2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்த பங்களாவின் கேட்டில் “ஞானம் பரத நாட்டியப் பள்ளி” என்ற போர்டு தொங்கிக் கொண்டிருந்தது.
போர்ட்டிகோவிற்கு இடப்புறம் புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த அந்த ஷெட்டில் வைத்துத்தான் பிரபல நாட்டியத் தாரகை ஞானாம்பாள் தன் மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுக் கொடுப்பாள். அவளிடம் மாணவியாய்ச் சேருவதென்பது மருத்துவப் படிப்பிற்கு அட்மிஷன் கிடைப்பதை விடக் கடினம். சிபாரிசுகளும், சான்றிதழ்களும் செல்லுபடியாகாத இடம் அது.
பங்களா வீட்டின் காம்பௌண்டு சுவர் உயரம் குறைவாக இருப்பதால் தெருவில் போவோர் வருவோர் கூட மாணவிகள் நாட்டியப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காண முடியும்.
அவ்வப்போது சில விடலைகள் வந்து எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்பர். அவர்களை கேட்டிலிருக்கும் வாட்ச்மேன் அதிரடியாய் மிரட்டுவார். எதிர்த்துப் பேசும் புள்ளிங்கோக்களை “போலீஸ்” பெயரைச் சொல்லித் துரத்தியடிப்பார்.
ஆனால், பக்கத்துச் சேரியிலிருக்கும் அந்தச் சிறுமி தெனமும் வந்து அந்த நாட்டியப்பயிற்சியை வேடிக்கை பார்ப்பதை மட்டும் அவர் தடுக்க மாட்டார்.
ஓரிரு முறை அந்தச் சிறுமி வேடிக்கை பார்ப்பதை அறிந்து கொண்ட ஞானாம்பாள் தானே வந்து அவளைத் துரத்தி விடுவாள். “ஏம்பா வாட்ச்மேன் அந்தச் சேரிப் பொண்ணு எட்டிப் பார்த்திட்டிருப்பது உன் கண்ணுக்குத் தெரியலையா?… இல்லை தெரிஞ்சும் கண்டுக்காம இருக்கியா?”
“பாவம்… சின்னப் பொண்ணு… அது பாட்டுக்கு அமைதியாய்ப் பார்த்திட்டு… அமைதியாப் போயிடும்… எந்த தொந்தரவும் பண்ணாது… அதான்…” இழுத்தான்.
அவனை எரிப்பது போல் பார்த்து விட்டுச் செல்வாள் ஞானாம்பாள்.
தான் தன் மாணவிகளுக்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுப்பதை, ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்த சேரிச் சிறுமியை, ஆரம்பத்தில் வெறுத்துத் துரத்திய பிரபல நாட்டியத் தாரகையான ஞானாம்பாள், நேற்று மொட்டை மாடியிலிருந்து அந்தக் காட்சியைக் கண்டபின் தன் வெறுப்பு மனத்தை மொத்தமாய் மாற்றிக் கொண்டாள்.
காரணம்?… கீழே சேரியில்… ஒரு குடிசையின் பின்புறம்… சாக்கடைக்கு அருகில்… படு கேஷுவலாக அந்தச் சிறுமி பரத நாட்டியம் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்து பிரமித்துப் போனாள்.
அவ்வப்போது, ஒளிந்திருந்து பார்த்துக் கற்றுக் கொண்ட நடன அசைவுகளையும், அபிநயங்களையும், முகபாவங்களையும், விழி வீச்சுக்களையும், தன் மாணவியரை விடச் சிறப்பாக அச்சிறுமி வெளிப்படுத்திய விதம் மிரள வைத்தது அவளை. “இசை இல்லாமலே இவ்வளவு சிறப்பாக நடனமாடும் இச்சிறுமி இன்னும் இசையோடு சேர்ந்து ஆடினால்…?”
அடுத்த வாரத்தில் ஒரு நாள், மார்க்கெட்டிற்குச் சென்றிருந்த ஞானாம்பாள், காய்கறிகளை வாங்கிக் கொண்டு தன் காரை நோக்கித் திரும்பும் போது, சற்றுத் தள்ளிக் கூடியிருந்த சிறு கும்பலையும், அதன் மத்தியிலிருந்து ஒலித்த பாடலையும் கேட்டு, ஆர்வமுடன் எட்டிப் பார்த்தாள்.
உள்ளே, மொபைல் மூலமாக இசைக்கப்பட்ட “கண்ணோடு காண்பதெல்லாம்… தலைவா… கண்களுக்குச் சொந்தமில்லை” பாடலுக்கு அந்த சேரிச் சிறுமி, அருமையாக பரத நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அவளைப் பெற்றவனோ துண்டு விரித்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தான்.
வெறுத்துப் போனாள் ஞானாம்பாள். ஆவேசமுடன் அச்சிறுமியைப் பெற்றவனை அணுகி, கோபமாய்க் கேட்டாள். “ஏன்யா… பரத நாட்டியம் என்பது எப்பேர்ப்பட்ட தெய்வீகக் கலை தெரியுமா?… தெய்வ சன்னதியில் ஆடப்படும் இந்த நாட்டியத்தை இப்படி நடுரோட்டில்… அதுவும் காசுக்காய்… ச்சை!… “எதுக்கோ தெரியுமா… எதோ வாசனை?”ன்னு சொல்லுவாங்களே… அது சரியாயிருக்கு!”
சில நிமிடங்கள் அமைதியாய் ஞானாம்பாளையே உற்றுப் பார்த்த அச்சிறுமியின் தந்தை, “பார்ரா…. இவங்க மட்டும் ஆயிரக் கணக்கில் பணம் வாங்கிக்கிட்டு… வீட்டுக்குள்ளார வெச்சு வியாபாரம் பண்ணுவாங்களாம்… அப்ப அது தெய்வீகக்கலை இல்லையாம்!.. ஆனா நாம இப்படி ரோட்டுல வெச்சு… காசு சம்பாதிக்கக் கூடாதாம்… இதென்னடா நியாயம்?” என்று சொல்ல, கூட்டம் “பட…பட”வென்று கை தட்டி அவன் பேச்சை ஆமோதித்தது.
சாட்டையடி பட்டாற் போலிருந்தது ஞானாம்பாளுக்கு. அதே நேரம் ஏதோ ஒரு தெளிவு ஏற்பட்டாற் போலும் இருந்தது. “இவர் சொல்வதும் உண்மைதானே?… தெய்வீகக் கலையை நான் காசுக்கு விற்றுக் கொண்டிருக்கிறேனோ?”
மறுநாள், நாட்டியத் தாரகை ஞானாம்பாள் வீட்டின் முன் இருந்த “ஞானம் பரதநாட்டியப் பள்ளி” என்ற போர்டு, “ஞானம் இலவச பரதநாட்டியப் பள்ளி” என்று மாற்றம் பெற்றிருந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings