எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எதிரில் வருவோரை எளிதில் தன் வசப்படுத்தும் வசீகரப் புன்னகைக்குச் சொந்தக்காரர்.
‘தனசேகர்’. மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் நல்ல பணியில் உள்ளவர் .எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசக்கூடியவர். நல்ல மனமும், உதவும் குணமும் கொண்டவர்.உதவி என்று யாராவது கேட்டால் தட்டாமல் தயங்காமல் செய்து கொடுப்பவர். பிரதிபலன் பார்ப்பதில்லை. நேர்மையான அரசு ஊழியர் என்பது கூடுதல் சிறப்பு.
ஆனாலும் அவரிடம் ஒரு பழக்கம்… யாருக்கும் பணம் மட்டும் கடன் கொடுக்க மாட்டார். அவரும் இதுவரை யாரிடமும் கடன் வாங்கியதில்லை… கேட்டதுமில்லை…
அவருடன் பணியாற்றும் ‘வாசுதேவன்’, பலமுறை இவரிடம் பணம் கேட்டுப் பார்த்து விட்டார். ஒருமுறைகூட அவர் தந்தது இல்லை.
எப்பொழுது பணம் கேட்டாலும் அதற்கான காரணம் கேட்பார்… அந்த செலவைத் தவிர்க்கும் வழியைச் சொல்வாரே தவிரப் பணம் கொடுக்க மாட்டார்.
“இவர் ஏன் இப்படி இருக்கார்?” என்று வாசுதேவனுக்கு ஆச்சர்யம்… பலநாளா யோசிச்சிட்டு இருந்தார்… அவரிடமே கேட்டுவிட வேண்டும் என்று …இன்று தான் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சது… கேட்டுவிட்டார் …
“தனசேகர் சார் …நான் உங்கள ஒண்ணு கேட்கலாமா?”
“பணத்தைத் தவிர எது வேண்டுமானாலும் தாராளமா கேளுங்க”
“பணத்தைப் பற்றித்தான் …ஆனா ..பணம் வேணாம் ?”
“புரியலே ..?!”
“இல்ல… நீங்க எல்லாருக்கும் எல்லா உதவியும் பண்றீங்க ஆனா பணம் மட்டும் ஏன் கொடுக்க மாட்டேன்றீங்க ..?”
“கடன் அன்பை முறிக்கும் வாசு”…என்று சொல்லிவிட்டு சிரித்தார்
“சார் ..இந்த பழைய வசனமெல்லாம் வேண்டாம்”
“சரி அப்போ …கடன் கை, காலை முறிக்கும்…என்று வச்சிக்கோங்களே …”மீண்டும் கலகலவென்று சிரிப்பொலி
“சார் …கிண்டல் பண்ணாம …உண்மைய சொல்லுங்க”
“அது ஒரு சின்ன வயசு சம்பவம் வாசு…அப்படி என்ன மாத்திடுச்சி “
“அப்படியா …சொல்லுங்க சார் ..?”
“அடுத்தவங்க கதையினா எவ்வளவு மகிழ்ச்சி பாத்தீங்களா ?”
“சார் …”
“சரிப்பா சொல்றேன்…இது என் சொந்த கதைதான்”
“அப்படியா சார் …?!”
“ம்ம்… என் அப்பா ஒரு அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் …அவருடைய சொற்ப வருமானத்தில தான் குடும்பம் ஓடியது …அவர் கஷ்டப்பட்டாலும் என்ன ஆங்கில வழிக்கல்வி வழங்கும் ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைச்சார் …நான் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு சேரணும் …எங்க ஊரில இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்தப் பள்ளி .பள்ளிப் பேருந்தில் போக பணம் கட்ட வேண்டும் .அப்பா அரசு பேருந்து ஓட்டுநர் என்பதால் … எனக்குப் பேருந்து ஊழிர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இலவச பயண அட்டை வாங்கிக் கொடுத்தார். நகரப் பேருந்தில் சில நண்பர்களுடன் சென்று வருவேன். பேருந்து ஏறவேண்டிய இடத்தில என் தந்தைக்குத் தெரிந்த ஒருவர் சின்னதா பெட்டிக்கடை வைச்சி இருந்தார்.”
ஒருநாள் என் அப்பா ..அந்த கடைக்காரரிடம் … “இவன் என் பையன் …இங்க இருந்து பேருந்து ஏறுவான் …நான் வராத நாளில் கொஞ்சம் பார்த்துக்கோ …எதுனா தேவையின்னா கொடு …நான் வந்து பணம் கொடுத்துடுறேன் …” அந்தக்கடைக்காரரிடம் அறிமுகம் பண்ணிவிட்டார்.
“அன்னிக்கு இருந்து அந்தக் கடைக்காரர் பழக்கமாகிவிட்டார் …நானும் அப்பா சொல்லிட்டாரே என்று தினமும் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட ஆரம்பிசிட்டேன்”
ஒருநாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்த அப்பா …கோபமா கூப்பிட்டார் …அவருக்குக் கோபம் வந்தா கண்ணு மண்ணு தெரியாது …நடுங்கிக்கொண்டே போனேன் …
இரண்டு கன்னங்கள் வீங்கும்படி அடித்தார் …ஒண்ணும் புரியாமல் அழுதேன் …அடியை நிறுத்திய பின் கேட்டார்”
“உனக்குத் திங்கிறதுக்கு வீட்டுல வாங்கிட்டு வந்து கொட்டுறேன் இல்ல ..அப்புறம் எதுக்குப் பெட்டிக்கடையில் வாங்கின?”
“நீங்கதானே அப்பா எது வேணுமின்னாலும் வாங்கிக்கச் சொன்னீங்க”
“நான் சொன்னது பென்சில், பேனா ,ரப்பர் பேப்பர் இதுங்கள …நீ அதெல்லாம் விட்டுட்டுத் திண்பண்டம் வாங்கியிருக்க …படிக்கப் போறயா..? திங்க போறயா ?” சொல்லுடா”
“படிக்க”
“அந்த கடக்காரன் …அண்ணா தம்பி வங்கி சாப்பிட்டது 100 ரூபா கடன் இருக்குன்னு கேக்குறான் …எனக்கு எப்படி இருக்கும் ?…இந்த வயசுல கடன் வாங்குற? கடன் மட்டும் வாங்கவும் கூடாது…கடன் கொடுக்கவும் கூடாது …புரியுதா?!’’ என்று முதுகில் அஞ்சு ஆறு அடி விழுந்தது …
அவர் சொன்னது ‘பசுமரத்தாணி’ போல மனசுல பதிந்து போனது . இன்னிக்கு வரைக்கும் யாராவது கடன் கேட்ட என் அப்பாவின் அடி நினைவுக்கு வந்துரும்”
“சரி சார்…கடன் வாங்குறது தப்புத்தான் …நீங்க கொடுக்கலாமே ?”
“கொடுத்துட்டுத் திருப்பிக் கேட்டா…கடன் வாங்கிப் போனவன் கன்னத்தில கொடுக்கிற கலிகாலம் வாசு…எதுக்கு வம்பு …வரவுக்கேத்த செலவு செய்யச் சின்ன வயசுலே இருந்தே பழகிக் கொள்ள வேண்டும்”
“சரி சார் …நமக்கு தெரிஞ்ச கடை …அக்கௌன்ட் இருக்கு வாங்க ஒரு காப்பிச் சாப்பிட்டு போவோம் …?”
“அக்கௌன்ட்ல காப்பியா ஆள விடு வாசு …வீட்டுல பொண்டாட்டி காப்பி போட்டு காத்திட்டு இருப்பா”
கிளம்பிவிட்டார் தனசேகர் …வாசுக்கு கடன் வைக்காமல்.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings