இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஈசிஆர் சாலை விடுமுறை நாளை நெரிசலுடன் கடந்து கொண்டிருந்தது. இருளைக் கிழித்துக் கொண்டு தெரு விளக்குகளும் வாகன விளக்குகளும் வெளிச்சத்தைப் பரவவிட்டிருந்தன. இருபுறமும் வாகனங்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருந்தன.
வெளிச்சத்தை உமிழ்ந்தபடி பறந்து கொண்டிருந்த வாகனங்களுக்கிடையே சந்தோஷ், மனோ இருவரும் வெகு லாவகமாக பைக்கை ஓட்டினார்கள். அங்கிருந்து பத்திரமாக வீடு போய்ச் சேரவேண்டும் என்ற பயமும் பரிதவிப்பும் அவர்களுக்கு வேகத்தைத் தந்ததாக பின்னால் உட்கார்ந்து பயணித்த ஆதியும் ப்ரேமும் எண்ணினார்கள்.
“மனோ, என்னடா எப்பவும் இவ்ளோ வேகமா போக மாட்டியே, பயத்துல ஸ்பீடா போறியா?”
மனோ முறுக்கிய பைக்கின் வேகத்தை மிஞ்சிவிடும் அளவுக்கு அவன் இதயத்துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது. பதட்டத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் கூடுதலாகத் தொற்றிக் கொண்டது.
கடற்கரையில் ஏற்பட்ட அனுபவம் தந்த திகில் இன்னும் அவன் மனதில் ஒட்டிக் கொண்டு நொடிக்கு நொடி பயத்தை அதிகரித்த வண்ணம் இருந்தது. ப்ரேம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல நினைத்தான். ஆனால் பயத்தில் உலர்ந்து போயிருந்த நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு வார்த்தைகளை விழுங்கிக் கொண்டிருந்தது.
“டேய் மனோ, நான் பேசறது கேட்குதா? ஏதாவது பேசுடா. நீ பேசாம வந்தா எனக்கு பயமா இருக்கு டா. என்கூட உட்கார்ந்திருக்கறது நீதானான்னு சந்தேகம் வருது மச்சி. நீ இவ்ளோ ஸ்பீடா ஓட்ட மாட்டே. அதுவேற பயமா இருக்கு. உனக்கு ரொம்ப பயமா இருந்தா நான் வேணா ஓட்டறேன் டா. இந்த ட்ராஃபிக்ல இவ்ளோ ஸ்பீட் வேண்டாம்.”
“ப்ரேம், பைக்கை நான் வேகமா ஓட்டல. அதுவே தானா போகுது. வண்டி என் கண்ட்ரோல்ல இல்ல டா.”
பயத்தில் தந்தியடித்தன அவன் வார்த்தைகள். ப்ரேமுக்கும் வயிற்றில் இம்சை எட்டிப் பார்த்தது. கடற்கரையில் பயமுறுத்தியது அங்கேயே போய்விட்டது என நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் இப்போது மீண்டும் கலவரமடைந்தான்.
“என்ன சொல்றே மனோ? பைக்கை நீ ஓட்டலியா? என்ன டா, பயமுறுத்தறே? நீ நிஜமாவே மனோ தானா? தெரியாம உன் பின்னால உட்கார்ந்துட்டேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு மனோ. நீ யாரு?”
“டேய் மச்சி, நான் மனோதான் டா. ஆனா நான் பைக் ஓட்டல. நான் வெறுமனே புடிச்சுட்டிருக்கேன், அவ்ளோதான். அது தானா வேகமா போகுது. இவ்வளவு ட்ராஃபிக்ல என்னால எப்படிடா இவ்ளோ லாவகமா ஓட்ட முடியும்? என்னவோ வித்தியாசமாப் படுதுடா. என்னை நெருக்கி உட்காரு மச்சி. நம்ம ரெண்டு பேருக்கும் நடுல யாராவது உட்கார்ந்திருக்காங்களா?”
இதைக் கேட்ட பிறகு ப்ரேமுக்கு வார்த்தைகள் வர மறுத்தன. மனோவோடு நெருங்கி உட்கார்ந்தான்.
“ஏன் டா இப்படிக் கேட்கறே? நானும் நீயும்தான் பைக்ல இருக்கோம். பாரு, நான் உன் பக்கத்துல உன்னை நெருக்கிட்டு உட்கார்ந்திருக்கேன். பயப்படாம ஓட்டு டா. பத்திரமா வீட்டுக்குப் போயிரலாம். நான் உன்னை எதுவும் சொல்லல. நீ தைரியமா இரு.”
தன் பயத்தை வெளிக்காட்டினால் மனோ அதிகமாகக் கலவரப்படுகிறானோ என்று நினைத்த ப்ரேம், அவனை சமாதானப்படுத்தினான். வாகனங்களின் ஹார்ன் சத்தமும், சாலையில் வாகனச் சக்கரங்கள் உராயும் சத்தமும் சாலை முழுவதும் பரவிக் கிடந்தாலும், ஜீரணிக்க முடியாத ஒரு ஆழ்ந்த மௌனம் அவர்களுடன் பயணித்தது போல உணர்வு.
சற்று நேரத்தில் பின்னால் யாரோ இருப்பது போலத் தோன்றியது ப்ரேமுக்கு. இடுப்பில் தொடங்கி மேல் முதுகு வரை சில்லென்றது. மனோவுடன் நெருக்கமாக உட்கார்ந்ததால் அந்த யமஹா பைக்கில் ப்ரேமுக்குப் பின்னால் கொஞ்சம் இடம் இருந்தது. அங்கே சத்தியமாக இன்னொருவர் உட்கார முடியாது. ஆனால் அங்கே யாரோ உட்கார்ந்து தன் மேல் சாய்ந்து பயணிப்பது போல் தோன்றியது ப்ரேமுக்கு.
‘இது பயத்துனாலயா இல்ல பின்னால யாராவது….?’
ப்ரேமின் மனத்தில் கேள்விகள் பிராண்டி பயத்தை வளரவிட்டன. அடிக்கண்ணால் பின்னால் பார்த்தான். ம்…ஹூம், யாருமில்லை. இதயம் எகிறித் துடித்து பெருமூச்சு விட்டது. டீ ஷர்ட் காலருக்கு மேலிருந்த கழுத்துப் பகுதியில் ஐஸ் கட்டியை வைத்தது போலிருந்தது. அவன் போட்டிருந்த பெர்ஃப்யூம் வாசத்தையும் தாண்டி ஏதோ ஒரு வாடை மூக்கைத் துளைத்து மூச்சை இம்சித்தது.
திணறிக் கொண்டிருந்த ப்ரேம், முன்னால் போய்க் கொண்டிருந்த பைக்கில், பின்னால் உட்கார்ந்திருந்த ஆதி சைகை காட்டியதும் கவனம் கலைந்தான்.
ஆதியும் பயத்தில் எக்கச்சக்கமாக வியர்த்திருந்தான். அவன் கண்களில் பயம் துள்ளி விளையாடியதால் மலங்க மலங்க விழித்தபடி இருந்தான். பைக்கை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கவும் பயமாக இருந்தது. தொடர்ந்து பயணிப்பதும் அசௌகரியமாக இருந்தது.
வாயைத் திறந்து எதுவும் பேசும் தெம்பில்லை அவனுக்கு. பயம் தொண்டையில் உட்கார்ந்து கொண்டு அழுத்தியது. சந்தோஷ் ஏற்கனவே பயத்தில் இருப்பதால், அவனிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.
பைக்கின் கண்ணாடியில் தெரியும் தன் முகத்திற்குப் பின்னால் வேறு யாராவது தெரிகிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை. ஆனால் அவனுக்குப் பின்னால் நெருக்கிக் கொண்டு யாரோ உட்கார்ந்திருப்பது போல ஒரு அசௌகரியம்.
ரோமக் கால்கள் குத்திட்டு நின்றன. முகத்தில் மோதிய கடல் காற்றையும் மீறி உடல் வியர்த்துக் கொட்டியது. காதோரம் யாரோ மூச்சு விடுவது போலத் தோன்றியது. காதருகே இருந்த தலைமுடியை யாரோ ஊதினால் எப்படியிருக்கும், அதுபோல் ஒரு இம்சை.
சற்று தள்ளி வந்து கொண்டிருந்த பைக்கைப் பார்த்தான். ப்ரேம் தவிப்போடு இவனைப் பார்க்க, தன் பின்னால் யாராவது இருக்கிறார்களா என சைகையால் ஆதி அவனிடம் கேட்டான். அதே கேள்வியை ப்ரேமும் சைகையால் அவனிடம் கேட்டான். இப்போதுதான் நான்கு பேருக்கும் நிலைமை ஓரளவிற்குப் புரிந்தது.
கடற்கரையிலிருந்து தங்களுடன் தொற்றிக் கொண்டதன் கட்டுப்பாட்டில்தான் தாங்கள் இருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டபோது, ஈசிஆர் சாலையைக் கடந்திருந்தார்கள்.
“டேய் மச்சி, எங்கேடா போறே? என்னை வீட்டுல இறக்கிவிட்டுட்டு நீ எங்கே வேணாலும் போ மனோ. எனக்கு பயமா இருக்கு டா.”
“ப்ரேம், எங்கே போறோம்னு எனக்கே தெரியல டா. எனக்கும் பயமாத்தான் இருக்கு.”
இதே நிலைதான் அந்த பைக்கிலும். சந்தோஷ் பயத்தில் வாயடைத்துப் போயிருந்தான். ஆதி நடுங்கியபடியே சந்தோஷோடு ஒட்டி உட்கார்ந்திருந்தான்.
பயத்தில் நால்வர் இதயமும் அசுர வேகத்தில் துடிக்க, பைக் சீரான வேகத்தில் ஆளரவமற்ற சாலையில் பயணித்து, இருள் அப்பிக்கிடந்த அந்தப் பெரிய கட்டட வாசலில் வந்து ஓய்வெடுத்தது.
தடதடக்கும் இதயத்தைக் கெட்டியாகப் பிடித்தபடியே நான்கு பேரும் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருத்த அந்தக் கட்டடம் இருட்டைப் போர்த்திக் கொண்டிருந்தது.
“டேய் ஆதி, நம்ம காலேஜ் பின்பக்க கேட் டா. இங்கே எதுக்கு வந்தோம்?”
“மனோ, நாமளா வரலையே, இப்போ என்னடா பண்றது?”
“இதுவும் நல்லதுக்குத்தான் மச்சி. வாங்க, உள்ள போலாம். திரும்பிப் பார்க்காம உள்ளே வேகமா ஓடிரலாம். கொஞ்ச தூரத்துல காலேஜ் பில்டிங் வந்துரும். அங்கே கண்டிப்பா செக்யூரிட்டி இருப்பாங்க. அவங்களை உதவிக்குக் கூப்பிடலாம். அப்படியே எங்க அப்பாவுக்கும் ஃபோன் பண்றேன். நாம சொல்றதைவிட எங்க அப்பா சொன்னா செக்யூரிட்டி கேட்பாங்க.”
“கரெக்டா சந்தோஷ், ஒரு நிமிஷம்கூட இங்கே நிக்க வேண்டாம்.”
நான்கு பேரும் கல்லூரியின் பின்பக்க கேட்டில் ஏறி உள்ளே குதித்து இருட்டில் வேகமாக ஓடினார்கள். அதிகம் பராமரிப்பில்லாத புதர்களும், நெடுநெடுவென வளர்ந்திருந்த மரங்களும் இருட்டை விழுங்கிக் கொண்டு அசைவற்றிருந்தன. அது பயத்தை அதிகரித்தது.
மரங்கள் அடர்ந்திருந்த இருட்டைக் கடந்ததும் மங்கலான வெளிச்சத்தில் கால்பந்து, கூடைப்பந்து மைதானங்கள் சற்று தொலைவில் தெரிந்தன. அருகே பரந்து விரிந்த மைதானத்தில் இருட்டு விளையாடிக் கொண்டிருந்தது.
பயமும், ஓடிய களைப்பும் நால்வரையும் சோர்வடைய வைத்திருந்தது. சற்று தளர்வான நடையில் கால்பந்து மைதானத்திற்கு வந்து, அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று உட்கார்ந்தார்கள்.
“மனோ, பயமா இருக்குடா. எதுக்கு பீச்சுக்குப் போனோம், ஏன் இங்கே வந்தோம், ஒண்ணுமே புரியல மச்சி.”
“பயப்பாதே மச்சி, இது நம்ம காலேஜ்தானே. சந்தோஷோட அப்பா இங்கே டிபார்ட்மெண்ட் ஹெட். கண்டிப்பா அவர் நம்மளைக் காப்பாத்துவார். சந்தோஷ், உங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணுடா.”
ஏற்கனவே மொபைலை ஆராய்ந்து கொண்டிருந்த சந்தோஷ் கலவரக் குரலில் சொன்னான்.
“ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருச்சு. நீங்க யாராவது ட்ரை பண்ணுங்க.”
மற்ற மூவரும் மொபைலை எடுத்துப் பார்க்க, அதிலும் இருள் மட்டுமே இருந்தது. நான்கு பேரும் பயத்துடன் ஒருவரையொருவர் பார்க்க, லேசாக ஒரு விசும்பல் சத்தம் கேட்டது.
அடுத்திருந்த இருக்கையில் யாரோ உட்கார்ந்திருத்தார்கள். நால்வரும் பயத்தில் உறைந்தனர்.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(திக் திக் தொடரும்…)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings