2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தொழிலதிபர் ராஜசேகர் பங்களா வாசலில் நின்றிருந்த பாம்பாட்டிக் குட்டன், வாட்ச்மேனிடம் விசாரித்தான். “என்னை எதுக்கு மாதவா உங்க மொதலாளி பார்க்கணும்’ன்னார்?”
“எனக்கென்ன தெரியும்?… நேத்திக்கு திடீர்னு என்னைக் கூப்பிட்டு, “மாதவா… உனக்குத் தெரிஞ்ச பாம்பாட்டி யாரும் இருக்காங்களா?ன்னு கேட்டார்… எனக்கு சட்டுன்னு உன் ஞாபகம்தான் வந்திச்சு!… “ம் இருக்காங்க அய்யா!”ன்னேன்!… “நாளைக்கு என்னை வந்து பார்க்கச் சொல்லு!”ன்னார் அவ்வளவுதான்”
அதைக் கேட்டு விட்டு யோசனையுடன் மேவாயைத் தேய்த்த பாம்பாட்டிக் குட்டனிடம், “என்னப்பா ரொம்ப யோசிக்கறே?… எனக்கென்னமோ அவரோட கார்மெண்ட் ஃபேக்டரில பாம்புக நிறைய இருக்கும் போலிருக்கு… அதுகளைப் பிடிக்கத்தான் உன்னைக் கூப்பிட்டிருக்கார்”ன்னு தோணுது”
சில நிமிடங்களுக்குப் பிறகு, தொழிலதிபர் ராஜசேகரின் அழைக்க, பங்களாவிற்குள் சென்றான் பாம்பாட்டிக் குட்டன்.
“உன்கிட்ட கொடிய விஷமுள்ள பாம்புக எத்தனை இருக்கு” சோபாவில் அமர்த்தலாய் உட்கார்ந்தபடி ராஜசேகர் கேட்க,
“பதிமூணு பாம்புக இன்னும் பல்லு புடுங்காத நெலைல என் கிட்ட இருக்கு சார்!… சுத்தமா ஒவ்வொண்ணும் ரெண்டாயிரம்… மூவாயிரம் வரைக்கும் விலை போகும் சார்” பவ்யமாய் கை கட்டி நின்று சொன்னான்.
“நான் உன் கிட்ட பாம்பு வாங்கறதுக்காக உன்னைக் கூப்பிடலை!… எனக்காக நீ ஒரு வேலை செய்யணும்!… நீ மட்டும் அதை செஞ்சேன்னா… உனக்கு… ம்ம்ம்… அம்பதாயிரம் ரூபாய் கிடைக்கும்!” தங்க பிரேமிட்ட கண்ணாடிக்குள் தெரிந்த ராஜசேகரின் கண்களில் ஏதோவொரு வெறி இருந்தது.
“என்னது?… அம்பதாயிரமா?… சொல்லுங்க சார்.,.. என்ன வேலையானாலும் செய்யறேன்” வாயெல்லாம் பல்லாகச் சொன்னான் குட்டன்.
“கொஞ்சம் பக்கத்துல வா” ராஜசேகர் கையை ஆட்டி அழைக்க, வந்தான்.
அவன் காதுகளில் எதையோ சொன்னவர், அவன் கைகளில் முப்பதாயிரம் ரூபாயை உடனே திணித்தார்.
வாங்கிக் கொண்டவன், “கவலையே படாதீங்க சார்… இன்னிக்கே இந்த வேலையை முடிச்சிடறேன்” என்றான் உற்சாகமாய்.
“என்னை ஏமாத்தணும்னு நெனச்சே… உன்னை இல்லாம பண்ணிடுவேன்!” மிரட்டலாய் ராஜசேகர் சொல்ல,
“அய்யய்ய… பணத்தைக் கை நீட்டி வாங்கிட்டேன்னா…. காரியத்தை கச்சிதமாய் முடிச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்!” சொல்லி விட்டு அவன் வாசல் நோக்கி நடக்க,
“அதே மாதிரி இந்த விஷயம் உன்னையும் என்னையும் தவிர மூணாவது யாருக்கும் தெரியக் கூடாது!… குறிப்பா உன்னோட தோஸ்த் வாட்மேன் மாதவனுக்கும் தெரியக் கூடாது… என்ன?”
“கழுத்தையே அறுத்தாலும் சொல்ல மாட்டேன் சார்” கட்டை விரலை உயர்த்திக் காட்டி விட்டுச் சென்றான் குட்டன்.
சரியாக இருபது நிமிடங்களுக்குப் பிறகு கேட்டைத் தாண்டி வெளியேறிய பாம்பாட்டிக் குட்டனிடம் மாதவன் ஏதோ கேட்க, காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் நடந்தான் குட்டன். அவன் முகத்தில் தெரிந்த அதீத பிரகாசம் வாட்ச்மேனைக் குழப்பதிலாழ்த்தியது.
“என்னாச்சு… எதுக்கு இந்தப் பயல் இவ்வளவு சந்தோஷமாய்ப் போறான்?”
தொழிலதிபர் ராஜசேகரின் ஆணைப்படி அவரது தொழில் எதிரியான ராமரத்னத்தின் சூர்யா கார்டன் பங்களாவிற்குள், அன்றிரவே பத்துப் பதினைந்து கொடிய விஷப் பாம்புகளை பின்புற வெண்டிலேட்டர் வழியாக உள்ளே தள்ளி விட்டு பூனை போல் நடந்து காம்பௌண்ட் சுவற்றைத் தாண்டி தெருவில் குதித்தான் பாம்பாட்டிக் குட்டன்.
“அப்பாடி… ஒரு வழியா வேலை முடிஞ்சுது… ஒரு ரூபா ரெண்டு ரூபாயா?… மொத்தமா ஐம்பதாயிரம்… போதும்… இந்தத் தொழிலையே விட்டுட்டு கடைகண்ணி வெச்சு… பொண்டாட்டி புள்ளைகளோட நிம்மதியாப் பொழைக்கலாம்”
வீட்டையடைந்ததும் “டேய்… ராசுக்குட்டி… அம்மா எங்கேடா செல்லம்?” ஆசையோடு கேட்டான் குட்டன்.
“இன்னும் வேலையிலிருந்து வரலை” பாடப் புத்தகத்திலிருந்து தலையைத் தூக்கிச் சொன்னான் மகன்.
“இன்னிக்கு வந்ததும் சொல்லிடணும்… “போதும்டி நீ வீடு வீடாப் போயி… பத்துப் பாத்திரம் தேய்ச்சது… இனிமே நிப்பாட்டிக்கோ”ன்னு…” தனக்குள் தீர்மானித்துக் கொண்டான் குட்டன்.
தூரத்தில் ரெண்டு பேர் தன் வீட்டை நோக்கி கத்தியபடி ஓடி வர, எழுந்தோடிச் சென்று கேட்டான் பாம்பாட்டி. “என்னய்யா… என்ன ஆச்சு?”
“குட்டா… உன்ர பொண்டாட்டி உன்னைய ஏமாத்திட்டுப் போயிட்டாடா…” வந்தவர்களில் ஒருவன் அவசரமாய்ச் சொல்ல,
“என்னடா சொல்றே?” குட்டன் நெஞ்சில் கை வைத்துப் படபடத்தான்.
“சூர்யா கார்டன்ல ஒரு பங்களா வீட்டுக்குப் பத்துப் பாத்திரம் தேய்க்கப் போனவளை பாம்பு கடிச்சு….”
அவன் சொல்லி முடிக்கும் முன் குட்டன் மயங்கி விழுந்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings