இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்திமாலை மஞ்சள் வெயிலில் கடற்கரை அழகாய் மின்னியது. அலைகள் ஏதோ தேடலுடன் ஓடி ஓடி வந்தன. நண்பர்கள் நால்வரும் அலைகளில் கால் நனைத்தபடி கவலைகளைக் கரைக்க முயன்றனர்.
நான்கு பேர் நின்றிருந்த இடத்தில் மணலில் ஐந்து ஜோடிக் கால்தடங்கள் எப்படி வரும்? அதைப் பார்த்ததும் சந்தோஷ் முகத்தில் பயரேகை படர்ந்தது. மணலில் கால்கள் புதைந்த இடத்தில் அழுத்தமாகப் புதைந்திருந்த அந்த ஐந்தாவது கால் தடத்தைப் பார்த்த சந்தோஷ், திகிலில் உறைந்தான். இவர்கள் நால்வரின் பாதச் சுவடுகளைவிட அந்த ஐந்தாவது கால்தடம் அளவில் சற்று பெரிதாக இருந்தது. அடுத்தடுத்து வந்த அலைகள் இவர்களின் கால்தடங்களை அள்ளிக் கொண்டு போனாலும், அந்த ஐந்தாவது கால்தடம் மட்டும் அப்படியே அமானுஷ்யமாய் இருந்தது.
சந்தோஷின் நிலை இப்படியிருக்க, மனோ தன் இடதுகையை யாரோ பிடித்திருப்பது போல் உணர்ந்தான். வலப்பக்கமிருந்த சந்தோஷின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைக் கண்டவன், அவனை ஆழ்ந்து நோக்கினான்.
அவன் கண்களில் கொப்புளிக்கும் பயம், மனோவின் மனதில் கலக்கத்தை உண்டுபண்ணியது. அவன் அதிர்ச்சி அடையக் கூடாது என்று டாக்டர் அறிவுறுத்தியது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதனால் சந்தோஷ் இப்படி பயப்படுகிறானே என நினைத்தவன், அவனைத் தட்டி என்னவென்று கேட்க நினைத்து தன் இடது கையைத் தூக்க முயன்றான்.
ஆனால் அவன் இடது கையை யாரோ பிடித்திருந்தார்கள். இப்போது திகிலுடன் தன் இடப்பக்கம் திரும்பிப் பார்த்தான். யாருமில்லை. ஆனால் அவன் இடதுகையை யாரோ பிடித்து அழுத்தினார்கள். கையை உதறிக் கொள்ள முயற்சித்தபோது, அருகே யாரோ இடித்துக் கொண்டு நிற்பதுபோல் ஒரு உணர்வு.
கடல்காற்றையும் மீறி வியர்க்கத் தொடங்கியது மனோவுக்கு. அவன் காதருகே யாரோ மூச்சுவிடுவது போலிருந்தது. கடல் காற்று அலையோடு சேர்ந்து ஓடி வந்து அவன்மேல் மோதிய சத்தத்தையும் மீறி காதருகே ஒரு குரல். அதுவும் அவனுக்கு மட்டுமே கேட்கும் வகையில் ரகசியமாக, அமானுஷ்யமாக ஒலித்தது.
“ஒரு கொலை செய்யட்டுமா? ஒரே ஒரு கொலை செஞ்சுக்கறேனே மனோ…”
ஏற்கனவே சந்தோஷின் கலவர முகத்தைக் கண்டு கலங்கியிருந்தவனுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது. யாரது எனக் கேட்க நினைத்தான். ஆனால் வார்த்தை வெளிவரவில்லை. தொண்டை வரண்டது போல் ஒரு உணர்வு. எச்சிலைக் கூட்டி விழுங்கி நாக்கால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு மீண்டும் கொஞ்சம் சத்தமாகக் கேட்டான்.
“யாரது? யார் என் கையைப் புடிச்சு இழுக்கறீங்க?”
திக்கித் திணறி பேசி முடித்தபோது, அவன் கழுத்தருகில் யாரோ பெருமூச்சு விட்டதுபோல் சூடாக உணர்ந்தான். வயிற்றில் எக்கச்சக்க அமிலம் சுரந்தது. விவரிக்க இயலாத இம்சையான உணர்வு தோன்றியது. வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு உணர்வை அனுபவித்ததே இல்லை அவன்.
அவன் கையைப் பிடித்திருந்த பிடி இன்னும் இறுகியது. விரல்கள் நொறுங்கிவிடுமோ என்ற பயம்வேறு தொற்றிக் கொண்டது. கையை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தான். ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. கொஞ்சம் தள்ளி நின்றிருந்த இருவருக்கு மனோவின் நடவடிக்கை வேடிக்கையாக இருந்தது. காற்றில் கையை முறுக்கி திருப்பி என்ன செய்கிறான் என்று புரியாமல் பார்த்தார்கள்.
மனோவுக்கு அதையெல்லாம் கவனிக்கக்கூட தோன்றவில்லை. தலையை அங்கும் இங்குமாகத் திருப்பி தன் காதருகே கேட்ட குரல் யாருடையது, நண்பர்கள் ஏதாவது பிராங்க் செய்கிறார்களா என்று சந்தேகத்தோடு பார்த்தான்.
“யார்னு கேக்கறேனில்ல, பதில் சொல்லுங்க.”
“என்ன மனோ, நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம நீ கேள்வி கேட்கறே. நான்தானே முதல்ல கேள்வி கேட்டேன். அதுக்கு பதில் சொல்லு. அப்புறம் உன் கேள்விக்கு நான் பதில் சொல்றேன்.”
கடல் அலைகளின் இரைச்சலையும் மீறி அமானுஷ்யமான அந்தக் குரல், மனோவின் காதுகளில் நுழைந்து உயிர்வரை படர்ந்து பயத்தைப் பிரசவித்தது.
கண்கள் விரிய பெருமூச்சு விட்டு தன்னை சுதாரித்துக் கொள்ள முயற்சித்தான் மனோ. ஆனால் இயலவில்லை, தடுமாறினான். அவன் தடுமாறிய நேரத்தில் ஓடி வந்த பேரலை மனோவைத் தன்னோடு இழுத்துக்கொண்டு ஓடியது.
மனோவின் நடவடிக்கைகளை அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த சந்தோஷ் கலவரத்தோடு கரையை நோக்கி ஓடினான். அவன் கண்களில் படர்ந்திருந்த பயம் இப்போது அவன் உயிர்வரை சென்று தாக்கியது. பயப்பந்து உருண்டு தொண்டைக் குழியில் வந்து சிக்கிக் கொண்டதுபோல் ஒரு உணர்வு. இதயம் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டது. அன்று ராட்டினத்தில் ஏற்பட்ட அதே பயத்தை உணர்ந்ததால் சந்தோஷிற்கு நிலை தடமாறியது. அப்படியே கடற்கரை மணலில் ஒடுங்கி உட்கார்ந்தான்.
நண்பர்கள் இருவரின் திடீர் மாறுதலுக்குக் காரணம் புரியாமல் மற்ற இருவரும் திகைத்தனர். கைகளைக் கோர்த்து அலைகளோடு ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்த மனோ தண்ணீரில் விளையாடுகிறான் என நினைத்தனர். ஆனால் சந்தோஷ் ஏன் திடீரென கலவரத்தோடு இப்படி குறுகி உட்கார்ந்திருக்கிறான் என்று புரியவில்லை. மனோவிற்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.
சந்தோஷை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு அலாரம் போல் அடிக்க, ப்ரேம் ஆதி இருவரும் கால்களை உதறிக் கொண்டு சந்தோஷை நோக்கித் திரும்பினார்கள். ஆனால் சந்தோஷ் மனோவையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.
மனோ தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தான். அடுத்தடுத்த வந்த அலைகள் அவனை இன்னும் உள்ளே இழுத்தன. அவன் அலையோடு விளையாடுகிறான் என்ற நினைத்துக் கொண்டிருந்த ப்ரேம் மற்றும் ஆதி இருவருக்கும் நிலைமையின் தீவிரம் மெல்ல புரிந்தது. மனோ அலைகளோடு விளையாடவில்லை, போராடிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்ததும் பதறினார்கள்.
பயத்துடன் இருவரும் அலைகளில் முன்னேறி மனோவைப் பிடித்து இழுத்து கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். வாயிலும் மூக்கிலும் கடல் தண்ணீரோடு மணலும் சேர்ந்து அப்பிக் கொண்டிருந்ததால் மனோ சுவாசிக்கத் திணறினான். பெருமூச்சுவிட்டு தன் இதயத்துடிப்பை சீராக்க முயன்றான்
பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொடுத்து அவன் முகத்தைக் கழுவிவிட்டு அவனை ஆசுவாசப்படுத்தினார்கள். இவை அனைத்தையும் திகிலுடன் பார்த்துக் கொண்டு அசைவற்று உட்கார்ந்திருந்தான் சந்தோஷ். அவனருகில் மனோவையும் உட்கார வைத்து எதிரில் உட்கார்ந்து கொண்டார்கள் ப்ரேமும் ஆதியும்.
“டேய் மனோ, என்னாச்சு? நீ நல்லா நீச்சல் தெரிஞ்சவன் தானேடா. வழக்கம் போல தண்ணிய பார்த்ததும் ஆர்வத்துல தண்ணிக்குள்ள குதிச்சிட்டேன்னு நினைச்சுட்டிருந்தோம். இப்படி கடல் தண்ணிய முழுங்கி மூச்சுக்குத் திணறிட்டிருக்கே, என்ன ஆச்சுடா உனக்கு?”
“ஆமாடா, இவன் என்னடான்னா பேயைப் பார்த்து பயந்த மாதிரி ஓடிவந்து இப்படி மலங்க மலங்க முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கான். டாக்டர் வேற அவனுக்கு எந்த அதிர்ச்சியும் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு. என்ன நடக்குது இங்கே?”
ப்ரேம், ஆதி இருவரும் குழப்பத்தில் தவிக்க, சந்தோஷும் மனோவும் பயத்தில் உறைந்திருந்தார்கள்.
“மனோ, என்னடா, ஏன் இப்படியிருக்கே? ஏதாவது பேசுடா.”
“யாரோ என் கையைப் புடிச்சு இழுத்தாங்க. என் வலது கையை சந்தோஷ் புடிச்சிருந்தான். எனக்கு இடது பக்கம் யாரும் இல்லேன்னு உங்களுக்கே தெரியும். ஆனா யாரோ என் கையைக் கெட்டியாப் புடிச்சு முறுக்கினாங்க. அப்புறம், அப்புறம் ஒரு குரல் கேட்டுச்சு.”
“குரலா? யாரோட குரல்? என்ன பேசினாங்க?”
“யார் குரல்னு தெரியல டா ஆதி. ஆனா மனுஷக் குரல் மாதிரி இல்ல. என் பக்கத்துல யாரும் இல்ல. ஆனா யாரோ என் கையைப் புடிச்சு, என் காதுல ஒரு கொலை செய்யட்டுமானு கேட்டாங்க. என்னவோ பண்ணிச்சு டா மச்சி. அதை எப்படிச் சொல்றதுனு தெரியல டா.”
மனோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே ப்ரேம் மனோவின் இடது கையைப் பார்த்தான்.
“டேய் மனோ, என்னடா இது?”
பயமும் சந்தேகமும் கலந்து கேட்டுக் கொண்டே மனோவின் இடது கையை இழுத்துப் பார்த்தான். மனோவின் இடது கை மணிக்கட்டு அருகே ஏதோ அழுத்தியது போல் சிவந்திருந்தது.
அதைப் பார்த்ததும் பயத்தில் நடுங்கினான் மனோ. மனோ சொன்னதையும், அவன் பயத்தில் நடுங்குவதையும் கவனித்துக் கொண்டிருந்த சந்தோஷ், ப்ரேம் அருகில் நெருங்கி உட்கார்ந்து பயத்தில் உடலைக் குறுக்கிக் கொண்டான்.
“ஏய் மனோ, சந்தோஷ் பயப்படறான் டா. நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்றே, விளையாடாதே மச்சி.”
“டேய், என்னைப் பார்த்தா விளையாட்டா பேசற மாதிரியா இருக்கு. அரண்டு போயிருக்கேன் டா. ஒரே ஒரு கொலை செஞ்சுக்கறேன் மனோ அப்படின்னு என் பேரை வேற சொல்றாங்க டா.”
திக்கித் திணறி மனோ பேச, முதல்முறையாக வாயைத் திறந்தான் சந்தோஷ்.
அவன் சொல்வதைக் கேட்க அதுவும் அங்கேயே காத்திருந்தது.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(திக் திக் தொடரும்…)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings