எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நினைக்க நினைக்க எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. “ராஸ்கல்!… வேணும்னே… நான் பார்க்கிறேன்னு தெரிஞ்சுக்கிட்டு…. என்னை வயித்தெரிச்சல் பட வைக்கணும் என்பதற்காகவே சித்ரா கிட்டச் சிரிச்சுச் சிரிச்சு பேசறான் அந்த லட்சுமணன்!… அவனை விடக் கூடாது!… சித்ரா அவனுக்கா?… எனக்கா?… அப்படிங்கிற போட்டியல எதையாவது பண்ணி…. எப்படியாவது அவளை இம்ப்ரெஸ் பண்ணி…அவள் மனசுல இடம் பிடிச்சு, அந்த லட்சுமணன் பயல் முகத்துல கரியைப் பூசணும்!… ஆனா அதுக்கு என்ன பண்ணனும்னுதான் புரிய மாட்டேங்குது”.
அந்தி சாயும் நேரம். பகல் குனிந்து இரவு நிமிர ஆரம்பித்திருந்தது இன்னும் தெரு விளக்குகள் எரிய ஆரம்பிக்காததால் மங்கலான இருட்டு “மச… மச”வென்றிருந்தது.
யோசனையுடன் நடந்த நான் காலடியில் எதுவோ நீளமாய் வளவளப்பாய்த் தெரிய, சட்டென நின்று குனிந்து பார்த்தேன். “இது என்ன பாம்பா?… இல்லை கயிறா?” குழப்பத்துடன் பாக்கெட்டினுள் கையை விட்டு மொபைல் போனை எடுத்து, டார்ச்சை ஆன் செய்து அதன் வெளிச்சத்தில் பார்த்தேன்.
“ஐயோ… பாம்பு… பாம்பு” கத்தியபடி பின் வாங்கினேன்.
சுத்தமாய் ஐந்தடி இருக்கும். அசையாமல் கிடந்தது.
“ஏன் இப்படிக் கிடக்குது?… ஒருவேளை செத்துப் போயிருக்குமோ?… அப்படிச் சொல்ல முடியாது!… இரை எடுத்துட்டு மயங்கிக் கிடந்தாலும் கிடக்கும்!”.
தூரத்திலிருந்து இரண்டு சிறிய கற்களை எடுத்து அதன் மீது வீசினேன்.
அப்போதும் அப்படியே கிடந்தது லேசாய் தைரியம் வர, மெல்ல அருகில் சென்று காலால் எட்டி உதைத்தேன். உண்மை புரிந்தது. “ஆஹா… செத்த பாம்பு!… யாரோ அடிச்சுக் கொண்டாந்து இங்கே போட்டுட்டு போயிருக்காங்க!… ஹும்… இதைப் பார்த்து பயந்துட்டோமே?”.
சிரித்தபடியே நடையைத் தொடர்ந்தவன், ஒரு பத்தடி சென்றதும் நின்று திரும்பி அந்த செத்த பாம்பையே உற்று நோக்கினேன். மூளைக்குள் ஒரு ஐடியா ஃப்ளாஷ் ஆனது.
“கரெக்ட்!… அற்புதமான ஐடியா!… நைசா இதை எடுத்திட்டுப் போய் அந்தச் சித்ரா வீட்டு வாசல்ல போட்டு, “பாம்பு… பாம்பு!”ன்னு கத்தி, கூட்டம் சேர்றதுக்கு முன்னாடி “பட்… பட்”டுன்னு நாலு அடி போட்டு, என்னமோ நான் அடிச்சதுலதான் அந்தப் பாம்பு செத்த மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்ணி. அதன் மூலம் அவ மனசுல ஒரு ஹீரோ ஆகணும்!… அது போதும் அதை வச்சே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிடுவேன்!… வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!… எனக்கு செத்த பாம்பும் ஆயுதம்”.
சுற்றும் முற்றும் பார்த்து யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, ஒரு குச்சியை எடுத்து அந்தப் பாம்பை தூக்கிக் கொண்டு நடந்தேன்.
சித்ராவின் வீடு இருக்கும் பகுதியில் இன்னும் தெரு விளக்கு போடப்படாதது எனக்கு வசதியாய் போனது.
சித்ரா வீட்டின் முன் கதவு திறந்திருக்க, வாசலில் ஒரு குழந்தை மட்டும் தனியாய் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
“ஆஹா!…. எல்லாமே நமக்குச் சாதகமா இருக்கு!… வாசல்ல ஒரு குழந்தை மட்டும் இருக்கிறது… நமக்கு நல்ல சான்ஸ்!… குழந்தையைக் காப்பாற்றிய மாதிரி பாவலா பண்ணி பேரு வாங்கிடலாம்!”.
யாரும் பார்க்காத சந்தர்ப்பத்தில் அந்த செத்த பாம்பை குழந்தையின் அருகில் போட்டு விட்டு, “பாம்பு… பாம்பு” என்று அடித்தொண்டையில் அலறினேன்.
வீட்டுக்குள் இருந்து யாரோ வரும் ஓசை கேட்க, கையில் இருந்த குச்சியால் அந்த பாம்பை தாறுமாறாய் விளாசினேன்.
இதற்குள் எதிர் வீட்டிலிருந்து, பக்கத்து வீட்டிலிருந்து என பத்துப் பதினைந்து பேர் கூடி, “தம்பி.. பார்த்துப்பா… ஜாக்கிரதை… உன்னைக் கொத்திடப் போகுதுப்பா!” என்று எனக்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர்.
அதே நேரம் வாசலுக்கு வந்த சித்ராவின் அம்மா இரு கைகளையும் கன்னத்தில் வைத்துக் கொண்டு வாயைப் பிளந்து கத்த, நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த என் சித்ரா அவசரமாய் வாசலுக்கு வந்தாள். வந்தவள் நடப்பவைகளை நிதானமாய்க் கவனித்து விட்டு, சிறிதும் கலவரம் அடையாமல் என் முகத்தையே கூர்ந்து பார்த்தாள்.
“பார்க்கறா… பார்க்கறா!… டேய் திவாகர் உன் ஐடியா நல்லாவே வேலை செய்யுதுடா” என்னை நானே பாராட்டிக் கொண்டு, பயத்தின் உச்சியிலிருந்த சித்ராவின் தாயாரிடம், “நல்ல வேளைங்க… சரியான நேரத்தில் நான் பார்த்து அடிச்சிட்டேன்… இல்லேன்னா பாம்பு நம்ம பாப்பாவைக் கொத்தி இருக்குங்க!” சொல்லியபடியே அந்த குழந்தையை தூக்கி முத்தமிட்டு, “பயப்படாதடா கண்ணு!… மாமா இருக்கேன்டா” என்றேன். அது சிரித்தபடி என் கழுத்தைக் கட்டிக் கொண்டது.
இந்த சந்தர்ப்பத்தில் சித்ராவை ஒரு காதல் பார்வை பார்த்தேன். அவளோ வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்தபடி நின்றிருந்தாள்.
எனக்குள் குஷி பீறிட, “வசந்தமே…. அருகில் வா!… நெஞ்சமே… நெருங்கி வா!” பாடலை முணுமுணுத்தபடியே குழந்தையை இறக்கி விட்டு விட்டு, மறுபடியும் அந்த குச்சியை எடுத்து பாம்பை அடிக்கத் துவங்கினேன்.
“தம்பி… தம்பி… போதும்பா!… அது செத்துருச்சு போலிருக்கு!… அடிச்சது தான் அடிச்சே… அப்படியே அதைத் தூக்கிட்டு போய் எங்காவது தூரத்தில் போட்டுட்டுப் போயிடுப்பா… உனக்குப் புண்ணியமா போகும்!” கூட்டத்தில் யாரோ ஒருவன் சொல்ல எரிச்சலானேன்.
“சரி… சரி… நான் அதைப் பார்த்துக்கிறேன்!… நீங்க வேடிக்கை பார்த்தது போதும்… கிளம்புங்க… கிளம்புங்க!” என்று சொல்லி எல்லோரையும் விரட்டி விட்டு, அந்தப் பாம்பை குச்சியால் தூக்கிக் கொண்டு சித்ராவை ஒரு ஹீரோ பார்வை பார்த்தவாறு நடக்க ஆரம்பித்தேன்.
நரம்பெங்கும் நாதஸ்வர ஓசை. இரத்த நாளங்களில் புல்லாங்குழல் இசை.
பத்தடி சென்றிருப்பேன், “கொஞ்சம் நில்லுங்க!”.
குரல் கேட்டுத் திரும்பினேன். சித்ராதான் கூப்பிட்டாள்.
“எதுக்குக் கூப்பிடுறா?… ஒருவேளை இப்பவே காதலை சொல்லப் போறாளே என்னவோ?”.
பாரதிராஜாவின் வெள்ளை உடை தேவதைகள் என்னை நோக்கி வர ஆரம்பிக்க, “சொல்லு சித்ரா!”.கேட்டேன்.
“ஒரு கால் மணி நேரத்துக்கு முன்னாடி… இந்தப் பாம்பை… இதே இடத்துல… எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்… தனி ஆளா அடிச்சுக் கொன்னது நான்தான்!… அப்புறம் அதைக் கொண்டு போய் தூரத்தில்… இப்ப நீ வந்தியே… அந்த வழியில… ஓரத்துல போட்டுட்டு வந்ததும்… நான்தான்!… ஆனால் நீ பெரிய ஆளுப்பா!… செத்துப் போன அந்த பாம்பைத் தூக்கிட்டு வந்து… என் வீட்டிலேயே போட்டு… நீயே அடிச்ச மாதிரி நாடகம் போட்டு… எதுக்கு?… எதுக்கு இந்த டிராமா?”.
எனக்குத் தொண்டை வறண்டு, கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
“என்ன பதிலைக் காணோம்?… சரி…அதையும் நானே சொல்றேன்!… ஹீரோயிஸம் காட்டி… என்னை இம்ப்ரெஸ் பண்ணி… ரொமான்ஸ் பண்ண…. அப்படித்தான?”.
நான் பதில் சொல்ல முடியாமல் திணறுவதையும், என் கை கால் நடுங்கிய வேகத்தில் குச்சியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பாம்பு எந்த நேரமும் தரையில் விழுந்து விடுவதை போல் ஆடுவதையும், பார்த்து விழுந்து விழுந்து சிரித்தபடி சித்ரா அங்கிருந்து நகர்ந்தாள்.
என் கையில் இருந்த பாம்பு, பரமபத பாம்பாய் மாறி என்னை சர்ரென்று கீழே இறக்கி விட, தளர்வாய் நடந்தேன் தலை குனிந்தபடி.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings