in ,

ஒரே ஹீரோ (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இயக்குனர் ப்ரிய வசந்தன் கடும் கோபத்திலிருந்தார்.  அவரது வார்த்தைத் தாக்குதலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார் ஒரு உதவி இயக்குனர்.

     ‘ஏய்யா…நான் ஒரு வாரமா சொல்லிட்டிருக்கேன்…’அந்த மார்க்கெட் காட்சில வர்ற வயதான தம்பதிகள் ரியலா இருக்கணும்!…சினிமா சம்மந்தப்படாத பப்ளிக் மூஞ்சியா இருக்கணும்!‘ன்னு ‘சரி…சரி”ன்னு தலையாட்டிட்டு கடைசில ரெகுலரா எல்லாப் படங்களிலும் வர்ற அதே பழைய மூஞ்சிகளைக் கொண்டாந்திருக்கியே….உனக்கென்ன மூளைப் பிசகா?”

     ‘இல்ல சார்…இந்த ஊர்ல..யாரும்…!”

     ‘நோ…அதெல்லாம் எனக்குத் தெரியாது….எனக்கு நான் கேட்ட மாதிரி வேணும்…அவ்வளவுதான்!”

     உதவி இயக்குனர் தயக்கமாய் நிற்க,

     ‘ஏய்யா…இன்னும் நின்னுக்கிட்டிருக்கே?…போய்யா…போய்..மக்கள் கூட்டம் சேர்ற ஏதாவது ஒரு இடத்துக்குப் போ….கண்டிப்பா அங்க ஒரு வயதான தம்பதிகள் கிடைப்பாங்க!”

     பின் மண்டையைச் சொறிந்து கொண்டே நகர்ந்தார் அந்த உதவி இயக்குனர்.

     இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அவர் அழைத்து வந்த அந்த வயதான தம்பதிகளைப் பார்த்து வியந்து போனார் இயக்குனர் ப்ரிய வசந்தன்.

‘வாவ்!…நான் எந்த மாதிரி இமேஜினேஷன் பண்ணி வெச்சிருந்தேனோ….அதே மாதிரி இருக்காங்க இந்த ரெண்டு பேரும்!…ஓ.கே!…இவங்க சம்மந்தப்பட்ட காட்சிகளை இன்னிக்கே…இப்பவே சூட் பண்ணிடுவோம்!”

     ‘ஓ.கே. சார்!…தேங்க் யூ சார்!..” உச்சி குளிர்ந்து போய்ச் சொன்னார் உதவி இயக்குனர்.

     ‘யோவ்…ஹீரோயினோட கேரவனுக்குப் போய்…அவங்களை ரெடியாகச் சொல்லு!….அந்த மார்க்கெட் சீன்ல அவங்கதான் மெயின்!”  டைரக்டர் கத்தலாய்ச் சொன்னார்.

     உதவி இயக்குனரால் அழைத்து வரப்பட்ட அந்த வயதான தம்பதியர் நல்ல முறையில் கவனிக்கப்பட்டனர். இதுவரையில் அவர்கள் பருகியே இராத ஆப்பிள் ஜூஸ்….ஆரஞ்சு ஜூஸ்…காரட் ஜூஸ்…என வித விதமாய்…பருகி மகிழ்ந்தனர்.

     அடுத்த அரை மணி நேரத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.

     ஹீரோயினிடம் காட்சியை விளக்கி விட்டு, அந்த வயதான தம்பதிகளிடம் வந்தார் இயக்குனர் ப்ரிய வசந்தன்.

‘இங்க பாருங்கய்யா!….நீங்க ரெண்டு பேரும் இப்ப மார்க்கெட்டை விட்டு வெளியே வந்து நடந்து போய்க்கிட்டிருக்கீங்க!…அதா…அந்த ரெண்டு பையையும் ஆளுக்கொண்ணா கைல வெச்சுக்கங்க!…ஓ.கே!….அப்ப அந்த ஹீரோயின் மேடம் அங்கிருந்து ஓடி வந்து உங்களைப் பார்த்து ‘மாமா…மாமா…!”ன்னு கத்திக்கிட்டே கட்டிப் பிடிச்சு…உங்க கன்னத்துல முத்தம் குடுப்பாங்க!….அப்ப நீங்க என்ன பண்ணறீங்க…’அய்யய்யோ.!…யாரும்மா நீ?…என்னைய வந்து மாமாங்கறே?”ன்னு சொல்லி அவங்களை தள்ளி விடுவீங்க!…புரிஞ்சுதா?”

     பெரியவர் சுற்றும் முற்றும் பார்த்தபடியே ‘சரி”யென்று தலையாட்டினார்.

     ‘தென்…நீங்க தள்ளியும் போகாம…மறுபடியும் அவங்க உங்களைக் கட்டிப் பிடிச்சு முத்தம் தர முயற்சிப்பாங்க!…இந்தத் தடவை நீங்க வேகமா ஒரே தள்ளாய் அவங்களைக் கீழே தள்ளிடறீங்க!…ஓ.கே?…அப்ப நான் ‘கட்”ன்னு சொல்லுவேன்..அதோட சரி!…” என்ற இயக்குனர் காமிரா மேனைப் பார்த்துக் கண்ணசைத்தார்.

     கிளாப் அடிக்கப்பட்டதும்,

     ‘லைட்ஸ் ஆன்!”

     ‘காமிரா”

     ‘ஆக்ஷன்”

     ஹீரோயின் ஓடி வந்து ‘மாமா…மாமா!” என்றபடி பெரியவரைக் கட்டிப் பிடித்து முத்தம் தர கூட நின்றிருந்த அந்த வயதான பெண்மணி சரேலென முன் வந்து ஹீரோயினின் தோளைத் தொட்டுத் திருப்பி ‘பளார்!…பளார்!” என்று பேய்த்தனமாய் அறைய,

     மொத்த யூனிட்டும் ஸ்தம்பித்தது.

     ‘கட்…கட்!” இயக்குனர் அலறினார்.

     ‘டைரக்டர் சார்…வாட்ஸ் திஸ்? எங்கிருந்து இந்தப் பைத்தியங்களைப் பிடிச்சிட்டு வந்தீங்க?” கன்னத்தைத் தேய்த்தவாறே ஹீரோயின் கேட்டாள்.

     ஓடி வந்த இயக்குனர் அந்தப் பெண்மணியிடம், ‘ஏம்மா…ஏம்மா?…என்னாச்சு உங்களுக்கு?…ஏன் இப்படிச் செஞ்சீங்க?”

     ‘த பாரு தம்பி!…எங்களுக்கு கல்யாணமாகி நாப்பது வருஷத்துக்கும் மேலாச்சு!…கொழந்தைக இல்லை!…அதனால அவருக்கு நான்…எனக்கு அவர்ன்னு ஆதர;ஷ தம்பதிகளா வாழ்ந்திட்டிருக்கோம்!…இவருக்கு உடம்பு சரியில்லாமப் போனப்ப உதவிக்கு ஒரு நர்ஸைக் கூட வெச்சுக்கச் சொன்னாங்க!…ம்ஹூம்….எம் புருஷனை என்னைத் தவிர யாரும் தொடக்கூடாதுன்னு வேண்டாம்னுட்டு நானே இவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செஞ்சேன்!…அப்படியிருக்கும் போது…..என் எதிர்ல அந்த ஹீரோயின் சிறுக்கி எம் புருஷனைக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுக்கறா…..விடுவேனா?…”

     ‘அய்யய்ய….இதெல்லாம் வெறும் நடிப்பும்மா!”

     ‘உங்க ஹீரோயினுக்கு வேணும்னா இது சாதாரண நடிப்பா இருக்கலாம்!…. ஒவ்வொரு படத்திலேயும்… ஒவ்வொருத்தனைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுப்பா… ஆட்டம் போடுவா!…. ஆனா நாங்க அப்படியில்லை!… ஒரு ஜென்மம் பூராவும் எங்களுக்கு ஒரே ஹீரோதான்…அது எங்க புருஷன்தான்!…எல்லா ஆட்டமும்…பாட்டமும் அந்த ஒரே ஒருத்தர் கூடத்தான்!” சொல்லியபடியே தன் வயோதிகக் கணவனை இழுத்துக் கொண்டு வேகவேகமாய் நடந்தாள் அந்தப் பெண்மணி.

     திகைத்து நின்றார் இயக்குனர் ப்ரிய வசந்தன்.

(முற்றும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குறுந்தகவல் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    கல்யாணமாம் கல்யாணம் (சிறுகதை) – சுஶ்ரீ