in ,

கல்வியா செல்வமா? (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

லண்டனில் இருந்து தன் பெற்றோருடன் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் ரட்சிதா.

அம்மாவும், அப்பாவும் வினீத்தின் வியாபாரத் திறமை பற்றியும், ஷேர்மார்க்கெட்டில் அவன் புகுந்து விளையாடி கொள்ளையாக சம்பாதிப்பது பற்றியும் புகழ்ந்து பேசிக் கொண்டு வந்தனர்.

ரட்சிதாவின் அப்பா ஷண்முகத்தின் நண்பர் தான் வினீத்தின் அப்பா சரவணன். ஷண்முகமே ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி வியாபாரத்தில் கொள்ளையாக சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்.

நகரத்தின் முக்கியமான இடங்களில் நான்கைந்து பங்களாக்களும், ஒரு மூன்று நட்சத்திர ரெஸ்டாரன்டிற்கும் சொந்தக்காரர்.  ஷண்முகம் லீலாவதியின் ஒரே பெண் தான் ரட்சிதா.

ஒரு நாள் சரவணன் தன் நண்பனை போனில் அழைத்து     “ஷண்முகம், நீ கோடி கோடியாய் சம்பாதித்தாலும், வாழ்க்கையையும் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் அல்லவா? நீ உன் மகளையும் அழைத்துக் கொண்டு, லண்டனில் என் வீட்டில் வந்து ஒரு வாரம் தங்க வேண்டும். உன் பெண் ரட்சிதாவின் போட்டோவைப் பேஸ்புக்கில் பார்த்தோம். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அவளை மிகவும் பிடித்து விட்டது.  வினீத்திற்கும் ரட்சிதாவை மிகவும் பிடித்து விட்டது. இருவரும் நேரில் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக் கொண்டால் நாம் இவர்கள் விஷயத்தில் அடுத்த நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்” என்றார்.

ஷண்முகம் ஒன்றும் அவ்வளவு சுலபமாக தன் கம்பெனிகளையும், எக்கச்சக்க வருமானம் வரும் ரெஸ்டாரென்டையும் தன் மேனேஜர்களை நம்பி விட்டு விட்டு எங்கும் போகமாட்டார். அப்படிப் போனதற்கும் ரட்சிதா தான் காரணம்.

அவர்களுக்குப் பிடிக்காத மிகவும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஶ்ரீதருடன் சுற்றிக் கொண்டிருந்து விட்டு, இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு திரும்புவதுதான்.

லீலாவும் பலமுறை கண்டித்தே கூறி விட்டாள்.

“ஏன் என் உரிமையில் தலையிடுகிறீர்கள்?. எனக்கு ஶ்ரீதரை மிகவும் பிடித்திருக்கிறது. அவன் பிஸிக்ஸில் பி.எச்.டி. வாங்கியிருக்கிறான், அரசாங்கக் கல்லூரியில் லெக்சர்ராக இருக்கிறான். நல்ல குணம், நீங்களும் பழகிப் பார்த்தால் உங்களுக்கும் அவனைப் பிடிக்கும்” என்று அதே கண்டிப்பாக மகளும் கூறிவிட்டாள்.

அதன்பிறகு தான் லீலா தன் கணவரிடம் மகளைப் பற்றி குறை கூறிப் புலம்பினாள்.

ஷண்முகம் சிறந்த வியாபாரத் தந்திரி அல்லவா? அவருக்கு எந்தப் பொருளை எங்கே எப்படி விற்க வேண்டுமென்று தெரியும். மகளை அழைத்து தனிமையில் பேசினார்.

“அப்பா, அவர் மிகவும் நல்லவர். பிசிக்ஸல் பி.எச்.டி. வாங்கியிருக்கிறார். மேலும் ஒரு டாக்டரேட் வாங்குவதற்குப் படித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தவர் பொருளுக்கு ஆசை படமாட்டார். ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதே குணங்களைக் கொண்டவர் அப்பா” என்றாள் ரட்சிதா.

“இருக்கட்டும். நல்லவர் சிறந்த அறிவாளி, பி.எச்டி. வெங்காயப் பச்சடி எல்லாம் ஒ.கே. அவர் குடும்பப் பின்னணி என்னவென்று தெரியுமா? அவருடைய பைனான்சியல் பொசிஷன் என்னவென்று தெரியுமா? அவர் வீட்டிற்கு நீ எப்போதாவது போயிருக்கிறாயா? அவருடைய வருமானத்தை நம்பி எத்தனை உயிர்கள் இருக்கின்றன என்று தெரியுமா? நாளைக்கே போய் அவர் வீட்டைப் பார்த்து விட்டு வா. பிறகு பேசலாம்“ என்று ஷண்முகம் கூறி விட்டார்.

“நான் ஏன் அவர்கள் வீட்டிற்குப் போகவேண்டும்?” சீறினாள் மகள்.

“நீ தானே அவர்கள் வீட்டில் வாழப் போகிறாய். ஒரு பொருளை வாங்கும் போது, அந்த பொருளின் மதிப்பை கணக்கிடும்போது, அதன் மேல் மறைந்திருக்கும் கடன்களையும் சேரத்துத்தான் அதன் மதிப்பைக் கணக்கிட வேண்டும் அல்லவா? அப்படித் தான் வாழ்க்கையின்  ஒவ்வொரு நிகழ்ச்சியும்”

“காதலில் கூடவா அப்பா லாப நஷ்டக் கணக்கு பார்க்க வேண்டும்?”

“வாழ்க்கை ஒன்றும் காதலோடு முடிவதில்லையே! அதன் பிறகு இல்வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதல்லவா! அப்போது தான் எல்லா லாப நஷ்ட கணக்குகளும் நம்மை அதிர வைக்கும்” என்றார் அப்பா.

புத்திமதி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார் ஷண்முகம் .தந்தை கூறிய அட்வைஸை மீண்டும் நினைத்துப் பார்த்தாள் ரட்சிதா.

‘இது அட்வைஸா இல்லை பயமுறுத்தலா?’ என்று தனக்குள் வெகுண்டாள். அவர் சொல்வது போல் ஶ்ரீதர் வீட்டிற்கு சென்று பார்த்தால் என்ன? என்று யோசித்தவள் தாமதிக்காமல் ஶ்ரீதருக்குப் போன் செய்து அவன் வீட்டிற்குப் போக வேண்டுமென்று சொன்னாள்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் பல்லாவரத்தில் இருந்தது அவன் அபார்ட்மென்ட். அவன் அப்பாவின் ராசியான பழைய பைக்கில் தான் அவளை அழைத்துச் சென்றான். அது போட்ட சப்தத்தில் ஊரே அதிர்ந்தது.

“வண்டியில் சைலன்சர் வேலை செய்கிறதா ,இல்லையா? இப்படி அலறுகிறதே!” என்றாள் ரட்சிதா எரிச்சலோடு.

“ஏதோ பிளாக் ஆகி இருக்கிறது, அதுதான் இப்படி சப்தம் போடுகிறது. மெக்கானிக்கல் ஷாப்பில் ஞாயிற்றுக் கிழமை தான் விடவேண்டும்“ என்றவன் பேசிக் கொண்டே ஒரு காம்பௌண்டிற்குள்  நுழைந்தான்.

அது ஒரு பழைய ஹௌசிங் போர்ட் அபாரட்மென்ட், மூன்று அடுக்குகளாய் இருந்தது. பெயிண்ட் எல்லாம் கரைந்து போய் சில இடங்களில் மஞ்சளாகவும், சில இடங்களில் சொல்லத் தெரியாத நிறத்திலும் இருந்தது.

“இரண்டாவது மாடியில் தான் நம் அபார்ட்மெண்ட்” என்றான்.

அவ்வளவு தூரம் அவன் பழைய பைக்கில் வந்ததே மிகவும் டயர்டாக இருந்தது. முதுகெல்லாம் வலித்தது. ஸ்ரீதர் வேகமாக மாடிப்படியில் ஏறினான்.

“லிப்ட் எங்கே இருக்கிறது ஸ்ரீதர்?“ என்று கேட்டாள் ரட்சிதா.

“இங்கே லிப்டெல்லாம் கிடையாது. இரண்டு மாடி தானே. வேகமாக ஏறி வா” என்றான் ஸ்ரீதர்.

“அடப்பாவி“ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டு முட்டியைப் பிடித்துக் கொண்டு மாடி ஏறினாள்.

இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு அபார்ட்மெண்ட். ஹாலில் அவன் தந்தை கட்டிலில் படுத்திருந்தார். ஒருபக்கம் பக்கவாதம் என்றும் அவரால் சுயமாக எதுவும் செய்ய முடியாது என்றான். வீடு முழுவதும் டெட்டால் வாசனை.

டி.வி. ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தது. தங்கைகள் இருவர் படித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்தார்கள். கல்லூரியில் முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவிகள் என்றான்.

ஸ்ரீதரின் அம்மா சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்தாள். இவளைப் பார்த்ததும் ஈரக் கைகளை முந்தானையில் துடைத்துக் கொண்டு இவளை வரவேற்றாள்.

மொத்தத்தில் ரட்சிதாவிற்கு அங்கே இருப்பது மூச்சு முட்டுவது போலிருந்தது. அவள் கொடுத்த காபியையும் பிஸ்கட்டுகளையும் எடுத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் ஸ்ரீதரிடம் விடை பெற்றுக் கொண்டு ஊபர் என்ற வாடகைக் காரைப் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் ரட்சிதா.

அவள் வீட்டில் நுழையும் போதே பார்த்து விட்டார் ஷண்முகம். அவள் முகமே சரியில்லை. அனுபவம் நிறைந்த சிறந்த வியாபாரி அல்லவா? அவள் உள்ளத்தின் ஓட்டத்தையும் ஓரளவு புரிந்து கொண்டார்.

இரவு டின்னர் சாப்பிடும் போது தான், அடுத்த நாள் புரோகிராமைப் பற்றி விவாதிப்பார்கள்.

வெயிலுக்குப் போனால் தான் நிழலின் அருமை தெரியும் என்று நினைத்து லண்டனுக்கு தன் நண்பன் சரவணனன் வீட்டிற்கு போவதைப் பற்றி மகளிடமும், மனைவியிடமும் அவர்கள் கருத்தைக் கேட்டார்.

லீலாவதி முழுமனதோடும், ரட்சிதா அரைகுறையாகவும் சம்மதித்தார்கள். அங்கே வினீத் அவளோடு மிகவும் அன்பாகப் பழகினான். 

தன்னுடைய விலையுயர்ந்த காரில் லண்டனின் கண் என்று சொல்லப்படும் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள மிக உயரமான ராட்டினத்தைக் காட்டினான். பக்கிங்ஹாம் அரண்மனை என்று தினம் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான். பத்து நாட்கள் விடுமுறையை நன்கு அனுபவித்து விட்டு சென்னைக்குத் திரும்பினார்கள்.

இதற்குள் ஸ்ரீதர் பலமுறை போன் செய்தும் ரட்சிதா எடுக்கவில்லை. ஷண்முகமும் அதை கவனித்துக் கொண்டு இருந்தார். ஒரு நாள் ரொம்ப யோசனையுடன் தன் தாடியைத் தடவிக் கொண்டு அவர்கள் வீட்டு ஹாலில் நடந்து கொண்டிருந்தார்.

அவரையே கவனித்துக் கொண்டிருந்த லீலாவதி, “என்னங்க, யோசனை பலமாக  இருக்கிறது?“ என்றாள்.

“ஒன்றுமில்லை. சரவணன் தான் போன் செய்து ‘ரட்சிதா என்ன சொல்லுகிறாள்? எப்போது திருமணம் வைத்துக் கொள்ளலாம்? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டு இருக்கிறான். இன்று மாலைக்குள் சொல்கிறேன் என்று சொல்லி விட்டேன். என்ன சொல்வது என்று தான் புரியவில்லை“ என்றார்.

“ரட்சிதா, கேட்டுக் கொண்டு தானே இருக்கிறாய் ! உன் அப்பாவிற்கு பதில் சொல்“ என்று உத்தரவிட்டாள் லீலாவதி.

ரட்சிதா சிறிதும் தயங்காமல், “அப்பா, நீங்களும், அங்கிளும் முடிவு செய்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் வைத்துக் கொள்ளுங்கள்“ என்று கூறி விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள்.

திருமணப் பத்திரிகை, ஸ்ரீதர் உட்பட எல்லோருக்கும் கொரியர் மூலம் அனுப்பிவிட்டாள் போலும். ஸ்ரீதர் தான் இவளோடு ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். பலமான விவாதம் என்பது இவள் பேச்சிலிருந்தே தெரிந்தது.

“நீ வைத்திருக்கும் தாத்தா காலத்து பைக்கில் எல்லாம் என்னால் போக முடியாது. நாம் பழகும் போதே நீ உன் பைனான்ஷியல் பொசிஷன், ஊருக்கு வெளியே இருக்கும் உன் டூபெட்ரூம் அபார்ட்மென்ட், உன் அப்பாவின் நிலமை ,உன்னையே நம்பியிருக்கும் இரு தங்கைகள் பற்றி எல்லாம் சொல்லியிருக்க வேண்டும். நானாக்க் கேட்ட பிறகு தானே நீ உன் வீட்டிற்கே அழைத்துச் சென்றாய். வெரி ஸாரி ஸ்ரீதர் இதற்கு மேல் உன் ஏழ்மையைப் படம் பிடித்துக் காட்ட என்னால் முடியாது. கடலில் வாழ்ந்த மீனை ஆற்று நீரில் விட்டால் வாழாது. முடிந்தால் நல்ல அண்ணனாக என் திருமணத்திற்கு வா” என்றவள் போனைக் ‘கட்’ பண்ணிவிட்டாள்.

ஸ்ரீதர் போனைக் கையில் வைத்துக்கொண்டு, ‘இந்த முட்டாள் பணமே பெரிதென்று நினைக்கிறாள். பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் கல்வியால் பணமும் வரும் புகழும் வரும் என்பதை இவளும் ஒரு காலத்தில் உணர்வாள்’ என்று நினைத்துக் கொண்டான்.

இருபது ஆண்டுகள் கழிந்தன.

திருமணமான சில ஆண்டுகளிலேயே வினீத் அதிக போதையுடன் காரை ஓட்டி ஒரு ஆக்ஸிடென்டில் இறந்து விட்டிருக்கிறான். வியாபாரம் எல்லாம் நஷ்டமாகி அதிகக் கடன் தொல்லையால் சென்னைக்கு தன் தந்தையிடமே வந்து விட்டாள் ரட்சிதா.

அப்போது தான் அவளுக்கு ஸ்ரீதர் பற்றிய நினைவு வந்தது .எங்கிருக்கிறான், எப்படியிருக்கிறான் என்று அவன் பணிபுரிந்த கல்லூரியில் விசாரித்தாள்.

அவர்கள் சொன்ன விவரம் அவளை பிரமிக்க வைத்தது. “ஸ்ரீதரும் அவன் மனைவியும் அமெரிக்காவில் நாஸாவில் மூத்த விஞ்ஞானிகளாக வேலை செய்கிறார்கள். மிக உயர்ந்த பொசிஷனில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்கள்.

ஸ்ரீதரின் ‘நாம் கற்ற கல்வி என்றும் நம்மைக் கைவிடாது’ என்ற தாரக மந்திரம் தான் ரட்சிதாவின் நினைவிற்கு வந்தது.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புரிதல் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    மைதிலியின் கல்யாண வைபோகமே (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி