எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஒரு மாலை வேளை…
பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து அரூர் செல்லும் நகரப்பேருந்து 4A வில் அவ்வளவு கூட்டமில்லை… பேருந்தின் உள்ளே மத்தியில் இருக்கும் இருக்கையில் ஜன்னலோரமாக அமர்ந்தார் ஒரு நடுத்தர வயதுடையவர்.
பேருந்து நிலையத்தில் ஒரு ஸ்வீட் ஸ்டால் …மாலை வேளையில் சுடச்சுட புளிச்ச போண்டா …அங்கே ஒரு தட்டில் கொட்டியது விற்பனையில் பறந்து போகும்…பெரும்பாலும் அங்குள்ள ஒரு பிரபல தனியார் பள்ளி மாணவர்கள்தான் வாடிக்கையாளர்கள்.
ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தவர் அக்கடையைப் பார்க்க …சில மாணவ கூட்டம் அவசர அவசரமாகப் போண்டாவை உள்ளே தள்ளினர் …பேருந்து ஓட்டுநர் வண்டியில் ஏறியதும்…ஒருவன் கத்தினான்
“டேய் … சுகு…சுகுமார்…பஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க வாடா”
“தோ …வந்துட்டேண்டா”
வேகமாக ஓடிவந்து ஏறிய…சிலர் பேருந்தின் கடைசிச் சீட்டில் உட்கார்ந்து கொண்டனர் .ஒருவன் அந்த ஜன்னலோர நபர் அருகில் அமர்ந்து கொண்டான் …அவனிடம்…
“உன் பேர் என்ன தம்பி?”
“கதிரவன் …சார்”
“என்ன படிக்கிற?”
“ஏழாம் வகுப்பு …சார்”
இருவரும் கேள்வி பதிலில் உரையாட தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே …சர்ரென்று ஒன்று வந்து அந்த நபரின் காது அருகில் முடியில் சிக்கிக்கொண்டது …என்னவென்று எடுத்துப் பார்த்தார் …காகிதத்தால் செய்த ராக்கெட்….பின்னால் திரும்பிப் பார்க்க …கடைசி சீட்டில் ஒரு மாணவன் பதுங்குவது தெரிந்தது.
தன்னருகில் இருந்த பையனிடம் …இது யார் செய்தது …?! உன் பிரண்டா? அவன் பேரென்ன?” என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டார்.
அவன் … “சார்…அது…வந்து இதை விட்டது பின்னால இருக்கும் என் பிரண்டு சுகுமார் என்று நினைக்கிறேன் …அவன்தான் இன்னிக்கி கிளாஸ்ல பேப்பர் ராக்ட் செய்யச் சொல்லி கொடுத்தான்.
“சரி சரி …மெதுவா போய் அவனை இங்க கூட்டிட்டு வா”. என்றார்
அவனும் போய் சுகுமாரை அழைத்து வந்தான்.
அவனிடம் மிரட்டலுடன்…
“உன் பேரென்ன?”
“சு …சு…சுகுமார் சார்”
“உங்க ஸ்கூல் பிரின்சிபல் …தமிழரசன் தானே?” என்று கேட்டதும் சுகுமாருக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்து.
“ஆ ..ஆ ..ஆமா சார்”
“தமிழரசன் என் கிளாஸ்மேட்…. இது தான் உனக்கு ஸ்கூல்ல சொல்லி கொடுத்தார்களா? நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரேன்…வந்து அவன்கிட்டேயே சொல்றேன்” என்றதும் அழத் தொடங்கி விட்டான் சுகுமார்.
காரணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஸ்கூல் உள்ளே வரவில்லை என்றாலே பிச்சி எடுத்திடுவார் தமிழரசன் ..இப்படி பஸ்ல ராக்கெட் விட்டான் என்று தெரிந்தால் அந்தரத்தில் பறக்க விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சுகுமார் … “சார் …சார் ப்ளீஸ் …கதிரவன் மேல குறி வச்சி விட்டேன்…அது உங்க தலையில மாட்டிக்கிச்சி …சாரி சார்…இனிமே இப்படிப் பண்ண மாட்டேன் …பிரின்சிபல் சார்கிட்ட சொல்லாதீங்க”
“இல்ல ..இல்ல …கம்பளைண்ட் பண்ணாதான் நீங்க ஒழுங்கா இருப்பீங்க”
“சார் ..சார் ..ப்ளீஸ் சார் …இனி இப்படிப் பண்ண மாட்டேன்”
“என்ன ரேங்க் வாங்குற ..?”
“ஏழு, எட்டு வாங்குவேன் சார்”
“விளையாடறதுக்குன்னு இடம் வேண்டாமா …? பொது இடத்திலயா விளையாட்டு? இதே போல பேனாவை ராக்கெட் மாதிரி விட்டு… யார் கண்ணுலயாவது குத்துச்சுன்னா என்ன செய்வ ?”
தலையைக் குனிந்தபடி இருந்த சுகுமார் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சிறிது நேரம் போனதும் …அவரே … “இதுவே கடைசியா இருக்கட்டும் …நான் காம்ப்ளண்ட் பண்ணல …இதுபோல இனி செய்யக் கூடாது சரியா?”
வார்த்தைகள் ஏதும் வராமல் தலையை மட்டும் ஆட்டினான் சுகுமார்.
அடுத்தப் பேருந்து நிறுத்தத்தில் சுகுமார் இறங்க வேண்டும் …அவன் இறங்கியதும் கதிரவன் அழைத்தான்.
“சுகு…நாளைக்குக் கத்திக்கப்பல் செய்யச் சொல்லித்தரேன்னியே நியாபகம் வச்சிக்க” என்று கத்தினான்.
ஒரு நொடி திரும்பிய சுகுமார்… கதிரவன், அவன் அருகில் இருக்கும் அந்த நபரையும் பார்த்ததும் பயணத்தின் வேளையிலே படித்துக்கொண்டான் பாடம்…சட்டென்று திரும்பிக் கொண்டு தலையைத் தொங்கபோட்டுக் கொண்டான்
பேருந்து புறப்படத் தயாராக… மீண்டும் கதிரவன் கத்தினான் … “டேய் சுகு… இந்த சார் சொல்றாரு கத்திக்கப்பல் பறக்காதாம்”
சுகுமார் பறந்துவிட்டான்.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings