இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பரந்து விரிந்த வங்காள விரிகுடா கதிரவனை விழுங்கி ஏப்பம் விட்டதில் இருட்டு உதயமாகியிருந்தது. ஆங்காங்கே ஒருசிலர் மணலில் அமர்ந்தபடி இயற்கையின் ஜாலங்களில் தொலைந்துபோக முயன்றனர். மெரினா, பெசன்ட் நகர் போன்ற இடங்களில் மாலை நேரத்தில் திருவிழா போல் கூட்டம் இருக்கும்.
ஆனால் ஈசிஆர் சாலையில் இருக்கும் கடற்கரைகளில் அதிகக் கூட்டம் இல்லாமல் சொற்ப மக்களே இருப்பார்கள். இருட்டுவதற்குள் அவர்களும் அநேகமாகக் கிளம்பிவிடுவார்கள். மின் விளக்குகள் இருக்காது. அதனால் பாதுகாப்பு குறைவு என்ற பயம் அதற்கு முக்கிய காரணம்.
கடற்கரையில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் பங்களா போன்ற வீடுகளில் ஒளிரும் அலங்கார விளக்குகளின் ஒளிதான் கடற்கரை மணலில் மங்கலான வெளிச்சத்தைப் படர விட்டிருந்தது.
மனோ சொன்னதை நம்ப முடியாமல் கேலியாகப் பேசிய ப்ரேம் ஆதி இருவருக்கும் சந்தோஷ் ஏதேதோ சொல்ல ஆரம்பித்ததும் சற்று குழப்பம் ஏற்பட்டது.
மனோ பயத்தில் பேசியவைகளைக் கேட்ட சந்தோஷால் அதற்குமேல் அமைதியாக இருக்க இயலவில்லை. தன் மனத்தில் அழுத்திக் கொண்டிருந்த பயத்தை வார்த்தைகளாக இறக்கி வைத்தான்.
“மனோ, இதே மாதிரிதான் அன்னிக்கு ராட்டினத்துல ஒரு குரல் எனக்குக் கேட்டுச்சு. முதல்ல எதுவும் பிரச்சனை இருக்கல. ஆனா திடீர்னு என் பக்கத்துல யாரோ உட்கார்ந்திருந்த மாதிரி இருந்துது. என்ன ஏதுன்னு எனக்குப் புரியறதுக்குள்ள யாரோ என் மேலே உட்கார்ந்து அழுத்தினாங்க டா.
ஒரு கொலை செய்யட்டுமான்னு ஒரு குரல் கேட்டுச்சு. அது சாதாரணமா நாம பேசற குரல் மாதிரி இல்ல. என்னவோ பண்ணிச்சு டா. குரல் எங்கேயிருந்து வந்துதுன்னு தெரியல. உங்க யாரையாவது உதவிக்குக் கூப்பிடணும், உங்ககிட்ட இதைச் சொல்லி உங்களுக்கும் இந்தக் குரல் கேட்குதான்னு கேட்கணும் தோணிச்சு. ஆனா எதுக்கும் நேரமில்லாம பயத்துல மூச்சுத் திணறி மயங்கிட்டேன். அதை இப்போ நினைச்சாலும் பயத்துல உடம்பெல்லாம் என்னவோ பண்ணுது.
அதுமட்டுமில்ல, நாம கரைல நின்னுட்டு தண்ணிக்குள்ள போகும்போது எதேச்சையா மணலைப் பார்த்தேன். அஞ்சு பேரோட கால் தடம் மணல்ல இருந்தது. அப்பவே எனக்கு பயத்துல கை காலெல்லாம் சில்லிட்டுப் போச்சு. உன் பக்கத்துல யாரோ இருந்தாங்க மனோ.”
கண்களில் பயம் கொப்பளிக்க சந்தோஷ் சொல்லி முடித்தபோது அங்கே மயான அமைதி நிலவியது. ஆதி, ப்ரேம் இருவருக்கும் இவர்களின் பயம் தொற்றிக் கொண்டது. ஆதி பதட்டத்துடன் கேட்டான்.
“என்ன சொல்றே சந்தோஷ்? இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு, எங்ககிட்ட ஏன் டா சொல்லல? டேய் மனோ, நாம நாலு பேர்தானே இருக்கோம். அப்புறம் எப்படிடா உனக்கு வேற ஏதோ குரல் கேட்கும்? எங்களுக்கு அப்படி எதுவும் கேட்கலையே.”
“ஏய், ரெண்டு பேரும் பேசி வச்சு எங்களை பயமுறுத்தப் பார்க்கறீங்களா? ஆதி, எனக்கென்னவோ இவனுங்க வழக்கமா காலேஜ்ல மத்த பசங்களை சீண்டி வம்பிழுக்கற மாதிரி நம்மகிட்ட பண்றாங்களோன்னு தோணுது.
என்னடா விளையாடறீங்களா? பக்கத்துல யாரும் இல்லையாம், ஆனா யாரோ கையைப் புடிக்கறாங்களாம், காதுகிட்ட பேசறாங்களாம். வடிவேல் சொல்றாப்ல தடால்தடால்னு சாயுதாம், உருளுதாம்னு ரீல் சுத்தறீங்களா?”
பயமும் கோபமும் கலந்து ப்ரேம் தன் ஆதங்கத்தைக் கொட்டினான்.
“டேய் ப்ரேம், அப்போ உங்களுக்கு இதெல்லாம் கேட்கலையா?”
“இல்லடா, நீ ஏதோ பேசினே, அதுமட்டும் கேட்டுச்சு. சந்தோஷ்கிட்ட ஏதோ பேசறேன்னு நான் நினைச்சேன். அதனாலத்தான் நீங்க ரெண்டு பேரும் சொல்றதை என்னால நம்ப முடியல.
அன்னிக்கு ராட்டினத்துலயும் நாமெல்லாம் சந்தோஷ் பக்கத்துலதானே இருந்தோம். நமக்கு எதுவமே கேட்கலையே. அடுத்த முறை அந்தக் குரல் கேட்டா மொபைல்ல ரெக்கார்ட் பண்ணு. அதைக் கேட்டுட்டு நம்பறதா வேண்டாமான்னு முடிவு பண்ணலாம்.”
“டேய் ப்ரேம், ரெண்டு பேரும் பயத்துல பேசிட்டிருக்கோம். உனக்கு இன்னும் நம்ப முடியலையா? என்ன டா பேசறே நீ? மொபைல்ல ரெக்கார்ட் பண்ணச் சொல்றே, தெரிஞ்சுதான் சொல்றியா?
என் பக்கத்துல யாரும் இல்ல. ஆனா என் கையை யாரோ புடிச்சிருந்தாங்க. யாரோ என் கழுத்துகிட்ட பெருமூச்சு விட்ட மாதிரி சூடா ஒரு உணர்வு. காதுகிட்ட வந்து கொலை பண்ணட்டுமான்னு கேட்கறாங்க. அவனவன் பயத்துல செத்துட்டிருக்கான். உனக்கு மொபைல்ல ப்ரூஃப் வேணுமா?”
“இல்ல மனோ, கோபப்படாதே மச்சி. நீங்க ரெண்டு பேரும் சொல்ற சம்பவங்கள் நடந்தப்போ நானும் ஆதியும் உங்க கூடவேதான் இருந்தோம். எங்களுக்கு மட்டும் எதுவும் கேட்கலையே. அதுமட்டுமில்ல, அதெப்படி சந்தோஷ்க்கு ஒரு மாசம் முன்னால பொருட்காட்சில கேட்ட அதே குரல், அதே கேள்வி இப்போ உனக்குக் கேட்கும்?”
“டேய், சந்தோஷ் இப்போதானே அன்னிக்கு நடந்ததைச் சொன்னான். எனக்கு அதேமாதிரி நடக்கலேன்னா நான் எப்படி கொஞ்சம் முன்னாடி அதே டயலாக் சொல்லியிருக்க முடியும்? புத்திசாலித்தனமா பேசறதா நினைச்சு உளறாதே டா.”
“அப்படின்னா ஒருவேளை, காலேஜ்ல நாம வம்பிழுத்து, நம்மளால பாதிக்கப்பட்ட யாராவது நம்மளை பயமுறுத்தறதுக்காக இந்த மாதிரி பண்றாங்களோ? இப்பதான் டெக்னாலஜில என்னென்னவோ பண்றாங்களே.”
சந்தோஷுக்கு பயத்துடன் கோபமும் வந்தது.
“லூசா டா நீ. குரல் வேணா ஆர்டிஃபிஷியலா கேட்கற மாதிரி பண்ண முடியும். ஆனா அந்த ஃபீல் எப்படி டா? வெறும் குரலைக் கேட்டு ராட்டினத்துல நான் மயங்கி விழுந்திருப்பேன? யாரோ மேல ஏறி அழுத்தினாங்க டா. மூச்சுவிட முடியல. நான் செத்துருவேன்னுதான் நினைச்சேன். இதைச் சொன்னா நீங்க இப்படி கேலி பேசுவீங்கன்னுதான் இவ்வளவு நாள் சொல்லாம இருந்தேன்.”
“ஆமா ப்ரேம். அலைல இருந்து எனக்கு எந்திரிச்சு வரத் தெரியாதா என்ன? ஆனா யாரோ என்னை அழுத்தினாங்க டா. யாரோ என் கையைப் புடிச்சு இழுத்து விட்டாங்க. இதெல்லாம் எப்படி மச்சி செயற்கையாப் பண்ண முடியும்?”
“சரி, அப்ப அந்த கண்ணுக்குத் தெரியாத யாரோ, யாருன்னு நினைக்கறே மனோ? அதை எப்படிக் கண்டுபிடிக்கிறது?”
“புரியல மச்சி. என் கையைப் பார்த்தியா? இந்த மாதிரி என் கைல தழும்போ காயமோ இருக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமில்ல டா. நாங்க பொய் சொல்றோம்னா இது எப்படி கைல வந்திருக்கும்? ஏதோ தப்பா நடக்குது ஆதி. பயமா இருக்கு.”
“சரி டா, பயப்படாதே மறுபடியும் இதே மாதிரி நடந்தா மொபைல்ல வீடியோ எடுக்கணும். டேய் ப்ரேம், நீ பயப்படறேதானே? சும்மா வெளில கெத்தா பேசிட்டிருக்கே. ஆனா பயத்துல என்னை நெருக்கிட்டு உட்கார்ந்திருக்கே.”
“என்ன டா சொல்றே? நான் அதே இடத்துலதானே உட்கார்ந்திருக்கேன். நீ பயத்துல என்கிட்ட வந்து நெருக்கி உட்கார்ந்துட்டு என்னைச் சொல்றியா?”
“சரி விடு, உன்கிட்ட ஆர்க்யூ பண்ண முடியாது. நம்ம நாலு பேர்ல யாருக்கு இந்த மாதிரி வித்தியாசமா ஏதாவது நடந்தாலும் அதை வீடியோ எடுக்கலாம்.”
ஆதி சொல்லி முடித்தபோது வேறு ஒரு குரல் கேட்டது.
“சரி, வீடியோ எடுத்துதான் பாருங்களேன். கண்டுபிடிக்க முடியுதான்னு பார்க்கலாம்.”
அலையின் இரைச்சலைவிட ஆக்ரோஷமாக இருந்தது அந்தக் குரல். அதைக் கேட்டு நான்கு பேரும் கலவரத்துடன் இருட்டில் அக்கம்பக்கம் தேடிக் கொண்டிருக்கும் போதே, ப்ரேமுக்கும் ஆதிக்கும் இடையே இருந்து யாரோ மணலைத் தட்டிவிட்டு எழுந்து போனார்கள்.
“டேய் ஆதி, நம்ம ரெண்டு பேருக்கு நடுல யாரோ உட்கார்ந்திருந்தாங்க. இப்போ மணலைத் தட்டிட்டு எழுந்து போன மாதிரி இருந்துது மச்சி.”
“ஆமா ப்ரேம், யாரோ நெருக்கிட்டு உட்கார்ந்த மாதிரி இருந்துச்சு. அதான் நான் அப்பவே கேட்டேன். கிளம்பலாம் வாங்க டா. இதுக்குமேல இங்கே இருக்க வேண்டாம்.”
கலவரத்தின் உச்சியில் நான்கு பேரும் அங்கிருந்து எழுந்து ஓடினார்கள். கடற்கரைக்கு வரும் குறுகிய சாலையில் நிறுத்தியிருந்த தங்கள் இருசக்கர வாகனங்களை மனோவும் சந்தோஷும் உருட்டியபடியே வர, அதற்கு முன்னால் மூச்சிரைக்க ஓடி மெயின் ரோட்டிற்கு வந்தார்கள் ப்ரேமும் ஆதியும்.
வாகன வெளிச்சமும் மக்கள் நடமாட்டமும் நால்வருக்கும் கொஞ்சம் தெம்பைத் தந்தன. ஆனாலும் சட்டென வார்த்தைகள் வரவில்லை. முகத்தில் கலவரம் மண்டிக்கிடந்தது.
“டேய் மனோ, பைக் ஸ்டார்ட் பண்ணுடா. இதுக்குமேல இங்கே இருக்க வேண்டாம், சீக்கிரம்.”
ப்ரேமின் வார்த்தைகளில் டன் கணக்கில் பயம் உட்கார்ந்திருந்தது. மனோவும் சந்தோஷும் பைக்கைக் கிளப்ப, ப்ரேம் மனோவுடனும், ஆதி சந்தோஷின் பின்னாலும் தொற்றிக் கொண்டனர்.
சாலையில் விரைந்த சக்கரங்களைவிட அவர்கள் இதயத்துடிப்பு வேகமெடுத்தது. அதைவிட அசுர வேகத்தில் அது அவர்களை அழைத்துப் போனது.
எங்கே…???
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(திக் திக் தொடரும்…)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings