இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஜோதிமணியின் அப்பாவுக்கு தன் மகனுக்கு குழந்தை பிறந்த விஷயம் கூட தெரியவில்லை என்ற கவலையில் “என்ன சொல்றிங்க குழந்தையா?” என்று தன் அப்பா… செவிலியரிடம் கேக்கும் கேள்வியை கேட்டுக்கொண்டே வந்த ஜோதிமணி
“ஆமா அப்பா பசங்க தான். அதுவும் ரெட்டை பிள்ளைங்க. மினி… பிள்ளைகளை அழைச்சிட்டு வா” என்று ஜோதிமணி சொன்னதும், ஒட்டி பிறந்த இரட்டையர்கள் ஐந்து வயது சிறுமிகளை அழைத்துக் கொண்டு யாமினி தன் மாமனார் முன் வந்து நின்றாள்.
“வாங்க வாங்க என் பேதிங்களா. அப்பத்தாகிட்ட வாங்க. இங்க பாருங்க, ஐயாவை பாருங்க” என்று செல்லம் கொஞ்சிய ஜோதிமணியின் அம்மா, பேத்திகளை அள்ளி எடுத்து முத்தமிடும் காட்சியை பார்த்து ஜோதிமணியின் தந்தை கண்கள் ஈரமானது.
“அப்பா உங்க பேத்திங்கள பாருங்க” என்ற ஜோதிமணி தன் பிள்ளைகளை தூக்கி அவன் தந்தையின் அருகில் அமர்த்தியதும், சிறுமிகளின் பால் மனம் மாறாத முகத்தை கண்டு மேலும் ஜோதிமணியின் தந்தை கண் கலங்கியவாரு
“உங்க பேர் என்ன?” என்று கேட்டார்.
“தாத்தா கேக்குறாங்க தானே.. சொல்லு உன் பெயர் என்ன?” என்று தன் மகளை பார்த்து யாமினி கேக்க
“என் பெயர் அனிதா MBBS”
“என் பெயர் அமுதா IAS”
என்று சிறுமிகள் இருவரும் பதில் சொல்லும் அழகை கேட்டு ஜோதிமணியின் அம்மா தன் பேத்திகளுக்கு திருஷ்டி கழித்து முத்தமிட்டாள்.
ஜோதிமணியின் அப்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தன்னுடைய போலியான கௌரவத்தை காப்பாற்ற சொந்த பிள்ளையை ஒதுக்கி வைத்து, பாவத்துக்கு மேல் பாவத்தை சேர்த்த தனக்கு இன்று நான் இருக்கிறேன் என தோள் கொடுத்து தாங்கும் பிள்ளையும், பெரிய படிப்பு படித்து இருந்தாலும் எல்லா மனிதர்களையும் தனக்கு சமமாக நடத்தும் அவரின் மருமகளையும், தன்னை தாத்தா என்று அழைத்து பிரிந்து போன சொந்தங்களை மீண்டும் இணைத்து இருக்கும் இரண்டு பேத்திகளையும் கொடுத்த கடவுளுக்கு ஜோதிமணியின் அப்பா மனதளவில் அந்த தருணம் நன்றி தெரிவித்தார் .
“அனிதா குட்டி உங்களுக்கு என்னை யாரென்று தெரியுதா?” என்று தன் தாத்தா கேக்கும் கேள்விக்கு
“அனிதா சொல்ல கூடாது.. Dr. அனிதா சொல்லனும்” என்று மழலை பேசும் பேச்சை கேட்டு அவள் தாத்தா சிரித்துக் கொண்டார்
“சரி Dr. அனிதா.. உங்களுக்கு என்னை யாருன்னு தெரியுமா?” என அவர் கேக்க.
“ம் நீங்க என் தாத்தா” என்று சொன்ன தன் பேத்தியை அள்ளி எடுத்து செல்லம் கொஞ்சும் தன் தாத்தாவை குழந்தை அமுதா ஏக்கமாக பார்த்துக்கொண்டு இருந்த வேளையில்
“கலெக்டர் அமுதாவை அப்பத்தா தூக்கிக்கவா?” என்று நேக்காக பேசிய ஜோதிமணியின் அம்மா இன்னோரு பிள்ளையை தூக்கி தன் இடுப்பில் அமர்த்திக் கொண்டார்.
குழந்தைகளுக்கு பல வருடம் கடந்து தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை என்ற சொந்தங்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்களும் சந்தோசமாக இருந்தனர்.
சில நாட்களில் ஜோதிமணியின் தந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று மருத்துவர்கள் சொன்னதும்
“அப்பா உடம்ப பார்த்துக்கோங்க, நேரநேரத்துக்கு மருந்து மாத்திரை எல்லாம் போடுங்க. அண்ணா நம்ம அப்பாவை பார்த்துக்கோங்க” என்று ஜோதிமணி தன் தந்தையின் உடல் நலத்தில் அக்கறை உள்ளவனாய் பேசியதும் அவன் அன்னையின் கண்கள் கலங்கியது.
“ஏன் நீங்க எல்லாம் எங்க கூட நம்ம வீட்டுக்கு வர மாட்டிங்களா ?” என்று அவன் அன்னை கண்கள் கலங்கிய நிலையில் கேட்டதும்
“இல்ல அம்மா.. அப்பாவுக்கு என் மேல கோவம் இருக்கும். அதனால நாங்க வரல” என்ற தன் மகனை கண்களில் கண்ணீருடன் அணுகிய அவன் தந்தை
“இல்ல ஜோதி.. உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லை பா. என் அக்கா படிக்க போன இடத்துல தப்பு பண்ணிட்டா என்ற ஒரே காரணத்தால நான் பெண்கள் யாருமே படிக்க கூடாது, வேலைக்கு போக கூடாதுன்னு நினைத்தது எல்லாம் ரொம்ப பெரிய முட்டாள் தனம். என் தவறை நான் புரிஞ்சிக்கிட்டது மட்டும் இல்லாமல் அதை திருத்திக்கவும் தயாரா இருக்கேன். இனி நம்ம வீட்டுல பிறக்க போற பெண் பிள்ளைகளுக்கு மட்டும் இல்ல ஜோதி, நம்மக்கிட்ட வேலை பார்க்குற தொழிலாளிங்களோட பிள்ளைங்களுக்கு கூட நம்மளே பணம் கட்டி நல்லா படிக்க வைக்கலாம்.
அதுவும் பெண் பிள்ளைகளுக்கு படிப்பு ரொம்ப முக்கியம். எவ்வளவு செல்வம் சேர்த்து வைத்தாலும் அது கல்வி செல்வத்துக்கு ஈடு ஆகாது. எப்படிப்பட்ட திருடனும் திருட முடியாத செல்வம் கல்வி செல்வம் தான். ஒரு வேள நானும் படித்து இருந்தால் எனக்கு இதெல்லாம் தெரிந்து இருக்க வாய்ப்பு இருந்து இருக்கும்.
என் பொஞ்சாதி டீச்சர்க்கு படித்த விஷயம் கேள்விப்பட்டும் கூட அவளை எனக்கும் என் பிள்ளைங்களுக்கும் ஆயா வேலை பாக்குற பெண்ண போல தான் நான் நடத்தி இருக்கேன். ஆனா நீ உன் பொஞ்சாதியோட ஆசையை நிறைவேற்ற அவகூட உறுதுணையா நின்னு இன்னைக்கு என் மருமகள், கண்ணுக்கு தெரியும் கடவுளாக வளம் வரும் மருத்துவராய் ஆளாகி இருக்க நீயும் ஒரு காரணம்ன்னு நினைக்கும் போது எனக்கு என் மகனை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு.
நீ, என் மருமக, என் பேத்தி வருங்கால Dr. அனிதா, கலெக்டர் அமுதா இவங்க எல்லோரும் நம்ம வீட்டுக்கு வந்து நம்ம கூடவே இருக்கணும். இது தான் என்னோட ஆசை. என்கூட வந்துடு ஜோதி” என்று கண்கள் கலங்கி மனமுருகி தன் தந்தை பேசும் வார்த்தைகளை கேட்டு ஜோதிமணியும் யாமினியும் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகளுடன் மீண்டும் அவர்கள் குடும்பத்தில் ஒன்றாக இணைந்து கொண்டனர்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
அதாவது – ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings