2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அம்மா பிறந்த ஊர் பக்கத்தில்தான், சுமார் ஒரு ஐந்து கிலோ மீட்டர் தூரம். ஒரு நாள் அம்மா என்னைக் கூப்பிட்டு, ‘ கண்ணா… உங்க மாமன் போன் பண்ணினான்டா… தோப்புல தேங்கா பிடுங்கி போட்டிருக்காங்களாம்… நமக்காக இருபது தேங்கா சாக்குல கட்டி போட்டிருக்கானாம்… போயி, மொபெட்டுல போட்டு எடுத்துக்கிட்டு வந்துடேன்… ‘ என்றார்கள்.
அம்மா சொன்னதற்காக இல்லையென்றாலும், மாமாவின் மகள் பூங்கொடி காலேஜ் முடித்து லீவுக்கு வந்திருக்கிறாள் என்று அம்மா சொல்ல கேள்விப் பட்டிருந்ததால், அவளைப் பார்க்கவும் இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று ஒரு உந்துதல் உண்டானது. வீட்டிலிருந்து தோப்பு இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும். சாக்கு மூட்டையை வீட்டில் போட்டிருக்கிறார்களா, இல்லை தோப்பிலேயே போட்டுவைத்திருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. எதற்கும் முதலில் வீட்டுக்குப் போவோம். மூட்டை அங்கே கிடந்தால், இரண்டு வேலையும் ஒருங்கே முடிந்து விடலாம் அல்லவா என்று யோசனை ஓடியது.
யோசிக்கும்போதே மனதுக்குள் சில்லென்றிருந்தது. பூங்கொடி நடிகை கணக்காக இருப்பாள். அவளைப் பார்த்தும் ரொம்ப நாள் ஆகிவிட்டது. மொபெட்டை எடுத்துக் கொண்டு கிளம்புவதற்குள் அம்மா கூப்பிட்டார்கள், ‘ மறந்துட்டேன்டா… நார்த்தங்கா ஊறுகா போட்டிருந்தேன் இல்லையா… உங்க அத்தைக்கு நார்த்தங்கா ஊறுகான்னா உசிரு… பாட்டில்ல போட்டு வச்சிருக்கேன்… கொஞ்சம் எடுத்திக்கிட்டுபோய் வீட்டுலே கொடுத்துட்டு அப்புறமா தோப்புக்கு போயேன்… ‘ என்று அம்மா சொல்ல, கரும்பு தின்ன கூலியா என்ன என்றெண்ணி அவசரமாய் வாங்கி பெட்டிக்குள் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
இடையில் ஒரு ரெயில்வே லைன் வரும். முன்பெல்லாம் திடீரென்று கேட்டை அடைத்து விடுவார்கள். ரெயில் திருச்சியில் இருந்து வருகிறதா இல்லை கரூரிலிருந்து வருகிறதா என்று தெரியாமல் மொபெட்டை ஆஃப்செய்துவிட்டு மொபைலை ஆன் செய்துகொண்டு உட்கார்ந்துவிடுவேன். வண்டி கிராஸ் செய்தபிறகுதான் கிளம்புவேன்.
நான்கு மாதங்களுக்கு முன்னால்தான் தண்டவாளத்துக்கு கீழே தரைப்பாலம் கட்டித் திறந்திருந்தார்கள். அதற்குப் பிறகு அப்போதுதான் முதல் முதலாகப் போனேன். மெயின் ரோடிலிருந்து கீழே பாலத்துக்குள் இறங்கும் முன்பே தண்டவாளத்தில் ரெயில் ஏதும் வருகிறதா என்று வழக்கம்போல பார்த்தபடியே வண்டியை விட்டேன். அப்போதுதான் கவனித்தேன், தண்டவாளத்தில் ஒரு பெண் படுத்திருந்தாள். நெஞ்சோடு ஒரு கைக்குழந்தை. பக்கத்தில் ஒரு குழந்தை நின்றுகொண்டிருந்தது. எனக்கு பகீர் என்றது. வீட்டில் தலையணை வைத்து படுப்பது போல இவள் படுத்திருக்கிறாளே, இது தற்கொலை கேஸ் போலல்லவா இருக்கிறது என்று யோசித்து மொபெட்டை நிறுத்திவிட்டு அப்படியே மேலேறி ஓடினால், அந்தப் பெண், ஒரு கைக்குழந்தையையும் நெஞ்சில் போட்டுக்கொண்டு படுத்திருந்தாள்.
முதல் வேலையாக அவளை பலம் கொண்ட மட்டும் இழுத்து தூரத் தள்ளினேன். நல்லவேளை அந்தப் பக்கம் ரெயிலைக் காணவில்லை. பாலம் கட்டிவிட்டபடியால், அங்கே இருந்த கேட் கீப்பரையும் தூக்கி விட்டார்கள். இல்லாவிட்டால் கூட இந்நேரம் அந்த ஆள் பார்த்து துரத்தியிருப்பான்.
‘ ஏம்மா… உனக்கு அறிவிருக்கா. ரெண்டு கைக்குழந்தைகளை வச்சிக்கிட்டு இப்படி தண்டவாளத்துல தலை வைச்சு படுத்திருக்கியே… இது நியாயமா… உனக்கு என்ன ஆச்சு… ஏன் இந்த முடிவுக்கு வந்தே… இந்த ரெண்டுமே உன் குழந்தைகள்தானா.. ‘
நான் கேள்வி கேட்டுகொண்டிருக்கும்போதே அவள் ‘ஓ’வென்று அழத் தொடங்கிவிட்டாள். இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு ஒரு வயது இருந்தால் அதிகம். அதுவும் அழ ஆரம்பித்துவிட்டது. நின்றுகொண்டிருந்த குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும். அது ஏற்கனவே அழுது கொண்டிருந்திருக்க வேண்டும். கண்களெல்லாம் சிவந்து காணப்பட்டன..
‘ நான் செத்துப் போறேன்… என்னை விடுங்க… ‘ என்று மறுபடியும் தண்டவாளம் பக்கம் ஓட முற்பட்டாள் அவள். நான் ஏன் அப்படி செய்தேன் என்று எனக்கேத் தெரியவில்லை. சடாரென அந்தப் பெண்ணை அறைந்துவிட்டேன்…
‘ நீ வேணா சாவு… இந்தக் குழந்தைகளையும் ஏன் கூடவே இழுத்துக்கிட்டு வந்தே… இதுகள்லாம் என்ன பாவம் பண்ணிச்சுங்க… ‘ என்று சத்தம் போட்டேன்.
கண்களைத் துடைத்துக் கொண்ட அவள், ‘ அண்ணா… என்னை மன்னிச்சிடுங்க… எங்க வீட்டுக்காரரு வேறொரு பொண்ணை கொண்டுவந்து வீட்டுல வச்சிக்கிட்டு என்னை துரத்தி விட்டுட்டாரு… நான் என்ன பண்ணுவேன்… அதான் செத்துப் போலாம்னு தண்டவாளத்துல படுத்தேன்… என்னை விடுங்க… ’ என்று மறுபடியும் கண்ணீரோடு பின்னோக்கி நகர்ந்தாள்.
‘ எந்த ஊருமா… ‘ என்றேன். அவள் சொன்னது எங்கள் மாமாவின் ஊருக்கு அடுத்த ஊர்தான்.
‘ நீ வீட்டை விட்டு வெளியே போகமாட்டேன்னு அடம்பிடிக்க வேண்டியதுதானே… இல்லை… ஊருக்குள்ளே நாலு பெரியவங்க இருப்பாங்க இல்லை.., அவங்ககிட்டே போயி பிராது குடுக்க வேண்டியதுதானே… ‘
‘ எனக்கு அப்படியெல்லாம் தோணலைங்கண்ணா… ‘ என்றாள் நின்றுகொண்டிருந்த குழந்தையை தன்னுடன் இழுத்து நிறுத்திக்கொண்டு. அந்தக் குழந்தை திருதிருவென முழித்துக் கொண்டிருந்தது கண்ணீர் வடிய வடிய..
‘ சரி… அந்த ஊருதானே… நான் உங்கூருக்குப் பக்கத்து ஊருக்குத்தான் போயிட்டிருக்கேன். நானே வந்து உன் புருஷன்கிட்டே நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டுட்டு உன்னை ஒப்படைச்சிட்டு வந்துடறேன்… வண்டியில் போலாம் வா… ‘ என்று பேசிக்கொண்டே அவர்களைக் கூட்டிக்கொண்டு மெயின் ரோடுக்கு வந்தேன்.
மொபெட்டில் ஏறி உட்கார்ந்து, அவளை பின்னால் ஏற்றிகொண்டு மொபெட்டை கிளப்பினேன். அவள் கூச்சப்பட்டுக்கொண்டே உட்கார்ந்தாள். அந்த சிறு குழந்தையை முன்பக்கம் நிற்கவைத்துக் கொண்டு, ‘ பின்னாடி கைப்பிடி இருக்கும்… அதைப் பிடிச்சுக்கிட்டு நல்லா உட்காருமா… ‘ என்றேன் வண்டியை பாலத்துக்கடியில் விட்டேன். கைக்குழந்தையை அவள் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
கொஞ்சதூரத்தில் திடீரென்று மாமாவின் புல்லட் எதிரே வந்தது. வண்டியை நிறுத்தினேன். அவர் நெற்றியை சுருக்கிக்கொண்டு என்னைப் பார்த்தார். மொபெட்டில் இருந்தவர்களையும் கலவரத்துடன் பார்த்தார். நான் விஷயத்தை விவரித்தேன்.
‘ அப்படியா விஷயம்… ‘ என்றவர், அந்தப் பெண்ணை பார்த்து, ‘ ஏன்மா… நீ ராசப்பன் சம்சாரம்தானே.. நீங்க நம்ம பண்ணைக்கு வேலைக்கு வருவீங்களேம்மா… ‘ என்றார்.
அதற்குள் இறங்கிவிட்டிருந்த அந்தப் பெண், ‘ ஆமாங்கய்யா… அவர்தாங்கய்யா ஊட்டுல கலாட்டா பண்ணிக்கிட்டிருக்கார்… ‘ என்றாள்.
‘ மாமா… நான் போயி என்னனு விசாரிச்சிட்டு அவங்க வீட்டுல விட்டுட்டு அப்புறமா நம்ம வீட்டுக்கு வந்துடறேன்… ஊறுகாயை கொடுத்துட்டு தேங்கா மூட்டையை எடுத்துக்கணும்… ‘ என்றேன்.
‘ சரி மருமகனே… நான் ஒருத்தரை பார்க்கப் போயிட்டிருக்கேன்… பார்த்துட்டு நானும் வந்து சேர்ந்துடுவேன்… நீ கிளம்பு… ’ என்றுவிட்டு அவர் புல்லட்டை விரட்ட நான் மொபெட்டை விரட்டினேன்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings