இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
யாமினியின் படிப்பு விடயம் இவர்கள் வீட்டில் பூதகரமாக வெடித்தது.
“ஏங்க எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம். முதல்ல சம்மந்தியை உள்ள வர சொல்லுங்க” என்று தன் மனைவி சொன்னதும், ஜோதிமணியின் அப்பா சிறு முறைப்புடன்
“உள்ள வாங்க” என்று அழைத்த வண்ணம் தன் அறைக்குள் புகுந்து கொண்டார்.
“என்னங்க இது தாலி பிரித்து கோர்க்கும் சடங்கை பற்றி பேச வந்தா.. இங்க வேற என்ன்மோ விவகாரம் நடக்குதே” என்று யாமினியின் அம்மா புலம்ப,
“டேய் ஜோதி….யாமினியை அழைச்சிட்டு இங்க வா” என்று தன் தந்தை அழைத்த அழைப்பிற்கு இணங்கி அவன் மனைவியுடன் அவர் அறைக்குள் சென்றான் ஜோதிமணி.
“மாமா.. என் படிப்பு விஷயத்தில் உங்களுடைய புரிதலில் சில தவறு நடந்து இருக்கு, அதுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன், ஆனா ஏன் இதற்காக நீங்க என்கிட்ட கோவமா இருக்கிறீங்க?” என்று யாமினி தன் மாமனாரை உரிமையுடன் கேட்டதும்,
“இங்க பாருமா.. இந்த குடும்பத்துல பெண்கள் பெரிய படிப்பு எல்லாம் படிக்கிறது எங்களுக்கு ஒத்து வராது” என்று தன் மாமனார் சொல்ல
“ஏன் ஒத்து வராது?” என்ற எதிர் கேள்வியை கேட்டாள் யாமினி.
“ம்… இப்படி திருப்பி கேள்வி கேட்கிறது, பெரியவங்க என்ற மட்டு மரியாதை இல்லாமல் பேசுறது, இதுக்கெல்லாம் ஆரம்ப புள்ளியே ரொம்ப படிச்ச திமிர் தான்” என்று தன் மாமனார் சொன்னதும்,
“மாமா..இப்ப நான் என்ன திமிரா பேசிட்டேன்?” என்று கேட்டாள் யாமினி.
“இங்க பாரு, எதுக்கு தேவையில்லாத பேச்சு, நீ டாக்டருக்கு படிக்கிற பொண்ணுன்னு எனக்கு தெரியாது. சரி எப்படியும் கல்யாணம் முடிஞ்சு போச்சு, ஆனா இதுக்கு மேற்கொண்டு உன் படிப்பு சம்பந்தமா இந்த வீட்ல எந்த பேச்சையும் பேசக்கூடாது. நம்ம சொந்தக்காரங்க மத்தில நீ டாக்டருக்கு படிச்ச பொண்ணுன்னு யாருக்கும் தெரியக் கூடாது புரியுதா” என்று கண்டிப்பாக பேசும் தன் மாமனாரை பார்த்த யாமினியின் பார்வை இப்போது ஜோதிமணியின் மீது திரும்பியது.
“அப்பா.. என்ன பேசுறீங்க நீங்க? நம்ம குடும்பத்துல இருக்கிறவங்களுக்கும் சொந்த பந்தத்துக்கும் இப்ப யாமினி டாக்டருக்கு படித்த பொண்ணுன்னு தெரிஞ்சா என்ன ஆகப் போகுது?” என்று ஜோதிமணி கேக்க,
“டேய்.. என்னடா பேசிட்டு இருக்க? பொண்டாட்டியை விட புருஷன் படிப்பு கம்மின்னா நம்ம ஜாதி சனம் உன்ன பத்தி என்ன நினைப்பாங்க?” என்று தன் தந்தை கேட்டதும்,
“என்ன நினைக்க போறாங்க?…. அப்படியே நினைச்சா நினைக்கட்டும், அடுத்தவர்களின் நினைப்புக்காக வாழற ஆளு நான் இல்லப்பா, என் பொண்டாட்டி டாக்டர்னா எனக்கு கவுரவம் தான்” என்றான் ஜோதி மணி.
“உனக்கு கௌரவமா இருக்கலாம், ஆனால் என் பையனை விட என் மருமக அதிக படிப்பு படிச்சிருக்கா, என் பையன் என் மருமகளுக்கு சேவை செய்றான்னு சொல்லுறது எனக்கு அவமானம்” என்று யாமினியின் மாமனார் சொல்ல,
“மாமா.. எதுக்கும் எதுக்கும் நீங்க முடிச்சு போட்டு பேசுறீங்க..சரி உங்க மனசுல ஏதோ ஒரு விஷயம் தோன்றுகிறது, என்னனு வெளிப்படையா பேசுங்க” என்று யாமினி கேக்க,
“அத பேச தான் நானும் உங்கள வர சொன்னேன். இதுக்கு மேற்பட்டு உன் படிப்பு விஷயமாக நீ யார்கிட்டயும் எதையும் பேசக்கூடாது புரியுதா” என்று யாமினியின் மாமனார் அவளை மிரட்டும் விதமாக எச்சரிக்க
“அப்பா…. யாமினி மேற்கொண்டு படிப்பை தொடர தான் போகிறாள். அவ படிப்பை உங்க மருமகளா இருந்து தொடங்கணுமா, இல்ல என் பொஞ்சாதியா மட்டும் இருந்து தொடங்கணுமான்னு நீங்க உங்கள மாத்திகிற விதத்துல தான் இருக்கு” என்ற ஜோதிமணியின் கன்னத்தில் அவன் தந்தை ஓங்கி அறைந்த தருணம் யாமினியின் கண்கள் கலங்கியது.
“என்ன… கல்யாணம் முடிந்தா நீ பெரிய ஆளுன்னு நினைப்போ? இங்க பாரு, இந்த குடும்பத்துக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு, இங்க நான் சொல்லுறது நடக்கணும், பெண்கள் படிக்க போனா அப்புறம் வேலைக்கு போவாங்க, வேலைக்கு போனா கண்ட ஆண்களின் சகவாசம் ஏற்படும். ஆண்களின் சகவாசம் ஏற்பட்டால் அப்புறம் நம்ம வீட்டு பெண்களை நம்ம இழந்துட்டு தான் நிக்கணும். இதெல்லாம் நான் அனுபவத்துல சொல்லுறேன். உனக்கு இதெல்லாம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் என் முடிவு இது தான். உன் பொஞ்சாதி இதுக்கு மேல படிப்பை பற்றி பேசுக்கூடாது புரியதா?” என்று அவன் தந்தை வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க
“அப்பா..” என்று ஜோதிமணி ஏதோ சொல்லும் முன்பே
“மணி வேணா… பதிலுக்கு பதில் இப்போ பேசி பிரச்சனையை பெருசாக்காதீங்க. நம்ம வாயில இருந்து வர வார்த்தைக்கு நம்ம தான் பொறுப்பு. ஆத்திரத்தில் பதிலுக்கு பதில் பேசி மேலும் மாமாவை நம்ம கோவப்படுத்த வேண்டாம். வாங்க நம்ம போகலாம்” என்று பக்குவமாக பேசும் தன் மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜோதிமணி அந்த அறையில் இருந்து யாமினியுடன் வெளியேறினான்.
“என்னாச்சு ஜோதி?” என்ற தன் அன்னையின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரை முறைத்து பார்த்தவன்.
“டீச்சர்க்கு படித்த நீங்க எப்படி இந்த வீட்டுல பத்துப்பாத்திரம் தேய்த்து எங்களுக்கு எல்லாம் வடித்து கொட்டுறிங்களா, அப்படி என் பொஞ்சாதியை வீட்டோட இருக்குற கோமாதா போல வச்சிக்க நான் தயாரா இல்ல. மினி… என் அப்பாவை பற்றி எனக்கு தெரியும், அவர் வச்சது தான் சட்டம், அவர் எப்பவும் அவரோட பிடிவாதத்தில் இருந்து இறங்கி வர மாட்டாரு. நீ வா நம்ம கிளம்பலாம்.” என்று ஜோதிமணி தன் மனைவியை அவனுடன் அழைக்க
“எங்க மணி கூப்பிடுறிங்க? நம்ம எங்க போக போறோம்? ” என்று யாமினி கேக்க
“ம்.. வேற எங்க தனி குடித்தனம் தான்” என்ற ஜோதிமணியின் கன்னத்தில் இந்த முறை அவனின் அன்னையின் கைத்தடம் பதிந்தது.
“என்னை ஏன் அம்மா அடிக்கிறிங்க? அப்பாவோட அக்கா படிக்க போன இடத்துல யாரையோ நம்பி போய் ஏமாந்து இறந்தா, எல்லா பெண்களும் அப்படி இருப்பாங்கனு அப்பா நினைக்கிறது முட்டாள்தனம்” என்ற மணியின் வார்த்தையை கேட்டு தன் அறையில் இருந்த அவன் அப்பாவுக்கு மேலும் கோவம் வந்தது.
“இங்க பாரு ஜோதி, நீ ரொம்ப பேசுற. அப்பா சொன்னால் அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும், நீ என்ன புதுசா அவரை எதிர்த்து பேசிகிட்டு இருக்க?“ என்று தன் அண்ணன் அதட்டியதும்
“அண்ணா…. நீ வேணும்னா அப்பா சொல்லுற மாதிரி எல்லாத்துக்கும் பயந்து அடங்கி வாழ்ந்துக்கோ, ஆனா என்னால முடியாது“ என்று ஜோதிமணி தன் அண்ணனையும் எதிர்த்து பேச
“இப்போ முடிவா நீ என்ன தான் சொல்ல வர?” என்று கேட்டுக்கொண்டே அவன் தந்தை கோவமாக இவனை நோக்கி வந்தவரின் கண்கள் இரண்டும் யாமினியை தான் முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தது.
“அதான் நான் ஏற்கனவே சொல்லிட்டேனே. யாமினி மேற்கொண்டு படிக்கணும். அதுக்கு நீங்க தான் உங்கள மாத்திக்கணும்” என்று ஜோதிமணி சொல்ல,
“நான் முடியாதுனு எப்போவோ சொல்லிட்டேனே” என்று அவன் தந்தை பதில் சொன்னார்.
“அப்போ நான் யாமினியை அழைச்சிகிட்டு இந்த வீட்டை விட்டு போக தான் போறேன்” என்று மீண்டும் ஜோதிமணி சொல்ல
“மணி வேணா…. அப்பாவை எதிர்த்து பேசாதீங்க” என்ற யாமினியை பார்த்து
“பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு நல்ல பொண்ணை போல தொட்டிலையும் ஆட்டி விடுறியா?” என்று பற்களை கடித்துக்கொண்டு கேக்கும் மாமனாரிடம் என்ன பேசுவது என்று புரியாமல் யாமினி அமைதியாக நின்றாள்.
“சம்மந்தி…. இங்க என்ன நடக்குதுனு இன்னும் எனக்கு புரியல, ஆனா என் மக மேற்கொண்டு படிக்கிறது தான் உங்களுக்கு பிரச்சனைனா, இனி அவ படிக்க மாட்டா” என்று தன் அம்மா சொன்ன சொல்லை கேட்டு யாமினியின் கண்கள் கலங்கியது.
“இங்க பாருங்க, யாமினி மேற்கொண்டு படிக்கணுமா இல்லையான்னு அவ அம்மா அப்பா நீங்களோ, இல்ல புருஷன் நானோ, இல்லை என்னை பெத்த என் அப்பாவோ முடிவு பண்ணக்கூடாது. யாமினி மேற்கொண்டு படிக்கணும்னு அவ எப்போவோ முடிவு பண்ணிட்டாள். அவளுக்கு ஒரு நல்ல துணையா அவகூட இருக்கிறது தான் என்னோட ஆசையும். அதனால நீங்க யாரும் இனி யாமினி படிப்பை பத்தி பேச தேவையில்லை. மினி… என்னைக்கா இருந்தாலும் இந்த பிரச்சனை வரும்னு எனக்கு தெரியும். நீ வா நம்ம கிளம்பலாம்” என்று ஜோதிமணி தன் மனைவியை அழைக்க
“ஹ்ம் ஹ்ம் வேணா மணி… கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த ஒரே மாசத்துல உங்கள நம்ம வீட்டுல இருந்து பிரித்து நான் தனி குடித்தனம் அழைச்சிட்டு போயிட்டேன்னு இந்த ஊர் உலகம் என்னை தான் தப்பா பேசும். இல்ல நான் எங்கேயும் வரல. இப்போ என்ன? நான் மேற்கொண்டு படிக்கக்கூடாது,அவ்ளோ தானே? சரி நான் இனி படிக்கல” என்ற யாமினியின் கண்களில் கண்ணீர் மட்டும் பெருகிய நிலையிலேயே இருந்தது.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings