in

நூல் விமர்சனம் (ராஜ பேரிகை) – தி. வள்ளி, திருநெல்வேலி

சமீபத்தில் படித்த புத்தகம் …(நூல் விமர்சனம்) 

ராஜபேரிகை – சாண்டில்யன்

சரித்திர கதைகளை வாசிப்பது என்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று.மன்னர்களின் ஆட்சிமுறை.. மக்களின் வாழ்க்கை முறை.. கலைகள்… ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் அரசியல் மாறுதல்கள்… போர் முறைகள்… என அனைத்தும் பொக்கிஷமாய் நிறைய விஷயங்களை அள்ளித் தருவது சரித்திரக் கதைகள்.வீரம் காதல்,துரோகம் என அனைத்து உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடி சரித்திரக் கதைகள். சாண்டில்யன் கதைகள் கேட்கவே வேண்டாம் …அவருடைய வர்ணனை மனதை  மயக்க வல்லது.  

ராஜபேரிகை ….என்ற இந்த சரித்திர நாவலின் ஆசிரியர் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான சாண்டில்யன் அவர்கள். அவருடைய இந்த நாவல் வங்க தேசத்து பாரதீய பாஷா பரிஷத்தின் விசேஷ விருது பெற்றதாகும் 

ஆங்கிலேயர் ஆதிக்கம்…. 

பல மன்னர்களையும் சக்கரவர்த்திகளையும், அதன் பின்  ராணா பிரதாப் சிங் ,சிவாஜி போன்ற சிறந்த வீரர்களையும் பெற்ற இந்த புண்ணிய பூமி, ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலேயரிடம் எப்படி அடிமைப்பட்டது? வியாபாரியாக வந்த சிறு கூட்டத்தினரால் எப்படி பெரிய சாம்ராஜ்யத்தை அமைக்க முடிந்தது என்ற கேள்விகளுக்கு பதில் தான் ராஜபேரிகை. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாற்று கதை. இக்கதையில் நிகழும் சம்பவங்கள் சென்னை, காஞ்சி, ஆற்காடு, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சை என நம்மைச் சுற்றியே நடந்திருக்கிறது.

இக்கதை ஸ்ரீரங்கம் அரங்கனின் கோவிலில் ஆரம்பிக்கிறது. தஞ்சையையும், திருச்சியையும் சுற்றிவருகிறது. இக்கதையின் நாயகன் விஜய குமாரன் ஒரு நோக்கத்துடன் தஞ்சை மன்னர் ராஜா பிரதாப்சிங்குடன் சேருகிறான் மன்னனின் வாரிசு ‘வாள் மகள்’ என அழைக்கப்படும் நந்தினியின் காதலுக்கும், அன்பிற்கும் பாத்திரமாகிறான். ஆங்கில வீரன் ராபர்ட் கிளைவ் நட்பும்  கிடைக்கிறது. ஆங்கிலேயர் காலூன்ற போராடும் அதேநேரம், பிரெஞ்சு ஆதிக்கமும் கவர்னர் டுப்ளே தலைமையில் வேரூன்ற போராடுகிறது. சாதாரண சரக்கு கொண்டு செல்வதாக வரும் கிளைவ் படிப்படியாக தன் வீர சாகசங்களால் முன்னேறி கேப்டனின் வலதுகரமாகிறான்.

ஆற்காடு நவாப் சந்தா சாஹிப், ராணி மீனாட்சியின் மரணம், அவள் வளர்ப்பு மகன் கதையின் நாயகன் விஜயகுமாரின் சபதம் என பல கதைகள்… இறுதியில் யாருடன்  விஜயகுமார் இணைகிறான்.. அவன் சபதம் என்ன… அது யார் உதவியால் எவ்வாறு நிறைவேறுகின்றது…என்பதை கதை விறுவிறுப்பாக விளக்குகிறது.

வியாபார நோக்கத்தோடு வந்த ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், நம்மை அடிமைப்படுத்தியதுடன், நம் கலைச் செல்வங்களையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த விஷயமே என்றாலும்…மேலும் சில ஆச்சரியப்படத்தக்க விபரங்களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ராபர்ட் கிளைவ்   தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு தமிழ் பேசியுள்ளார் என்பது வியப்பிற்குரியது. காஞ்சி வரதராஜனின் மகரகண்டிகையை கைப்பற்றும் கிளைவ் தான் வெற்றி பெற்ற பிறகு தன் வெற்றிக்கு அந்த கடவுளே காரணம் என்பதை உணர்ந்து அந்த மகர கண்டிகையை வரதராஜனுகே காணிக்கையாக்குகிறான்.

 நம் தாய்மொழியும், நம் கலாச்சாரமும், அந்நியரையும் கவர்ந்துள்ளது என்பதற்கு சான்றாக இதைப் பார்க்கிறேன்.

கிளைவ்- விஜயகுமார் இருவரின் நாடுகளை தாண்டிய நட்பு வீரத்திற்கு வீரம் என்றுமே தலை வணங்கும் என்பதற்கு சாட்சி. அந்நிய மண்ணிலும் நேர்மை நியாயம் உண்டு… சொந்த மண்ணிலும் துரோகம்,வஞ்சனை உண்டு எனும் கசப்பான உணர்வுகளை பிரதிபலிக்கும் சில கதாபாத்திரங்கள்.. மேலும் நாம் ஏற்கனவே கேள்விப்பட்ட டபீர் பண்டிதர்…கவர்னர் ஸாண்டர்ஸ்… என ரசனைக்கு பஞ்சமில்லாத கதாபாத்திரங்கள்.

மொத்தத்தில் இந்நூல் வாயிலாக நாம் தெரிந்து கொள்வது நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டதற்கு முக்கிய காரணம் சிற்றரசர்களிடையே இருந்த ஒற்றுமையின்மையும் சுயலாபத்திற்காக அந்நியருடன் சேர்ந்து கொண்டு நம்மை காட்டிக்கொடுத்த துரோகிகளுமே… ஆற்காடு நவாப்புகள் தஞ்சை, மதுரை போன்ற இந்து சாம்ராஜ்ஜியங்களை விழுங்க முற்பட்டபோது.. விஜயகுமார்  போன்ற ஆயிரக்கணக்கான வீரர்களின் விளைநிலமாய் இருந்தும் நாம் அடிமை பட்டோம் என்றால் அது நம்மிடையே அன்று உலகில் நிலவிய ஒற்றுமை குறைவு என்பதை தெளிவாக விளக்குகிறது இந்நூல்.

குமுதத்தில் இரண்டு வருடங்களில் தொடர்கதையாக வந்த இந்த நாவல் வானதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.காதல், வீரம், துரோகம் என பல உணர்வுகளை கொண்ட இந்நூல் மிகச் சுவையான திருப்பங்களையும் கொண்டது. பல சரித்திர பதிவுகளை நமக்கு அள்ளித்தரும் இந்நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றாக பார்க்கிறேன்.  

தி.வள் ளி 

திருநெல்வேலி. 

  

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புயலடிக்கும் மனது (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    தீட்சண்யம் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி