இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பொருட்காட்சியில் சுற்றத் துவங்கிய ராட்டினம் அந்தரத்தில் நின்றதும், உலகையே தங்கள் கட்டுக்குள் வைத்ததாக மிதந்தனர் நண்பர்கள் நால்வரும்.
தன் பிறந்தநாளை வித்தியாசமாக, கெத்தாகக் கொண்டாட விரும்பிய சந்தோஷ், தன் விருப்பப்படி ராட்டினம் நின்றதும் பூரித்துப் போனான். தனக்காக ராட்டினத்தை சற்று நேரம் அந்தரத்தில் அப்படியே நிறுத்தி வைக்க முடியும் என்ற நினைப்பே அவனுக்கு மிகப்பெரிய சாதனையாகத் தோன்றியது.
தன்னால் இயலாதது ஒன்றுமில்லை என்று ஏற்கனவே அவன் வைத்திருந்த எண்ணத்திற்கு, இந்த நிகழ்வு இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கொழுந்துவிட்டு எரிய வைத்தது.
நண்பர்களின் உற்சாகக் கூக்குரல் அவனை மிதக்கச் செய்தது. சாக்லேட்டைப் பிடிக்க கைகளை நீட்டியவன் அதன்பின் அசௌகரியமாக உணர்ந்தான். யாரோ அவனை அழுத்தினார்கள். ஆனால் அருகில் யாரும் இல்லை. கலவரக் கண்களுடன் திணறியவன், காதருகில் கேட்ட அமானுஷ்யக் குரலால் பயத்தின் உச்சிக்குப் போனான். எங்கும் நகர இயலாத சூழ்நிலை.
இதுவே கீழே தரையில் இருந்திருந்தால் தைரியமாக எதிர்த்து நிற்கலாம். யார் அவனிடம் வம்பிழுக்கிறார்கள் என்று கண்டறிந்து, நண்பர்களோடு சேர்ந்து ஒருவழி பண்ணியிருப்பான். ஆனால் இது மிகவும் இக்கட்டான இடம். ஓரமாக நகர்ந்ததற்கே அவன் உட்கார்ந்திருந்த இருக்கை ஒருபக்கமாகச் சாய்ந்தது. நடுவில் மட்டுமே உட்கார வேண்டும் என்று ஏறும்போதே அறிவுறுத்தினான் அந்த இளைஞன்.
ஆனால் அருகில் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்து அவனை நெருக்குவது போல் ஒரு உணர்வு அவனுக்கு ஏற்பட்டதால், இருக்கையின் ஓரத்தில் கம்பிகளைப் பிடித்தபடி ஒடுங்கி உட்கார்ந்திருந்தான் சந்தோஷ்.
நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷின் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் கூச்சலும், இவனுக்காக அவர்கள் வீசிய சாக்லேட்டும் காற்றில் மிதந்தன.
அவனுக்குள் படர்ந்த பயத்தை நண்பர்களிடம் தெரிவிக்கக்கூட நேரமிருக்கவில்லை அவனுக்கு. கண்களில் பயம் கொப்பளிக்க, சுவாசிக்கக் காற்றில்லாமல் தவித்தான். அவனுக்கு அருகில் யாரோ உட்கார்ந்து நெருக்குவது போல் முதலில் உணர்ந்தவன் சுதாரிப்பதற்குள், அவன் மேல் யாரோ ஏறி உட்கார்ந்து அழுத்தினார்கள்.
உடல் முழுவதும் பரவிய பயம் இதயத்தில் வந்து மையம் கொண்டது. நெஞ்சில் ஒரு வலி பரவி இம்சித்தது. என்ன நடக்கிறது, ஏன் நடக்ககறது என்று யோசிக்கக் கூட முடியவில்லை. கண்களின் வழியே பயம் வெளியேறிய போது, அப்படியே மூர்ச்சையாகிப் போனான் சந்தோஷ்.
“சந்தோஷ், ஹாப்பீ பர்த்டே…” என்று மூன்று பேரும் உற்சாகமாகக் கத்தும் போதே ராட்டினம் வேகமெடுத்தது. மற்ற மூவரும் கத்தியபடியே ராட்டினத்தில் சுற்ற, சந்தோஷ் மட்டும் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
ராட்டினம் ஓய்ந்துபோய் நின்றதும் அதே உற்சாகத்தோடு இறங்கிய மூவரும் சந்தோஷை அழைத்தனர்.
“என்ன மச்சி, அவ்ளோ கெத்தா பேசினே. ராட்டினம் அந்தரத்துல நின்னதும் பயந்துட்டியோ? சாக்லேட்டைக் கூடப் புடிக்காம பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்திருந்தே.”
வேடிக்கையாகப் பேசிக் கொண்டே சந்தோஷைக் கலாய்த்துச் சிரித்தனர். ஆனால் சந்தோஷ் எதற்கும் அசையவில்லை.
“ஓவரா சீன் போடறான் டா” என்று சொல்லிக்கொண்டே ஆதி சந்தோஷைப் பிடித்து இழுக்க, அப்படியே சரிந்து கீழே விழுந்தான்.
“சந்தோஷ், டேய் நடிக்காதடா” என்று மீண்டும் அவனை இழுக்க சந்தோஷ் அசைவற்றுக் கிடந்தான்.
முதல் முறையாக மூன்று பேரும் பதறினார்கள். தண்ணீரை முகத்தில் தெளித்து, குலுக்கிப் பார்த்தார்கள். அவன் அசையவில்லை. அதற்குள் அங்கே கூட்டம் கூடியது. ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள்.
“அளவுக்கு மீறி ஆடினா இப்படித்தான். ராட்டினத்துல சுத்தும்போது ஒழுங்கா இருக்கணும். கண்டபடி ஆடினா ஏடாகூடமா ஏதாவது ஆயிரும்.”
“ம்ம்ம், பார்த்தா காலேஜ் பசங்க மாதிரி தெரியுது. ராட்டுல ஏறினமா, சுத்தினமான்னு இருக்கணும். மேலேயே கொஞ்ச நேரம் நிக்க வச்சு ஆடினானுங்க. மூச்சு திணறியிருக்கும். அதான்”
“பெத்தவங்களைச் சொல்லணும். கண்டிச்சு வளர்க்காம கைல தாராளமா பணத்தைக் கொடுத்து கெடுக்கறாங்க. அதான் இவங்களும் இஷ்டத்துக்கு ஆடறாங்க.”
“ஏ, ஆளாளுக்கு குறை சொல்ற நேரமா இது. தண்ணி தெளிச்சும் கண் முழிக்கலையே. வாழ வேண்டிய வயசு, சட்டுனு ஆம்புலன்சுக்குஃபோன் பண்ணுங்க.”
வயதில் மூத்தவர் ஒருவர் கொஞ்சம் அதட்டலாகச் சொன்னதும், கூட்டத்தில் ஒருவர் ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்தார். அதற்குள் நண்பர்கள் மூவரும் சந்தோஷைத் தட்டி எழுப்பப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் முகத்திலும் கலவரம் மண்டிக் கிடந்தது.
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, சந்தோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சந்தோஷைப் பரிசோதித்த மருத்துவர்கள் கொஞ்சம் குழம்பித்தான் போனார்கள். மூச்சுத் திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று கணித்து முதலுதவி செய்து கண்காணிப்பில் வைத்தார்கள். சந்தோஷ் வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நண்பர்கள் மூன்று பேரும் பயத்தில் உறைந்து போயிருந்தார்கள். ஆனாலும், பொருள்காட்சிக்குப் போனதாகவும், ராட்டினத்தில் சுற்றும்போது பயத்தில் மயங்கிவிட்டான் என்றும்தான் மருத்துவர்களிடம் சொன்னார்கள். யாரிடமும் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றி மூச்சு விடவில்லை.
இரண்டு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து, சிகிச்சைக்குப் பின் சந்தோஷ் வீடு திரும்பினான். ஏதோ அதிர்ச்சியில் இதயம் பலவீனமாகி இருப்பதாகவும், சிறிது நாட்களுக்கு எந்த அதிர்ச்சியும் சந்தோஷை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளும்படி அறிவுரை சொன்னார்கள்.
வீட்டில் ஒரு வாரம் ஓய்வெடுத்த பிறகு கல்லூரிக்கு வந்தான் சந்தோஷ். நண்பனைப் பார்த்த மூவரும் நிம்மதியடைந்தார்கள். ஆனால் சந்தோஷ் முன்னைப் போல் இல்லை. அவனுடைய கலகலப்பு தொலைந்து போயிருந்தது. எப்போதும் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமைதியாக இருந்தான்.
“டேய் சந்தோஷ், உனக்கு ஹைட்ல இருந்து கீழே பார்த்தா அலர்ஜியா மச்சான்? அந்தமாதிரி பயம் இருந்தா எதுக்கு இந்த ரிஸ்க் எடுக்கணும்? சாதாரணமாவே உன் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கலாம். இந்த சிக்கல் எல்லாம் வந்திருக்காது.”
“ஆமா ஆதி, இதுக்குத்தான் நான் அன்னிக்கே சொன்னேன். த்ரில் வேணும்னு எதையோ செய்யப் போய் இப்போ இவன் பேயறைஞ்ச மாதிரி இருக்கான். வழக்கமான கலகலப்பே இல்ல. நல்லவேளை, யார்கிட்டயும் நாம ராட்டினத்துல பர்த்டே கொண்டாடினதைச் சொல்லல. அதுமட்டும் வெளில வந்திருந்தா நாம அவ்வளவு பேரும் சிக்கல்ல மாட்டியிருப்போம்.”
“ப்ரேம், நீ உடனே ஆரம்பிக்காதே. சந்தோஷ் இதுக்கெல்லாம் பயப்படறவன் இல்ல. அவனாத்தானே ராட்டினத்துல மேல இருக்கும்போது கொண்டாடணும்னு முடிவு பண்ணான். நாம யாரும் கட்டாயப்படுத்தலயே. ஒருசிலருக்கு மேல ரொம்ப நேரம் இருக்கும்போது மூச்சுத் திணறல் வரலாம். இவனுக்கு அந்த மாதிரி ஏதாவது ஆயிருக்கும். அந்த பயம் இன்னும் போகல. அதான் இப்படி இருக்கான்.”
“எப்பப்பாரு என்னை அடக்கி வைக்க மட்டும் தெரியுது. ஆனா நான் சொல்றதுல இருக்கற நியாயம் புரியறதில்ல. நாம எப்பவும் போல ஜாலியா இருக்கணும்னு ஆசைலதானே நான் சொல்றேன். நம்ம கேங்க்ல சந்தோஷ்தான் லீடர் மாதிரி கெத்தா இருப்பான். அவன் இப்படி இருந்தா கையொடிஞ்ச மாதிரி இருக்கு மச்சி. அதனாலத்தான் நான் இவ்வளவு சொல்றேன்.”
“புரியுது டா. அவனுக்கு அதிர்ச்சி தர மாதிரி எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அதனால அவன்கிட்ட அன்னிக்கு என்ன நடந்ததுன்னு துருவித் துருவி கேட்கவும் தயக்கமா இருக்கு மச்சி. கொஞ்சம் பொறுமையா டீல் பண்ணுவோம்.”
மனோ, ப்ரேம், ஆதி மூவரும் பலவிதமாக சந்தோஷைத் தேற்றினார்கள். ஒரு மாதம் கழிந்தது. சந்தோஷ் கொஞ்சம் தேறியிருந்தான். ஆனாலும் ராட்டினத்தில் ஏற்பட்ட அனுபவத்தை நண்பர்களிடம் பகிரவும் தயக்கமாக இருந்தது அவனுக்கு.
கண்டிப்பாக மூன்று பேரும் அதை நம்ப மாட்டார்கள். மாறாக அதையே காரணமாக வைத்துக் கலாய்ப்பார்கள். பயந்தாங்கொள்ளி என கல்லூரி முழுவதும் பற்ற வைப்பார்கள்.
கடந்த மூன்று வருடங்களாக நான்கு பேரும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள். பாம்பின் கால் பாம்பறியும். ஆனால் சந்தோஷை எப்படியாவது சகஜ நிலைக்குத் கொண்டுவர மூன்று பேரும் பெரிதும் முயன்றனர். மனோ தான் ஆரம்பித்தான்.
“டேய், நாளைக்கு லீவ்தானே. சந்தோஷைக் கூட்டிட்டு பீச் போலாமா? கொஞ்சம் மாறுதலா இருக்கும்.”
“ஆமா மச்சி, அவன் இப்படியிருக்கறது கையொடிஞ்ச மாதிரியிருக்கு. காலேஜ்ல கெத்து காட்டவே முடியல டா.”
“சரிடா, நாளைக்கு லீவை பீச்ல கொண்டாடறோம்.”
மறுநாள் மாலை ஐந்து மணி. ஈசிஆர் சாலையிலிருக்கும் கூட்டமற்ற கடற்கரையில், நண்பர்கள் நால்வரும் கடல் அலைகளோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.
கைகள் கோர்த்தபடி அலை வந்து கால்நனைக்கும் மணலில் நின்றிருந்தனர்.
“மச்சி, இன்னும் கொஞ்சம் உள்ள போலாம் டா. இங்க அலையே வரல.”
சொல்லியபடியே ஆதி மற்ற மூவரையும் இழுத்தான். சந்தோஷ் மட்டும் தயக்கத்துடன் நகர்ந்தவன், எதேச்சையாக மணலைப் பார்த்தான். மணலில் ஐந்து ஜோடிக் கால்தடங்கள் பதிந்திருந்தன. ‘திக்’ என்று அதிர்ந்தான்.
மனோவின் வலது கையை இறுகப் பற்றிக் கொண்டான் சந்தோஷ். அவன் பயந்த முகத்தைப் பார்த்த மனோ, அவனைத் தட்டிக் கொடுக்க தன் இடது கையைத் தூக்க முயன்ற போதுதான் வித்தியாசமாக உணர்ந்தான். அவன் இடது கையை யாரோ பிடித்திருந்தார்கள். ஆனால் அருகில் யாருமில்லை.
சந்தோஷை அடுத்து ப்ரேம், அடுத்து ஆதி என நின்றிருக்க, தன் கையைப் பிடித்திருப்பது யார்? மனோவின் வயிற்றில் பயப்பந்து உருளத் துவங்கிய வேளையில் காதருகே ஒரு குரல்.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(திக் திக் தொடரும்…)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings