in ,

ஒரு கைதியின் தீர்ப்பு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்  

தொலைக்காட்சியை சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜசேகர்.  “என்ன நிகழ்ச்சி இது…இவ்வளவு இண்ட்ரஸ்டா பார்த்திட்டிருக்கீங்க?” கேட்டபடியே அவரருகில் வந்தமர்ந்தார் அவர் மனைவி சுபத்ரா.

“இந்த நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கு சுபத்ரா!… நேரடியா ஜெயிலுக்கே போயி…கொலைக் குற்றவாளிகளைச் சந்திச்சு…அவங்க ஏன் கொலை செஞ்சாங்க?…எந்தச் சூழ்நிலைல கொலை செஞ்சாங்க?…தாங்கள் செய்த குற்றத்துக்காக அவங்க இப்ப வருத்தப்படறாங்களா?…இல்லை இன்னமும் தாங்கள் செய்தது சரிதான்னு பிடிவாதமா இருக்காங்களா?ன்னு அவங்க வாயாலேயே சொல்ல வெச்சு எடுத்திருக்காங்க!…சில நிகழ்வுகள் நெஞ்சை அறுக்குது சுபத்ரா!”

“அப்படியா?” அவளும் சீரியஸானாள்.   திரையில் தோன்றிய ஒரு கொலைக் குற்றவாளிக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஏழு… வயசிருக்கும்.  மனைவியைக் கொலை செய்து விட்டு சிறையில் இருக்கும் அவன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்

                                                                       ****

“என் பேரு திவாகர்.  மூணு வருஷத்துக்கு முன்னாடி என் மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை தீர்ப்பாகி, இங்க வந்திருக்கேன்…ஆனா…இப்பவும் சொல்றேன்…என் மனைவியை நான் கொன்னது குற்றமேயில்லை!…அவ செஞ்ச தப்புக்கு நான் குடுத்த தண்டனை அது!…அவ்வளவுதான்!”  

அவனை இடைமறித்த தொலைக்காட்சிப் பெண், “கொலை செய்தேன்”னு சொல்றீங்க!…அப்புறம் எப்படி குற்றமில்லைன்னு சொல்றீங்க?”

“அவ செஞ்ச காரியத்துக்கு யாராயிருந்தாலும் அதைத்தான் செஞ்சிருப்பாங்க!”

“ஒ…அப்படி என்ன காரியம் செஞ்சுட்டாங்க?…துரோகம் பண்ணிட்டாங்களா?” தொலைக்காட்சிப் பெண் நாசூக்காகக் கேட்டாள்.

“அதைக் கூட மன்னித்து விட்டிருப்பேன்!…அவ செஞ்சது அதை விட கொடுமையான காரியம்!”

தொலைக்காட்சிப் பெண் கூர்ந்து பார்க்க,  “நானும் ஜோதியும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!…ரெண்டு வீட்டிலேயும் பயங்கர எதிர்ப்பு!…மீறித்தான் பண்ணிக்கிட்டோம்!…கல்யாணமான பிறகுதான் தெரிஞ்சுது “அவ ஒரு பணத்தாசை பிடிச்ச பேய்”ன்னு… எப்பப் பார்த்தாலும் “பணம்…பணம்”ன்னு என்னை அரிப்பா!… நிறைய பணம் வேணும்….அதை ஆடம்பரமா செலவழிச்சிட்டு…ஜாலியா வாழணும்…அதுதான் அவ எண்ணம்”

“ம்ம்ம்…நீங்க எடுத்துச் சொல்லியிருக்கலாமே!” தொலைக்காட்சிப் பெண் அவன் வாயைக் கிளறினாள்.

“எவ்வளவோ அறிவுரைகள் சொல்லித் திருத்தப் பார்த்தேன்!…அதனால் அவளுக்கு என் மீது வெறுப்பு!…எங்களுக்கு ஒரு பெண் குழந்தை!…ஒரு வயசு வரைக்கும் நல்லா ஆரோக்கியமா..புஷ்டியா…இருந்த என் குழந்தை திடீர்னு ரொம்ப நோஞ்சானா ஆயிடுச்சு!…நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு ஹார்லிக்ஸ்…காம்ப்ளான்…இன்னும் சத்தான டானிக்குக…ன்னு வாங்கிக் குவிச்சேன்!….ம்ஹூம்…ஒண்ணும் பிரயோஜனமில்லை!…என் குழந்தை நாளுக்கு நாள் வீக்காகி…எலும்பும் தோலுமாகி… பஞ்சத்துல அடிபட்ட குழந்தையாட்டம் ஆயிடுச்சு!…

நான் கவலைல வெந்து துடிச்சேன்!…ஆனா..என் மனைவி அதுக்காக கொஞ்சம் கூடக் கவலைப்படலை!… ஒரு நாள்…காலைல வேலைக்குப் போயிருந்த நான் பவர்கட் காரணமா வேலையில்லாமத் திரும்பி வந்த போது, என் மனைவி ஜோதி யாரோ ஒரு புதுப் பொம்பளையோட பேசிட்டிருந்தா!…அந்தப் பொம்பளையோட தோற்றமும்…முக பாவமும் அவ சரியில்லை எனச் சொல்ல, நான் ஒளிஞ்சு நின்னு அவங்க பேசறதைக் கேட்டேன்”

“த பாருக்கா…அஞ்சு மணி வரைதான் டைம்…அதுக்குள்ளார கொழந்தையைக் கொண்டாந்து குடுத்திடணும்!…ஏன்னா அஞ்சரைக்கு என் புருஷன் வந்துடுவான்!…வந்தா சிக்கலாயிடும்!” என்றாள் ஜோதி.

“நீ கவலைப் படாதே…நாலே முக்காலுக்கு கொழந்தையைக் கொண்டாந்து குடுத்துடறேன்…போதுமா?” என்று சொல்லி விட்டு அப்பெண் ஜோதியிடம் சில ரூபாய் நோட்டுக்களைத் தர, அவள் அதை வாங்கிக் கொண்டு குழந்தையை அப்பெண்ணிடம் தந்தாள்.

ஒளிந்திருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு எதுவுமே புரியவில்லை. அப்பெண் என் குழந்தையை எடுத்துக் கொண்டு செல்வதையே குழப்பமாய் பார்த்துக் கொண்டு நின்றேன். ஏதோ ஒரு உணர்வு என்னை உந்த, அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து சென்றேன்.  

அவள் ஜனக் கூட்டம் அதிகமுள்ள ஒரு நாற்சந்தியில் நின்று, சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு சாலையோர ப்ளாட்பாரத்திற்குச் சென்று அமர்ந்தாள். அமர்ந்தவள் தன் கையிலிருந்த குழந்தையை தனக்கு எதிரே தரையில் கிடத்தினாள். அப்போது என் குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்ததில் எனக்கு இதயமே நின்று விடுவது போலானது. அதை விட, அடுத்து அப்பெண் செஞ்ச காரியத்தில் என் மொத்த உடம்புமே ஆடிப் போயிடுச்சு.

“அம்மா…தாயி…கொழந்த பசியால துடிக்குது தாயி…அதுக்குப் பால் வாங்க பிச்சை போடுங்க தாயி” ன்னு அவ என் குழந்தையைக் காட்டி போவோர் வருவோரிடமெல்லாம் பிச்சையெடுக்க ஆரம்பித்தாள்.

“கடவுளே…இதென்ன கொடுமை?…இப்படிக்கூட நடக்குமா?” அந்த தொலைக்காட்சிப் பெண்ணே அங்கலாய்த்தாள்.

“அதைத் தாங்க மாட்டாத நான் நேரே அந்தப் பெண்ணிடம் போய் சண்டை போட்டேன்!… என் குழந்தையைக் குடுடி!…னு கத்தினேன்!…அதுக்கு அவ சொல்றா “ஒரு நாள் கூலியா நூறு ரூபாயை உன் பொண்டாட்டிகிட்ட குடுத்துட்டு வந்திருக்கேன்!…அதைக் குடுத்திட்டு எடுத்திட்டுப் போ!” ன்னா!…நானும் ஒரு நூறு ரூபாயத் தூக்கி அவ மூஞ்சில விட்டெறிஞ்சுட்டு என் குழந்தையைப் பிடுங்கிட்டு வந்தேன்!…வீட்டுக்கு வந்து என் பொண்டாட்டிகிட்டக் கேட்டா…பதிலே பேசாம அலட்சியமா எங்கோ பார்க்கறா!…அப்ப வாசல்ல யாரோ கூப்புடுற சத்தம் கேட்க போய்ப் பார்த்தேன்!”

“யாரு?..அந்தப் பொம்பளை மறுபடியும் வந்தாளா?” தொலைக்காட்சிப் பெண் கேட்க,

“இல்லை…பக்கத்துத் தெரு மளிகைக் கடைக்காரன்!… “என்ன வேணும்” னு கேட்டேன்… “அம்மா ஹார்லிக்ஸ்…டானிக்கெல்லாம் வெலைக்குக் குடுப்பாங்க…அதான் ஏதாவது இருக்கான்னு கேட்டுட்டுப் போக வந்தேன்!”ன்னான்”

“அப்படின்னா?”

“என்னம்மா இது கூடப் புரியலியா?… “குழந்தை ரொம்ப நோஞ்சானா… ஒல்லியா… இருந்தாதான் நிறைய பிச்சை விழுகும்கறதுக்காக  நான் என் குழந்தைக்கு வாங்கிக் குடுக்கற ஹார்லிக்ஸ்… ஊட்டச்சத்து டானிக்கையெல்லாம்..குழந்தைக்குக் குடுக்கறதில்லை… அதுக்கு பதிலா அதுகளையெல்லாம் கடைல வித்து… காசாக்கியிருக்கா!.. அதுலதான் என் கோபம் எல்லை மீறியது! ஒரே ஒரு அறைதான் அறைந்தேன்!…அந்தப் பேயறைல அவ எகிறிப் போய் விழுந்தப்பதான் மேசை முனை பொட்டுல பட்டு.. “பொட்டு”ன்னு போய்ச் சேர்ந்தா!…சொல்லுங்க மேடம்,..நீங்கெல்லாம் படிச்சவங்க!…மூளைக்காரங்க…நீங்க சொல்லுங்க நான் செய்தது குற்றமா?”

“நான் செய்தது குற்றமா?…… “நான் செய்தது குற்றமா?” ஆடியன்ஸைப் பார்த்துக் கேட்பது போல் குளோஸ்-அப் ஷாட் வர.. காட்சி மாறியது.

நிகழ்ச்சி அமைப்பாளர் திரையில் தோன்றி, “இது போன்ற பல சோக கதைகள்…நம்ப முடியாத நிகழ்வுகள்…ஒவ்வொரு கைதியின் பின்னாலும் இருப்பதுதான் நிதர்சனம்!… அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்பது, ஒரே கேள்வி!… “நாங்க செஞ்சது தப்பா?” என்பது தான்.  சட்டம் தப்பு என்று தீர்ப்புச் சொல்லி தண்டனை குடுத்திருந்தாலும் மனசாட்சி ஏனோ அதை முழு மனதா ஏற்க மறுக்கின்றது!..மீண்டும் அடுத்த வாரம் இதே போன்று வேறொரு கைதியின் கதையைக் கேட்கலாம்!”

****

தொலைக்காட்சியை ஆஃப் செய்து விட்டு மனைவி சுபத்ராவிடம் வந்த ராஜசேகர், “சுபத்ரா… நாளைக்கு அந்த டைரக்டர் அக்ரிமெண்ட் கொண்டு வருவார்!… அவர்கிட்ட எங்க மகளை நடிக்க வைக்க எங்களுக்கு விருப்பமில்லை”ன்னு சொல்லித் திருப்பியனுப்பிடப் போறேன்!” என்றார்.

“அய்யய்யோ… என்னங்க திடீர்னு இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடுறீங்க!…நம்ம மகள் நீத்துவை பெரிய சினிமா ஸ்டார் ஆக்கணும்கறது நம்மோட பல வருஷத்துக் கனவுங்க!…ஏதோ இப்பத்தான் ஒரு டைரக்டர் அவளை “ஓ.கே!’ பண்ணியிருக்கார்!… அதுக்காக கடந்த மூணு மாசமா அவளுக்கு எப்படியெல்லாம் நான் பயிற்சி குடுத்திருக்கேன் தெரியுமா?”

“எப்படி?  உடம்பு குண்டாயிடும்னு சொல்லி ஒரே ஒரு நேரம் மட்டும் பேருக்கு இத்துணூண்டு சாப்பாடு குடுக்கறதுக்குப் பேரு பயிற்சியா?…டான்ஸ் பிராக்டீஸ்ங்கற பேர்ல அவளை வெறும் வயித்தோட ஆட வெச்சுப் பார்க்கறதுக்குப் பேரு பயிற்சியா?… உடம்பை ஸ்லிம்மா மெயிண்டெய்ன் பண்ணணும்கறதுக்காக அவ நாக்கை அடக்க வெச்சு…பட்டினி போட்டு வதைக்கறதுக்குப் பேரு பயிற்சியா?…சொல்லு?”  ராஜசேகர் சீரியஸாகக் கேட்க, சுபத்ரா விழித்தாள்.

“பிச்சை எடுப்பதற்க்காகவே தன் பிள்ளையை நோஞ்சானாக்கிய அந்தப் பொண்ணுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?… அந்த கைதியின் தீர்ப்புப்படி… நாம ரெண்டு பேருமே உயிரோட இருப்பதற்கே அருகதையற்றவர்கள்!!… அதனாலதான் சொல்றேன்… நாளைக்கு அக்ரிமெண்டோட வர்ற அந்த டைரக்டரைத் திருப்பியனுப்பப் போறேன்!… இனிமே நம்ம நீத்து அவ விருப்பப்டி எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்!… ஆசை தீர விளையாடலாம்” ராஜசேகர் சந்தோஷமாய்ச் சொல்ல,

அதை ஏற்றுக் கொள்ளும் விதமாய்த் தானும் சிரித்தாள் சுபத்ரா.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குணமென்னும் குன்றேறி..! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    ஒரு கதவும்… இன்னொரு கதவும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை