in ,

பறை முழக்கம் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

சளசளவென்று கேட்டுக் கொண்டிருந்த மனிதக்குரல்கள் அடங்கி, அந்த வேப்ப மரத்தில் உட்கார்ந்திருந்த புல்லினங்களின் வித விதமான ஒலிகள் மட்டும் தனித்துவமாய் சுதி சேராத சங்கீதமாய் கேட்டுக்கொண்டிருந்தது.

திடீரென அந்த மனித குரல்கள் அடங்கியதற்குக் காரணம், அந்த கிராமத்தின் பெரிய மனிதர் என்று மதிக்கப்படும் சதாசிவ ஐயா, கூட்டத்தைப் பிளந்துகொண்டு உள்ளே வந்ததுதான்.

நடுநாயகமாக நின்று நிழல் தந்து கொண்டிருந்த அந்த வேப்ப மரம் முளைத்து வந்தபின், அதன் வேரைச் சுற்றி கருங்கல்லினால் அந்த மேடை கட்டப்பட்டதா அல்லது மேடை கட்டிய பின் அந்த மரம் முளைத்ததா என்பது அங்குள்ள யாருக்கும் தெரியாது. ஆனால் சதுரமான அந்த கல்மேடையில், நட்ட நடுவில் அளந்து நட்டு வைத்ததைப் போல் த‌லையாட்டிக்கொண்டு பல வருடங்களாய் மெளன சாட்சியாய் நின்று கொண்டிருந்தது அந்த வேப்பமரம்.

கல்மேடையில் உட்காருபவர்களுக்கு மட்டுமின்றி, சுற்றி நிற்பவர்களுக்கும் நிழல் கொடுக்கும்படி அகலமாய் விரிந்து பரவி இருந்த வேப்ப மரத்தின்  பருத்திருந்த அதன் தண்டுப்பகுதியும், அடியில் மறைந்திருந்த வேர்ப்பகுதியும், கிளைகளும்  ‘எத்தனை ஊர்க்கூட்டங்களை நான் பார்த்திருக்கிறேன்… போங்கப்பா..’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.

கல்மேடையின் பிரதான இடத்தில் வந்து அமர்ந்த சதாசிவ ஐயா கூட்டத்தினரைச் சுற்றிப் பார்வையைச் செலுத்தினார். கிட்டத்தட்ட ஒரு முப்பது கிராமத்து மக்கள் குழுமி இருந்தனர். அந்த ஊரின் இளைஞர்கள் கூட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தது சதாசிவ ஐயாவிற்கு வியப்பூட்டியது. அன்று பேசப்படும் விசயம் கொஞ்சம் சூடு பிடிக்கக் கூடும் என்று அவரின் உள்ளுணர்வு எச்சரித்தது.

அவரின் பேரன் கதிர்வேலின் தலையும் அந்த இளைஞர் கூட்டத்தின் நடுவில் தெரிந்தது. கிராமத்தில் இத்தனை பேரையும் ஒன்று சேர்த்துவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். காரணம் அங்கு கூடியிருக்கும் அத்தனை பேரும் சோம்பலின்றி இரவு பகல் பாராது  உழைக்கும் கடும் உழைப்பாளிகள்.

பெரும்பான்மையினர் விவசாயத்தொழிலிலும், சிலர் தச்சு வேலையிலும், இன்னும் சிலர் சலவைத்தொழிலிலும், சிலர் சவரத்தொழிலிலும் ஈடுபட்டு காலம் காலமாய் அந்தக் கிராமத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்பவர்கள்.

கூட்டத்தை ஒரு முறை பார்த்துவிட்டு ஆரம்பித்தார் சதாசிவ ஐயா. ‘போன மாசம் கந்தசாமியின் தாத்தா இறந்து போனதிற்கு வந்து சாவுக்கொட்டு கொட்டிய நம்ம ஊரு ஆட்கள், காரியம் முடிஞ்சு போகும்போது வருத்தத்தோடு போயிட்டாங்க. அது மாத்திரம் இல்லாம, இனிமேல் நாங்க கொட்டுக்கு வர மாட்டோம்னு தீர்மானமா சொல்லிட்டு வேற போயிட்டாங்க. இப்ப நம்ம சம்முகத்தோட தாத்தா ரொம்ப முடியாம கிடக்கறாரு. நாளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா, கொட்டுக்கு வருவாங்களான்னு தெரியாது. அது விசயமா பேசலாம்னுதான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கு..’.

பேச்சை நிறுத்திவிட்டு யாராவது ஏதாவது கேள்வி கேட்பார்களா என்பது போல் கூட்டத்தைப் பார்த்தார் சதாசிவ ஐயா.

‘எதுக்கு கோவிச்சுக்கிட்டு போனாங்க ஐயா’  என்றார் கண்ணுச்சாமி ஆசாரியார்.

ஏர்க்கலப்பை செய்வதிலும், மாடுகளுக்கு லாடம் கட்டுவதிலும் பல வருட அனுபவங்கள் பெற்றவர் கண்ணுச்சாமி ஆசாரியார். அவர் இல்லாவிட்டால் அந்த ஊரில் விவசாயம் செய்பவர்கள் மிகவும் சிரமப்பட்டுப் போய்விடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். டிராக்டர் என்ற சாதனம் கிராமங்களில் அதிகம் உலா வராத காலம் அது.

தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார் சதாசிவ ஐயா, ‘ஒரு சாவுக்கொட்டுக்கு வந்து போனால் நம்ம‌ ஊர் வழக்கப்படி, காலம் காலமாக ஐநூற்று ஒரு ரூபாய் மாமூலாகக் கொடுப்பது வழக்கம். இதுகூட முதலில் ஐம்பதில் தொடங்கி, பிறகு நூறாகி ஆகி கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ப் பெரியவர்களால் கூட்டம் போட்டு தீர்மானிக்கப் பட்டு ஐநூற்று ஒன்றாக ஆகியிருக்கிறது. கொட்டு கொட்டுபவர்கள் என்ன கேட்கறாங்கன்னா, பல வருடங்களுக்கு முன்பு தீர்மானித்த இந்தத் தொகை, தற்போதைய கால கட்டத்திற்கு ஒத்து வராது. விலைவாசியை அனுசரித்து இந்தத் தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்னு கேட்கறாங்க.  ஊர்க்காரங்க என்ன சொல்றாங்கன்னா, மாமூல் தொகை மட்டும் அல்லாது துக்கம் கேட்க வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் உறவினர்கள் கொட்டுபவர்களுக்கு தாராளமாக அன்பளிப்புக் கொடுக்கறாங்க. அதுவே ஒரு பெரிய தொகை வரும். அதுமாத்திரம் இல்லை… மாமூல் பணத்தை திடீர்னு அதிகரித்தால் அக்கம் பக்கத்து ஊர்க்காரங்களும் நம்ம மேல கோபப்படுவாங்கன்னு சொல்றாங்க… இப்ப நம்ம‌ என்ன பண்ணலாம்னு சொன்னீங்கன்ன ஒரு முடிவுக்கு வரலாம்’ என்று சுருக்கமாக விளக்கினார் சதாசிவ ஐயா.

‘வழக்கத்தை மாத்தினா உள்ளூர்க்காரங்களுக்கும், வெளியூர்க்காரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.  வேணுமின்னா அவங்களை இப்ப மறுபடியும் கூப்பிட்டு பேசிப் பார்க்கலாமா?’  என்றார் ஊர்க்கொத்துக்காரர் வேலப்பன்.

‘பத்து நிமிடத்தில் அவர்களைக் கூட்டி வருகிறோம்’ என்று சதாசிவ ஐயாவின் பேரன் கதிர்வேல், ஆசாரியாரின் மகன் சிவா, ஊர்க்கோவிலில் பூஜை செய்யும் பொன்னுச்சாமியின் பேரன் மஞ்சுநாதன், கொத்துக்காரர் வேலப்பனின் மகன் சண்முகம் ஆகிய நால்வரும் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினார்கள். நால்வரும் அருகில் உள்ள நகரத்துக் கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் நெருங்கிய நண்பர்கள்.

பத்து நிமிடத்தில் நான்கு வண்டிகளும் திரும்பி வந்தன. மூன்று வண்டிகளில் மாயன், செங்கான், மாரியும், நான்காவது வண்டியில் கல்லூரியில் படிக்கும் மாரியின் மகன் செல்வனும் பின் சீட்டில் அமர்ந்து வந்தனர்.

கதிர்வேல், சிவா, மஞ்சுநாதன் மற்றும் சண்முகம் ஆகியோருடன் ஒரே கல்லூரியில் படிப்பவன் மாரியின் ஒரே மகன் செல்வன். எப்பொழுதும் பிரியாமல் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த ஐந்து பேருக்கும் ‘பஞ்சபாண்டவர்கள்’ என்ற செல்லப் பெயரும் கல்லூரியில் உண்டு.

‘என்னப்பா மாரி… அன்னைக்கு கோபத்தில இனிமேல் கொட்டுக்கு வர மாட்டோம்னு சொல்லிட்டு போயிட்டீங்க. ஏதோ வருத்தத்தில அப்படிச் சொல்லி இருப்பீங்க. நம்ம சம்முகத்தோட தாத்தா முடியாம படுத்திருக்கிறார். ஏதாவது ஒண்ணுன்னா நீங்க பிடிவாதம் பிடிக்காம கொட்டுக்கு வரணும். என்ன சொல்றீங்க?’ என்றார் சதாசிவ ஐயா.  மாரி அவர்களின் தலைவன் என்பதால் அவனைப் பார்த்தே கேட்டார் சதாசிவ ஐயா.

‘ஐயா… அன்னைக்கு சொன்னதுதாங்க இன்னைக்கும். சில வீடுகளில் கொட்டும்போது கிடைக்கும் அன்பளிப்புத் தொகை பெரிதாக ஒன்றும் இருப்பதில்லைங்க‌. அதனால் எங்களுக்கு அன்பளிப்பே வேண்டாங்க ஐயா.  ஒரு கொட்டுக்கு வந்தா, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருங்க. அதைக்கூட கொட்டுக்கு வரும் நாங்க ஐந்து  பேரும் ஐந்தாகப் பிரித்து வைத்துக் கொள்வமுங்க.  இது கூட காலம் காலமா செய்து வந்த தொழில் என்பதால் செய்யறமுங்க. மற்ற எந்த முடிவுக்கும் எங்க ஆட்கள் ஒத்துக்கறதா இல்லைங்க. இப்படிச் சொல்றத நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாதுங்க ஐயா’ என்று தீர்மானமாகவும், உறுதியாகவும், பணிவாகவும் சொல்லி முடித்தார் மாரி.

கூட்டத்தில் பெரும் சலசலப்பு கிளம்பியது. மாரி தரப்பினர் பிடிவாதம் பிடிப்பதாகவும், வழக்கமாகக் கொடுக்கும் தொகையை மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அதிகம் கொடுத்தால் அவர்களின் பிடிவாதத்திற்கு அடி பணிந்ததாக ஆகி விடும் என்றும் பெரும்பான்மையானவர்கள் பேசினார்கள்.

இளைஞர் கூட்டத்தில் இருந்த சண்முகம் மட்டும் அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிட்டால் என்ன என்று குரல் எழுப்பினான். அவன் தாத்தாவுக்கு கொட்டு முழக்கு இல்லாமல் செய்து விடுவார்களோ என்ற பதட்டமும் அவன் குரலில் தெரிந்தது. ஆனால் இறுதியில் ஊராரின் பிடிவாதமே ஜெயித்தது. மாரி குழுவினர், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே மீண்டும்  தங்கள் காலனிக்குத் திரும்பினர்.

காத்திருந்தது போல் சண்முகத்தின் தாத்தா அடுத்த பதினைந்தாவது நாள் சிவலோக பதவி அடைந்து விட்டார். கொத்துக்காரர் வேலப்பன் தடுமாறிக்கொண்டு நின்றபோது மகன் சண்முகம் சொன்னான்.

‘அப்பா.. பதட்டப்பட வேண்டாம். பந்தல், சேர், சமையல் எல்லாத்துக்கும் நாங்க ஏற்பாடு செய்து விடுகிறோம். குழி வெட்டறத நம்ம பங்காளிங்க பாத்துப்பாங்க.. நீங்க தாத்தா இறப்புக்கு துக்கம் கேட்க வர்றவங்களை மட்டும் கவனிச்சுக்கிட்டா போதும். என்னங்டா? நா சொன்னது சரியா?’ என்றான் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்ற மூன்று நண்பர்களையும் பார்த்து.

‘அதெல்லாம் சரிடா…. கொட்டுக்கு என்ன பண்றது? நன்றாக வாழ்ந்து மறைந்து போன பெரியவரை ஒரு கொட்டு கூட இல்லாமல் சுடுகாட்டுக்கு அனுப்ப மனசு கேக்கலடா..’ என்று கம்மிய குரலில் கூறி தோளில் கிடந்த துண்டால் துளிர்த்து வந்த‌ கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

அவரைப் பார்த்து மனம் மனம் கரைந்த‌ போன‌ கதிர்வேல், ‘பெரியப்பா… நீங்க கவலைப்படாதீங்க.. கொட்டுக்கு எப்பாடு பட்டாவது ஏற்பாடு பண்ணுவது எங்க பொறுப்பு.. சண்முகா, நீ இங்கேயே அப்பா கூட துணைக்கு இரு… டேய் வாங்கடா போகலாம்..’ என்று பரபரப்புடன் மற்ற இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

அவனின் அவசரத்துக்குக் காரணம், அப்போதே துக்கம் விசாரிக்க கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரத் தொடங்கினார்கள்.

அடுத்த பத்து நிமிடத்துக்குள், கதிர்வேல், சிவா, மஞ்சுநாதன் மூவரும் மாரியின் முன் நின்றிருந்தனர். மாரியின் பக்கத்தில் மாரியின் மகன் செல்வனும் நண்பர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

‘தம்பி… இது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டம். இதற்கு முடிவே இல்லை. ஒரு பிரிவினர் தங்களின் அதிகாரத்தை விட்டுக் கொடுக்கத் தயாராய் இல்லை. மற்றவர்களோ தொடர்ந்து கொண்டிருக்கும் தங்களின் அடிமை வாழ்விலிருந்து விடுவித்துக் கொள்ளத் திமிறிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் காலத்தில்  இதற்கு விடிவு கிடைக்கும் என்றுஎன்று தோன்றவில்லை. ஆனால் உங்க ஐந்து பேரின் நட்பையும்  பார்க்கும் போது அது நடந்துவிடும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. இந்த விசயத்தில் நான் பிடிவாதம் பிடிப்பதாக நீங்க நினைக்க வேண்டாம். இது எனது தனிப்பட்ட குரலும் அல்ல. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்’  என்ற மாரியின் இறுக்கமான பேச்சு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்தது.

செல்வனை அழைத்து கதிர்வேலு ஏதோ சொல்லி அனுப்ப, அவனும் மாரியிடம் கேட்டு விட்டு வந்து சொன்னான்.

‘நீங்க‌ வேறு ஆட்களை அழைத்து வந்து காரியத்தை நடத்திக்கொள்வதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்கிறார் அப்பா’ என்றான்.

‘சரி… நீயும் வாடா..’ என்று செல்வனையும் சேர்த்து அழைத்துக் கொண்டு அடுத்த ஊருக்குச் சென்று கேட்டபோது அங்கிருந்த ஊர்ப் பெரியவர் சொன்னார்,

‘ஏம்பா.. மாரியின் பையன் தானே நீ?  உனக்குத் தெரியாதா என்ன?  ஒருவருடைய பகுதியில், அவர்களின் அனுமதி இல்லாமல், மற்றவர்கள் கொட்டுக்கு வருவதில்லை என்ற ஊர்க்கட்டு இருக்குதப்பா.. அதை மீறினால் பெரிய பிரச்சினை ஆகிவிடும். சும்மா அலையாதீங்க….நீங்க எந்த ஊருக்குப் போனாலும் இதைத்தான் சொல்லுவாங்க’ என்றார்.

குழப்பத்துடன் திரும்பிய நால்வரும், ஒன்று சேர்ந்து பேசி, ஒரு தெளிவான முடிவுக்கு வந்து, இரு சக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள அவர்களின் கல்லூரி அமைந்திருந்த நகரத்தை நோக்கி செலுத்தினர் விரைவாக‌.

பந்தல் போடப்பட்டு, துக்க வீட்டில் கூட்டம் சேர்ந்து கொண்டிருந்த வேளையில், ஒரு மூன்று சக்கர வாகனம் பந்தலின் முன் வந்து நின்றது. உடன் இரு சக்கர வாகனத்தில் வந்த கதிர்வேல் குழுவினர், மூன்று சக்கர வாகனத்தில் இருந்து சில பொருட்களை இறக்கி பக்கத்து வீட்டிற்குள் வைத்தனர்.

துக்க‌ வீட்டிற்கு உள்ளே பெண்களின் அழுகைக் குரல் மெலிதாகக் கேட்கத் தொடங்கி இருந்தது. இறந்து போன பெரியவரை மன்மதனாகவும், அகன்ற தேசத்தின் ராசாவாகவும் வர்ணித்து ஒரு கிழவி ஒப்பாரியைத் தொடங்கிக் கொண்டிருந்தார். தெருவை அடைத்துப் போடப்பட்டிருந்த பந்தலின் உள்ளே, வெள்ளைப் பவுடரில் சதுரமாகக் கட்டம் கட்டினான் மஞ்சுநாதன்.  புழுதி கிளம்பாமல் இருக்க அதன் நடுவினில் தண்ணீரை மெல்லிதாகத் தெளித்து விட்டான் சிவா.

செல்வன் நான்கு பெரிய உண்டியல்களைக் கொண்டு வந்து வெள்ளைக் கட்டத்தின் நான்கு முனைகளிலும் வைத்தான். கதிர்வேல் ஐந்து பறைகளையும், கொட்டுக் குச்சிகளையும் கொண்டு வந்து சதுரத்தின் நடுவில் வைத்தான். பக்கத்து வீட்டுக்குள் சென்று திரும்பிய அந்த ஐந்து பேரையும் அந்தக் கூட்டம் வியப்புடன் பார்த்தது.

நீல நிற மேல் சட்டையும், தார்ப்பாய்ச்சியாய் இறுக்கிக் கட்டப்பட்ட சிவப்பு நிற வேட்டியும், அதே சிவப்பு நிறத்தில் தலையில் சுற்றப்பட்டிருந்த உருமாலும், காலில் கட்டப்பட்டிருந்த சலங்கையும் அணிந்து வரிசையாக நின்றனர்.

முதலில் இரங்கற்பா ஒன்றினை செல்வன் மிருதுவான குரலில் பாடினான்.  ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஐந்து பேரும் மிருதுவாக ‘டும்’ என்று அதிராமல் ஒலி எழுப்பினர். அவர்கள் பறையினை இடது தோளில் சாய்த்துப் பிடித்து, பறையின் மேலே இடது கையும், கீழே வலது கையும் வைத்து இரண்டு கைகளிலும் இருந்த கோல் கொண்டு பறையை அடித்த அடியில் தெரிந்தது.

இவர்கள் இதில் நீண்ட நாள் பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்று. ஊர்க் கூட்டம் வியப்புடன் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே தொடங்கியது உக்கிர ஆட்டம். ஒருபுறம் நின்று பறையை முழங்கிக் கொண்டே செல்வன் பாட்டுப் பாட, மற்ற நால்வரும் முன்னேயும் பின்னேயும் சென்று ஆடிக்கொண்டே எழுப்பிய ‘டண், டண்… டண்டணக்கு’ ஒலி அந்தக் கூட்டத்தின் நாடி, நரம்பையெல்லாம் முறுக்கேற்றியது.

ஒரே மாதிரி கால்களை முன்னோக்கியும், பின்னோக்கியும் வைத்தது அல்லாமல் தாளம் தப்பாமல் அவர்கள் ஆடிக்கொண்டே கொட்டிய கொட்டும் அந்த மக்களை வியப்படையச் செய்தது.  ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்ட அந்த இளைஞர்களின் குடும்பத்தினர் அந்த ஆட்டத்திறனைப் பார்த்து பெருமை கொண்டனர். உள்ளே அழுது கொண்டிருந்த பெண்கள், கொட்டு முழக்குக் கேட்டு, ஆவல் தாங்காமல், அழுகையை நிறுத்தி விட்டு வெளியே வந்து மோவாயில் கை கொடுத்து வியப்புடன் ஆட்டத்தை ரசித்தனர்.

ஒரு ஆட்டம் முடிந்ததும் சதாசிவ ஐயா அவர்களைப் பார்த்துக் கேட்டார், ‘எங்கப்பா கத்துக்கிட்டீங்க இந்த ஆட்டத்தை? செல்வன் உங்க நாலு பேருக்கும் கத்துக் குடுத்தானா?’ என்றார்.

‘இல்லைங்க தாத்தா… இரண்டு வருசமா நாங்க ஐந்து பேருமே காலேஜ் முடிந்ததும் தினமும் இரண்டு மணி நேரம் டவுனில் பயிற்சி எடுத்துக் கொண்டோம். இதற்காக ஒரு பயிற்சிப்பள்ளியே அங்கே இருக்கு. இசைக்கருவியில் தொன்மையான இசை இந்தப் பறை இசைதான். இந்த இசை கேட்கும்போது நம்மையறியாமல் கால்கள் நடனமிடும். ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாறைக்குச் சென்று நாங்க ஐந்து பேரும் பயிற்சி எடுத்துக்கொள்வோம். இது யாருக்கும் தெரியாது’ என்றான்.

‘அது சரி… இது என்ன உண்டியல்? ‘ என்றார்.

‘நாங்க ஐந்து பேரும் மாசத்தில இரண்டு முறையாவது வெளியூர் நிகழ்ச்சிக்குப் போவோம். நிகழ்ச்சிக்காகக் கொடுக்கும் தொகை எங்களின் செலவுக்கு மட்டும் சரியாக இருக்கும். எங்கள் கல்லூரியில் படிக்கும் நான்கு ஏழை மாணவர்களைப் படிக்க வைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அவர்களின் கல்லூரிக் கட்டணம், புத்தகச் செலவு, கிராமத்திலிருந்து கல்லூரிக்குச் சென்று வரும் பேருந்துச் செலவு போன்றவற்றை இந்த உண்டியலில் கிடைக்கும் தொகையைக் கொண்டுதான் சரிக்கட்டி வருகிறோம். அதற்காகத்தான் இந்த உண்டியல்ங்க தாத்தா. சரிங்க தாத்தா… நாங்க தொடங்குகிறோம்’ என்று அடுத்த ஆட்டத்திற்குத் தயாரானார்கள்.

இந்த முறை வட்டமாக ஐந்து பேரும் சுற்றி நின்று பறை கொட்டி ஆடிய ஆட்டம் அந்த ஊரையே குலுக்கியது.  ஒருவர் முன் வந்து உண்டியலில் காசு போடத் தொடங்கியதும் அந்த நான்கு உண்டியலும் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பத் தொடங்கியது.

அந்த ஊர் அன்று இரண்டு அதிசயங்களைக் கண்டது. ஒன்று, தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில் பேரனே பறையடித்துச் சென்றது. இரண்டாவது, பறை கொட்டியபடி பிணத்தின் முன் சென்ற அந்த ஐந்து இளைஞர்களும், ஐந்து வெவ்வேறு இனங்களின் பிரதிநிதிகள் என்பது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அன்னை இல்லம் (சிறுகதை) – கீதா இளங்கோ

    வரட்டி மனிதர்களும், வைரப் பசுக்களும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை