2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“நாலு புரோட்டா… ஒரு சிக்கன் …பில் கொடுக்கிறப்ப …சேர்த்து போட்டுடு ராமசாமி, நா கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு முதலாளி முன் சாமிநாதன் வந்து நின்றபோது மணி 10.
“டேய் ராமசாமி … அந்த இலையில குருமா இல்லே பாரு. என்னடா பண்றீங்க எல்லோரும் உள்ளேயே…?” என்று கத்தி விட்டு திரும்பிய முதலாளி, சாமிநாதன் நிற்பதைப் பார்த்துவிட்டு, “என்ன சாமிநாதா கிளம்பிட்டியா…? காலையில சீக்கிரம் வந்துவிடு… இந்த!” என்றபடி இருபது ரூபாயை எடுத்து நீட்டினார்.
தடுமாறி விழுந்து போதையிலேயே மூன்று நான்கு நாட்கள் அங்கேயே கிடந்து விட்டு எழுந்து போனவங்களும் உண்டு. அதற்கு ஏற்றார் போல ஊர் கோடியில் சவுக்கு தோப்பையும் தாண்டி, ஆத்துக்கரை ஓரத்தில் சின்ன குடுசை போட்டு இருந்தான் மாரிசாமி. மீனாட்சிக்கு இரண்டு வயது முடியப் போகும் தருவாயில் டிபி வந்து மாரியாயி இறந்து போனாள்.
எந்த வேலையையும் தெரியாமல் பிள்ளைகளை வைத்துக் கொண்டு தடுமாறிய மாரிசாமி, கல்யாணத்துக்கு முன் மரவக்காடு ராமமூர்த்திக்கிட்ட சாராயம் காய்ச்சிக் கொடுத்துக் கொண்டு இருந்த முன் அனுபவத்தைக் கொண்டு தைரியமாக பிள்ளையார் சுழி போட்டான்.
கொஞ்ச நாட்களிலேயே ராமமூர்த்தியின் வியாபாரம் தடுமாறி விழுந்தது. போலீஸ் வந்து இரண்டு மூன்று முறை அவனை நாலு மொத்து, மொத்தி அள்ளிக்கொண்டும் போனது! அப்போது எல்லாம் சாமிநாதனும், மீனாட்சியும் பாலத்தில் உட்கார்ந்து அழுது கொண்டு இருப்பார்கள்.
நடவு முடித்து விட்டு பொம்பளைகள் மாரிசாமியை திட்டிக் கொண்டே போவார்கள்
“இவனுக்கு ஏன் இந்த பொழப்பு… ரெண்டு சின்னஞ்சிறுசுகளை வெச்சிக்கிட்டு… கூலி வேலை பார்த்தாவது பிள்ளைங்க வயித்த கழுவ கூடாது… துப்பு கெட்டவன் … எத்தனை குடி கேட்டுப் போயிருக்கும்… நாளைக்கு எத்தனை பொம்பளைங்க தாலி அறுக்கப் போறாங்களோ … தெரியல… அதனாலதான் பொண்டாட்டிய தூக்கி முழுங்கிட்டான்… இந்த துப்பு கெட்டவன்களும் ..ஒரே குடியா இங்கேயே கெடக்கிறான்க…” ஆள் ஆளாளுக்கு திட்டிக் கொண்டே போவார்கள்.
ரணப்பட்டுப் போகும் மனசு! அந்த பிஞ்சு மனசில் அவர்கள் விதைத்த வார்த்தைகள்… அவன் கொஞ்சம் பெரியவனானதும் நிறைய யோசிக்க வைத்தன.
“அப்பால ஸ்கூலுக்கு போகப் போறேன்” என்றான் சாமிநாதன்.
“அட போடா … உங்கப்பன் என்ன டாடா பிர்லாவா … இப்பதான் பிஸ்னஸ் சூடு பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு, காசை அள்ளி வீசி போலீசை சரிக்கட்டி இருக்கேன். அவனுங்களுக்கே அழுவுறத்துக்கே ஆயிரம் ஆயிரமா வேணும் … இதில உனக்கு வேற அழுவுறதுக்கே எங்க போறது…? கூடமாட எனக்கு உதவி பண்ணு… கோடீஸ்வரான ஆயிடலாம்… என்னோட தொழிலை நல்லா கத்துக்கிட்டு… அப்பன் பேரை காப்பாத்தி நாளைக்கு நாலு காசு பார்பியா … பொழப்பு கெட்டுப்போய் …”
“எனக்கு புடிக்கல … நாங்க வெளங்கமாட்டோமாம் … அப்படித்தான் எல்லோரும் பேசிக்கிறாங்க…”
“அதுங்க கெடக்குதுங்க… நாயிங்க…”
“வேண்டாம்ப்பா…இந்த தொழிலு… குடி கெடுகிறவன் புள்ளைங்க உறுப்புடாது’ன்னு திட்டறாங்க…நானாவது ஆம்பள பையன்… மீனாட்சி பொண்ணு… வேண்டாம்ப்பா…கூலி வேலைக்கு போகலாம்… நான் கூட ஸ்கூலுக்கு போகல …” மன்றாடி பார்த்தான் சாமிநாதன் .
“சொன்னா கேட்க மாட்டே… எனக்கே புத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டியா?” என்ற படி ‘பளார்’ என்று அறைந்தான். அழுதுக்கொண்டே தூங்கி போனான் சாமிநாதன்.
மறுநாள் ஸ்கூலுக்குப் போற ஆசையிலேதானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு அவனாகவே பக்கத்துக்கு ஊரில் ஒரு ஓட்டலில் ‘டேபிள்’ துடைக்கிற வேலையில் போய் சேர்ந்து கொண்டான். தினம் ஐந்து ரூபாய் சம்பளம்.
மாரிசாமி அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. எப்படியோ இனி ‘ஸ்கூல்ல சேர்த்து விடு’ என்று தொந்தரவு செய்யமாட்டான் என்று சந்தோசப்பட்டுக் கொண்டான்.
நல்ல சுறுசுறுப்பு. பொறுமை குணம் இரண்டும் சேர்ந்து அவனக்கு ‘ப்ரோமோஷன்’ கொடுத்தது. ஆறு மாதத்திலேயே இன்கிரிமெண்ட்ம் போட்டு கொடுத்தார்.
வீட்டிற்குப் போனால் தான் சாராய நெடி என்றால் ஓட்டலுக்கு வருபவர்களிடத்திலும் அதே வாடை, அதட்டல், மிரட்டல் அத்தனையையும் சகித்துக் கொண்டு ஒரே வருடத்தில் முதலாளியின் முழு அபிமானத்தையும் பெற்றான்.
முதலாளி அவசரமாக எங்கேயாவது போனால் கூட கல்லாவை பார்த்துக்கச் சொல்லி சாமிநாதனிடம் தான் சொல்லிவிட்டு போவார். அவ்வளவு நம்பிக்கை அவன் மீது! அது அவனுக்கு பெருமையாய் இருந்தது.
மறந்தும் கூட கல்லா பணத்தைப் பார்த்து எச்சில் ஊறியது இல்லை சாமிநாதன். தவறான காசு மனிதனை தவறான பாதையில் கூட்டிக் கொண்டுப் போய்விடும் என்பது அவனது நம்பிக்கை!
சம்பளத்தைக் கூட மாத சம்பளமாக தருகிறேன் என்ற போது, அவன்தான் மறுத்து விட்டான். அதற்கு அவன் சொன்ன கரணம் முதலாளியையே ஆச்சரியப்பட வைத்தது!
“மொத்தமா பணத்தை பார்த்தோம்’ன்னா அட நம்ம இவ்வளவு காசா சம்பாதிக்கிறோம்னு ஆணவம் வந்திடும்…கையும் தாராளமாக இருக்க நினைக்கும் …பாக்கெட்ல காசு நிறைய இருந்தா கெட்ட சகவாசம் ஒட்டிக்கும்… அதுநாள… இன்னிக்கி உழைச்சதுக்கு கூலி… இத்தவச்சித்தான் பொழப்ப ஓட்டணும்…தங்கச்சிக்கு சேர்க்கணும்’ன்னு நமக்குள்ளே ஒரு கட்டுப்பாடு வரும்…” என்று பெரிய மனுஷன் மாதிரி பேசினான்.
முதலாளி அன்று முதல் அவன் சம்பளத்தை இருப்பதாகி, தினசரி கையில் கொடுத்து அனுப்பினார். அது அவனை முழுமையாகத் திருப்திப்பட வைக்கவில்லை!
மாரிசாமி தொழிலை விட வேண்டும்! இந்த ஊரைவிட்டே குடியை ஒழிக்க வேண்டும்! அதுதான் அவன் ஆசை! சின்ன வயதில் ஏற்பட்ட பாதிப்பு! அப்படி ஒன்றும் மாரிசாமி பெரிதாக சம்பாதித்து விடவில்லை!
நிறைய குடும்பங்களை பலி கொடுத்து குடிசையை சின்ன ஒட்டு வீடாக மாற்றி இருந்தான். எப்படியாவது அப்பாவை நல்வழிப்படுத்திவிட வேண்டும் என்று உறுதி கொண்டு இருந்தான் சாமிநாதன்!
“இந்த தொழில் வேணாம் …ஆத்துக்கரையோரம் … வயலுக்குப் போறவங்க வருவாங்க .. சின்னதா டீ கடை வைக்கலாம்,,, நல்லா நடந்துச்சின்னா, இட்லி, வடை, தோசை போடலாம்… வயத்துக்குப் போட்டா நாம செஞ்சிருக்கிற பாவமாவது போகும்”ன்னு சொல்லிப் பார்த்தான்!
“அடபோடா… காட்ச்சிறத விட்டுட்டா நா குடிக்க எங்க போறது…? ஏதோ காட்சிறேன் … நானும் குடிக்கிறேன்… மத்தவங்களுக்கும் கொடுக்கிறேன்… ஊர் குடி கெடுது… ஊர்குடி கெடுது’ன்னு சொல்றியே… எத்தினி போலீஸ் குடும்பம் என்னால வாழுது தெரியமாடா…” என்று சொல்லிவிட்டு போதையில் சிரித்து வெறுப்பேற்றினான். அதில் நிறையவே உண்மை இருந்தது!
சாமிநாதன் ஊர் நெருங்க நெருங்க ஊருக்குள் ஒரே கூச்சல். என்னவோ ஏதோ என்று நடையில் வேகம் கூட்டினான். மேலத் தெருவில் நுழைந்தபோது ரத்தினம் வீட்டின் முன்னாள் பெரிய கூட்டம். நான்கு வீடு தள்ளி கோபால் வீட்டின் முன்னாள் கூட்டம்.
யாரையோ ஒருத்தரை மாட்டு வண்டியில் போட்டு எடுத்துக் கொண்டு டவுனுக்கு விரைந்து கொண்டு இருந்தார்கள். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை!
“பாவி பய மகனே…சாராயம் குடிக்க போகாதே…போகாதே’ன்னு சொன்னேனே… கேட்டியா… இப்ப எங்களை எல்லாம் விட்டுவிட்டு போய்ட்டேயே…” என்றபடி ரத்தினத்தின் அம்மா வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டாள்.
“கட்டையிலே போன்றவனே… ஊத்திக் கொடுத்து ஊத்திக் கொடுத்து கொன்னுட்டியே… நீ நல்ல இருப்பியா? புள்ளைங்களை தூக்கிப் போட்டு முழுங்க…” என்று சாபம் கொடுத்தபடி அலறினாள் சகுந்தலா!
சாபம்…பல பேர் சாபம். அழுகை பொதுக் கொண்டு வந்தது சாமிநாதனுக்கு! இருப்பினும் கூட அதில் நிறையவே நியாயம் இருப்பதாகப்பட்டது அவனக்கு!
“அட… வண்டிய சீக்கிரம் விடப்பா… இவனையாவது காப்பாத்த முடித்த’ன்னு பார்க்கலாம்” என்றபடி பின்னாலயே ஓடினார் வடக்கு தெரு ராமதாஸ் .
எத்தனை ஊரில் இன்னும் எத்தனை பேரோ? ஊரே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது! இன்னும் எத்தனை பிள்ளைகள் அப்பா … அப்பான்னு கதறி அழும்? புருஷனை இழந்து, பிள்ளைகளை இழந்து… நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது சாமிநாதனுக்கு!
ஊரே சுடுகாடாகி விடுமோ என்று பயந்தான். நினைக்க, நினைக்க ஏறத்தாழ நடை பிணமாகிப் போய் இருந்தான்!
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings