2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஏன்பா மகளிர் தினத்துல எல்லாரும், ஆண்மனது பெண்மனதுனு ஏதேதோ எழுதி முகநூல்ல போடறாங்களே நாமளும் எழுதலாமா” மனைவிகிட்ட இன்னிக்கு சாப்பிட்டதுக்கப்பறம் வெத்தலை போட்டுண்டே மெதுவா கேட்டேன்.
“இதைப் பாருங்கோ அது இதுனு ஏதாவது குசும்பா ரொம்ப நாளா எழுதி பப்ளிக்ல போடறேள் எனக்கு தெரியாதுனு நினைக்காதீங்கோ, என்னைப் பத்தி இனிமே பப்ளிக்ல ஒரு வார்த்தை எழுதினேள் அன்னிக்குதான் கடேசி எங்கம்மா ஆத்துக்கு போயிடுவேன்.”
“ஏண்டி உங்கம்மா, அப்பா போய் சேந்து 10 வருஷத்துக்கு மேல ஆச்சேடி கோவில்பட்டில இப்ப யாரு இருக்கா”
“ஏன் என் சித்தி இல்லையா எப்ப போனாலும் கண்டேன், கண்டேன்னு வச்சிப்பாளே”
“யாரு அலமு சித்தியா, கொடுமைக்காரி முழுப் பரிட்சை லீவுக்கு போனா காலைல டிபனுக்கு தினம் பழைய சாதம் போடுவா, அவ குழந்தைளுக்கு இட்லி ஊட்டுவாம்பயே அவதானே”
“ஏதோ ஒண்ணு ரெண்டு வருஷம் முதப் பையன் தவறிப் போனதால மூளை குழப்பத்துல இருந்தா அப்ப நடந்ததை ஏன் எப்ப பாத்தாலும் குத்திக் காட்டறேள்.ஆறாப்பு லீவுல போறப்ப இட்லி ஊத்தினா, தான் சாப்பிடறப்ப மிளகாப்பொடி தடவி ஒரு விள்ளு கொடுப்பாளே அதை மட்டும் மறப்பேளா?”
“நீதானே சொன்னே எனக்கு ஒரு விள்ளல் கொடுத்துட்டு, பிட்டுவுக்கும், சரசுக்கும் தட்டுல போட்டுக் கொடுப்பா, என்னை வாசல்ல போய் விளையாடிக்கோடி என்ன எப்பப் பாத்தாலும் சமையலுள்ளே சுத்தி சுத்தி வரே அப்படினு”
“அது அப்ப ஏதோ சித்தி மேல கோவத்துல சொல்லியிருப்பேன். ஆனா நாணு சித்தப்பா காட்பரி சாக்லேட் முழுசா கொடுப்பார்னு சொல்லியிருக்கேனே அதை மறந்துட்டேளா”
“பச்சை கலர் பேப்பர்ல பாரீஸ்னு எழுதி சுத்தி இருப்பானே கடக்னு ஒரு மிட்டாய் அஞ்சு பைசாக்கு அதானே”
“அஞ்சு பைசா பாக்காதீங்கோ அதுல இருக்கற அன்பை பாக்கணும், உங்க சித்தப்பா கூடதான் சொந்த அண்ணா பிள்ளை கல்யாணத்துல வெக்கமே இல்லாம ரெண்டு ரூபா ஓதியிட்டார் அதை நான் என்னிக்காவது சொல்லிக் காமிக்கறேனா?”
“அஞ்சு பைசா மிட்டாய்லயே அவ்வளவு அன்பு இருக்கறப்ப ரெண்டு ரூபாய்ல எவ்வளவு அன்பு இருக்கும் இருநூறின் கீழ் அஞ்சு 40 மடங்காக்கும்”
“என் சித்தி நம்ம கல்யாணத்தப்ப எனக்கு ராக்கொடி பண்ணிக் கொடுத்தாளாக்கும்”
“நீதானேடி நூறு தடவை சொல்லி காட்டினே பத்து பைசா பெறாத கல்வெள்ளில கல்லு விழுந்த பழைய ராக்கொடியை தலைல கட்டி தண்ணக்கட்டிட்டானு”
“ஆனா அது உங்க சித்தப்பா கொடுத்த 2 ரூபாயை காட்டிலும் உசத்திதான்”
இப்ப திடீர்னு வாசல் அழைப்பு மணி சத்தம் கேட்டு தூக்கி வாரிப் போட்டு எழுந்தேன்.யாருடி இந்த வேளைல.
“எல்லாம் அந்த உங்க பொழுது போகாத ஆத்மார்த்த பிரண்டு ஜகநாத மாமாவா இருக்கும், குறைப் பொழுதை கொட்டை நூக்க வந்திருப்பார், போங்கோ கதவை திறந்து பொம்மனாட்டிகளாட்டம் ஊர் வம்பு பேசுங்கோ”
நிதானமாய் போய் கதவை திறந்தேன், அலமு சித்தி கைல ஒரு ஜமுக்காளப் பை பிதுங்க புடவை துணிமணிகளோட நிக்கறா.
“வாங்கோ வாங்கோ நூறு ஆயிசு உங்களுக்கு இப்பதான் உங்களப் பத்தி உங்க பொண்ணு பேசிண்டிருந்தா”
“தெரியுமே ஸ்கூல் படிக்கும் போதே முழுப் பரிட்சை லீவுல சித்தினு ஓடி வந்துடுவாளே என்மேலயும், அவர் மேலயும் கொள்ளப் பிரியம்” இப்ப இல்லாத அவருக்காக போனாப் போறதுனு புடவை நுனியால கண்ணை துடைச்சிண்டா.
என் மனைவியோ அலமுச்சித்தினு வாய் நிறைய பல்லோட வந்து அவங்களை கட்டிண்டா. “எத்தனை நாளாச்சு சித்தி நீ பாட்டுக்க எங்க கூட வந்து 6 மாசம் இருக்கக் கூடாதா”
பிட்டு , சரசு ரெண்டு பேரும் இன்னும் சின்னக் குழந்தேளாட்டமா விட மாட்டேன்றா (சரசுவோடவும், பிட்டுவோடவும் பழைய அந்த கோவில் பட்டி வீட்டுக்காக ஏக சண்டைனு எல்லாருக்கும் தெரியும்)
“வாங்கோ கைகால் அலம்பிண்டு முதல்ல சாப்பிடுங்கோ”
“எனக்கு மோருஞ்சாதம் கொஞ்சம் போடு போறும் இரு கைகால் அலம்பிண்டு வரேன்”
நான்,“என்ன சித்தியை பாத்ததும் மெய் மறந்துட்டே, பழைய சாதம் போடப் போறயா”
“சும்மா இருங்கோ நீங்க வேற யார் எப்படி இருந்தா நமக்கென்ன நாம நன்னா வரவாளை கவனிக்கணும், கார்த்தால போய் நல்லில இருந்து ஒரு நல்ல புடவையா வாங்கிண்டு வந்துடுங்கோ,சித்திக்கு கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா பிடிக்கும் அதுவும் வாங்கிண்டு வந்துடுங்கோ”
நானும் அலமுச்சித்தி வந்ததுல சந்தோஷப் பட்டேன். என் மனசே எனக்கு இன்னும் புரி படலை,இதுல பெண் மனசு எப்படிப் புரியும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings