறினாளாம்… அதைக் கேட்டுட்டு வந்து இவளும் உளர்றா”
அவன் கோபத்தைக் கண்டு பயந்த கற்பகம் அங்கிருந்து நகர முற்பட, சற்றுத் தாழ்வான குரலில் அவளை அருகில் அழைத்தான் விஸ்வநாதன்.
“கற்பகம்… நம்ம மாப்பிள்ளை மேல உனக்கு சந்தேகமிருக்கா?… இருக்காது… கண்டிப்பா இருக்காது… அதே மாதிரிதான் எனக்கும் துளிக்கூட சந்தேகப்பட முடியலை!… உனக்கு ஒரு சம்பவத்தைச் சொல்றேன் கேளு!… ஒரு வருஷத்துக்கு முன்னாடி நம்மூர் பண்டிகைக்கு அவங்களை அழைக்கப் போயிருந்தப்ப… நம்ம அமுதா லேசான தலைவலின்னு சொன்னா… அவ்வளவுதான் மாப்பிள்ளை பண்ணிய ஆர்ப்பாட்டத்தைக் கேக்கனுமே!… மனுசன் டாக்டரைக் கூட்டியாரேன்னுட்டு பறந்துட்டார்… வெளிய இடி மின்னலோட பயங்கரமா மழை பெய்ஞ்சிட்டிருந்தது… ‘கொஞ்சம் பொறுங்க மாப்பிள்ளை… வெறும் தலைவலிதானே?… மழை நின்னதும் போயி… ஒரு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வந்து போட்டுட்டாப் போவுது!’ன்னேன்!… ம்ஹூம் மனுசன் காதுல கூட வாங்கிக்கலை…. மழையிலேயே இறங்கி ஓடி…பத்தே நிமிஷத்துல டாக்டரோட வந்தார்!…”
“அப்படியா?” வாயைப் பிளந்தாள் கற்பகம்.
“உண்மையைச் சொல்லணும்னா… அந்த இடி.. மின்னல்… மழைல நான்கூட இறங்கி ஓடுவேனாங்கறது சந்தேகம்தான்!… அந்த நிகழ்ச்சியைப் பாத்த எனக்கு ஏற்பட்ட ஆனந்த அதிர்ச்சியிருக்கே… அப்பப்பா… சொல்லி விளக்க முடியாது!” உணர்ச்சி பொங்க கூறினான் விஸ்வநாதன்.
“எனக்கும் கொஞ்சம் கூட சந்தேகமே வரமாட்டேங்குது… ஆனா…. மத்தவங்கதான் துhண்டி விட்டுக்கிட்டே இருக்காங்க!”
“விடு கற்பகம்…. ஊர் வாயை நம்மால மூடவா முடியும்?… சொல்றவங்க என்ன வேணாலும் சொல்லிட்டுப் போகட்டும்… நாம அதைக் கண்டுக்காம விட்டுட வேண்டியதுதான்!” அத்தோடு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளை வைத்து விட்டு, மறுபுறம் திரும்பிப் படுத்தான் விஸ்வநாதன்.
அப்போது பக்கத்து அறையிலிருந்து வந்த அலறல் அவர்களின் கவனத்தை மொத்தமாய்த் திருப்ப, இருவரும் வேகமாக எழுந்து சென்று அந்த அறைக்குள் நுழைந்தனர்.
அங்கே… விஸ்வநாதனின் தங்கை அமுதாவின் மூன்று வயது மகன் தூக்கத்தில் கண்டபடி உளறிக் கொண்டும்… புரண்டு கொண்டும்… அலறிக் கொண்டும் கிடந்தான் அதிர்ச்சியுடன் இருவரும் கூர்ந்து கேட்டனர்.
“அப்பா… அப்பா… வேண்டாம்பா… அம்மா பாவம்ப்பா… அம்மா மேல தீ வெக்காதப்பா… சுடும்ப்பா!”
விஸ்வநாதன் அசைவற்று நின்றான்.
குழந்தை மீண்டும் உளறியது. “அய்யோ… அப்பா அடிக்காதப்பா… நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்… என்னைய அடிக்காதப்பா… வலிக்குதுப்பா… வலிக்குதுப்பா…” கைகால்களை உதறிக் கொண்டு அடித் தொண்டையில் கத்தியது.
விஸ்வநாதனின் விழிகள் பெரிதாகி கோபக்கனல் கொழுந்து விட்டு எரிந்தது. தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு கதறினான்.
“கற்பகம்… நாம ஏமாந்திட்டோம்டி… கொழந்தை பொய் பேசாதடி…. அப்பனோட அடிக்கு பயந்திட்டு கண்ணால பார்த்த கொடுமைகளையெல்லாம் பிஞ்சு மனசுக்குள்ளார போட்டு பூட்டி வெச்சிருக்குதுடி!… அதான் தூக்கத்துல தன்னையுமறியாமல் உளறுதுடி…!… அய்யோ… அமுதா… என் உயிரே… உன்னைக் கொளுத்திட்டானேடி…. பாவி!…”
ஆவேசமாய்க் குழந்தையைத் துhக்கி இறுக அணைத்துக் கொண்டவன், “விட மாட்டேன் ராசா… உங்கம்மாவைக் கொளுத்தியவனை விட மாட்டேன் ராசா!… அவனுக்கு சரியான தண்டனை வாங்கிக் குடுக்காம ஓய மாட்டேன்”
மறுநாள், அதிகாலையிலேயே எழுந்து, முதல் பஸ்ஸிலேயே புரப்பட்டுச் சென்றான், போலீஸ் நிலையம் நோக்கி.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை